Skip to content

அறிவியலோடு பைபிள் ஒத்துப்போகிறதா?

அறிவியலோடு பைபிள் ஒத்துப்போகிறதா?

பைபிள் தரும் பதில்

 ஆம், ஒத்துப்போகிறது. பைபிள் ஓர் அறிவியல் புத்தகமல்ல என்றாலும், அது குறிப்பிடுகிற அறிவியல் விஷயங்கள் துல்லியமாக இருக்கின்றன. அறிவியலும் பைபிளும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகின்றன என்பதற்கும், பைபிள் எழுதப்பட்ட காலத்தில் வாழ்ந்த நிறைய பேருடைய நம்பிக்கைகள், பைபிளில் இருக்கிற அறிவியல் உண்மைகளோடு ரொம்பவே வேறுபட்டன என்பதற்கும் சில உதாரணங்களைக் கவனியுங்கள்.

  •   இந்தப் பிரபஞ்சத்திற்கு ஓர் ஆரம்பம் இருந்தது. (ஆதியாகமம் 1:1) இதற்கு நேர்மாறாக, இந்தப் பிரபஞ்சம் படைக்கப்படவில்லை என்றும், கண்டபடி இருந்த காரியங்களிலிருந்து அது ஒழுங்கமைக்கப்பட்டது என்றும் பூர்வகால கட்டுக்கதைகள் பல சொல்கின்றன. இரண்டு கடல்களிலிருந்து வந்த தெய்வங்கள் இந்தப் பிரபஞ்சத்தைப் பிறப்பித்ததாக பாபிலோனியர்கள் நம்பினார்கள். ஒரு ராட்சத முட்டையிலிருந்து இந்தப் பிரபஞ்சம் வந்ததாக மற்ற புராணக்கதைகள் சொல்கின்றன.

  •   தினம்தினம் இந்தப் பிரபஞ்சம் இயற்கைச் சட்டங்களால் இயக்கப்படுகிறதே தவிர, தெய்வங்களுடைய சொந்த இஷ்டப்படி அல்ல. (யோபு 38:33; எரேமியா 33:25) தெய்வங்கள் திடுதிப்பென்றும், சிலசமயங்களில் ஈவிரக்கமில்லாமலும் எடுக்கிற நடவடிக்கைகளுக்கு எதிராக மனிதர்களால் எதுவுமே செய்ய முடியாது என்று உலகெங்கும் நம்பப்படுகிற கட்டுக்கதைகள் சொல்கின்றன.

  •   பூமி அந்தரத்தில் தொங்குகிறது. (யோபு 26:7) ஆனால், பூர்வகால மக்கள் பலர் இந்த உலகம் தட்டையான தகடு என்றும், ஒரு ராட்சதனால், அல்லது எருமை, கடலாமை போன்ற ஒரு மிருகத்தால் அது தாங்கிப் பிடிக்கப்பட்டிருக்கிறது என்றும் நினைத்தார்கள்.

  •   கடல்களிலிருந்தும் மற்ற நீர்நிலைகளிலிருந்தும் ஆவியாகி மேலே போகிற தண்ணீர்தான் மழையாக, பனியாக, அதாவது பனிக்கட்டியாக, மறுபடியும் பூமியில் விழுந்து, ஆறுகளையும் நீரூற்றுகளையும் நிரப்புகிறது. (யோபு 36:27, 28; பிரசங்கி 1:7; ஏசாயா 55:10; ஆமோஸ் 9:6) ஆனால் பண்டைய கிரேக்கர்கள், நிலத்தடி கடல்நீரிலிருந்துதான் ஆறுகளுக்குத் தண்ணீர் கிடைக்கிறது என்று நினைத்தார்கள், இந்தக் கருத்து 18-ஆம் நூற்றாண்டுவரை நீடித்தது.

  •   மலைகளின் உயரம் ஏறவும், இறங்கவும் செய்யும். இன்றைக்கு மேலே தெரிகிற மலைகள் ஒருகாலத்தில் கடலுக்கு அடியில் இருந்தன. (சங்கீதம் 104:6, 8) இந்த உண்மைக்கு நேர்மாறாக, மலைகள் இப்போது இருக்கிற விதமாகவே தெய்வங்கள் அவற்றைப் படைத்ததாக ஏராளமான கட்டுக்கதைகள் சொல்கின்றன.

  •   சுத்தமான பழக்கவழக்கங்கள் உடல் ஆரோக்கியத்தைக் கட்டிக்காக்கும். பிணத்தைத் தொட்டால் குளிக்க வேண்டும், தொற்றுநோய் உள்ளவர்களைத் தனியாக ஒதுக்கிவைக்க வேண்டும், மலஜலத்தைச் சரியாக அப்புறப்படுத்த வேண்டும் போன்ற நிறைய கட்டளைகள் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுக்கப்பட்ட திருச்சட்டத்தில் இருந்தன. (லேவியராகமம் 11:28; 13:1-5; உபாகமம் 23:13) இதற்கு நேர்மாறாக, அந்தச் சட்டங்கள் கொடுக்கப்பட்ட காலத்தின்போது புழக்கத்திலிருந்த ஓர் எகிப்திய சிகிச்சை முறையில், உடல் காயங்கள்மீது மனித மலம் கலந்த ஒரு கலவையைப் பூசினார்கள்.

தவறான அறிவியல் தகவல்கள் பைபிளில் இருக்கின்றனவா?

 பைபிளை நியாயமான விதத்தில் ஆராய்ந்து பார்த்தால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும். பைபிளில் இருக்கும் அறிவியல் விஷயங்களைப் பற்றிப் பொதுவாகச் சொல்லப்படுகிற சில கட்டுக்கதைகள் இதோ:

 கட்டுக்கதை: இந்தப் பிரபஞ்சம் 24 மணிநேரங்களைக் கொண்ட ஆறு நாட்களில் படைக்கப்பட்டது என்று பைபிள் சொல்கிறது.

 உண்மை: இந்தப் பிரபஞ்சம் எப்போது படைக்கப்பட்டது என்று பைபிள் சொல்வதில்லை. (ஆதியாகமம் 1:1) ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ள படைப்பு நாள் ஒவ்வொன்றும் ஒரு சகாப்தமாக இருக்கிறது; ஒவ்வொரு சகாப்தமும் எவ்வளவு காலம் நீடித்திருந்தது என்று குறிப்பிடப்படவில்லை. சொல்லப்போனால், இந்தப் பூமியும் வானமும் படைக்கப்பட்ட முழு காலப்பகுதியையும் ஒரு ‘நாள்’ என்றே பைபிள் அழைக்கிறது.—ஆதியாகமம் 2:4.

 கட்டுக்கதை: தாவரங்களில் நிகழ்கிற ஒளிச்சேர்க்கைக்கு அவசியமான சூரியன் படைக்கப்படுவதற்கு முன்பே தாவரங்கள் படைக்கப்பட்டுவிட்டன என்று பைபிள் சொல்கிறது.—ஆதியாகமம் 1:11, 16.

 உண்மை: ‘வானத்தின்’ பாகமாக இருக்கிற நட்சத்திரங்களில் ஒன்றான சூரியன், தாவரங்கள் படைக்கப்படுவதற்கு முன்பே படைக்கப்பட்டது என்பதை பைபிள் காட்டுகிறது. (ஆதியாகமம் 1:1) படைப்பின் முதல் “நாளின்போது,” அதாவது “சகாப்தத்தின்போது,” சூரியனிலிருந்து மங்கலான ஒளி பூமியின் மேற்பரப்பை எட்டியது. படைப்பின் மூன்றாம் ‘நாளின்போது,’ ஆகாயவிரிவு தெளிவாகத் தெரியதெரிய, ஒளிச்சேர்க்கை நடப்பதற்குப் போதுமானளவு ஒளி கிடைத்தது. (ஆதியாகமம் 1:3-5, 12, 13) கொஞ்சக் காலத்திற்குப் பிறகுதான், பூமியிலிருந்து சூரியன் நன்றாகத் தெரிய ஆரம்பித்தது.—ஆதியாகமம் 1:16.

 கட்டுக்கதை: சூரியன் பூமியைச் சுற்றி வருகிறதென பைபிள் சொல்கிறது.

 உண்மை: பிரசங்கி 1:5 இப்படிச் சொல்கிறது: “சூரியன் உதிக்கிறது, பின்பு மறைகிறது. தான் புறப்பட்ட இடத்துக்கே அது வேகமாகப் போய் மறுபடியும் உதிக்கிறது.” பூமியிலிருந்து பார்க்கும்போது தெரிகிற சூரியனின் இட மாற்றத்தைத்தான் இந்த வசனம் விவரிக்கிறது. இன்றும்கூட ஜனங்கள் “சூரியன் உதிக்கிறது,” “சூரியன் மறைகிறது” என்று சொல்கிறார்கள், இத்தனைக்கும் பூமிதான் சூரியனைச் சுற்றிவருகிறது என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும்!

 கட்டுக்கதை: பூமி தட்டையானது என்று பைபிள் சொல்கிறது.

 உண்மை: பூமியிலுள்ள தொலைதூரப் பகுதிகளைக் குறிப்பதற்குத்தான் “பூமியின் எல்லைகள்” என்ற வார்த்தைகளை பைபிள் பயன்படுத்துகிறது; பூமி தட்டையானது என்றோ அதற்கு ஒரு முனை இருக்கிறது என்றோ இது அர்த்தப்படுத்துவதில்லை. (அப்போஸ்தலர் 1:8) அதுபோலவே, ‘பூமியின் நாலாபக்கம்’ என்ற வார்த்தைகள், பூமி முழுவதையும் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிற ஓர் உருவக அணியாகும்.—ஏசாயா 11:12; லூக்கா 13:29.