யோவான் எழுதியது 8:12-59

8  12  இயேசு மறுபடியுமாக மக்களிடம், “நான் இந்த உலகத்துக்கு ஒளியாக இருக்கிறேன்.+ என்னைப் பின்பற்றுகிற யாரும் ஒருபோதும் இருளில் நடக்க மாட்டார்கள், ஆனால் வாழ்வு தரும் ஒளியைப் பெற்றிருப்பார்கள்”+ என்று சொன்னார். 13  அதனால் பரிசேயர்கள் அவரிடம், “உன்னைப் பற்றி நீயே சாட்சி கொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல” என்று சொன்னார்கள். 14  அதற்கு இயேசு, “என்னைப் பற்றி நானே சாட்சி கொடுத்தாலும் என் சாட்சி உண்மையானதுதான்; ஏனென்றால், நான் எங்கிருந்து வந்தேன், எங்கே போகிறேன் என்று எனக்குத் தெரியும்.+ ஆனால், நான் எங்கிருந்து வந்தேன், எங்கே போகிறேன் என்று உங்களுக்குத் தெரியாது. 15  நீங்கள் மனுஷ கண்ணோட்டத்தில் நியாயந்தீர்க்கிறீர்கள்;+ நான் எந்த மனுஷனையும் நியாயந்தீர்ப்பதில்லை. 16  அப்படியே நான் நியாயந்தீர்த்தாலும் என்னுடைய தீர்ப்பு உண்மையானது; ஏனென்றால், நான் தனியாக இல்லை, என்னை அனுப்பிய தகப்பன் என்னோடு இருக்கிறார்.+ 17  அதோடு, ‘இரண்டு பேருடைய சாட்சி உண்மையானது’+ என்று உங்கள் திருச்சட்டத்திலேயே எழுதப்பட்டிருக்கிறது. 18  நான் என்னைப் பற்றிச் சாட்சி கொடுக்கிறேன், என்னை அனுப்பிய தகப்பனும் என்னைப் பற்றிச் சாட்சி கொடுக்கிறார்”+ என்று சொன்னார். 19  அதனால் அவர்கள், “உன்னுடைய தகப்பன் எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “உங்களுக்கு என்னையும் தெரியாது, என் தகப்பனையும் தெரியாது.+ உங்களுக்கு என்னைத் தெரிந்திருந்தால், என் தகப்பனையும் தெரிந்திருக்கும்”+ என்று சொன்னார். 20  ஆலயத்தில் காணிக்கைப் பெட்டிகள்+ வைக்கப்பட்டிருந்த பகுதியில் கற்பித்துக்கொண்டிருந்தபோது அவர் இந்த விஷயங்களைச் சொன்னார். ஆனால், அவருடைய நேரம் இன்னும் வராததால் ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை.+ 21  அவர் மறுபடியுமாக அவர்களிடம், “நான் போகிறேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் உங்கள் பாவத்திலேயே சாவீர்கள்.+ நான் போகும் இடத்துக்கு உங்களால் வர முடியாது”+ என்று சொன்னார். 22  அப்போது யூதர்கள், “‘நான் போகும் இடத்துக்கு உங்களால் வர முடியாது’ என்று சொல்கிறானே, இவன் என்ன தற்கொலையா செய்துகொள்ளப்போகிறான்?” என்று பேசிக்கொண்டார்கள். 23  அதனால் அவர், “நீங்கள் கீழே இருந்து வந்தவர்கள். நான் மேலே இருந்து வந்தவன்.+ நீங்கள் இந்த உலகத்திலிருந்து வந்தவர்கள். நான் இந்த உலகத்திலிருந்து வரவில்லை. 24  அதனால்தான், உங்களுடைய பாவங்களிலேயே சாவீர்கள் என்று சொன்னேன். நான்தான் அவர் என்பதை நீங்கள் நம்பவில்லை என்றால் உங்களுடைய பாவங்களிலேயே சாவீர்கள்” என்று அவர்களிடம் சொன்னார். 25  அப்போது அவர்கள், “நீ யார்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “நான் ஏன்தான் உங்களிடம் பேசிக்கொண்டிருக்க வேண்டுமோ? 26  உங்களைப் பற்றிச் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன, நான் நியாயந்தீர்ப்பதற்கும் நிறைய காரியங்கள் இருக்கின்றன. என்னை அனுப்பியவர் உண்மையானவர், அவரிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்ட விஷயங்களைத்தான் இந்த உலகத்தில் பேசிக்கொண்டிருக்கிறேன்”+ என்று சொன்னார். 27  பரலோகத் தகப்பனைப் பற்றித்தான் அவர் பேசிக்கொண்டிருந்தார் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. 28  அதனால் இயேசு, “மனிதகுமாரனை நீங்கள் உயர்த்திய*+ பின்பு நான்தான் அவர்+ என்றும், நான் எதையும் சொந்தமாகச் செய்வதில்லை+ என்றும், தகப்பன் எனக்குக் கற்றுக்கொடுத்தபடியே இந்த விஷயங்களைப் பேசுகிறேன் என்றும் தெரிந்துகொள்வீர்கள். 29  என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார். நான் எப்போதும் அவருக்குப் பிரியமான காரியங்களையே செய்வதால்+ அவர் என்னைத் தனியாக விட்டுவிடவில்லை” என்று சொன்னார். 30  அவர் பேசிய இந்த விஷயங்களைக் கேட்டு நிறைய பேர் அவர்மேல் விசுவாசம் வைத்தார்கள். 31  பின்பு, இயேசு தன்மேல் நம்பிக்கை வைத்த யூதர்களிடம், “நீங்கள் எப்போதும் என் வார்த்தைகளைக் கடைப்பிடித்தால் நிஜமாகவே என் சீஷர்களாக இருப்பீர்கள்; 32  சத்தியத்தைத் தெரிந்துகொள்வீர்கள்,+ சத்தியம் உங்களை விடுதலையாக்கும்”+ என்று சொன்னார். 33  அதற்கு மற்றவர்கள், “நாங்கள் ஆபிரகாமின் வம்சத்தில் வந்தவர்கள், எந்தக் காலத்திலும் எந்த மனுஷனுக்கும் நாங்கள் அடிமைகளாக இருந்தது கிடையாது. அப்படியிருக்கும்போது, நாங்கள் விடுதலையாவோம் என்று எப்படிச் சொல்கிறாய்?” என்றார்கள். 34  இயேசு அவர்களிடம், “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், பாவம் செய்கிற ஒவ்வொருவனும் பாவத்துக்கு அடிமையாக இருக்கிறான்.+ 35  அதோடு, ஒரு வீட்டில் அடிமை நிரந்தரமாக இருப்பதில்லை. மகனோ நிரந்தரமாக இருப்பார். 36  அதனால், மகன் உங்களை விடுதலையாக்கினால், நீங்கள் உண்மையில் விடுதலையாவீர்கள். 37  நீங்கள் ஆபிரகாமின் வம்சத்தில் வந்தவர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், என்னுடைய போதனையை நீங்கள் ஏற்றுக்கொள்ளாததால் என்னைக் கொல்ல வழிதேடுகிறீர்கள். 38  நான் என்னுடைய தகப்பனோடு இருந்தபோது பார்த்த காரியங்களைப் பேசுகிறேன்.+ நீங்கள் உங்களுடைய தகப்பனிடமிருந்து கேட்ட காரியங்களைச் செய்கிறீர்கள்” என்று சொன்னார். 39  அதற்கு அவர்கள், “ஆபிரகாம்தான் எங்கள் தகப்பன்” என்று சொன்னார்கள். இயேசுவோ, “நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள்+ என்றால், ஆபிரகாம் செய்த செயல்களையே செய்வீர்கள். 40  ஆனால், கடவுளிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்ட+ சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன என்னைக் கொல்ல இப்போது வழிதேடுகிறீர்கள். ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே. 41  உங்களுடைய தகப்பன் செய்த செயல்களைத்தான் நீங்கள் செய்கிறீர்கள்” என்று சொன்னார். அப்போது அவர்கள், “நாங்கள் முறைகேடாக* பிறந்தவர்கள் அல்ல. எங்களுக்கு ஒரே தகப்பன் இருக்கிறார், அவர்தான் கடவுள்” என்று சொன்னார்கள். 42  இயேசு அவர்களிடம், “கடவுள்தான் உங்கள் தகப்பன் என்றால், நீங்கள் என்மேல் அன்பு காட்டுவீர்கள்.+ ஏனென்றால், நான் கடவுளிடமிருந்து இங்கே வந்திருக்கிறேன். நான் சுயமாக வரவில்லை, அவர்தான் என்னை இங்கே அனுப்பினார்.+ 43  நான் சொல்வதை ஏன் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்? என் வார்த்தையை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாததால்தான். 44  பிசாசுதான் உங்களுக்குத் தகப்பன். உங்கள் தகப்பனுடைய ஆசைகளின்படி செய்ய விரும்புகிறீர்கள்.+ ஆரம்பத்திலிருந்தே அவன் ஒரு கொலைகாரனாக இருக்கிறான்;+ சத்தியம் அவனுக்குள் இல்லாததால் சத்தியத்தில் அவன் நிலைத்திருக்கவில்லை. தன் சுபாவத்தின்படியே அவன் பொய் பேசுகிறான்; ஏனென்றால், அவன் பொய்யனும் பொய்க்குத் தகப்பனுமாக இருக்கிறான்.+ 45  நானோ சத்தியத்தைப் பேசுகிறேன், ஆனாலும் நீங்கள் என்னை நம்புவதில்லை. 46  நான் பாவம் செய்ததாக உங்களில் யார் என்மேல் குற்றம்சாட்ட முடியும்? நான் சத்தியத்தைப் பேசினால்கூட, நீங்கள் ஏன் என்னை நம்புவதில்லை? 47  கடவுள் உங்கள் தகப்பனாக இருந்தால் அவருடைய வார்த்தைகளைக் கேட்பீர்கள்.+ அவர் உங்கள் தகப்பனாக இல்லாததால் அவருடைய வார்த்தைகளை நீங்கள் கேட்பதில்லை”+ என்று சொன்னார். 48  அதற்கு யூதர்கள் அவரிடம், “‘நீ ஒரு சமாரியன்,+ பேய் பிடித்தவன்’+ என்றெல்லாம் நாங்கள் சொல்வது சரிதான்” என்று சொன்னார்கள். 49  அதற்கு இயேசு, “நான் பேய் பிடித்தவன் அல்ல, நான் என் தகப்பனுக்கு மதிப்புக் கொடுக்கிறேன், நீங்களோ என்னை அவமதிக்கிறீர்கள். 50  ஆனால், நானே எனக்காக மகிமை தேடுவதில்லை.+ அதைத் தேடித்தருகிற ஒருவர் இருக்கிறார், அவரே நியாயந்தீர்ப்பவர். 51  உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், என் வார்த்தையைக் கேட்டு நடக்கிற யாரும் சாகவே மாட்டார்கள்”+ என்று சொன்னார். 52  யூதர்கள் அவரிடம், “உனக்குப் பேய் பிடித்திருக்கிறது என்பது இப்போது எங்களுக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. ஆபிரகாம் இறந்துபோனார், தீர்க்கதரிசிகளும் இறந்துபோனார்கள். ஆனால் நீ, ‘என் வார்த்தையைக் கேட்டு நடக்கிற யாரும் சாகவே மாட்டார்கள்’ என்று சொல்கிறாய். 53  இறந்துபோன எங்கள் தகப்பனாகிய ஆபிரகாமைவிட நீ என்ன உயர்ந்தவனா? தீர்க்கதரிசிகளும் இறந்துவிட்டார்கள். அப்படியிருக்கும்போது, உன்னை நீ யாரென்று சொல்லிக்கொள்கிறாய்?” எனக் கேட்டார்கள். 54  அதற்கு இயேசு, “நானே என்னை மகிமைப்படுத்தினால், என் மகிமை வீணாக இருக்கும். என் தகப்பன் என்னை மகிமைப்படுத்துகிறார்.+ அவரை உங்கள் கடவுள் என்று சொல்லிக்கொள்கிறீர்கள். 55  இருந்தாலும், உங்களுக்கு அவரைத் தெரியாது.+ ஆனால், எனக்கு அவரைத் தெரியும்.+ அவரைத் தெரியாது என்று நான் சொன்னால் உங்களைப் போலவே நானும் ஒரு பொய்யனாக இருப்பேன். ஆனால், எனக்கு அவரைத் தெரியும், நான் அவருடைய வார்த்தையின்படி நடக்கிறேன். 56  உங்கள் தகப்பனாகிய ஆபிரகாம் என் நாளைப் பார்க்கப்போகிற எதிர்பார்ப்பில் ரொம்பச் சந்தோஷமாக இருந்தார், அதைப் பார்த்து சந்தோஷப்பட்டார்”+ என்று சொன்னார். 57  அப்போது யூதர்கள், “உனக்கு இன்னும் 50 வயதுகூட ஆகவில்லை, நீயா ஆபிரகாமைப் பார்த்திருக்கிறாய்?” என்று கேட்டார்கள். 58  அதற்கு இயேசு, “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருந்திருக்கிறேன்”+ என்று சொன்னார். 59  அவர்கள் இதைக் கேட்டபோது கற்களை எடுத்து அவர்மேல் எறியப் பார்த்தார்கள். ஆனால், இயேசு அவர்களிடமிருந்து நழுவி ஆலயத்தைவிட்டு வெளியே போனார்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “மரக் கம்பத்தில் அறைந்து கொன்ற.”
வே.வா., “பாலியல் முறைகேட்டால்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா