Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்ப ஸ்பெஷல் | பிள்ளை வளர்ப்பு

சுய கட்டுப்பாட்டை வளர்க்க...

சுய கட்டுப்பாட்டை வளர்க்க...

சவால்

உங்கள் ஆறு வயது மகன் உங்களுக்கு கொஞ்சம்கூட அடங்காமல் இருக்கிறான். எதையாவது பார்த்தால், ‘அது உடனே வேணும்’ என்று அடம்பிடிக்கிறான். கோபம் வந்தால் கத்தி கூச்சல் போடுகிறான். நீங்கள் இப்படி யோசிக்கலாம்: ‘எல்லா பிள்ளைகளும் இப்படித்தான் இருப்பாங்களா? வளர்ந்ததுக்கு அப்புறம் சரியாயிடுவானா இல்லை இப்பவே நான் அவனை திருத்தணுமா?’ *

உண்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்

சுய கட்டுப்பாடு இல்லாத உலகத்தில் வாழ்கிறோம். “மக்கள், மனம் போன போக்கில் வாழ்கிறார்கள். ‘மனசு சொல்றத கேளுங்க’ என்ற வார்த்தைகள்தான் இன்று எல்லார் காதிலும் விழுகிறது. நல்ல எண்ணமுள்ள ஆலோசகர்களும் சரி பண ஆசை பிடித்த ஆலோசகர்களும் சரி, எல்லாருமே ‘ஆசைப்பட்டதை அடையுங்க’ என்றுதான் ஆலோசனை கொடுக்கிறார்கள்” என்கிறார் டாக்டர் டேவிட் வால்ஷ். *

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. பல வருடங்களாக செய்யப்பட்ட ஆராய்ச்சியில், ஆராய்ச்சியாளர்கள் சில உண்மைகளைக் கண்டுபிடித்தார்கள். அவர்கள், நான்கு வயது பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு மிட்டாய் கொடுத்து, ‘வேணும்னா நீங்க இந்த மிட்டாய இப்பவே சாப்பிடலாம். ஆனா, கொஞ்சம் நேரம் கழிச்சு சாப்பிட்டீங்கன்னா உங்களுக்கு இன்னொரு மிட்டாய் கிடைக்கும்’ என்று சொன்னார்கள். இவர்களில் பொறுமையைக் காட்டிய பிள்ளைகள், பெரியவர்களானபோது மற்ற பிள்ளைகளைவிட பக்குவப்பட்டவர்களாக இருந்தார்கள், நன்கு பழகினார்கள், படிப்பில் கெட்டிக்காரர்களாக இருந்தார்கள்.

மோசமான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். பிள்ளைகளுடைய மூளை, அவர்கள் வளரும் விதத்தை வைத்துத்தான் செயல்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அதைப் பற்றி டாக்டர் டான் கிண்ட்லன் சொல்கிறார்: “பிள்ளைகளுக்கு அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்தால், கேட்டதை எல்லாம் வாங்கிக்கொடுத்தால், பொறுமையாக இருக்க சொல்லிக் கொடுக்காவிட்டால், ஆசையை அடக்க கற்றுக்கொடுக்காவிட்டால் அது அவர்களுடைய மூளையின் செயல்பாட்டை பாதிக்கும்; மனதளவில் பலவீனமான நபர்களாக வளருவார்கள்.” *

என்ன செய்யலாம்?

நீங்கள் இந்த குணத்தை காட்டுங்கள். ‘டிராஃபிக் ஜாம்’ ஏற்படும்போது நீங்கள் பொறுமை இழந்துவிடுகிறீர்களா? வரிசையில் நிற்காமல் முந்திக்கொள்கிறீர்களா? மற்றவர்கள் பேசும்போது குறுக்கே பேசுகிறீர்களா? இதையெல்லாம் உங்கள் பிள்ளைகள் பார்ப்பார்கள். “நாம் முதலில் சுய கட்டுப்பாடோடு இருந்தால்தான் நம் பிள்ளைகள் அந்த குணத்தை காட்டுவார்கள்” என்கிறார் டாக்டர் கிண்ட்லன்.—பைபிள் ஆலோசனை: ரோமர் 12:9.

பின்விளைவுகளைப் பற்றி சொல்லுங்கள். இந்தக் குணத்தைக் காட்டுவதால் வரும் நன்மைகளையும் அதைக் காட்டாதபோது வரும் கஷ்டங்களையும் உங்கள் பிள்ளைகளுக்கு புரிய வையுங்கள். உங்கள் பிள்ளையின் வயதையும் பக்குவத்தையும் மனதில் வைத்து இதைச் செய்யுங்கள். உதாரணத்துக்கு, உங்கள் பிள்ளை யார்மீதாவது கோபமாக இருந்தால் அவனிடம், ‘பழிக்கு பழி வாங்குனா நல்லதா கெட்டதா?’ என்று கேளுங்கள். கோபத்தை அடக்க வேற என்ன செய்யலாம் என்று கேளுங்கள். ஒருவேளை 1 முதல் 10 வரை எண்ண சொல்லுங்கள். இல்லையென்றால், அந்த இடத்தைவிட்டு போய்விடுவது நல்லது என்று சொல்லுங்கள்.—பைபிள் ஆலோசனை: கலாத்தியர் 6:7.

பாராட்டுங்கள். சுய கட்டுப்பாட்டை காட்டும்போது பிள்ளையைப் பாராட்டுங்கள். சுய கட்டுப்பாட்டை காட்டுவது சில சமயம் கஷ்டமாக இருந்தாலும் அப்படிக் காட்டும்போது அவனுடைய மனபலம் அதிகமாகும் என்பதை புரிய வையுங்கள். “வலிமை உடையவரைவிடப் பொறுமை உடையவரே மேலானவர்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 16:32, பொது மொழிபெயர்ப்பு.) ஆனால் “ஒருவன் தன்னைத்தானே கட்டுப்படுத்த முடியாவிட்டால், அவன் மதில் உடைந்துப் போன நகரைப் போன்று இருப்பான்” என்றும் பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 25:28, ஈஸி டு ரீட் வர்ஷன்.

நடித்து காட்டுங்கள். இந்தக் குணத்தைக் காட்ட சொல்லிக்கொடுங்கள். இதை விளையாட்டாகவும் சுவாரஸ்யமாகவும் செய்யுங்கள். எந்த மாதிரி சமயங்களில் சுய கட்டுப்பாட்டை காட்ட வேண்டியிருக்கும் என்று பேசுங்கள். அந்த சூழ்நிலைமைகளை நடித்து காட்டுங்கள். அப்போது அவன் அந்தக் குணத்தைக் காட்டினால் ‘குட்’ (Good) என்றும் அதை காட்டாதபோது ‘பேட்’ (Bad) என்றும் சொல்லுங்கள். இதை சுவாரஸ்யமாகச் செய்வதற்கு பொம்மைகளை பயன்படுத்தலாம், வரைந்து காட்டலாம் அல்லது பிள்ளைகளுக்குப் பிடித்த மாதிரி வேறேதாவது விதத்தில் விளையாடி காட்டலாம். இப்படிச் செய்வதன் மூலம், ஆசைப்பட்டது கிடைக்க வேண்டும் என்று நினைப்பதைவிட சுய கட்டுப்பாட்டைக் காட்டுவதுதான் நல்லது என்பதை பிள்ளைகளுக்குப் புரிய வையுங்கள்.—பைபிள் ஆலோசனை: நீதிமொழிகள் 29:11.

பொறுமையாக இருங்கள். “பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் [அதாவது, முட்டாள்தனம்] ஒட்டியிருக்கும்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 22:15) அதனால், சுய கட்டுப்பாட்டை உங்கள் பிள்ளைகள் ஒரே நாளில் கற்றுக்கொள்வார்கள் என்று நினைக்காதீர்கள். “இதற்கு காலமெடுக்கும், மெது மெதுவாகத்தான் கற்றுக்கொள்வார்கள், சிலசமயம் இந்த குணத்தைக் காட்ட தவறிவிடுவார்கள், ஆனால் போகப் போக நன்றாக முன்னேறுவார்கள்” என்று டீச் யுவர் சில்ரன் வெல் என்ற புத்தகம் சொல்கிறது. அதுமட்டுமல்ல, “சின்ன வயதில் சுய கட்டுப்பாட்டை காட்டினால் 12 வயதில் போதை மருந்தை எடுத்துக்கொள்ள மாட்டார்கள், 14 வயதில் செக்ஸ் தொல்லைக்கு இணங்க மாட்டார்கள்” என்றும் அந்த புத்தகம் சொல்கிறது. பெற்றோரே, நீங்கள் எடுக்கிற முயற்சிகளுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். ▪ (g15-E 08)

^ பாரா. 4 இந்த கட்டுரை ஆண் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல பெண் பிள்ளைகளுக்கும் பொருந்தும்.

^ பாரா. 6 No: Why Kids—of All Ages—Need to Hear It and Ways Parents Can Say It என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

^ பாரா. 8 Too Much of a Good Thing—Raising Children of Character in an Indulgent Age என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.