Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“எத்தனை காலம்தான் உதவிக்காகக் கெஞ்சுவேன்”?

“எத்தனை காலம்தான் உதவிக்காகக் கெஞ்சுவேன்”?

“எத்தனை காலம்தான் உதவிக்காகக் கெஞ்சுவேன்”?

“என் வலி எப்படியாவது நின்றால் போதும்!” என்று ஜேன் தேம்பித் தேம்பி அழுதார். அவருக்குப் புற்றுநோய் வந்திருந்தது. அது அவருடைய உடலெல்லாம் பரவிக்கொண்டிருந்தது. அவருடைய கொடிய வியாதியைக் குணப்படுத்துவதற்கும் கடும் வேதனையைப் போக்குவதற்கும் அவருடைய குடும்பத்தாரும் நண்பர்களும் எவ்வளவாய்த் துடித்தார்கள்! அவருக்கு உதவும்படி கடவுளிடம் வேண்டினார்கள். அவர்களுடைய வேண்டுதலைக் கடவுள் கேட்டாரா? அவர் அக்கறை காட்டினாரா?

கடவுள் மனிதர்களுடைய நிலையை நன்கு அறிந்திருக்கிறார். “படைப்புகளெல்லாம் ஒன்றாகக் குமுறிக்கொண்டும் வேதனைப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன” என்று அவருடைய புத்தகமான பைபிள் சொல்கிறது. (ரோமர் 8:22) ஜேனைப் போல லட்சக்கணக்கானோர் ஒவ்வொரு நாளும் உடல் ரீதியிலோ உணர்ச்சி ரீதியிலோ மன ரீதியிலோ வேதனைப்படுவதைக் கடவுள் அறிந்திருக்கிறார். தினமும் 80 கோடி பேர் பட்டினியாய்ப் படுக்கைக்குப் போவதை அவர் பார்க்காமலில்லை; லட்சக்கணக்கானோர் வீட்டில் வன்முறைக்கு ஆளாவது அவருக்குத் தெரியாமலில்லை; அநேக பெற்றோர் தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்தையும் நலனையும் நினைத்துக் கவலைப்படுவது அவருக்குப் புரியாமலில்லை. இதற்கெல்லாம் கடவுள் ஏதாவது செய்வாரா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நம்முடைய பாசத்துக்குரிய குடும்பத்தாருக்கு நாம் உதவ விரும்பும்போது, கடவுள் தாம் படைத்த மனித குடும்பத்தாருக்கு உதவ விரும்ப மாட்டாரா?

அதே கேள்விகளை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? உங்களைப் போல அநேகர் கேட்டிருக்கிறார்கள். 2,600-க்கும் அதிக ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆபகூக் என்ற தேவபக்திமிக்க ஒருவர்கூட, “யெகோவாவே, எத்தனை காலம்தான் உதவிக்காகக் கெஞ்சுவேன், நீரும் கேளாமல் இருக்கிறீரே!” (NW) என்று கடவுளிடம் கேட்டார்; அதோடு, “கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் இரட்சியாமலிருக்கிறீரே! நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து, என்னைத் தீவினையைப் பார்க்கப்பண்ணுகிறதென்ன? கொள்ளையும் கொடுமையும் எனக்கு எதிரே நிற்கிறது; வழக்கையும் வாதையும் [அதாவது, சண்டையையும் சச்சரவையும்] எழுப்புகிறவர்கள் உண்டு” என்றார். (ஆபகூக் 1:2, 3) எபிரெய தீர்க்கதரிசியாக இருந்த அவர், அதிர்ச்சியூட்டும் கண்மூடித்தனமான வன்முறையையும் கொடுமையையும் கண்ணெதிரேயே பார்த்தார். இன்று அத்தகைய செயல்கள் அன்றாடம் நடப்பதைக் கண்டு இரக்கமுள்ளவர்களின் நெஞ்சம் பதறுகிறது.

ஆபகூக்கின் மனக் குமுறல்களைக் கடவுள் அசட்டை செய்தாரா? இல்லை. அவருடைய உள்ளப்பூர்வமான கேள்விகளைக் கடவுள் காதுகொடுத்துக் கேட்டார்; பின்பு, நொந்துபோயிருந்த அவருக்கு ஆறுதலையும் உற்சாகத்தையும் அளித்தார். துன்பத்தைத் தீர்க்கப் போவதாக யெகோவா உறுதியளித்து, ஆபகூக்கின் விசுவாசத்தைப் பலப்படுத்தினார். ஜேனும் அவருடைய குடும்பத்தாரும் கடவுளுடைய செய்தியிலிருந்து நம்பிக்கையைப் பெற்றார்கள்; அதுபோல் நீங்களும் நம்பிக்கையைப் பெற முடியும். கடவுள் நம்மீது அக்கறையுள்ளவரே என்று நாம் எப்படி உறுதியாய் நம்பலாம்? துன்பத்தைத் தீர்க்கக் கடவுள் என்ன செய்யப் போகிறார், எப்போது? இந்தக் கேள்விகளுக்கு இனிவரும் கட்டுரைகள் பதில் அளிக்கும். (w09-E 12/01)