Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 98

கிறிஸ்தவ மதம் பல தேசங்களுக்குப் பரவுகிறது

கிறிஸ்தவ மதம் பல தேசங்களுக்குப் பரவுகிறது

பூமி முழுவதும் நல்ல செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும் என்று இயேசு கொடுத்த கட்டளைக்கு அப்போஸ்தலர்கள் கீழ்ப்படிந்தார்கள். கி.பி. 47-ல், அந்தியோகியாவில் இருந்த சகோதரர்கள் பவுலையும் பர்னபாவையும் பல இடங்களுக்குப் போய் பிரசங்கிப்பதற்காக அனுப்பினார்கள். அவர்கள் இரண்டு பேரும் ஆசியா மைனர் (இன்றைய துருக்கி) முழுவதும் பயணம் செய்து, தெர்பை, லீஸ்திரா, இக்கோனியா போன்ற இடங்களில் அதிக ஆர்வத்தோடு பிரசங்கித்தார்கள்.

அவர்கள் ஏழை, பணக்காரர், பெரியவர், சிறியவர் என்று வித்தியாசம் பார்க்காமல் எல்லாரிடமும் பிரசங்கித்தார்கள். கிறிஸ்துவைப் பற்றிய உண்மைகளை நிறைய பேர் ஏற்றுக்கொண்டார்கள். சீப்புருவின் ஆளுநரான செர்கியு பவுலிடம் அவர்கள் பிரசங்கித்தபோது, ஒரு மந்திரவாதி அவர்களைத் தடுக்கப் பார்த்தான். பவுல் அந்த மந்திரவாதியிடம், ‘யெகோவா உன்னைத் தண்டிப்பார்’ என்று சொன்னார். உடனே, அவனுக்குக் கண் தெரியாமல் போனது. அதைப் பார்த்த ஆளுநர் செர்கியு பவுல் ஒரு கிறிஸ்தவராக ஆனார்.

பவுலும் பர்னபாவும் வீடுகள், சந்தைகள், சாலைகள், ஜெபக்கூடங்கள் என எல்லா இடங்களிலும் பிரசங்கித்தார்கள். அவர்கள் லீஸ்திராவுக்குப் போனபோது, நடக்க முடியாத ஒரு ஆளைக் குணமாக்கினார்கள். அதைப் பார்த்தவர்கள் அவர்களைக் கடவுள்கள் என்று நினைத்துக்கொண்டு, வணங்க வந்தார்கள். ஆனால் பவுலும் பர்னபாவும், ‘நாங்கள் சாதாரண மனிதர்கள்தான். கடவுளை வணங்குங்கள்’ என்று சொல்லி அவர்களைத் தடுத்தார்கள். பிறகு யூதர்கள் சிலர் அங்கே வந்து, பவுலுக்கு எதிராக அந்தக் கூட்டத்தைத் தூண்டிவிட்டார்கள். அவர்கள் பவுலைக் கல்லால் அடித்தார்கள். அவர் இறந்துவிட்டார் என்று நினைத்து அவரை இழுத்துக்கொண்டு போய் நகரத்துக்கு வெளியே போட்டார்கள். ஆனால், பவுல் சாகவில்லை! உடனே, சகோதரர்கள் அவரைக் காப்பாற்ற அங்கே வந்தார்கள். அவரை நகரத்துக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள். பிறகு, பவுல் அந்தியோகியாவுக்குத் திரும்பிப் போனார்.

கி.பி. 49-ல், பவுல் இரண்டாவது பயணத்தை ஆரம்பித்தார். முதலில் ஆசியா மைனரில் இருந்த சகோதரர்களைப் பார்க்கப் போனார். பிறகு, நல்ல செய்தியைச் சொல்வதற்காக இன்னும் தூரமாகப் பயணம் செய்து ஐரோப்பாவுக்குப் போனார். அத்தேனே, எபேசு, பிலிப்பி, தெசலோனிக்கே ஆகிய இடங்களுக்கும் மற்ற இடங்களுக்கும் போனார். சீலாவும், லூக்காவும், இளம் தீமோத்தேயுவும் பவுலுடன் பயணம் செய்தார்கள். அவர்கள் ஒன்றுசேர்ந்து சபைகளை ஆரம்பித்தார்கள். சபைகள் பலமாக இருக்க உதவினார்கள். பவுல் ஒன்றரை வருஷங்கள் கொரிந்துவில் தங்கி, அங்கே இருந்த சகோதரர்களைப் பலப்படுத்தினார். அங்கே பிரசங்கித்தார், மக்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். நிறைய சபைகளுக்குக் கடிதங்கள் எழுதினார். கூடார வேலையும் செய்தார். பிறகு, அந்தியோகியாவுக்குத் திரும்பிப்போனார்.

பிறகு, கி.பி. 52-ல், பவுல் மூன்றாவது பயணத்தை ஆசியா மைனரில் ஆரம்பித்தார். வடக்கே பிலிப்பிவரை பயணம் செய்தார். பிறகு, கீழே கொரிந்துவுக்குப் போனார். சில வருஷங்கள் எபேசுவில் தங்கி அங்கிருந்த மக்களுக்குக் கற்றுக்கொடுத்தார், நோயாளிகளைக் குணமாக்கினார், சபைகளுக்கு உதவி செய்தார். ஒரு பள்ளி அரங்கத்தில் தினமும் பேச்சுகள் கொடுத்தார். நிறைய பேர் அவர் சொன்னதைக் கேட்டு, தவறான வழியைவிட்டுத் திருந்தினார்கள். நிறைய இடங்களில் நல்ல செய்தியைச் சொன்ன பிறகு, கடைசியில் எருசலேமுக்குத் திரும்பிப் போனார்.

‘நீங்கள் புறப்பட்டுப் போய், எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்குங்கள்.’—மத்தேயு 28:19