Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

காதல் தோல்வி—எப்படிச் சமாளிப்பது?

காதல் தோல்வி—எப்படிச் சமாளிப்பது?

 “நானும் என் கெர்ல் ஃப்ரெண்டும் பிரிஞ்சப்ப, என் மனசு அப்படியே சுக்குநூறா உடைஞ்சு போச்சு. வாழ்க்கையில அப்படியொரு வலியை அதுக்கு முன்னால நான் அனுபவிச்சதே இல்ல” என்று சொல்கிறார் ஸ்டீவன்.

 இதுபோன்ற அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா? ஆம் என்றால், இந்தக் கட்டுரை உங்களுக்கு நிச்சயம் உதவும்.

 காதல் தோல்வி—எப்படிப்பட்டது?

 காதல் தோல்வி என்பது அதில் உட்பட்டுள்ள ஆண், பெண் இருவருக்குமே வலியையும் வேதனையையும் உண்டாக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.

  •   பிரிந்துவிட முதல் படியை எடுத்தது நீங்கள்தான் என்றால், ஒருவேளை ஜாஸ்மின் போலவே நீங்கள் உணரலாம்; “நான் மனசார நேசிச்ச ஒருத்தர புண்படுத்திட்டேனே-ன்னு நெனக்கும்போது என் மனசாட்சி ரொம்பக் குத்துது, மனசு கனமா கனக்குது; அப்பப்பா... இந்தப் பாரம் இனி எனக்கு வேண்டவே வேண்டாம்” என்கிறாள் அவள்.

  •   பிரிந்துவிட முதல் படியை எடுத்தது நீங்கள் இல்லை என்றால், சிலர் ஏன் தங்களுடைய முன்னாள் காதலன்/காதலி செத்துவிட்டதாகச் சொல்கிறார்கள் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். ஜேனட் என்ற இளம் பெண் இப்படிச் சொல்கிறாள்: “நிஜத்த ஏத்துக்க முடியல, கோபம் கோபமா வந்துச்சு, வாதாடுனேன், மனச்சோர்வுக்கு ஆளானேன், கடைசியில... கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழிச்சு, நிஜத்த ஏத்துக்கிட்டேன். இப்படி, துக்கத்த ஒவ்வொரு கட்டமா தாண்டிவந்தேன்.”

 முக்கிய விஷயம் இதுதான்: காதல் தோல்வி உங்களை மனமொடிந்துபோக வைத்துவிடும், தவியாய்த் தவிக்க வைத்துவிடும். ஒரு பைபிள் எழுத்தாளர் சொல்கிறபடி, “உடைந்த உள்ளம் ஒருவருடைய பலத்தை உறிஞ்சிவிடும்.”​—நீதிமொழிகள் 17:22.

 நீங்கள் என்ன செய்யலாம்

  •  முதிர்ச்சிவாய்ந்த ஒருவரிடம் மனம்விட்டுப் பேசுங்கள். “உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான். கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரனாக இருக்கிறான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 17:17) உங்கள் அப்பா அம்மாவிடமோ அல்லது முதிர்ச்சிவாய்ந்த நண்பரிடமோ உங்கள் மனதிலுள்ள வேதனைகளைக் கொட்டுவது, நிலைமையைச் சரியான கண்ணோட்டத்தில் பார்க்க உங்களுக்கு உதவும்.

     “மாசக்கணக்கா யாரோடயும் பேசாம பழகாம ஒதுங்கி ஒதுங்கியே போனேன், எனக்குள்ள இருந்த உணர்ச்சிகள யார்கிட்டயும் சொல்லல. ஆனா, மனசில ஏற்பட்ட காயத்துக்கு மருந்துபோட நண்பர்களால முடியும். நான் எப்போ அவங்ககிட்ட மனசு திறந்து பேசினேனோ அப்போதான் கொஞ்சம் பாரம் கம்மியாச்சு.”​—ஜேனட்.

  •  அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். பைபிள் நீதிமொழி ஒன்று இப்படிச் சொல்கிறது: “ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி.” (நீதிமொழிகள் 4:5) கசப்பான அனுபவங்கள்... நம்மைப் பற்றியும், ஏமாற்றத்தை நாம் எப்படிச் சமாளிக்கிறோம் என்பதைப் பற்றியும் நமக்கு நன்றாகப் புரிய வைக்கின்றன.

     “நாங்க ரெண்டு பேரும் பிரிஞ்ச பிறகு என் ஃப்ரெண்டு என்கிட்ட, ‘உன் காதல் அனுபவத்திலிருந்து என்னெல்லாம் கத்துக்கிட்ட? எதிர்காலத்தில வேற ஒருத்தர காதலிக்கும்போது அதயெல்லாம் எப்படிப் பயன்படுத்தப்போற?’னு கேட்டான்.”​—ஸ்டீவன்.

  •  ஜெபம் செய்யுங்கள். “யெகோவாமேல் உன் பாரத்தைப் போட்டுவிடு. அவர் உன்னை ஆதரிப்பார்” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 55:22) துக்கத்தலிருந்து வெளியே வருவதற்கும், காதல் தோல்வியை வேறொரு கோணத்திலிருந்து பார்ப்பதற்கும் ஜெபம் உங்களுக்கு உதவும்.

     “விடாம ஜெபம் செய்யுங்க. உங்களுக்கு இருக்கற வலிய, வேதனைய யெகோவா புரிஞ்சிருக்காரு; உங்க நெலமைய பத்தி உங்களவிட அவருக்கு நல்லாவே தெரியும்.”​—மார்சியா.

  •  மற்றவர்களுக்கு உதவுங்கள். “உங்களுடைய நலனில் மட்டுமே அக்கறை காட்டாமல், மற்றவர்களுடைய நலனிலும் அக்கறை காட்டுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (பிலிப்பியர் 2:4) எந்தளவு மற்றவர்களுக்கு உதவுகிறீர்களோ அந்தளவு சீக்கிரமாக உங்கள் காதல் தோல்வியின் வலியை மறந்து, சரியான கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்வீர்கள்.

     “காதல் தோல்வி-ங்கறது வாழ்க்கையே முடிஞ்சுப்போச்சு-ங்கற உணர்வ தந்துடும், உடம்பில ஏற்படற காயத்தவிட பயங்கரமான வலியைக் கொடுக்கும். ஆனா, போகப்போக அந்த வலி குறைஞ்சிடும், இத என் அனுபவத்திலிருந்து சொல்றேன். ஜஸ்ட் கொஞ்சம் டைம் தந்தேன், மனசில ஏற்பட்ட காயம் அப்படியே ஆறிப்போயிடுச்சு.”​—எவெலின்.