Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 65

எஸ்தர் தன் மக்களைக் காப்பாற்றுகிறாள்

எஸ்தர் தன் மக்களைக் காப்பாற்றுகிறாள்

எஸ்தர் ஒரு யூதப் பெண். அவள் பெர்சியாவில் இருந்த சூசான் நகரத்தில் வாழ்ந்தாள். பல வருஷங்களுக்கு முன், நேபுகாத்நேச்சார் அவளுடைய முன்னோர்களை எருசலேமிலிருந்து பிடித்துவந்திருந்தான். அவளுடைய பெரியப்பா மகன் மொர்தெகாய் அவளை வளர்த்தார். அவர் பெர்சிய ராஜாவான அகாஸ்வேருவிடம் வேலை செய்தார்.

அகாஸ்வேரு ராஜா தனக்கு வேறொரு ராணி வேண்டும் என்று நினைத்தார். அதனால், தேசத்தில் இருந்த மிக அழகான பெண்களை அவருடைய ஆட்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள். அப்போது எஸ்தரையும் கூட்டிக்கொண்டு வந்தார்கள். ராஜா அவளைத் தன்னுடைய ராணியாகத் தேர்ந்தெடுத்தார். அவள் ஒரு யூதப் பெண் என்பதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று மொர்தெகாய் அவளிடம் சொன்னார்.

ஆமான் என்பவன் எல்லா அதிகாரிகளுக்கும் தலைவனாக இருந்தான். அவன் ரொம்பப் பெருமை பிடித்தவன். எல்லாரும் தன் முன்னால் விழுந்து வணங்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால், மொர்தெகாய் அவனை வணங்கவில்லை. அதனால், ஆமானுக்குப் பயங்கர கோபம் வந்தது. அவன் மொர்தெகாயைக் கொல்ல நினைத்தான். அவர் ஒரு யூதர் என்று தெரிந்ததும், தேசத்தில் இருந்த எல்லா யூதர்களையும் கொல்வதற்குத் திட்டம் போட்டான். அவன் ராஜாவிடம் போய், ‘யூதர்கள் ஆபத்தான ஆட்கள். நீங்கள் அவர்களை ஒழித்துக்கட்ட வேண்டும்’ என்று சொன்னான். அதற்கு அகாஸ்வேரு, ‘என்ன செய்ய வேண்டுமோ செய்’ என்று சொன்னார். ஒரு சட்டத்தைப் போட அவனுக்கு அதிகாரமும் கொடுத்தார். அதனால் ஆமான், யூதர்கள் எல்லாரையும் ஆதார் மாதம் 13-ஆம் தேதி கொன்றுபோடச் சொல்லி மக்களுக்கு ஒரு சட்டம் போட்டான். இதையெல்லாம் யெகோவா பார்த்துக்கொண்டு இருந்தார்.

எஸ்தருக்கு இந்தச் சட்டத்தைப் பற்றித் தெரியாது. அதனால், மொர்தெகாய் அதன் நகலை அவளுக்கு அனுப்பி வைத்து, ‘நீ போய் ராஜாவிடம் பேசு’ என்றார். அதற்கு எஸ்தர், ‘ராஜா கூப்பிடாமல் யாராவது அவர் முன்னால் போனால், மரண தண்டனைதான் கிடைக்கும். 30 நாட்களாக ராஜா என்னைக் கூப்பிடவில்லை! ஆனாலும், நான் போகிறேன். அவர் செங்கோலை நீட்டினால் நான் தப்பித்தேன். இல்லாவிட்டால் எனக்குச் சாவுதான்’ என்று சொன்னாள்.

ராஜாவின் அரண்மனை முற்றத்துக்கு எஸ்தர் போனாள். அவளைப் பார்த்ததும் ராஜா செங்கோலை நீட்டினார். அவள் ராஜாவிடம் போனதும், ‘எஸ்தர், உனக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டார். அதற்கு அவள், ‘நீங்களும் ஆமானும் விருந்துக்கு வர வேண்டும்’ என்று சொன்னாள். விருந்தின் சமயத்தில், அடுத்த நாளும் அவர்களை விருந்துக்கு வரச் சொன்னாள். அடுத்த நாள் நடந்த விருந்தில், ராஜா மறுபடியும் அவளிடம் ‘உனக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டார். அப்போது அவள், ‘என்னையும் என் மக்களையும் ஒருவன் கொல்லப்போகிறான். தயவுசெய்து, எங்களைக் காப்பாற்றுங்கள்’ என்று சொன்னாள். அதற்கு ராஜா, ‘உங்களைக் கொல்ல நினைப்பவன் யார்?’ என்று கேட்டார். அதற்கு எஸ்தர், ‘இந்தக் கெட்ட ஆமான்தான்’ என்று சொன்னாள். ராஜாவுக்குப் பயங்கரக் கோபம் வந்தது. அதனால், உடனடியாக ஆமானைக் கொல்லும்படி கட்டளை போட்டார்.

ஆமான் போட்ட சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது, ராஜாவால்கூட முடியாது. அதனால், ராஜா எல்லா அதிகாரிகளுக்கும் மொர்தெகாயைத் தலைவராக்கினார். அதோடு, புதிதாக ஒரு சட்டத்தைப் போடவும் அவருக்கு அதிகாரம் கொடுத்தார். யூதர்களை யாராவது கொல்ல வந்தால், அவர்கள் திருப்பித் தாக்கலாம் என்று மொர்தெகாய் சட்டம் போட்டார். ஆதார் மாதம் 13-ஆம் தேதி, யூதர்கள் தங்கள் எதிரிகளைத் தோற்கடித்தார்கள். அவர்கள் அந்த வெற்றியை ஒவ்வொரு வருஷமும் கொண்டாடினார்கள்.

“நீங்கள் என்னுடைய சீஷர்களாக இருப்பதால், உங்களை ஆளுநர்களுக்கும் ராஜாக்களுக்கும் முன்னால் நிறுத்துவார்கள், அப்போது நீங்கள் அவர்களுக்கும் மற்ற தேசத்து மக்களுக்கும் சாட்சி கொடுக்க முடியும்.”—மத்தேயு 10:18