Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிசாசு என்ற ஒருவன் உண்மையில் இருக்கிறானா?

பிசாசு என்ற ஒருவன் உண்மையில் இருக்கிறானா?

வாசகரின் கேள்வி

பிசாசு என்ற ஒருவன் உண்மையில் இருக்கிறானா?

ஆம், பிசாசாகிய சாத்தான் என்ற ஒருவன் இருப்பதாக பைபிள் சொல்கிறது. ஆனால், இந்தக் கருத்தை பைபிள் விமர்சகர்கள் ஏளனம் செய்கிறார்கள். சாத்தான் என்பது மனிதனுக்குள் இருக்கிற தீய குணமே என்று அவர்கள் சொல்கிறார்கள்.

சாத்தானைப் பற்றி வித்தியாசமான கருத்து இருப்பதைக் குறித்து நாம் ஆச்சரியப்பட வேண்டுமா? வேண்டியதில்லை. உதாரணத்திற்கு, ஒரு குற்றவாளி தன்னை யாரும் கண்டுபிடிக்காமல் இருப்பதற்கும் மாட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபடுவதற்கும் தன்னுடைய கைரேகையைத் தடயம் தெரியாதபடி அழித்துவிடுவான். அவ்வாறே, சாத்தானும்கூட படு சாமர்த்தியமான குற்றவாளியாக இருக்கிறான்; அவன் திரைக்குப் பின்னாலிருந்து அநியாயத்தையும் அட்டூழியத்தையும் முடுக்கிவிடுவதில் பெரிய கில்லாடி. இந்த உலகில் தீமை தலைவிரித்தாடுவதற்கு சாத்தானே பொறுப்பாளி என இயேசு தெள்ளத்தெளிவாகச் சுட்டிக்காட்டினார். அவன் “இந்த உலகத்தை ஆளுகிறவன்” என அவர் குறிப்பிட்டார்.—யோவான் 12:31.

பிசாசு எப்படி வந்தான்? ஆரம்பத்தில் அவன் பரலோகத்தில் ஒரு பரிபூரண தேவதூதனாகப் படைக்கப்பட்டிருந்தான்; மனிதர் கடவுளை வணங்காமல் தன்னை வணங்க வேண்டுமென்ற கட்டுக்கடங்கா ஆசையால் அவன் கலகம் செய்து தன்னைத்தானே பிசாசாக ஆக்கிக்கொண்டான். பூமியில், இயேசுவுக்கும் பிசாசுக்கும் இடையில் நடந்த உரையாடலைப் பற்றி பைபிள் சொல்கிறது; அவனுக்கு எந்தளவு சுயநல ஆசை இருந்ததென்று அந்த உரையாடலிலிருந்து தெரிகிறது. ‘ஒரேவொரு முறை தன்முன் விழுந்து வணங்கும்படி’ இயேசுவிடம் அவன் கேட்டான்.—மத்தேயு 4:8, 9.

அவ்வாறே, அவனுக்கும் கடவுளுக்கும் இடையில் நடந்த உரையாடல்களைப் பற்றி யோபு புத்தகம் குறிப்பிடுகிறது; அவை அவனுடைய கெட்ட புத்தியை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன. மனிதரைக் கடவுளைவிட்டு விலக வைப்பதற்கு அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான்.—யோபு 1:13-19; 2:7, 8.

சாத்தான், யெகோவா தேவனிடமும் இயேசு கிறிஸ்துவிடமும் உரையாடியிருக்கிறான் என்றால், சாத்தான் என்பது ஒருவருக்குள் இருக்கிற வெறும் தீய சக்தி என்று எப்படிச் சொல்ல முடியும்? கடவுளுக்குள்ளும் அவருடைய மகனுக்குள்ளும் எந்தத் தீய சக்தியும் இல்லையே! ஆகையால், சாத்தான் என்ற ஒருவன் உண்மையிலேயே இருக்கிறான் என்பது தெளிவாகிறது; அவன் யெகோவாவையும் இயேசுவையும் துளிகூட மதிக்காத ஒரு கெட்ட தூதன்.

உலகில் அநியாயமும் அட்டூழியமும் மலிந்து கிடப்பது, பிசாசு என்ற ஒருவன் உண்மையில் இருக்கிறான் என்பதற்கு அத்தாட்சி அளிக்கிறது. ஒருபுறம் மக்கள் பட்டினியில் வாட, இன்னொரு புறம் உலக நாடுகள் தங்களிடம் இருக்கிற அதிகப்படியான உணவுப்பொருட்களைப் பாழாய்ப் போகும்படி விட்டுவிடுகின்றன. நாடுகள் ஒன்றையொன்று தாக்கி ஒட்டுமொத்தமாய் அழிக்க வல்ல ஆயுதங்களைக் குவித்து வைத்திருக்கின்றன. அதோடு, இந்தப் பூமியின் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. என்றாலும், இப்படிப்பட்ட நாசகரமான செயல்களுக்கும் பகைமைக்கும் காரணம் யாரென்று பெரும்பாலோருக்குத் தெரிவதில்லை. ஏன்?

சாத்தான், “விசுவாசிகளாக இல்லாத அவர்களுடைய மனக்கண்களை . . . குருடாக்கியிருக்கிறான்” என்று பைபிள் சொல்கிறது. (2 கொரிந்தியர் 4:4) அவன் மனிதரைத் தன் கைப்பாவையாக ஆட்டி வைப்பதற்கு, கண்களுக்குப் புலப்படாத ஓர் அமைப்பைப் பயன்படுத்துகிறான். அவன் ‘பேய்களின் தலைவனாக’ இருக்கிறான். (மத்தேயு 12:24) ஒரு குற்றவாளிக் கும்பலின் தலைவன், சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் தன்னைக் காட்டிக்கொள்ளாமலேயே ஒரு பெரிய அமைப்பை நடத்தி வருவதுபோல சாத்தானும் பெருவாரியான மக்களுக்குத் தன்னைக் காட்டிக்கொள்ளாமலேயே பொல்லாத தூதர்களைக் கொண்ட ஒரு மர்ம அமைப்பைப் பயன்படுத்தி அவர்களை ஆட்டி வைக்கிறான்.

பைபிளுக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம்! அது பிசாசின் முகமூடியைக் கிழித்து அவனுடைய அமைப்பை அம்பலப்படுத்துகிறது; இதனால், பிசாசின் கைப்பாவையாக ஆகிவிடாதிருப்பதற்கு நாம் நடவடிக்கை எடுக்க முடியும். பைபிள் இவ்வாறு அறிவுரை கொடுக்கிறது: “கடவுளுக்கு அடங்கி நடங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்போது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.”—யாக்கோபு 4:7. (w09-E 10/01)