Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்படக் கட்டுரை | இறந்த பிறகு வாழ்க்கை இருக்கிறதா? பைபிளின் கருத்து

இறந்த பிறகு என்ன நடக்கிறது?—பைபிள் தரும் பதில்

இறந்த பிறகு என்ன நடக்கிறது?—பைபிள் தரும் பதில்

பைபிளின் முதல் புத்தகமான ஆதியாகமத்தில் கடவுள் இந்தப் பூமியைப் படைத்ததைப் பற்றிய பதிவு இருக்கிறது. அந்தப் பதிவைத் தொடர்ந்து முதல் மனிதனான ஆதாமிடம் கடவுள் கொடுத்த ஒரு கட்டளையைப் பற்றி படிக்கிறோம். கடவுள் ஆதாமிடம், “இந்தத் தோட்டத்தில் இருக்கிற எல்லா மரங்களின் பழங்களையும் நீ திருப்தியாகச் சாப்பிடலாம். ஆனால், நன்மை தீமை அறிவதற்கான மரத்தின் பழத்தை நீ சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால், அதே நாளில் கண்டிப்பாகச் செத்துப்போவாய்” என்று சொன்னார். (ஆதியாகமம் 2:16, 17) ஆதாம் கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்திருந்தால் அவன் சாகாமல் ஏதேன் தோட்டத்திலேயே தொடர்ந்து வாழ்ந்திருப்பான் என்று இந்த வார்த்தைகள் காட்டுகின்றன.

கடவுளுக்குக் கீழ்ப்படிந்து என்றென்றும் வாழ்வதற்குப் பதிலாக அவன் கடவுளுடைய கட்டளையை மீறுவதற்கு தீர்மானித்தான். அதனால், கடவுள் சாப்பிட வேண்டாம் என்று சொன்ன அந்தப் பழத்தை தன்னுடைய மனைவி கொடுத்த உடனே அதை வாங்கி சாப்பிட்டான். (ஆதியாகமம் 3:1-6) ஆதாம் செய்த பாவத்தின் விளைவுகளை இன்றுவரை மனிதர்கள் அனுபவிக்கிறார்கள். இதைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் இப்படிச் சொல்கிறார்: “ஒரே மனிதனால் பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது. இப்படி, எல்லா மனிதர்களும் பாவம் செய்ததால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது.” (ரோமர் 5:12) இங்கு ‘ஒரே மனிதன்’ என்று சொல்லப்பட்டிருப்பது ஆதாமைக் குறிக்கிறது. அவன் செய்த பாவம் என்ன, அதனால் மரணம் ஏன் வந்தது?

கடவுள் கொடுத்த சட்டத்தை மீறுவதும் வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் போவதும்தான் பாவம். இதைத்தான் ஆதாம் செய்தான். (1 யோவான் 3:4) பாவத்துக்குத் தண்டனை மரணம் என்று கடவுள் ஆதாமிடம் ஏற்கனவே சொல்லியிருந்தார். ஆதாமும் அவனுடைய சந்ததியில் வந்த மனிதர்களும் கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்திருந்தால் பாவமும் மரணமும் வந்திருக்காது. சொல்லப்போனால், மனிதர்கள் சாகாமல் என்றென்றும் வாழ்வதற்காகத்தான் கடவுள் அவர்களைப் படைத்தார்.

“மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது” என்று பைபிள் சொல்வது மறுக்க முடியாத உண்மை! ஆனால், இறந்த பிறகு நமக்குள் இருக்கும் ஏதோவொன்று தொடர்ந்து வாழ்கிறதா? ‘ஆம்’ என்று பலர் சொல்லலாம். ஏனென்றால் ஆத்துமா அழியாது, அது தொடர்ந்து வாழ்கிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள். இப்படி யோசித்துப் பாருங்கள்: மரணத்துக்குப் பிறகு, நமக்குள் இருக்கும் ஏதோவொன்று தொடர்ந்து உயிர் வாழ்வதாக இருந்தால், பாவத்தின் தண்டனை மரணம் என்று ஆதாமிடம் கடவுள் சொன்னது பொய்யாகிவிடுமே! ஆனால், ‘கடவுளால் பொய் சொல்லவே முடியாது’ என்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 6:18) உண்மையிலேயே சாத்தான்தான் ஏவாளிடம் “நீங்கள் சாகவே சாக மாட்டீர்கள்” என்று பொய் சொன்னான்.—ஆதியாகமம் 3:4.

அழியாத ஆத்துமா என்பது பொய் என்றால் இறந்த பிறகு உண்மையில் என்னதான் நடக்கிறது?

பைபிள் சொல்லும் உண்மை

மனிதன் படைக்கப்பட்டதைப் பற்றி ஆதியாகமம் புத்தகம் இப்படிச் சொல்கிறது: “கடவுளாகிய யெகோவா மனிதனை உருவாக்கத் தொடங்கினார். நிலத்திலிருந்து மண்ணை எடுத்து, ஓர் உடலை உருவாக்கி, மூக்கில் உயிர்மூச்சை ஊதினார். அப்போது அவன் உயிருள்ள மனிதன் ஆனான்.” “உயிருள்ள மனிதன்” என்ற வார்த்தை நெஃபெஷ் * என்ற எபிரெய வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இதன் நேரடி அர்த்தம் “சுவாசிக்கும் உயிரினம்.”—ஆதியாகமம் 2:7.

கடவுள் ஆதாமுக்கு “உயிர்மூச்சை” கொடுத்தபோது, அவன் உயிருள்ள மனிதன் ஆனான் என்று பைபிள் சொல்கிறது. ஆதாமைப் படைக்கும்போது அவனுக்குள் அழியாத ஆத்துமா என்ற ஒன்றை கடவுள் வைத்ததாக எந்தப் பதிவும் இல்லை. அதனால்தான் “அழியாத ஆத்துமா” என்ற வார்த்தை பைபிளில் எங்கேயும் இல்லை.

அப்படியிருக்கும்போது, அழியாத ஆத்துமா இருப்பதாக ஏன் நிறைய மதங்கள் கற்பிக்கின்றன? இதற்கு பதில் தெரிந்துகொள்ள பூர்வகாலத்தில் இருந்த எகிப்தியர்களுடைய நம்பிக்கைகளை பார்க்கலாம்.

பொய் போதனை கொடிகட்டிப் பறக்கிறது

எகிப்தியர்கள்தான் “அழியாத ஆத்துமா இருப்பதாக முதல் முதலில் நம்பினார்கள்” என்று கி.மு. ஐந்தாவது நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க சரித்திராசிரியரான ஹிராடட்டஸ் சொன்னார். பூர்வகால பாபிலோனியர்கள்கூட அழியாத ஆத்துமா இருப்பதாக நம்பினார்கள். கி.மு. 332-ல் மகா அலெக்ஸாண்டர் மத்தியக் கிழக்குப் பகுதியைக் கைப்பற்றிய சமயத்தில், கிரேக்க தத்துவஞானிகள் ஆத்துமா அழியாது என்ற போதனையைப் பிரபலமாக்கியிருந்தார்கள். சீக்கிரத்தில் கிரேக்க சாம்ராஜ்யம் முழுவதும் அது பரவியது.

“அழியாத ஆத்துமா” என்ற வார்த்தை பைபிளில் எங்கேயும் இல்லை

முதல் நூற்றாண்டில், இரண்டு முக்கிய யூத பிரிவைச் சேர்ந்தவர்கள், அதாவது இஸ்ஸனஸுகளும் பரிசேயர்களும், மரணத்துக்குப் பிறகு ஆத்துமா தொடர்ந்து உயிர் வாழ்கிறது என்ற கருத்தைப் போதித்தார்கள். த ஜூயிஷ் என்ஸைக்ளோப்பீடியா இப்படிச் சொல்கிறது: “அழியாத ஆத்துமா என்ற நம்பிக்கையை கிரேக்கர்களிடமிருந்தும், முக்கியமாக பிளேட்டோவின் தத்துவத்திலிருந்தும், யூதர்கள் கற்றுக்கொண்டார்கள்.” முதல் நூற்றாண்டில் வாழ்ந்த யூத சரித்திராசிரியரான ஜொஸிஃபஸும், இந்த நம்பிக்கை “கிரேக்கர்களுடையது” என்று சொன்னாரே தவிர பைபிளின் அடிப்படையில் இருக்கிறது என்று சொல்லவில்லை. அந்த நம்பிக்கை கட்டுக்கதைகளின் அடிப்படையில் இருப்பதாக அவர் நினைத்தார்.

கிரேக்க கலாச்சாரத்தின் செல்வாக்கு அதிகம் ஆக ஆக, கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டவர்களும் இந்த பொய் போதனையை நம்ப ஆரம்பித்தார்கள். சரித்திராசிரியரான யோனே லென்டிரிங் இப்படிச் சொல்கிறார்: “முதலில் நம்முடைய ஆத்துமா ஒரு நல்ல இடத்தில் இருந்ததாகவும் இப்போது அது பாவம் நிறைந்த இந்த உலகத்தில் வாழ்வதாகவும் பிளேட்டோவின் தத்துவம் சொல்கிறது. இந்தக் கருத்து கிறிஸ்தவ மதத்தோடு சுலபமாக கலந்துவிட்டது.” இப்படி, அழியாத ஆத்துமா என்ற பொய் போதனையை சர்ச்சுகள் ஏற்றுக்கொண்டன. அவர்களுடைய நம்பிக்கைகளில் இதுவும் ஒன்றாக ஆகிவிட்டது.

“சத்தியம் உங்களை விடுதலையாக்கும்”

முதல் நூற்றாண்டில், அப்போஸ்தலன் பவுல் என்ன எச்சரிப்பைக் கொடுத்தார் என்று கவனியுங்கள். “கடவுளால் கொடுக்கப்பட்டிருக்கிற செய்தியின்படி, நிச்சயமாகவே பிற்காலத்தில் சிலர் பேய்களிடமிருந்து வருகிற வஞ்சனையான செய்திகளுக்கும் போதனைகளுக்கும் கவனம் செலுத்தி, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்” என்று அவர் சொன்னார். (1 தீமோத்தேயு 4:1) இந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மை! ‘பேய்களுடைய போதனைகளில்’ அழியாத ஆத்துமா என்ற கோட்பாடும் ஒன்று. இந்தப் போதனை பைபிளின் அடிப்படையில் இல்லை. ஆனால், பூர்வகால பொய் மதங்களிலிருந்தும் தத்துவங்களிலிருந்தும் இது தோன்றியிருக்கிறது.

“சத்தியத்தைத் தெரிந்துகொள்வீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்று இயேசு சொன்னது நமக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கிறது. (யோவான் 8:32) பைபிளைப் படித்து திருத்தமான அறிவை எடுத்துக்கொள்ளும்போது, நிறைய மதங்கள் சொல்லிக்கொடுக்கும் சடங்குகளிலிருந்தும், கடவுளுடைய பெயரைக் கெடுக்கிற போதனைகளிலிருந்தும் நமக்கு விடுதலை கிடைக்கும். அதுமட்டுமல்ல, மரணத்தோடு சம்பந்தப்பட்ட மூட நம்பிக்கைகளிலிருந்தும் பழக்கவழக்கங்களிலிருந்தும் கடவுளுடைய வார்த்தை நம்மை விடுவிக்கும்.—“ இறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?” என்ற பெட்டியைப் பாருங்கள்.

மனிதர்கள் வெறும் 70, 80 வயதுவரை இந்தப் பூமியில் வாழ்ந்த பிறகு வேறொரு உலகத்துக்குப் போய் தொடர்ந்து வாழ வேண்டும் என்று நம் படைப்பாளர் நினைக்கவில்லை. தனக்குக் கீழ்ப்படியும் மனிதர்கள் இந்தப் பூமியில் என்றென்றும் வாழ வேண்டும் என்பதுதான் கடவுளுடைய நோக்கம். மனிதர்கள்மீது கடவுளுக்கு எவ்வளவு அன்பு இருக்கிறது என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. கடவுளுடைய நோக்கம் என்றுமே மாறாது! (மல்கியா 3:6) “நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்” என்ற வார்த்தைகள் நமக்கு எந்தளவு நம்பிக்கையைக் கொடுக்கின்றன!—சங்கீதம் 37:29.

 

^ பாரா. 9 நெஃபெஷ் என்ற வார்த்தையை சில பைபிள் மொழிபெயர்ப்புகள் இப்படி மொழிபெயர்த்திருக்கின்றன: “உயிர் உள்ளவன்” என்று பொது மொழிபெயர்ப்பு சொல்கிறது. “உயிர்பெற்றான்” என்று ஈஸி டு ரீட் வர்ஷன் சொல்கிறது. “ஜீவாத்துமாவானான்” என்று தமிழ் O.V. சொல்கிறது.