Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்பட கட்டுரை

கரிசனையற்ற உலகில் கரிசனைமிக்க பிள்ளைகளை வளர்க்க

கரிசனையற்ற உலகில் கரிசனைமிக்க பிள்ளைகளை வளர்க்க

மற்றவர்களுக்கு உதவ நமக்கு ஒவ்வொரு நாளும் ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால், இன்று நிறைய பேர் தங்களைப் பற்றி மட்டுமே யோசிக்கிறார்கள். சொல்லப்போனால், இந்த உலகமே இப்போது சுயநலத்தில்தான் சுழன்றுகொண்டிருக்கிறது. உதாரணத்திற்கு, சிலர் ஏமாற்றுப் பேர்வழிகளாக இருக்கிறார்கள். சிலர் தான்தோன்றித்தனமாக வண்டி ஓட்டுகிறார்கள். சிலர் கோபாவேசத்தில் கன்னாபின்னாவென்று கத்துகிறார்கள்.

சுயநலம் என்ற இந்த விஷச் செடி குடும்பத்திலும் வேர்விட ஆரம்பித்திருக்கிறது. உதாரணத்திற்கு, சில கணவர்கள்/மனைவிகள் தங்கள் துணையை விவாகரத்து செய்கிறார்கள். காரணம்? ‘என்னுடைய தகுதிக்கு இவள்/இவர் எல்லாம் கால்தூசு’ என்று நினைக்கிறார்கள். சில பெற்றோர் தங்களுக்குத் தெரியாமலேயே பிள்ளைகள் மனதில் சுயநல விதையை விதைக்கிறார்கள். எப்படி? பிள்ளைகள் கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுக்கிறார்கள், ஆனால் தவறு செய்தால் கண்டிக்கத் தயங்குகிறார்கள்.

எல்லா பெற்றோர்களுமே அப்படி இல்லை. சுயநலத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பிறர் நலனில் அக்கறை காட்ட நிறைய பெற்றோர்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கிறார்கள். இதனால் நல்ல பலன்களையும் அனுபவித்திருக்கிறார்கள். இப்படி அன்பும் கரிசனையும் காட்டும் பிள்ளைகளுக்கு நட்பைச் சம்பாதிப்பதும் சுலபம், அதைத் தக்கவைத்துக்கொள்வதும் சுலபம். அவர்களால் திருப்தியாகவும் வாழ முடிகிறது. ஏன்? ஏனென்றால், பைபிள் சொல்வதுபோல் “பெற்றுக்கொள்வதைவிடக் கொடுப்பதிலேயே அதிகச் சந்தோஷம் இருக்கிறது.”—அப்போஸ்தலர் 20:35.

உங்கள் பிள்ளைகள் கனிவாக நடந்துகொள்ளவும், உலகின் சுயநல மனப்பான்மையால் கறைபடாமல் இருக்கவும் பெற்றோராக நீங்கள் எப்படி உதவலாம்? பிள்ளைகளின் மனதில் சுயநலம் குடிகொள்ள காரணமாக இருக்கும் மூன்று விஷயங்களை இப்போது பார்க்கலாம், அதை எப்படித் தவிர்ப்பது என்றும் பார்க்கலாம்.

1 புகழ்ந்து தள்ளாதீர்கள்

பிரச்சினை. இன்று இளைஞர்கள் மத்தியில் படர்ந்து வரும் ஆபத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்களின் கருத்து இதுதான்: நிறைய பேர் வேலைக்குச் சேரும்போதே தங்களைப் பற்றி அளவுக்கு மிஞ்சிய எதிர்பார்ப்போடு வருகிறார்கள். கொஞ்சமும் கஷ்டப்படாமல், துளியும் முயற்சி செய்யாமல் வெற்றியடைய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இன்னும் சிலர், வேலையில் காலெடுத்து வைத்ததுமே பதவி உயர்வு வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். சிலர் தங்களை ரொம்ப முக்கியமான நபராக நினைத்துக்கொண்டு, மற்றவர்களும் தங்களை அப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பு ஏமாற்றம் அடையும்போது நொந்துபோகிறார்கள்.

பிரச்சினையின் ஆணிவேர். இளைஞர்களுக்குத் தங்களைப் பற்றி அளவுக்கு மிஞ்சிய எதிர்பார்ப்பு இருப்பதற்கு ஒரு காரணம் அவர்கள் வளர்ந்த விதம். பிள்ளைகளைச் சுயமரியாதையோடு வளர்க்க வேண்டும் என்ற கருத்து இன்று மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். இந்தப் பிரபல கருத்து பின்வரும் நியமத்தின் அடிப்படையில் தோன்றியிருக்கலாம்: நீங்கள் கொஞ்சம் புகழ்ந்தால் பிள்ளைகள் கெட்டிக்காரர்களாக வளருவார்கள், நிறைய புகழ்ந்தால் படுகெட்டிக்காரர்களாக வளருவார்கள்! அதேசமயம் பிள்ளைகளிடம் கொஞ்சம் முகம் சுளித்தால்கூட தன்னம்பிக்கை இழந்துவிடுவார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. பிள்ளைகளின் சுயமரியாதையை வளர்க்க துடியாய்த் துடிக்கும் உலகத்தில் பெற்றோர் இப்படியெல்லாம் செய்யாவிட்டால், அவர் ஒரு பெற்றோராய் இருக்கவே லாயக்கில்லை என்று மற்றவர்கள் முத்திரை குத்துகிறார்கள். லாயக்கற்றவர்கள் என்ற எண்ணம் பிள்ளைகளின் மனதில் வர கூடாது, அப்படிப்பட்ட எண்ணத்தை பெற்றோரும் ஏற்படுத்தக் கூடாது என்றும் நினைக்கிறார்கள்.

பிள்ளைகள் சின்னதாக ஏதாவது நல்லது செய்தாலும், அது எவ்வளவு சாதாரணமாக இருந்தாலும், அப்பாவும் அம்மாவும் அதை ஆஹா ஓஹோ-வென்று புகழ்ந்து தள்ளுகிறார்கள். ஆனால் அவர்கள் ஏதாவது தவறு செய்தால், அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதைக் கண்டும்காணாமல் விட்டுவிடுகிறார்கள். பிள்ளைகளின் சுயமரியாதையை வளர்க்க விரும்பும் இதுபோன்ற பெற்றோர்களின் கொள்கை: எல்லாவற்றையும் புகழுங்கள், தவறைக் கண்டுகொள்ளாதீர்கள். பிள்ளைகளைப் புகழ்வதன் மூலம் அவர்களுடைய தன்னம்பிக்கையை வளர்க்க முடியும் என்று பெற்றோர் நினைக்கிறார்கள், ஆனால் நல்லது செய்ய பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்து அதன் மூலம் தன்னம்பிக்கையை வளர்க்க முடியும் என்று நினைப்பதில்லை.

பைபிள் என்ன சொல்கிறது. ஒருவர் சரியானதைச் செய்யும்போது, அவரைப் புகழ்வதில் எந்தத் தவறுமில்லை என்பதை பைபிளும் ஒத்துக்கொள்கிறது. (மத்தேயு 25:19-21) பிள்ளைகள் சந்தோஷப்பட வேண்டும் என்பதற்காக, காரணமே இல்லாமல் அவர்களைப் புகழும்போது அவர்கள் தங்களைப் பற்றி அளவுக்கதிகமாக யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். பைபிள் சொல்வது எவ்வளவு உண்மையாக இருக்கிறது: “ஒருவன் முக்கியமானவனாக இல்லாதிருந்தும் தன்னை முக்கியமானவனாக நினைத்துக்கொண்டால், அவன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறவனாக இருப்பான்.” (கலாத்தியர் 6:3) அதனால்தான் பெற்றோருக்கு இந்த ஆலோசனையை பைபிள் கொடுக்கிறது: “பிள்ளைகளைக் கண்டித்து திருத்த தயங்காதீர்கள்; நீங்கள் கண்டிப்பதனால் அவர்கள் சாக மாட்டார்கள்.” *நீதிமொழிகள் 23:13, கன்டெம்ப்ரரி இங்லிஷ் வர்ஷன்.

நீங்கள் என்ன செய்யலாம். பிள்ளைகள் நல்லது செய்யும்போது பாராட்டவும் தவறு செய்யும்போது கண்டிக்கவும் கொஞ்சம்கூட தயங்காதீர்கள். ஆனால், பிள்ளைகள் சந்தோஷப்பட வேண்டும் என்பதற்காக அவர்களைப் புகழ் மழையில் நனைக்காதீர்கள். அதனால் பெரிதாக எந்தப் பிரயோஜனமும் இருக்காது. ஜெனரேஷன் மீ என்ற புத்தகமும் இந்தக் கருத்தை ஆதரிக்கிறது: “திறமைகளை வளர்த்துக்கொள்வதாலும் விஷயங்களைக் கற்றுக்கொள்வதாலும்தான் ஒருவருக்குத் தன்னம்பிக்கை பிறக்கிறதே தவிர, வெறுமனே பாராட்டை அள்ளி வீசுவதால் இல்லை.”

‘உங்களைக் குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி உயர்வாக எண்ணாதீர்கள். தன்னடக்கத்தோடு இருங்கள்.’ —ரோமர் 12:3, குட் நியூஸ் டிரான்ஸ்லேஷன்

2 பொத்திப் பொத்தி பாதுகாக்காதீர்கள்

பிரச்சினை. புதிதாக வேலைக்குச் சேரும் இளைஞர்கள் அநேகருக்குப் பிரச்சினைகளைச் சமாளிக்கும் திறமை துளியும் இருப்பதில்லை. அவர்களுடைய சிறிய தவறுகளைச் சுட்டிக்காட்டினால்கூட ஒரேயடியாக ஒடிந்து போகிறார்கள். இன்னும் சிலர், அளவுக்கு மிஞ்சி எதிர்பார்ப்பதால் அவர்களுக்குப் பிடித்த வேலையை மட்டும்தான் செய்ய விரும்புகிறார்கள், மற்ற வேலைகளை எல்லாம் துச்சமாக நினைக்கிறார்கள். உதாரணத்திற்கு, டாக்டர் ஜோசஃப் ஆலென் ஒரு இளைஞனை வேலைக்காக நேர்காணல் செய்தபோது அவன் சொன்ன விஷயங்களை எஸ்கேப்பிங் த எண்ட்லெஸ் அடோலசன்ஸ் என்ற தன் புத்தகத்தில் எழுதினார்: “வேலையில சில விஷயங்கள் ரொம்ப போர் அடிக்கும், அந்த மாதிரி நச்சுப் பிடிச்ச வேலையெல்லாம் எனக்கு பிடிக்காது.” அவனைப் பற்றி டாக்டர் ஆலென் சொல்கிறார்: “எல்லா வேலையிலுமே சில விஷயங்கள் போர் அடிக்கத்தான் செய்யும். இந்த 23 வயசு பையனுக்கு இதுகூட தெரியலையே?”

பிரச்சினையின் ஆணிவேர். பிள்ளைகளுக்கு எந்தக் கஷ்டமும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சமீப காலமாக அநேக பெற்றோர்களைத் தொற்றியிருக்கிறது. உதாரணத்திற்கு, உங்கள் மகள் தேர்வில் தோல்வியடைந்தால், உடனே ஆசிரியரைப் பார்த்து “நீங்க எப்படி என் பொண்ணை ஃபெயில் ஆக்கலாம்” என்று தட்டிக்கேட்கிறீர்களா? உங்கள் மகன் சாலை விதியை மீறியதன் காரணமாக அபராதம் கட்ட வேண்டியிருந்தால், “அவனுக்காக நானே கட்டிடுறேன்” என்று சொல்கிறீர்களா? உங்கள் பிள்ளை காதல் தோல்வியில் நொந்துபோயிருக்கும்போது, “உன்மேல எந்தத் தப்பும் இல்ல, எல்லாத்துக்கும் அந்த பொண்ணுதான்/பையன்தான் காரணம்” என்று சமாதானம் சொல் கிறீர்களா?

பிள்ளைகளுக்கு எந்தக் கஷ்டமும் வரக்கூடாது என்று நினைப்பது இயல்புதான். அதற்கென்று பிள்ளைகள் தவறு செய்யும்போதுகூட அவர்களைக் காப்பாற்ற நினைத்தால் பிள்ளைகளுக்கு இந்த உண்மையைக் கற்றுக்கொடுக்க தவறிவிடுகிறார்கள்: ஒருவர் என்ன செய்கிறாரோ அதற்கான பின்விளைவுகளை அவர் நிச்சயம் அனுபவிக்க வேண்டும். பாசிடீவ் டிசிப்ளின் ஃபார் டீனேஜர்ஸ் என்ற புத்தகம் சொல்கிறது: “[இப்படிப்பட்ட பிள்ளைகள்] கஷ்டங்களையும் ஏமாற்றங்களையும் சமாளிக்க முடியும், பிரச்சினையிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள முடியும் என உணருவதற்கு மாறாக, சுயநலம் பிடித்தவர்களாகத்தான் ஆவார்கள். ஆசைப்பட்டதையெல்லாம் பெற்றோரும் மற்றவர்களும் செய்ய வேண்டும், அது அவர்களுடைய கடமை என்று நினைப்பார்கள்.”

பைபிள் என்ன சொல்கிறது. இன்று கஷ்டம் இல்லாத மனுஷனே இல்லை. “எல்லோருக்குமே பிரச்சினைகள் வரும்” என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 9:11, ஈஸி டு ரீட் வர்ஷன், ஆங்கிலம்) நல்லவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. கிறிஸ்தவரான அப்போஸ்தலன் பவுலும் ஊழியம் செய்த சமயத்தில் கஷ்டங்களுக்கு மேல் கஷ்டங்களை அனுபவித்தார். என்றாலும், அவற்றிலிருந்து அவர் நன்மை அடைந்தார். அதை அவரே சொல்கிறார்: “எந்தச் சூழ்நிலையிலும் நான் மனநிறைவுடன் இருப்பதற்குக் கற்றுக்கொண்டேன். . . . வயிறார உண்ணும்போதும் சரி பட்டினி கிடக்கும்போதும் சரி, நிறைவிலும் சரி குறைவிலும் சரி, எந்தச் சூழ்நிலையிலும் எல்லாவற்றிலும் திருப்தியுடன் இருப்பதற்கான ரகசியத்தை நான் கற்றுக்கொண்டேன்.”—பிலிப்பியர் 4:11, 12.

நீங்கள் என்ன செய்யலாம். உங்கள் பிள்ளைக்கு எந்தளவு பக்குவம் இருக்கிறது என்பதை மனதில் வைத்து அவனையே சில விஷயங்களைக் கையாள விடுங்கள். “ஒவ்வொருவனும் தன்தன் பாரத்தைச் சுமக்கட்டும்” என்ற பைபிள் நியமத்தைக் கடைப்பிடியுங்கள். (கலாத்தியர் 6:5) உங்கள் பிள்ளை சாலை விதிகளை மீறியதன் காரணமாக அபராதம் கட்ட வேண்டியிருந்தால், அவனுடைய சொந்த சம்பாத்தியத்தில் அல்லது கைச்செலவுக்குக் கொடுக்கும் பணத்திலிருந்து அதைக் கட்டட்டும் என விடுவது நல்லது. உங்கள் மகள் தேர்வில் தோல்வியடைந்தால் அடுத்த முறை அப்படி நடக்காமல் இருக்க இது அவளுக்கு ஒரு பாடமாக இருக்கிறது என்பதைப் புரிய வையுங்கள். உங்கள் மகன் காதல் தோல்வியில் மனம் உடைந்திருந்தால், அவனுக்கு ஆறுதல் சொல்லுங்கள் அதேசமயம், சரியான நேரம் பார்த்து சில விஷயங்களை யோசித்துப் பார்க்க, அதாவது ‘இதிலிருந்து நீ என்ன பாடம் கற்றுக்கொண்டாய், நீ ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா?’ போன்ற கேள்விகளை யோசித்துப் பார்க்க, உதவுங்கள். தங்களுக்கு வரும் பிரச்சினைகளை பிள்ளைகளே முயற்சி செய்து தீர்க்கும்போது அவர்களுக்குத் தன்னம்பிக்கையும் மனபலமும் கிடைக்கும். ஆனால், பொத்திப் பொத்தி பாதுகாத்தால் இந்தக் குணங்களையெல்லாம் அவர்கள் வளர்த்துக்கொள்ள மாட்டார்கள்.

“ஒவ்வொருவனும் தன்தன் செயல்களைச் சோதித்துப் பார்க்கட்டும்; அப்போது, அவன் . . . தன்னைப் பார்த்தே சந்தோஷப்படுவான்.”—கலாத்தியர் 6:4

3 கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்காதீர்கள்

பிரச்சினை. இந்தத் தலைமுறையின் முக்கிய குறிக்கோள் என்ன என்று இளைஞர்களிடம் கருத்து கணிப்பு செய்தபோது, மற்றவர்களுக்கு உதவுவதைவிட பணக்காரராக ஆவதுதான் முக்கியம் என 81 சதவீதத்தினர் சொன்னார்கள். ஆனால், பணத்தை வைத்து மன திருப்தியை வாங்க முடியாதே! பணம்-பொருள் என்று குறியாய் இருப்பவர்கள் சந்தோஷத்தைப் பறிகொடுக்கிறார்கள், மன அழுத்தத்தைத்தான் சம்பாதிக்கிறார்கள் என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. அப்படிப்பட்டவர்கள்தான் மன உளைச்சலுக்கும் வியாதிகளுக்கும் அதிகளவில் ஆளாகிறார்கள்.

பிரச்சினையின் ஆணிவேர். சிலசமயம் பண ஆசை பிள்ளைகள் மனதில் துளிர்விட குடும்பத்தாரே காரணமாக இருக்கிறார்கள். த நார்ஸிஸம் எபிடெமிக் என்ற புத்தகம் சொல்கிறது: “பிள்ளைகளை குஷிப்படுத்துவதற்காக அவர்களுக்குப் பிடித்ததையெல்லாம் பெற்றோர் வாங்கிக்கொடுக்கிறார்கள். பிள்ளைகளும் குஷியாகிறார்கள், ஆனால் அந்தச் சந்தோஷமெல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான். அப்புறம் இன்னும் நிறைய வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.”

விளம்பர நிறுவனங்கள் இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு காரியத்தைச் சாதிக்கிறார்கள். அதனால், “நம்பர் 1 நபருக்கு எல்லாமே நம்பர் 1” என்ற கருத்தை பரப்புகிறார்கள். இதை நம்பி ஏமாந்து போகிற நிறைய வாலிபர்கள் கடனில் சிக்கி ‘நம்பர் 1’ ஏமாளிகளாக ஆகிறார்கள்.

பைபிள் என்ன சொல்கிறது. பணம் தேவை என்று பைபிளும் சொல்கிறது. (பிரசங்கி 7:12) அதேசமயம், “பண ஆசை எல்லா விதமான தீமைக்கும் வேராக இருக்கிறது; சிலர் இந்த ஆசையை வளர்த்துக்கொண்டு, . . . பலவித வேதனைகளால் தங்களையே ஊடுருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்” என்றும் எச்சரிக்கிறது. (1 தீமோத்தேயு 6:10) ஆக, பணம் சம்பாதிப்பதிலேயே குறியாய் இல்லாமல் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் திருப்தி அடையும்படி பைபிள் சொல்கிறது.—1 தீமோத்தேயு 6:7, 8.

“பணக்காரராவதில் குறியாக இருக்கிறவர்கள், சோதனையிலும் கண்ணியிலும் சிக்கிக்கொள்கிறார்கள்; அதோடு, தீங்கிழைக்கும் முட்டாள்தனமான பலவித ஆசைகளுக்கு அடிபணிந்துவிடுகிறார்கள்;”—1 தீமோத்தேயு 6:9

நீங்கள் என்ன செய்யலாம். பெற்றோரே, உங்கள் வாழ்க்கையில் பணத்திற்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்று சோதித்து பாருங்கள். அடிப்படைத் தேவைகளுக்கு முதல் இடம் கொடுங்கள், பிள்ளைகளுக்கும் அதைச் சொல்லிக்கொடுங்கள். முன் குறிப்பிடப்பட்ட த நார்ஸிஸம் எபிடெமிக் என்ற புத்தகம் சொல்கிறது: “எதையாவது வாங்குவதற்குமுன் பெற்றோரும் பிள்ளைகளும் ‘எந்தச் சமயத்தில் இதை வாங்குவது நல்லது? தள்ளுபடியில் வாங்கினால் மலிவாகக் கிடைக்குமா?’ ‘தவணைக்கு வாங்கினால் எவ்வளவு வட்டி கட்ட வேண்டும்?’ ‘மற்றவர்கள் சொல்வதற்காக ஒரு பொருளை வாங்க வேண்டுமா?’ போன்ற விஷயங்களைக் கலந்துபேசுவது நல்லது.”

குடும்பப் பிரச்சினைகள் வரும்போது பொருள்களை வாங்கிக்கொடுத்து அதைப் பூசிமெழுகப் பார்க்காதீர்கள். த ப்ரைஸ் ஆஃப் ப்ரிவ்லேஜ் என்ற புத்தகம் இப்படிச் சொல்கிறது: “பிரச்சினை வரும்போதெல்லாம் எதையாவது வாங்கி கையில் கொடுத்துவிட்டால் அது தீர்ந்துவிடாது. ஷூவையும், பர்ஸையும் வாங்கிக்கொடுத்து பிரச்சினைகளைத் தீர்க்க பார்க்காதீர்கள், யோசிக்கும் திறன், விவேகம், இரக்கம் போன்றவற்றைப் பயன்படுத்திதான் தீர்க்க வேண்டும்.” ▪ (g13-E 01)

^ பாரா. 11 பிள்ளைகளை உடலளவிலோ மனதளவிலோ காயப்படுத்தும்படி பைபிள் ஒருநாளும் சொல்வதில்லை. (எபேசியர் 4:29, 31; 6:4) கண்டிப்பது என்பது கற்றுக்கொடுப்பதைக் குறிக்கிறது, பெற்றோரின் கோபத்தை பிள்ளைகள்மீது கொட்டுவதைக் குறிப்பதில்லை.