Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

அப்பா அம்மாவோடு சண்டை போடாமல் சமாதானமாக இருப்பது எப்படி?

அப்பா அம்மாவோடு சண்டை போடாமல் சமாதானமாக இருப்பது எப்படி?

 உங்களிடம் சில கேள்விகள்

  •   யாரோடு உங்களுக்கு அடிக்கடி சண்டை வரும்?

    •  அப்பாவோடு

    •  அம்மாவோடு

  •   எவ்வளவு தடவை இந்த மாதிரி சண்டை வரும்?

    •  எப்போதாவது

    •  அவ்வப்போது

    •  அடிக்கடி

  •   அந்த சண்டை எவ்வளவு சீக்கிரத்தில் சரி ஆகும்?

    •  உடனே சமாதானம் ஆகிவிடுவேன்.

    •  ரொம்ப நேரம் வாக்குவாதம் செய்த பிறகுதான் சரியாகும்.

    •  எவ்வளவு வாக்குவாதம் செய்தாலும் சரியாகாது.

 அப்பா அம்மாவோடு உங்களுக்கு அடிக்கடி சண்டை வருகிறது என்றால், அந்தப் பிரச்சினையை சரிசெய்ய அவர்கள்தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அடிக்கடி சண்டை வராமல் இருக்க... பிரச்சினைகளை சீக்கிரம் சரிசெய்ய... நீங்களும் சில படிகளை எடுக்கலாம். அவை என்னென்ன என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். அதற்கு முன்பு, இவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள் . . .

 ஏன் சண்டை வருகிறது

  •   யோசிக்கும் விதம். சின்ன வயதில் இருந்தபோது யோசித்ததைவிட வளர வளர நீங்கள் அதிகமாக யோசிக்க ஆரம்பித்திருப்பீர்கள். நீங்கள் அப்படி யோசிப்பதால் உங்களுக்கென்று சில கருத்துகள் இருக்கும், அதில் நீங்கள் உறுதியாகவும் இருப்பீர்கள். ஆனால், அதே விஷயங்களைப் பற்றி உங்கள் அப்பா அம்மாவுக்கு வேறு கருத்துகள் இருக்கலாம். எப்படியிருந்தாலும், “உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்” என்று பைபிள் சொல்கிறது.—யாத்திராகமம் 20:12.

     வாழ்க்கையின் எதார்த்தம்: உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயத்தைப் பற்றி சண்டை போடாமல் பக்குவமாக எடுத்து சொல்வதற்கு முதிர்ச்சியும் திறமையும் தேவை.

  •   சுதந்திரம். நீங்கள் வளர வளர உங்கள் அப்பா அம்மா உங்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுப்பார்கள். ஆனால், நீங்கள் எதிர்பார்த்த நேரத்தில் அல்லது நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு உங்களுக்கு சுதந்திரம் கிடைக்காமல் இருக்கலாம். அதனால்கூட சண்டை வரலாம். ஆனாலும், பைபிள் இப்படிச் சொல்கிறது: “உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கீழ்ப்படிந்து நடங்கள்.”—எபேசியர் 6:1.

     வாழ்க்கையின் எதார்த்தம்: அப்பா அம்மா உங்களுக்கு ஏற்கெனவே கொடுத்திருக்கிற சுதந்திரத்தை நீங்கள் எப்படி பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் அவர்கள் உங்களுக்கு இன்னும் அதிக சுதந்திரத்தைக் கொடுப்பார்கள்.

 நீங்கள் என்ன செய்யலாம்

  •   உங்கள் பங்கில் என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். ஒரு சண்டை வரும்போது, மொத்த பழியையும் உங்கள் அப்பா அம்மாமேல் போடாமல், சமாதானம் பண்ணுவதற்கு நீங்கள் என்ன செய்யலாம் என்று யோசித்துப்பாருங்கள். “ஒரு சண்டை பெரிதாகிறது என்றால் அதற்கு உங்கள் அப்பா அம்மா என்ன சொன்னார்கள் என்பது மட்டுமே காரணமாக இருக்காது. நிறைய சமயங்களில், நீங்கள் அதற்கு எப்படி பதில் சொன்னீர்கள் என்பதும் காரணமாகிவிடும். நாம் நிதானமாக பேசினால் எவ்வளவு பெரிய சண்டையாக இருந்தாலும் அதை ஈஸியாக சரிசெய்துவிடலாம்” என்று ஜெஃப்ரி என்ற ஒரு இளைஞர் சொல்கிறார்.

     பைபிள் இப்படிச் சொல்கிறது: “உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் சமாதானமாக இருங்கள்.”—ரோமர் 12:18.

  •   காதுகொடுத்துக் கேளுங்கள். ”காதுகொடுத்து கேட்பதுதான் இருப்பதிலேயே எனக்கு கஷ்டமான விஷயம்” என்று 17 வயது சமந்தா ஒத்துக்கொள்கிறாள். அவள் இப்படி தொடர்ந்து சொல்கிறாள்: “ஆனால், அப்பா அம்மா சொல்வதை பிள்ளைகள் காதுகொடுத்து கேட்டால், பிள்ளைகள் சொல்வதையும் அப்பா அம்மா காதுகொடுத்து கேட்பார்கள் என்பதை நான் தெரிந்துகொண்டேன்.”

     பைபிள் இப்படிச் சொல்கிறது: “நன்றாகக் காதுகொடுத்துக் கேட்கிறவர்களாகவும், யோசித்து நிதானமாகப் பேசுகிறவர்களாகவும் இருக்க வேண்டும்.”—யாக்கோபு 1:19.

    சண்டை என்பது நெருப்பு மாதிரி​—ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தவில்லை என்றால் வீட்டையே எரித்துவிடும்

  •   நீங்களும் உங்கள் அப்பா அம்மாவும் ஒரே ‘டீம்’ என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். டென்னிஸ் விளையாட்டைக் கற்பனை செய்துபாருங்கள். அதில் நீங்களும் உங்கள் பெற்றோரும் ஒரே டீமாக விளையாடுகிறீர்கள். உங்கள் டீம் ஜெயிக்க வேண்டுமென்றால், நீங்களும் உங்கள் பெற்றோரும் பிரச்சினை என்ற பந்தை அடிக்க வேண்டும்; உங்களுக்குள்ளேயே அடித்துக்கொள்ளகூடாது. ஆடெம் என்ற இளைஞர் இப்படிச் சொல்கிறான்: “ஒரு சண்டை வரும்போது, பிள்ளைக்கு எது நல்லது என்று அப்பா அம்மா யோசிப்பார்கள், தனக்கு எது நல்லது என்று பிள்ளை யோசிப்பான். அப்படிப் பார்த்தால், இரண்டு பேருடைய குறிக்கோளும் ஒன்றுதான்.”

     பைபிள் இப்படிச் சொல்கிறது: “மற்றவர்களோடு சமாதானமாக இருப்பதற்கு . . . உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள்.”—ரோமர் 14:19.

  •   உங்கள் அப்பா அம்மாவை புரிந்து நடந்துகொள்ளுங்கள். ”என்னை மாதிரியே அப்பாவும் அம்மாவும் பெரிய பெரிய பிரச்சினைகளோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை யோசித்துப்பார்ப்பது எனக்கு பிரயோஜனமாக இருக்கிறது” என்று சாரா என்ற டீனேஜ் பெண் சொல்கிறாள். கார்லா என்ற இளம் பெண் இன்னும் ஒருபடி மேலே போய் இப்படிச் செய்வதாக சொல்கிறாள்: “என் அப்பா அம்மாவுடைய இடத்தில் என்னை வைத்துப் பார்க்க நான் முயற்சி செய்வேன். நான் ஒரு பிள்ளையை வளர்க்கும்போது இதேமாதிரி ஒரு சூழ்நிலைமை வந்தால் நான் என்ன யோசிப்பேன்? எது என் பிள்ளைக்கு சரியானதாக இருக்கும்?”

     பைபிள் இப்படிச் சொல்கிறது: “உங்களுடைய நலனில் மட்டுமே அக்கறை காட்டாமல், மற்றவர்களுடைய நலனிலும் அக்கறை காட்டுங்கள்.”—பிலிப்பியர் 2:4.

  •   கீழ்ப்படிந்து நடங்கள். நீங்கள் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்றுதான் பைபிளும் சொல்கிறது. (கொலோசெயர் 3:20) அப்படி செய்தால், ஒத்துப்போவது உங்களுக்கு சுலபமாக இருக்கும். “என் அப்பா அம்மா என்ன சொல்கிறார்களோ அதை செய்யும்போது என் வாழ்க்கை ‘டென்ஷன்’ இல்லாமல் இருக்கிறது. எனக்காக அவர்கள் எத்தனையோ விஷயங்களை விட்டுக்கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்காக நான் இதைக்கூட செய்யவில்லையென்றால் எப்படி!” என்று கேரன் என்ற இளம் பெண் சொல்கிறாள். சண்டையை தவிர்க்க ஒரு சிறந்த வழி, கீழ்ப்படிவதுதான்!

     பைபிள் இப்படிச் சொல்கிறது: “விறகு இல்லையென்றால் நெருப்பு அணைந்துவிடும்.”—நீதிமொழிகள் 26:20.

 டிப்ஸ். உங்களுக்கு பேசுவது கஷ்டமாக இருந்தால், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை ஒரு பேப்பரில் எழுதி கொடுங்கள் அல்லது மெசேஜாக அனுப்புங்கள். “நான் சாந்தமாக பேசுவதற்கு சரியான மனநிலையில் இல்லாதபோது அப்படி செய்வேன். அப்படி செய்வது, கத்திப் பேசாமல் இருக்கவும் பிறகு வருத்தப்படும்படி எதையாவது பேசிவிடாமல் இருக்கவும் உதவுகிறது” என்று அலிஸா என்ற டீனேஜ் பெண் சொல்கிறாள்.