Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இறைவனைப் பற்றி நபிமார்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்

இறைவனைப் பற்றி நபிமார்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்

பழங்காலத்தில், இறைவன் மனிதர்களிடம் சொல்ல நினைத்த விஷயங்களை நபிமார்கள் மூலமாகச் சொன்னார். அந்த விஷயங்களிலிருந்து இறைவனைப் பற்றி நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்? அதற்கு, உண்மையுள்ள மூன்று நபிமார்கள் என்ன சொல்கிறார்கள் என்று இப்போது பார்க்கலாம்.

இப்ராஹீம் நபி (ஆபிரகாம்)

இறைவன் பாரபட்சம் பார்க்க மாட்டார், எல்லாருக்கும் ஆசி கொடுக்க ஆசைப்படுகிறார்.

இறைவன் இப்ராஹீம் நபியிடம் “பூமியிலுள்ள எல்லா குடும்பங்களும் உன் மூலமாக நிச்சயம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளும்” என்று வாக்குக் கொடுத்தார்.—ஆதியாகமம் 12:3.

என்ன தெரிந்துகொள்கிறோம்? இறைவன் நம்மை ரொம்ப நேசிக்கிறார். தனக்குக் கீழ்ப்படிகிற எல்லா குடும்பங்களுக்கும், ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என எல்லாருக்கும், ஆசி கொடுக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்.

மூஸா நபி (மோசே)

இறைவன் இரக்கமுள்ளவர். தன்னைப் பற்றித் தெரிந்துகொள்ள முயற்சி எடுப்பவர்களுக்கு ஆசி கொடுக்கிறார்.

பெரிய பெரிய அதிசயங்களைச் செய்வதற்கான சக்தியை மூஸா நபிக்கு இறைவன் கொடுத்திருந்தார். இருந்தாலும் மூஸா நபி, “தயவுசெய்து உங்கள் வழிகளை எனக்குத் தெரியப்படுத்துங்கள். அப்போதுதான் நான் உங்களை நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும், எப்போதும் உங்களுக்குப் பிரியமானவனாக இருக்க முடியும்” என்று இறைவனிடம் கேட்டார். (யாத்திராகமம் 33:13) அவர் இப்படிக் கேட்டது இறைவனுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அதனால், தன்னையும் தன்னுடைய குணங்களையும் புரிந்துகொள்ள மூஸா நபிக்கு அருள் புரிந்தார். உதாரணத்துக்கு, தான் ‘இரக்கமும் கரிசனையும் உள்ளவர்’ என்பதை மூஸா நபிக்குப் புரியவைத்தார்.—யாத்திராகமம் 34:6, 7.

என்ன தெரிந்துகொள்கிறோம்? இறைவனைப் பற்றித் தெரிந்துகொள்ள முயற்சி எடுக்கிற ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என எல்லாரையும் இறைவன் ஆசீர்வதிக்கிறார். தன்னை எப்படி வணங்க வேண்டும் என்பதைப் பற்றி இறைவேதத்தில் சொல்லியிருக்கிறார். அதோடு, தன்னை வணங்குகிறவர்களுக்கு ஆசி கொடுக்க அவர் எவ்வளவு ஆசையாக இருக்கிறார் என்பதைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்.

இயேசு (ஈஸா நபி)

எல்லா விதமான நோய்களையும் இயேசு கரிசனையோடு குணப்படுத்தினார்

இறைவன் தரும் முடிவில்லாத ஆசிகளைப் பெற்றுக்கொள்ள நாம் இயேசுவைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். அதோடு, அவர் என்னவெல்லாம் சொல்லிக் கொடுத்தார், என்னவெல்லாம் செய்தார் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.

இயேசுவின் வாழ்க்கையைப் பற்றியும் அவர் சொல்லிக்கொடுத்த விஷயங்களைப் பற்றியும் வேதத்திலிருந்து நாம் நிறையக் கற்றுக்கொள்ளலாம். பெரிய பெரிய அதிசயங்களைச் செய்வதற்கான சக்தியை இயேசுவுக்கு இறைவன் கொடுத்தார். அதனால், அவர் கண் தெரியாதவர்களையும், காது கேட்காதவர்களையும், நடக்க முடியாதவர்களையும் குணப்படுத்தினார். இறந்தவர்களைக்கூட உயிரோடு கொண்டுவந்தார். இப்படி, எல்லா மனிதர்களுக்கும் சீக்கிரத்தில் இறைவன் தரப்போகும் ஆசியை இயேசு முன்பே செய்து காட்டினார். இந்த ஆசிகளையெல்லாம் பெற்றுக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லிக்கொடுத்தார். “ஒரே உண்மையான கடவுளாகிய உங்களையும், நீங்கள் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் பற்றி அவர்கள் தெரிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்” என்று அவர் சொன்னார்.—யோவான் 17:3.

இயேசு கனிவாகவும் கரிசனையாகவும் நடந்துகொண்டார். இரக்கம் காட்டினார். “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்; அதனால் என் நுகத்தடியை உங்கள் தோள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்; அப்போது, உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்” என்ற அன்பான அழைப்பை எல்லாருக்கும் கொடுத்தார். (மத்தேயு 11:29) இதைக் கேட்டு, ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லாருமே அவரிடம் ஓடோடி வந்தார்கள். இயேசுவின் காலத்தில் வாழ்ந்த நிறைய பேர், பெண்களைத் தரக்குறைவாக நடத்தினார்கள். இயேசு அவர்களைப் போல இல்லாமல், பெண்களைக் கனிவோடும் கண்ணியத்தோடும் மரியாதையோடும் நடத்தினார்.

என்ன தெரிந்துகொள்கிறோம்? மக்கள்மேல் இயேசு அளவுகடந்த அன்பைக் காட்டினார். மற்றவர்களை நாம் எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு அருமையான முன்மாதிரி வைத்தார்.

இயேசு இறைவன் அல்ல, இறைத்தூதர்

“உண்மையில் ஒரே கடவுள்தான் நமக்கு இருக்கிறார்” என்றும், இறைவன் அனுப்பிய தூதர்தான் இயேசு கிறிஸ்து என்றும் வேதம் சொல்கிறது. (1 கொரிந்தியர் 8:6) இறைவன் தன்னைவிட பெரியவர் என்றும், அவர்தான் தன்னை இந்தப் பூமிக்கு அனுப்பினார் என்றும் இயேசு தெளிவாகச் சொன்னார்.—யோவான் 11:41, 42; 14:28. *

^ பாரா. 17 இயேசுவைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள, உண்மையான இறைநம்பிக்கை—சந்தோஷமான வாழ்வுக்கு வழி! என்ற சிற்றேட்டில் பாகங்கள் 8 மற்றும் 9-ஐப் பாருங்கள். இது www.isa4310.com-ல் கிடைக்கும்.