Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

டேட்டிங்—பாகம் 1: டேட்டிங் செய்ய நான் தயாராக இருக்கிறேனா?

டேட்டிங்—பாகம் 1: டேட்டிங் செய்ய நான் தயாராக இருக்கிறேனா?

 டேட்டிங் என்றால் என்ன?

 சில பேர் டேட்டிங் என்றாலே பாய் ஃபிரெண்டுடன் இல்லையென்றால் கேர்ள் ஃபிரெண்டுடன் சும்மா ஊர் சுத்திக்கொண்டு ஜாலியாக இருப்பதுதான் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது அதற்கான நேரம் இல்லை. அப்படியென்றால், டேட்டிங் எதற்கான நேரம்? ஒருவேளை கல்யாணம் பண்ணிக்கொண்டால் இரண்டு பேரும் பொருத்தமான ஜோடியாக இருப்பார்களா என்று தெரிந்துகொள்வதற்காக செலவழிக்கிற நேரம்.

 அதனால், டேட்டிங் செய்கிறவர்கள் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு ஒரு முடிவு எடுத்துதான் ஆக வேண்டும். அதாவது, ஒருமனமாய் திருமணத்தில் இணைய வேண்டுமா இல்லையென்றால் இருமனமாய் பிரிந்துவிட வேண்டுமா? அதனால் நீங்கள் டேட்டிங் பண்ண தொடங்கினாலே இதில் ஏதாவது ஒரு முடிவை எடுக்க தயாராக இருக்க வேண்டும்.

 சுருக்கமாக சொன்னால்: டேட்டிங் பண்ண நீங்கள் தயாராக இருப்பதாக நினைத்தால் கல்யாணம் பண்ணுவதற்கும் நீங்கள் தயாராகத்தான் இருக்கிறீர்கள்.

கல்யாணம் பண்ணும் எண்ணமே இல்லாமல் டேட்டிங் பண்ணுவது வேலையில் சேர வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் ஒரு இன்டர்வியூவுக்குப் போகிற மாதிரிதான்

 நீங்கள் டேட்டிங் செய்ய தயாராக இருக்கிறீர்களா?

 டேட்டிங் ஒருவேளை கல்யாணத்தில் போய் முடியலாம் என்பதால் உங்களுடைய கல்யாண வாழ்க்கை சுகமாக இருக்குமா, சுமையாக இருக்குமா என்பது இப்போது உங்களிடம் இருக்கிற குணங்களைப் பொறுத்துதான் இருக்கும். அதனால் கீழே சொல்லியிருக்கிற விஷயங்களைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

  •   குடும்ப உறவுகள். நீங்கள் உங்கள் அப்பா-அம்மாவை... கூட பிறந்தவர்களை... எப்படி நடத்துகிறீர்களோ, அதுவும் முக்கியமாக நீங்கள் டென்ஷனாக இருக்கும்போது எப்படி நடத்துகிறீர்களோ அப்படித்தான் கல்யாணத்துக்குப் பிறகு உங்கள் துணையையும் நடத்துவீர்கள்.

     பைபிள் ஆலோசனை: “எல்லா விதமான மனக்கசப்பையும், சினத்தையும், கடும் கோபத்தையும், கூச்சலையும், பழிப்பேச்சையும், மற்ற எல்லா விதமான கெட்ட குணத்தையும் உங்களைவிட்டு நீக்கிப்போடுங்கள்.”—எபேசியர் 4:31.

     உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் என்னுடைய அப்பா அம்மாவையும் கூடப் பிறந்தவர்களையும் மரியாதையாக நடத்துவதாக அவர்கள் சொல்வார்களா? அவர்களில் யாராவது ஒருவரோடு எனக்கு ஒத்துப்போகவில்லை என்றால் நான் அவர்களிடம் அமைதியாக பேசுகிறேனா இல்லையென்றால் கத்திக் கூச்சல் போட்டு சண்டை போடுகிறேனா?’

    அப்பா-அம்மாவிடம் வருகிற பிரச்சினையை சமாளிக்க உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்கள் துணையிடம் வருகிற பிரச்சினையை எப்படிச் சமாளிப்பீர்கள்?

  •   விட்டுக்கொடுப்பது. நீங்கள் கல்யாணம் செய்தீர்கள் என்றால் உங்கள் துணையின் விருப்பு வெறுப்புகளைப் பற்றி அதிகமாக யோசிக்க வேண்டியிருக்கும். அவருடைய சந்தோஷத்துக்காக உங்களுடைய விருப்பங்களை நீங்கள் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும்.

     பைபிள் ஆலோசனை: “ஒவ்வொருவனும் தனக்குப் பிரயோஜனமானதைத் தேடாமல், மற்றவர்களுக்குப் பிரயோஜனமானதையே தேட வேண்டும்.”—1 கொரிந்தியர் 10:24.

     உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் நினைக்கிற மாதிரி தான் எல்லாம் நடக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறேனா? நான் விட்டுக் கொடுக்கிறவன்/ள் என்று பெயர் எடுத்திருக்கிறேனா? என்னுடைய விருப்பங்களை விட மற்றவர்களுடைய விருப்பத்துக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கிறேனா? அப்படியென்றால் அதை நான் எந்தெந்த விதங்களில் காட்டியிருக்கிறேன்?’

  •   மனத்தாழ்மை. நீங்கள் ஒரு நல்ல கணவனாகவோ மனைவியாகவோ இருந்தீர்கள் என்றால் உங்களுடைய தவறுகளை ஒத்துக்கொண்டு அதற்காக மனதார மன்னிப்பு கேட்பீர்கள்.

     பைபிள் ஆலோசனை: “நாம் எல்லாரும் பல தடவை தவறு செய்கிறோம்.”—யாக்கோபு 3:2.

     உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் ஏதாவது தப்பு பண்ணிவிட்டால் அதை உடனே ஒத்துக்கொள்கிறேனா, இல்லையென்றால் சாக்குப்போக்கு சொல்கிறேனா? ‘நீங்க இதை இப்படி செஞ்சா நல்லா இருக்கும்’ என்று யாராவது ஆலோசனை சொன்னால் நான் கோபித்துக்கொள்கிறேனா?’

  •   பணம். கணவன் மனைவிக்குள்ளே பிரச்சினை வருவதற்கு ரொம்ப முக்கியமான ஒரு காரணமே பணம்தான். இப்போது நீங்கள் பணத்தை பொறுப்பாக கையாள தெரிந்துகொண்டீர்கள் என்றால் முக்கால்வாசி பிரச்சினையை உங்களால் தடுக்க முடியும்

     பைபிள் ஆலோசனை: “உங்களில் யாராவது ஒரு கோபுரம் கட்ட விரும்பினால், அதைக் கட்டி முடிக்க தனக்குப் போதுமான வசதி இருக்கிறதா என்று முதலில் செலவைக் கணக்கு பார்க்காமல் இருப்பானா?”—லூக்கா 14:28.

     உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் பார்த்து பார்த்து செலவு செய்கிறேனா இல்லையென்றால் அடிக்கடி கடனில் மாட்டிக்கொள்கிறேனா? பணம், காசு விஷயத்தில் நான் பொறுப்பாக இருக்கிறேன் என்பதை எப்படிக் காட்டியிருக்கிறேன்?

  •   கடவுளோடு உள்ள உறவு. நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சியாக இருந்தால் பைபிளை தவறாமல் படிப்பீர்கள். அதுபோல கிறிஸ்தவக் கூட்டங்களிலும் ஒழுங்காக கலந்துகொள்வீர்கள்.

     பைபிள் ஆலோசனை: “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.”—மத்தேயு 5:3.

     உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என் விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்காக நானே சொந்தமாக முயற்சி எடுக்கிறேனா? நான் எதற்கு முதலிடம் கொடுக்கிறேன், கடவுளோடு உள்ள பந்தத்தைப் பலப்படுத்துகிற காரியங்களை செய்வதற்கா அல்லது மற்ற காரியங்களை செய்வதற்கா?’

 சுருக்கமாகச் சொன்னால்: கல்யாணம் பண்ண ஆசைப்படுகிறவர்கள் தங்களுக்கு ஒரு நல்ல துணை வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். உங்களை கல்யாணம் பண்ணுகிறவரும் அப்படித்தான் நினைப்பார். அதனால் நீங்கள் நல்ல துணையாக ஆவதற்கு கடின முயற்சி செய்தால் உங்களை மாதிரியே யோசிக்கிற ஒரு நபருக்கு உங்களைப் பிடிக்கலாம்.