Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தீர்மானிக்கும் சுதந்திரத்தை யெகோவா தருகிறார்

தீர்மானிக்கும் சுதந்திரத்தை யெகோவா தருகிறார்

கடவுளிடம் நெருங்கி வாருங்கள்

தீர்மானிக்கும் சுதந்திரத்தை யெகோவா தருகிறார்

உபாகமம் 30:11-20

“யெகோவாவுக்கு உண்மையற்றவளாகி விடுவேனோ என்ற அநாவசியமான பயம் என்னை அடிக்கடி வாட்டியது” என்று ஒரு கிறிஸ்தவப் பெண் குறிப்பிட்டார். சிறு வயதில் அவருக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களின் காரணமாக, வாழ்வில் வெற்றி பெறவே முடியாது என்று நினைத்தார். அது சரியா? உண்மையில் சந்தர்ப்ப சூழ்நிலையை மீறி நம்மால் எதையும் செய்ய முடியாதா? அப்படிச் சொல்ல முடியாது. யெகோவா தேவன் நமக்குத் தெரிவு செய்யும் சுதந்திரத்தைத் தந்திருக்கிறார்; அதனால், எப்படி வாழ வேண்டுமென நாமாகவே தெரிவு செய்துகொள்ள முடியும். நாம் சரியான தெரிவுகளைச் செய்ய வேண்டுமென யெகோவா விரும்புகிறார்; அதை எப்படிச் செய்யலாம் என்று அவருடைய புத்தகமான பைபிள் நமக்குச் சொல்கிறது. உபாகமம் 30-ஆம் அதிகாரத்திலுள்ள மோசேயின் வார்த்தைகளைக் கவனியுங்கள்.

கடவுள் நம்மிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார் என்பதை அறிந்து அதன்படி நடப்பது கஷ்டமா? a மோசே மூலம் கடவுள் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நான் இன்று உனக்கு விதிக்கிற கட்டளை உனக்கு மறைபொருளும் அல்ல, அது உனக்குத் தூரமானதும் அல்ல.” (வசனம் 11) நம்மால் முடியாததை யெகோவா நம்மிடம் கேட்பதில்லை. அவர் நம்மிடம் எதிர்பார்க்கும் காரியங்கள் நியாயமானவை, செய்ய முடிந்தவை. அதோடு, தெரிந்துகொள்ள முடிந்தவை. கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பவற்றை அறிந்துகொள்வதற்கு ‘வானத்துக்கு ஏறிப் போக’ வேண்டியதுமில்லை, ‘சமுத்திரத்தைக் கடந்து செல்ல’ வேண்டியதுமில்லை. (வசனங்கள் 12, 13) நாம் எப்படி வாழ வேண்டுமென்று பைபிள் தெள்ளத்தெளிவாகச் சொல்கிறது.—மீகா 6:8.

என்றாலும், தமக்குக் கீழ்ப்படியும்படி யெகோவா நம்மை வற்புறுத்துவதில்லை. மோசே மூலமாக அவர் இவ்வாறு கூறுகிறார்: “ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன்.” (வசனம் 15) ஜீவனா மரணமா, நன்மையா தீமையா என்பதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறது. நாம் கடவுளை வழிபடவும் அவருக்குக் கீழ்ப்படிந்திருக்கவும் தீர்மானிக்கலாம்; அப்போது ஆசீர்வாதங்களைப் பெறலாம். அல்லது அவருக்குக் கீழ்ப்படியாதிருக்கத் தீர்மானிக்கலாம்; அப்போது விபரீதங்களைச் சந்திக்கலாம். எப்படியானாலும், தெரிவு நம் கையில்.—வசனங்கள் 16-18; கலாத்தியர் 6:7, 8.

நாம் எதைத் தெரிவு செய்கிறோம் என்பது யெகோவாவுக்கு முக்கியமா? ஆம், முக்கியமே! ‘ஜீவனைத் தெரிந்துகொள்’ என கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் மோசே சொன்னார். (வசனம் 19) அப்படியானால், நாம் எப்படி ஜீவனைத் தெரிந்துகொள்ளலாம்? “உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக” என்று மோசே விளக்கினார். (வசனம் 20) நாம் யெகோவாமீது அன்புகூருகையில் அவருக்குச் செவிகொடுத்து நடக்கவும் எந்தச் சூழ்நிலையிலும் உண்மையோடு அவரைப் பற்றியிருக்கவும் விரும்புவோம். அவ்வாறு செய்கையில் நாம் ஜீவனைத் தெரிந்துகொள்கிறோம்; அதாவது, கடவுளுடைய புதிய உலகில் என்றென்றும் வாழும் எதிர்பார்ப்பைக் கொண்ட மிகச் சிறந்த வாழ்க்கையை இப்போது தெரிந்துகொள்கிறோம்.—2 பேதுரு 3:11-13; 1 யோவான் 5:3.

மோசேயின் வார்த்தைகளிலுள்ள உண்மை நம்பிக்கையூட்டுகிறது. இந்தப் பொல்லாத உலகில் எப்படிப்பட்ட மோசமான சூழ்நிலைகளை நீங்கள் அனுபவித்திருந்தாலும் சரி அவற்றிலிருந்து நீங்கள் மீண்டுவர முடியும், வாழ்வில் வெற்றி பெறவும் முடியும். யெகோவா உங்களுக்குத் தெரிவு செய்யும் சுதந்திரத்தைத் தந்து உங்களைக் கண்ணியப்படுத்தியிருக்கிறார். ஆம், உங்களால் யெகோவாமீது அன்புகூரவும் அவருக்குச் செவிகொடுக்கவும் அவரைப் பற்றியிருக்கவும் முடியும். இதை நீங்கள் தெரிவு செய்யும்போது யெகோவா உங்களுடைய முயற்சிகளை ஆசீர்வதிப்பார்.

யெகோவாமீது அன்புகூர்ந்து அவரைச் சேவிக்க நாம் தெரிவு செய்ய முடியும் என்ற இந்த உண்மை, இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்ணுக்கு ஆறுதல் அளித்தது. அவர் இவ்வாறு சொல்கிறார்: “நான் உண்மையில் யெகோவாவை நேசிக்கிறேன். இதுவே மிக முக்கியமான உண்மை என்பதைச் சில சமயங்களில் மறந்துவிட்டிருக்கிறேன். நிஜத்தில், நான் அவரை நேசிப்பதால் உண்மையுள்ளவளாக என்னால் இருக்க முடியும்.” யெகோவாவின் உதவியோடு உங்களாலும் அவ்வாறு இருக்க முடியும். (w09-E 11/01)

[அடிக்குறிப்பு]

a இந்தப் பத்திரிகையில் 16-ஆம் பக்கத்திலுள்ள “கடவுளிடம் நெருங்கி வாருங்கள்—யெகோவா நம்மிடம் எதைக் கேட்கிறார்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.