Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்ப மகிழ்ச்சிக்கு

மணத்துணை சுகமில்லாதிருக்கையில்

மணத்துணை சுகமில்லாதிருக்கையில்

நாள்பட்ட சோர்வு நோய் எனக்கு வந்திருப்பது தெரிந்த நாள்முதல் என் கணவர் மட்டுமே வேலைக்குப் போய்ச் சம்பாதிக்க வேண்டியிருந்திருக்கிறது. ஆனால், என்னிடம் அவர் எந்தச் செலவுகளைப் பற்றியுமே சொல்வதில்லை. ஏன் என்னிடம் வரவுசெலவுகளைப் பற்றி எதுவுமே பேசாமலிருக்கிறார்? நாங்கள் ரொம்பவே பணக் கஷ்டத்தில் இருக்கிறோம் என்று நினைக்கிறேன், நான் பதட்டம் அடைந்துவிடக்கூடாது என்று நினைத்துத்தான் அவர் என்னிடம் சொல்லாதிருக்கிறார் போலிருக்கிறது.—நான்ஸி. a

மண வாழ்க்கையில் சவால்கள் இருக்கலாம்; ஆனால், மணத்துணையில் ஒருவர் தீராத வியாதியால் அவதிப்படும்போது சவால்கள் அதிகரிக்கலாம். b சுகமில்லாதிருக்கும் மணத்துணையைக் கவனித்துக்கொள்வோரில் நீங்களும் ஒருவரா? அப்படியென்றால், பின்வரும் கேள்விகள் உங்கள் மனதை வாட்டுகின்றனவா: ‘என் துணையின் உடல்நிலை இன்னும் மோசமானால் நான் எப்படிச் சமாளிப்பேன்? என் துணையையும் கவனித்துக்கொண்டு, அதே சமயத்தில், சமைப்பது, சுத்தம் செய்வது, வேலைக்குப் போவது என எல்லாவற்றையும் எத்தனை காலத்துக்கு என்னால் தனியாகச் செய்ய முடியும்? நான் மட்டும் சுகமாக இருப்பதை நினைக்கையில் ஏன் என் மனம் உறுத்துகிறது?’

மறுபட்சத்தில், நீங்களே சுகமில்லாத மணத்துணையாக இருந்தால் இவ்வாறெல்லாம் யோசிக்கலாம்: ‘என் வேலைகளை நானே செய்துகொள்ள முடியாதிருக்கையில் என்மீது எனக்கு எப்படி மரியாதை இருக்கும்? நான் சுகமில்லாதிருப்பதால் என் துணைக்கு என்னைக் கண்டாலே வெறுப்பாக இருக்கிறதா? இனி எங்கள் மண வாழ்வில் சந்தோஷத்தை மறந்துவிட வேண்டியதுதானா?’

தீராத வியாதியால் சிலருடைய மண வாழ்வு முறிந்திருப்பது வருத்தமான விஷயம். ஆனால், உங்களுடைய மண வாழ்வும் அதுபோல் முடிவுக்கு வருமென அர்த்தப்படுத்துவதில்லை.

தீராத வியாதியால் கஷ்டப்பட்டும் அதைச் சமாளித்து, சந்தோஷமாகக்கூட வாழும் அநேக தம்பதியர் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, யோஷீயாகி, காஸுகோ தம்பதியை எடுத்துக்கொள்வோம். முதுகெலும்பு காயமடைந்ததால் யோஷீயாகி துளிகூட அசைய முடியாத நிலையில் படுத்த படுக்கையாகிவிட்டார். காஸுகோ இவ்வாறு சொல்கிறார்: “என் கணவரால் எதையுமே தானாகச் செய்ய முடியாது. அவரைக் கவனித்துக் கவனித்தே, எனக்குக் கழுத்து வலி, தோள் வலி, கை வலி எல்லாம் வந்துவிட்டது; எலும்பு கோளாறுக்காக நான் ஆஸ்பத்திரிக்கு வேறு போய் வருகிறேன். என்னைப் பொறுத்தவரை, சுகமில்லாதவரைக் கவனித்துக்கொள்வது சக்கையாய்ப் பிழிந்தெடுக்கும் ஒரு வேலை.” என்றாலும், இத்தனை பிரச்சினைகள் மத்தியிலும், “தம்பதியராக எங்களிடையே நெருக்கம் அதிகரித்திருக்கிறது” என்றும் காஸுகோ சொல்கிறார்.

அப்படியென்றால், அத்தகைய சூழ்நிலைகளின் மத்தியிலும் சந்தோஷத்தை இழக்காதிருக்க உதவும் வழிகள் யாவை? ஒரு வழி: மண வாழ்வில் திருப்தியையும் மனநிறைவையும் இழக்காதிருப்பது; அவற்றை இழக்காதிருக்கும் தம்பதியர், தங்களில் ஒருவருக்கு வந்திருக்கும் உடல்நலப் பிரச்சினையை இருவருக்குமே வந்திருக்கும் பிரச்சினையாகக் கருதுகிறார்கள். உண்மையில், ஒருவருக்குச் சுகமில்லாமல் போனால் இருவருக்கும்தானே பெரும் பாதிப்பு? இரண்டு பேரும் இரண்டு விதமாகப் பாதிக்கப்படலாம், அவ்வளவுதான் வித்தியாசம். இவ்வாறு கணவன், மனைவி இருவரும் ஒருவரையொருவர் சார்ந்திருப்பதை ஆதியாகமம் 2:24 பின்வருமாறு விவரிக்கிறது: ‘புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்,’ அதாவது, ஓருடலாய் இருப்பார்கள். எனவே, தம்பதியரில் ஒருவர் தீராத வியாதியால் அவதிப்படும்போது, அந்தச் சவாலைச் சமாளிக்க அவர்கள் இருவருமே சேர்ந்து பாடுபடுவது முக்கியம்.

இன்னொரு வழி: தீராத வியாதியோடு போராடும் சமயத்திலும் அன்னியோன்னியமாய் இருப்பது; அப்படியிருக்கும் தம்பதியர், அந்தச் சூழ்நிலையை ஏற்றுக்கொண்டு, சிறந்த விதங்களில் சமாளித்து வாழக் கற்றுக்கொள்வதாக ஓர் ஆய்வு காட்டுகிறது. இப்படி அவர்கள் கற்றுக்கொண்டிருக்கிற சமாளிக்கும் திறமைகளில் பல, எக்காலத்திற்கும் பொருந்துகிற பைபிள் அறிவுரைகளோடு ஒத்திருக்கின்றன. பின்வரும் மூன்று ஆலோசனைகளைக் கவனியுங்கள்.

ஒருவருக்கொருவர் கரிசனை காட்டுங்கள்

“ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்” என்று பிரசங்கி 4:9 சொல்கிறது. ஏன்? ஏனென்றால், “ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்” என்று 10-ஆம் வசனம் சொல்கிறது. பாராட்டு வார்த்தைகளின் மூலம் உங்கள் ‘உடனாளியைத் தூக்கிவிடுகிறீர்களா’ அதாவது, உங்கள் துணைக்குத் தெம்பூட்டுகிறீர்களா?

நடைமுறையான விதத்தில் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவுவதற்கு வழிகளைத் தேடுகிறீர்களா? யாங் என்பவரின் மனைவி ஒருபக்க முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்; அவர் இவ்வாறு சொல்கிறார்: “ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் என் மனைவியின் தேவையைப் புரிந்து நடந்துகொள்ள முயற்சி செய்கிறேன். எனக்குத் தாகமாக இருக்கும்போது அவளுக்கும் தாகமாக இருக்கலாமென நினைப்பேன். வெளியே சென்று அழகிய இயற்கைக் காட்சிகளை ரசிக்க நான் விரும்புகையில், அவளுக்கு என்னுடன் வர விருப்பமா என கேட்கிறேன். நாங்கள் இருவரும் வேதனையைப் பகிர்ந்துகொள்கிறோம், கஷ்டமான சூழ்நிலையைச் சேர்ந்து சமாளிக்கிறோம்.”

மறுபட்சத்தில், மணத்துணை உங்களைக் கவனித்துக்கொள்கிறார் என்றால், உங்களுடைய உடல்நலம் பாதிக்கப்படாதளவுக்கு நீங்களே சில காரியங்களைச் செய்துகொள்ள முடியுமா? அப்படிச் செய்வது, உங்கள் சுயமதிப்பைக் கூட்டலாம், மணத்துணை தொடர்ந்து உங்களை நன்கு கவனித்துக்கொள்ள உதவலாம்.

மணத்துணைக்கு எப்படி அதிக கரிசனை காட்டலாம் என்பது உங்களுக்கே தெரியுமென நினைத்துக்கொள்ளாமல், எதைச் செய்வது மிக உதவியாய் இருக்குமென அவரிடம் ஏன் கேட்கக்கூடாது? ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட நான்ஸி, குடும்பத்தின் வரவுசெலவு கணக்குகளைப் பற்றித் தெரியாதிருந்தது தன்னை எந்தளவு பாதித்தது என்பதைக் கடைசியில் தன் கணவரிடம் சொன்னார். இப்போது அவருடைய கணவர் அது சம்பந்தப்பட்ட விஷயங்களையெல்லாம் அவரிடம் சொல்ல முயற்சி எடுக்கிறார்.

இப்படிச் செய்துபாருங்கள்: தற்போதுள்ள உங்கள் சூழ்நிலையை இன்னும் நன்கு சமாளிக்க உதவுவதற்கு உங்கள் மணத்துணை என்னென்ன செய்யலாமென நீங்கள் நினைக்கிறீர்களோ அவற்றைப் பட்டியலிடுங்கள்; அதேபோல் உங்கள் மணத்துணையையும் பட்டியலிடச் சொல்லுங்கள். பின்பு, ஒருவருக்கொருவர் பட்டியலை மாற்றி வாசித்துப் பாருங்கள். பின்பற்ற முடிந்த ஓரிரு ஆலோசனைகளை நீங்கள் ஒவ்வொருவரும் அவற்றிலிருந்து தேர்ந்தெடுங்கள்.

நேரம் செலவிடுவதில் சமநிலையோடு இருங்கள்

“ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு” என்று ஞானியான சாலொமோன் ராஜா எழுதினார். (பிரசங்கி 3:1) ஆனால், தீராத வியாதி வருகையில் குடும்பமாகத் தினசரி செய்துவரும் காரியங்களைச் சரிவர செய்ய முடியாமல் போகலாம்; அதனால், நேரம் செலவிடுவதில் சமநிலையோடு இருக்கவே முடியாதென தோன்றலாம். ஓரளவாவது சமநிலையோடு இருக்க நீங்கள் என்ன செய்யலாம்?

வியாதி, சிகிச்சை என்றே இருக்காமல், இருவரும் சேர்ந்து வேறு காரியங்களில் தவறாமல் நேரத்தைச் செலவிடலாம். வியாதி வருவதற்கு முன்பு நீங்கள் சந்தோஷமாகச் சேர்ந்து செய்த காரியங்களில் எதையாவது இன்னமும் செய்ய முடியுமா? முடியாதென்றால், புதிதாக என்ன காரியங்களை நீங்கள் செய்து பார்க்கலாம்? ஒருவருக்கொருவர் வாசித்துக் காட்டுவது போன்ற எளிதான ஒன்றையோ, புதிய மொழியைக் கற்றுக்கொள்வது போன்ற கடினமான ஒன்றையோ நீங்கள் செய்யலாம். இதுபோல், வியாதியை மறந்து வேறு காரியங்களை இருவருமாகச் சேர்ந்து செய்வது, ‘ஓருடல்’ என்ற பந்தத்தைப் பலப்படுத்தும், உங்கள் சந்தோஷத்தையும் அதிகரிக்கும்.

நேரம் செலவிடுவதில் சமநிலையோடு இருப்பதற்கு இன்னொரு வழி, மற்றவர்களுடைய தோழமையை அனுபவிப்பதாகும். “தன்னையே தனிமைப்படுத்துகிறவன் சுயநலத்தை நாடுகிறான்; எல்லா நடைமுறை ஞானத்திற்கும் எதிரான போக்கில் போகிறான்” என்று நீதிமொழிகள் 18:1-ல் (NW) பைபிள் சொல்கிறது. தனிமைப்படுத்திக்கொள்வது ஒருவரது மனதை மோசமாகப் பாதிக்குமென அந்த வசனம் சொல்வதைக் கவனித்தீர்களா? மாறாக, அவ்வப்போது மற்றவர்களுடைய தோழமையை அனுபவிப்பது உங்களை உற்சாகப்படுத்துவதோடு, இழந்துபோன நம்பிக்கையான மனப்பான்மையை மீண்டும் பெற உதவுகிறது. உங்களை வந்து சந்திக்குமாறு நீங்களாகவே ஏன் மற்றவர்களைக் கேட்கக் கூடாது?

சில சமயங்களில், மணத்துணையைக் கவனித்துக்கொள்பவருக்குச் சமநிலையைக் காத்துக்கொள்வது பிரச்சினையாகிவிடலாம். சிலர் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதால், மெல்ல மெல்ல சோர்ந்து போய், தங்கள் உடல்நலத்தையே கெடுத்துக் கொள்கிறார்கள். கடைசியில், தங்கள் நேசத்திற்குரிய துணையைத் தொடர்ந்து கவனித்துக் கொள்ள முடியாத நிலைக்கு ஆளாகிறார்கள். ஆகவே, தீராத வியாதியால் கஷ்டப்படுகிற துணையை நீங்கள் கவனித்துக்கொள்கிறீர்கள் என்றால், உங்களுடைய தேவைகளை அசட்டை செய்துவிடாதீர்கள். நீங்கள் புத்துணர்ச்சி பெறுவதற்கு அமைதியான நேரத்தைத் தவறாமல் ஒதுக்குங்கள். c கணவன் தன் நம்பகமான தோழனிடமோ மனைவி தன் நம்பகமான தோழியிடமோ அவ்வப்போது கவலைகளையெல்லாம் கொட்டுவது மனதுக்கு மருந்தாக இருந்திருப்பதைச் சிலருடைய அனுபவம் காட்டுகிறது.

இப்படிச் செய்துபாருங்கள்: உங்கள் மணத்துணையைக் கவனித்துக்கொள்வதில் நீங்கள் எதிர்ப்படும் பிரச்சினைகளையெல்லாம் ஒரு பேப்பரில் எழுதுங்கள். அவற்றைத் தீர்க்க அல்லது இன்னும் நன்கு சமாளிக்க நீங்கள் என்னென்ன செய்யலாம் என்பதையும் எழுதுங்கள். சதா அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்காமல், ‘சூழ்நிலையைச் சரிப்படுத்துவதற்கு மிக எளிய, மிகச் சிறந்த வழி எது?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.

நம்பிக்கையோடிருக்க முயற்சி செய்யுங்கள்

“இந்நாட்களைப் பார்க்கிலும் முன்நாட்கள் நலமாயிருந்தது என்று சொல்லாதே” என்று பைபிள் எச்சரிக்கிறது. (பிரசங்கி 7:10) எனவே, அந்த வியாதி வராதிருந்தால் வாழ்க்கை எப்படி இருந்திருக்குமென சதா யோசித்துக் கொண்டிருக்காதீர்கள். இந்த உலகத்தில் முழுமையான சந்தோஷம் என்ற ஒன்று இல்லை என்பதை நினைவில் வையுங்கள். உங்கள் சூழ்நிலையை ஏற்றுக்கொண்டு, அதை நன்கு சமாளிப்பதுதான் சிறந்தது.

அதைச் செய்ய உங்களுக்கும் உங்கள் துணைக்கும் எது உதவலாம்? நீங்கள் இருவரும் பெற்றிருக்கிற ஆசீர்வாதங்களைப் பற்றிப் பேசுங்கள். உங்கள் உடல்நலம் துளியளவு தேறினாலும்கூட அதற்காகச் சந்தோஷப்படுங்கள். ஆசையோடு எதிர்பார்க்க வைக்கும் காரியங்களைச் செய்வதற்குத் திட்டமிடுங்கள், இருவருமாகச் சேர்ந்து நியாயமான இலக்குகளை வையுங்கள்.

ஷோஜி, ஆகிகோ தம்பதியரை எடுத்துக்கொள்வோம்; அவர்கள் மேற்குறிப்பிடப்பட்ட அறிவுரைகளைப் பின்பற்றி நல்ல பலன்களைப் பெற்றிருக்கிறார்கள். ஒரு சமயம், ஆகிகோவுக்குத் தசைநார் வலி நோய் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது; அப்போது, அவர்கள் செய்துவந்த விசேஷ முழுநேர கிறிஸ்தவ ஊழியத்தை நிறுத்த வேண்டியிருந்தது. அவர்கள் மனமுடைந்துவிட்டார்களா? அதில் சந்தேகமில்லை. என்றாலும், அதுபோன்ற சூழ்நிலையிலுள்ள எல்லாருக்கும் ஷோஜி இவ்வாறு அறிவுரை கூறுகிறார்: “இனி நீங்கள் செய்ய முடியாத காரியங்களை நினைத்துச் சோர்ந்து போய்விடாதீர்கள். எப்போதும் நம்பிக்கையான மனநிலையோடு இருங்கள். என்றாவது ஒருநாள் எல்லாம் சரியாகி நீங்கள் பழைய நிலைக்குத் திரும்பிவிடுவீர்கள் என்ற நம்பிக்கை உங்கள் இருவருக்கும் இருந்தாலும், தற்போதுள்ள வாழ்க்கைக்குக் கவனம் செலுத்துங்கள். என்னைப் பொறுத்தவரை, என் மனைவியைப் பார்த்துக்கொண்டு, அவளுக்கு உதவுவதில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.” உங்கள் மணத்துணை சுகமில்லாதிருந்தால் இந்த நடைமுறை ஆலோசனைகள் உங்களுக்கும் உதவும். (w09-E 11/01)

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b மணத்துணை தீராத வியாதியால் கஷ்டப்படும் சூழ்நிலைகளைப் பற்றி இந்தக் கட்டுரை சிந்திக்கிறது. என்றாலும், விபத்தால் அல்லது மனச் சோர்வு போன்ற உணர்ச்சி ரீதியிலான பிரச்சினைகளால் கஷ்டங்களைச் சமாளிக்கும் தம்பதியரும்கூட இந்தக் கட்டுரையிலுள்ள ஆலோசனைகளைப் பின்பற்றிப் பயனடையலாம்.

c உங்களுடைய சூழ்நிலைகளைப் பொறுத்து, நர்ஸுகளிடமிருந்தோ சமூக நல நிறுவனங்கள் இருந்தால் அவற்றிடமிருந்தோ பகுதிநேர உதவியையாவது பெறுவது ஞானமானதாய் இருக்கலாம்.

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள் . . .

இப்போதே நானும் என் துணையும் என்ன செய்வது மிக முக்கியம்?

  • வியாதியைப் பற்றி அதிகம் பேசுவது

  • வியாதியைப் பற்றி அதிகம் பேசாதிருப்பது

  • அதிகம் கவலைப்படாதிருப்பது

  • ஒருவர் மீது ஒருவர் அதிக கரிசனை காட்டுவது

  • வேறு காரியங்களில் சேர்ந்து ஈடுபடுவது

  • மற்றவர்களுடன் இன்னுமதிக நேரம் செலவிடுவது

  • சேர்ந்து இலக்குகளை வைப்பது