Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்

இரு சகாப்தங்களின் அக்கிரமத்தைக் கண்ட சேம்

இரு சகாப்தங்களின் அக்கிரமத்தைக் கண்ட சேம்

நோவாவின் மகனான சேம் ஒரு சகாப்தத்திற்கு வந்த அழிவிலிருந்து உயிர்பிழைத்து இன்னொரு சகாப்தத்திலும் வாழ்ந்தார். அந்த முதல் சகாப்தத்தில் வாழ்ந்தவர்கள் ஏன் அழிக்கப்பட்டார்கள் என்றும் சேமும் அவருடைய குடும்பத்தாரும் எப்படி உயிர்பிழைத்து இன்னொரு சகாப்தத்தில் வாழ முடிந்தது என்றும் உனக்குத் தெரியுமா?— a அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

சேம் இளைஞராக இருந்தபோது உலகில் “மனுஷனுடைய அக்கிரமம்” அதிகமாயிருந்தது என பைபிள் சொல்கிறது. அவர்கள் ‘நித்தமும் பொல்லாததையே,’ அதாவது எப்போதும் கெட்டதையே யோசித்தார்கள். அதனால், கடவுள் என்ன செய்தார், தெரியுமா?— அவர் பெருவெள்ளத்தை வரச்செய்து கெட்டவர்கள் எல்லாரையும் அழித்தார். ‘அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே [அதாவது, வெள்ளத்தினாலே] அழிந்தது’ என அப்போஸ்தலன் பேதுரு எழுதினார்.ஆதியாகமம் 6:5; 2 பேதுரு 3:6.

அந்த உலகத்தை, அதாவது அந்தச் சகாப்தத்தில் வாழ்ந்தவர்களை, கடவுள் ஏன் அழித்தார் என்று புரிகிறதா?— அவர்கள் கெட்டவர்களாக இருந்தார்கள், ‘எப்போதும் கெட்டதையே’ யோசித்தார்கள். இயேசு இதைப் பற்றிச் சொன்னார். “பெருவெள்ளம் வருவதற்கு முன்னான காலத்தில், மக்கள் சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும் பெண் எடுத்துக்கொண்டும் பெண் கொடுத்துக்கொண்டும்” பொழுதைப் போக்கினார்கள் என்று அவர் சொன்னார். “பெருவெள்ளம் வந்து எல்லாரையும் அடித்துக்கொண்டு போகும்வரை அவர்கள் கவனம் செலுத்தவே இல்லை” என்றும் சொன்னார்.—மத்தேயு 24:37-39.

அவர்கள் எதற்குக் கவனம் செலுத்தவில்லை?— சேமின் அப்பாவான நோவா ‘நீதியைப் பிரசங்கித்தார்’; ஆனால், அந்த மக்கள் அவர் சொன்ன செய்தியைக் காதுகொடுத்துக் கேட்கவில்லை. நோவாவோ கடவுள் சொன்னதைக் கேட்டு, தன்னையும் தன் குடும்பத்தாரையும் பெருவெள்ளத்திலிருந்து காப்பாற்றுவதற்கு ஒரு பேழையை, அதாவது கப்பல் போன்ற ஒன்றைக் கட்டினார். நோவாவும் அவருடைய மனைவியும் அவர்களுடைய மகன்களான சேம், காம், யாபேத் என்பவர்களும் இவர்களுடைய மனைவிகளும் மட்டுமே கடவுள் செய்யச் சொன்ன காரியத்திற்குக் கவனம் செலுத்தினார்கள். மற்ற எல்லாரும் தாங்கள் செய்ய விரும்பியதையே செய்ததால் வெள்ளம் அவர்களை அடித்துக்கொண்டு போனது.—2 பேதுரு 2:5; 1 பேதுரு 3:20.

பெருவெள்ளம் வந்து சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு தண்ணீர் வற்றியதும், சேமும் அவருடைய குடும்பத்தாரும் பேழையைவிட்டு வெளியே வந்தார்கள். கெட்டவர்கள் எல்லாரும் அழிந்துவிட்டார்கள்; ஆனால், கொஞ்ச காலத்திற்குள் நிலைமை மறுபடியும் மாறியது. சேமின் சகோதரனான காமின் மகன் கானான் ரொம்பவே மோசமான ஒரு காரியத்தைச் செய்தான்; அதனால், “கானான் சபிக்கப்பட்டவன்” என்று நோவா சொன்னார். காமின் பேரனான நிம்ரோதுவும்கூட கெட்டவனாக இருந்தான். அவன் உண்மைக் கடவுளான யெகோவாவுக்கு விரோதமாக நடந்தான்; பேரும் புகழும் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாபேல் என்ற ஒரு பெரிய கோபுரத்தைக் கட்டும்படி மக்களிடம் சொன்னான். இதை அறிந்த சேமுக்கும் அவருடைய அப்பாவுக்கும் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்.—ஆதியாகமம் 9:25; 10:6-10; 11:4, 5.

அவர்கள் வேதனைப்பட்டார்கள், யெகோவாவும் வேதனைப்பட்டார். யெகோவா என்ன செய்தார், தெரியுமா?— மக்களுடைய பாஷையைக் குழப்பிவிட்டார், அதனால், ஒருவருக்கொருவர் பேசுவது புரியாமல் கோபுரம் கட்டும் வேலையை நிறுத்திவிட்டு தங்கள் தங்கள் பாஷைக்காரர்களோடு சேர்ந்து வெவ்வேறு இடங்களுக்குப் போக வேண்டியதாயிற்று. (ஆதியாகமம் 11:6-9) ஆனால், சேமும் அவருடைய குடும்பத்தாரும் பேசிய பாஷையைக் கடவுள் மாற்றவில்லை. அதனால், அவர்கள் நெருக்கமாக இருக்க முடிந்தது; கடவுளுக்குச் சேவை செய்ய ஒருவருக்கொருவர் உதவியாகவும் இருக்க முடிந்தது. சேம் எவ்வளவு காலம் யெகோவாவுக்குச் சேவை செய்திருப்பார் என்று எப்போதாவது நீ யோசித்துப் பார்த்திருக்கிறாயா?—

சேம் 600 வயதுவரை வாழ்ந்தார். பெருவெள்ளத்திற்கு முன் 98 வருடங்களும் அதற்குப் பின் 502 வருடங்களும் வாழ்ந்தார். பேழை கட்டுவதற்கும், பெருவெள்ளம் வரவிருந்ததைப் பற்றி மக்களுக்கு எச்சரிப்பதற்கும் அவர் நோவாவுக்கு நிச்சயம் உதவியிருப்பார். ஆனால், பெருவெள்ளத்திற்குப் பிறகு 500 வருடங்களுக்கும் மேலாக சேம் என்ன செய்திருப்பார் என நீ நினைக்கிறாய்?— நோவா யெகோவாவை ‘சேமுடைய தேவன்’ என்று குறிப்பிட்டார். அப்படியென்றால், சேம் யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்திருக்க வேண்டும்; அப்படிச் செய்வதற்கு தன் குடும்பத்தாருக்கும் உதவியிருக்க வேண்டும். அவருடைய குடும்பத்தில்தான் பிற்பாடு, ஆபிரகாம், சாராள், ஈசாக்கு ஆகியோர் வந்தார்கள்.—ஆதியாகமம் 9:26; 11:10-31; 21:1-3.

இப்போது, இன்றைய உலகத்தைப் பற்றி நினைத்துப் பார்; சேமின் காலத்திலிருந்து அக்கிரமம் பெருகிக்கொண்டுதான் வந்திருக்கிறது. இந்த உலகத்திற்கு என்ன நடக்கும்?— அது “ஒழிந்துபோகும்” என்று பைபிள் சொல்கிறது. ஆனால், இந்த வாக்குறுதியைக் கவனி: “கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறவனோ என்றென்றும் நிலைத்திருப்பான்.” ஆகவே, நாம் கடவுளுடைய சித்தத்தைச் செய்தால் நாமும் உயிர்பிழைத்து கடவுளுடைய புதிய உலகில் வாழ்வோம். அப்போது, கடவுளுடைய உதவியோடு பூமியில் என்றென்றைக்கும் சந்தோஷமாக வாழ்வோம்!—1 யோவான் 2:17; சங்கீதம் 37:29; ஏசாயா 65:17. (w09-E 10/01)

a நீங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்கிறீர்கள் என்றால், கோடிட்ட இடத்தில் சற்று நிறுத்தி அங்கு கேட்கப்பட்ட கேள்விக்கு உங்கள் பிள்ளையையே பதில் சொல்லச் சொல்லுங்கள்.