Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 14

‘பலருடைய உயிருக்கு ஈடான ஒரு மீட்புவிலையை’ யெகோவா அளித்தார்

‘பலருடைய உயிருக்கு ஈடான ஒரு மீட்புவிலையை’ யெகோவா அளித்தார்

1, 2. மனிதவர்க்கத்தின் நிலைமையை பைபிள் எவ்வாறு விவரிக்கிறது, இதற்கு ஒரே பரிகாரம் என்ன?

 “எல்லா படைப்புகளும் ஒன்றாகக் குமுறிக்கொண்டும் வேதனைப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன.” (ரோமர் 8:22) நமது பரிதாப நிலைமையை இந்த வார்த்தைகளில் அப்போஸ்தலன் பவுல் விவரிக்கிறார். மனித கண்ணோட்டத்தில் பார்க்கையில், துன்பத்திற்கும் பாவத்திற்கும் மரணத்திற்கும் பரிகாரம் இருப்பதாகவே தெரியவில்லை. ஆனால் மனிதனுக்குரிய வரம்புகள் யெகோவாவிற்கு இல்லை. (எண்ணாகமம் 23:19) நீதியின் கடவுளாகிய அவர், நம் வேதனைக்கு பரிகாரத்தை அளித்திருக்கிறார். அதுவே மீட்புவிலை.

2 மனிதவர்க்கத்திற்கு யெகோவா அளித்திருக்கும் தலைசிறந்த பரிசே மீட்புவிலை. அது பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுபடும் வாய்ப்பை நமக்கு அளிக்கிறது. (எபேசியர் 1:7) பரலோகத்தில் அல்லது பூஞ்சோலை பூமியில் முடிவில்லாத வாழ்வைப் பெறும் நம்பிக்கைக்கு அதுவே ஆதாரம். (லூக்கா 23:43; யோவான் 3:16; 1 பேதுரு 1:4) ஆனால் மீட்புவிலை என்பது உண்மையில் என்ன? அது எப்படி யெகோவாவின் தலைசிறந்த நீதியைப் பற்றி நமக்கு கற்பிக்கிறது?

மீட்புவிலைக்கான தேவை ஏற்பட்டது எப்படி

3. (அ) மீட்புவிலைக்கான தேவை ஏன் ஏற்பட்டது? (ஆ) ஆதாமின் சந்ததியாருக்காக கடவுள் ஏன் மரண தண்டனையை நீக்கிவிட முடியவில்லை?

3 ஆதாம் பாவம் செய்ததன் காரணமாக மீட்புவிலைக்கான தேவை ஏற்பட்டது. கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனதன் மூலம் ஆதாம் தன் சந்ததியாருக்கு வியாதியையும் வேதனையையும் வலியையும் மரணத்தையும் பரம்பரை சொத்தாக விட்டுச் சென்றான். (ஆதியாகமம் 2:17; ரோமர் 8:20) கடவுள், உணர்ச்சிவசப்பட்டு மரண தண்டனையை நீக்கிவிட முடியவில்லை. அப்படி செய்தால், “பாவத்தின் சம்பளம் மரணம்” என்ற தமது சொந்த சட்டத்தையே மீறுவதாக இருக்கும். (ரோமர் 6:23) யெகோவாவே தமது நீதியின் தராதரங்களை மீறினால், குழப்பமும் அநீதியும் தவிர வேறென்ன தாண்டவமாடும் இந்த சர்வலோகத்தில்!

4, 5. (அ) சாத்தான் எவ்வாறு கடவுளை பழித்தான், அந்த சவால்களுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தை யெகோவா ஏன் உணர்ந்தார்? (ஆ) யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களை சாத்தான் எவ்வாறு குற்றப்படுத்தினான்?

4 நாம் 12-ஆம் அதிகாரத்தில் பார்த்தபடி, ஏதேன் தோட்டத்தில் செய்யப்பட்ட கலகம் மிகப் பெரிய விவாதங்களை எழுப்பியது. கடவுளுடைய நற்பெயரை சாத்தான் களங்கப்படுத்தினான். யெகோவா பொய்யர் என்றும் தம் படைப்புகளுக்கு சுதந்தரம் அளிக்காத கொடூர சர்வாதிகாரி என்றும் அவன் பழித்தான். (ஆதியாகமம் 3:1-5) பூமியை நீதியுள்ள மனிதர்களால் நிரப்ப வேண்டுமென்ற கடவுளுடைய நோக்கத்தை குலைத்துவிட்டதுபோல் தோன்றச் செய்து, கடவுள் தோல்வி கண்டுவிட்டதாக அவருக்குப் பட்டம் கட்டினான். (ஆதியாகமம் 1:28; ஏசாயா 55:10, 11) யெகோவா இந்த சவால்களுக்கு பதில் அளிக்காமல் விட்டிருந்தால், அவருடைய புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிகள் அநேகர் அவரது ஆட்சியில் நம்பிக்கை இழந்திருப்பார்கள்.

5 யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களையும் சாத்தான் குற்றப்படுத்தினான். அவர்கள் சுயநலத்தின் காரணமாகவே கடவுளை சேவிக்கிறார்கள் என்றும் பிரச்சினைகள் வந்தால் ஒருவரும் உண்மையோடு நிலைத்திருக்க மாட்டார்கள் என்றும் தூற்றினான். (யோபு 1:9-11) இந்த விவாதங்களே, மனிதனின் இக்கட்டான நிலைமையைவிட மிக முக்கியமானவையாக இருந்தன. சாத்தானின் அவதூறான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தை யெகோவா உணர்ந்தார். ஆனால் கடவுளால் எப்படி இந்த விவாதங்களையும் தீர்த்து, மனிதர்களையும் காப்பாற்ற முடியும்?

சமமதிப்புள்ள மீட்புவிலை

6. மனிதவர்க்கத்தை காப்பாற்ற கடவுள் செய்திருக்கும் ஏற்பாட்டை பைபிள் என்ன பதங்களில் விவரிக்கிறது?

6 யெகோவா அளித்த பரிகாரத்தை எந்த மனிதனாலும் ஒருகாலும் அளித்திருக்க முடியாது. ஏனெனில் ஒப்புயர்வற்ற அந்தப் பரிகாரம் இரக்கமே உருவானதாகவும் இருந்தது, நீதியே உருவானதாகவும் இருந்தது. அதேசமயம் எளிமையின் இலக்கணமாகவும் திகழ்ந்தது. அது, பரிகாரம், மீட்பு, விலைகொடுத்து வாங்குவது, சமரசமாவது, பிராயச்சித்தம் என பலவிதமாக குறிப்பிடப்படுகிறது. (சங்கீதம் 49:8; தானியேல் 9:24; கலாத்தியர் 3:13; கொலோசெயர் 1:20; எபிரெயர் 2:17) ஆனால் இதற்கு இயேசுவே பயன்படுத்திய பதம்தான் எல்லாவற்றிலும் சிறந்ததாக தெரிகிறது. “மனிதகுமாரனும் மற்றவர்களுடைய சேவையைப் பெறுவதற்கு வராமல், மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கும் பலருடைய உயிருக்கு ஈடாகத் தன்னுடைய உயிரை மீட்புவிலையாகக் [கிரேக்கில், லிட்ரான்] கொடுப்பதற்குமே வந்தார்” என அவர் சொன்னார்.—மத்தேயு 20:28.

7, 8. (அ) வேதவசனங்களில் “மீட்புவிலை” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன? (ஆ) மீட்புவிலை எவ்வாறு சமமதிப்புள்ள விலை செலுத்துவதை தேவைப்படுத்துகிறது?

7 மீட்புவிலை என்றால் என்ன? இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை, “அவிழ்த்துவிடு, விடுவி” என அர்த்தப்படுத்தும் ஒரு வினைச் சொல்லிலிருந்து வருகிறது. போர்க் கைதிகளை விடுவிக்க அளிக்கப்பட்ட பணயத் தொகையை விவரிக்க இப்பதம் பயன்படுத்தப்பட்டது. ஆகவே அடிப்படையில் மீட்புவிலை என்பது ஒன்றை வாங்குவதற்கு செலுத்தப்படும் விலையைக் குறிக்கிறது. எபிரெய வேதவசனங்களில் “மீட்புவிலை” என்பதற்கான வார்த்தை (கோஃபர்), “மூடுவது” என அர்த்தப்படுத்தும் ஒரு வினைச் சொல்லிலிருந்து வருகிறது. உதாரணமாக, பேழைக்கு தார் ‘பூச’ [எபிரெயுவில், ‘மூட’] (அதே வார்த்தையின் ஒரு வடிவம்) வேண்டும் என கடவுள் நோவாவிடம் சொன்னார். (ஆதியாகமம் 6:14) ஆகவே மீட்புவிலை செலுத்துவது என்பது பாவங்களை ‘மன்னிப்பது’ [எபிரெயுவில், ‘மூடுவது’] என்றும் அர்த்தப்படுத்துவதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.—சங்கீதம் 65:3.

8 இந்த வார்த்தை (கோஃபர்) சரிசமமானதை அல்லது “சமமதிப்புள்ளதை எப்போதுமே அர்த்தப்படுத்துகிறது” என தியாலஜிக்கல் டிக்‍ஷனரி ஆஃப் த நியூ டெஸ்டமென்ட் சொல்வது குறிப்பிடத்தக்கது. ஆகவே, பாவத்தை மூடுவதற்கு, அது ஏற்படுத்தியிருக்கும் சேதத்தை முழுமையாக மூடிவிடத்தக்க ஒரு விலையை செலுத்த வேண்டும்; அதாவது பாவத்தை சரிசமமாக ஈடுகட்டும் விலை செலுத்தினால்தான் மீட்பு பெற முடியும். ஆகவேதான் இஸ்ரவேலருக்கு கடவுள் இந்தச் சட்டத்தை வழங்கினார்: “உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் எடுக்க வேண்டும்.”—உபாகமம் 19:21.

9. விசுவாசமுள்ள நபர்கள் ஏன் மிருக பலிகள் செலுத்தினர், அப்படிப்பட்ட பலிகளை யெகோவா எவ்வாறு கருதினார்?

9 ஆபேல் முதற்கொண்டு விசுவாசமுள்ள மனிதர்கள் கடவுளுக்கு மிருக பலிகளைச் செலுத்தினார்கள். அவ்வாறு செய்ததன் மூலம், தாங்கள் பாவிகள் என்றும் தங்களுக்கு மீட்பு தேவை என்றும் உணர்ந்திருப்பதைக் காட்டினார்கள்; அதுமட்டுமல்ல, கடவுள் தமது ‘சந்ததியின்’ மூலம் விடுதலை அளிப்பதாக கொடுத்திருந்த வாக்குறுதியில் அவர்கள் விசுவாசத்தைக் காட்டினார்கள். (ஆதியாகமம் 3:15; 4:1-4; லேவியராகமம் 17:11; எபிரெயர் 11:4) யெகோவா அந்தப் பலிகளை ஏற்றுக்கொண்டு, அவற்றை செலுத்திய வணக்கத்தார் தம்முடன் நல்ல நிலைநிற்கையை அனுபவிக்க வழிசெய்தார். இருந்தாலும் மிருக பலிகள் வெறும் ஒரு அடையாளமாகவே இருந்தன. மிருகங்களால் உண்மையில் மனிதனின் பாவத்தை மூட முடியவில்லை, ஏனெனில் அவை மனிதனைவிட தாழ்ந்தவை. (சங்கீதம் 8:4-8) ஆகவே, “காளைகள், வெள்ளாடுகள் ஆகியவற்றின் இரத்தத்தால் பாவங்களைப் போக்க முடியாது” என பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 10:1-4) அப்படிப்பட்ட பலிகள், வரவிருந்த உண்மையான மீட்புவிலைக்கு வெறும் அடையாளமாகவே இருந்தன.

“சரிசமமான மீட்புவிலை”

10. (அ) மீட்புவிலை யாருக்கு சமமாக இருக்க வேண்டியிருந்தது, ஏன்? (ஆ) ஏன் ஒரேவொரு மனித பலி மட்டும் தேவைப்பட்டது?

10 ‘ஆதாமினால் எல்லாரும் சாகிறார்கள்’ என அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார். (1 கொரிந்தியர் 15:22) ஆகவே மீட்புவிலை, ஆதாமுக்கு சரிசமமாக உள்ள ஒரு பரிபூரண மனிதனின் மரணத்தை தேவைப்படுத்தியது. (ரோமர் 5:14) வேறெந்த உயிரினமும் நியாயத் தராசை சமமாக நிறுத்த முடியாது. ஆதாமிடமிருந்து மரணத்தை சுதந்தரிக்காத பரிபூரண மனிதர் ஒருவரே ‘சரிசமமான மீட்புவிலையை’—ஆதாமுக்கு பரிபூரண இணையாக இருக்கும் ஒன்றை—“எல்லாருக்காகவும்” செலுத்த முடியும். (1 தீமோத்தேயு 2:6) ஆதாமின் சந்ததியில் வந்த ஒவ்வொருவருக்கும் ஒப்பாக லட்சக்கணக்கான மனிதர்களை பலிசெலுத்த வேண்டிய அவசியம் இல்லை. “ஒரே மனிதனால் [ஆதாமினால்] பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது” என அப்போஸ்தலனாகிய பவுல் விளக்கினார். (ரோமர் 5:12) “ஒரே மனிதனால் மரணம் வந்தது, அதேபோல் ஒரே மனிதனால்” மனிதவர்க்கத்தை மீட்க கடவுள் ஏற்பாடு செய்தார். (1 கொரிந்தியர் 15:21) எப்படி?

‘எல்லாருக்கும் சரிசமமான மீட்புவிலை’

11. (அ) மீட்பர் எவ்வாறு மனிதர்கள் ‘எல்லாருக்காகவும் மரணமடைவார்?’ (ஆ) ஆதாமும் ஏவாளும் ஏன் மீட்புவிலையின் நன்மையைப் பெற்றிருக்க முடியாது? (அடிக்குறிப்பைக் காண்க.)

11 ஒரு பரிபூரண மனிதன் மனமுவந்து தம் உயிரை பலிசெலுத்துவதற்கு யெகோவா ஏற்பாடு செய்தார். ரோமர் 6:23 சொல்கிறபடி “பாவத்தின் சம்பளம் மரணம்.” மீட்புவிலையை செலுத்துபவர் தன் உயிரை பலிசெலுத்துவதன் மூலம் மனிதர்கள் ‘எல்லாருக்காகவும் மரணமடைவார்.’ வேறு வார்த்தைகளில் சொன்னால் அவர் ஆதாமின் பாவத்திற்குரிய சம்பளத்தை செலுத்துவார். (எபிரெயர் 2:9; 2 கொரிந்தியர் 5:21; 1 பேதுரு 2:24) இது ஆழ்ந்த சட்டப்பூர்வ விளைவுகளை ஏற்படுத்தும். மீட்புவிலை, ஆதாமின் கீழ்ப்படிதலுள்ள சந்ததியாருக்கு மரண தண்டனையை ரத்து செய்து, பாவத்தின் அழிவுக்குரிய விளைவை அதன் முளையிலேயே கிள்ளிவிடும். aரோமர் 5:16.

12. ஒரே கடனைத் தீர்ப்பது எப்படி அநேக நபர்களுக்கு நன்மை பயக்கலாம் என்பதற்கு உதாரணம் தருக.

12 உதாரணத்திற்கு: நீங்கள் வசிக்கும் பகுதியில் பெரும்பாலானவர்கள் ஒரு பெரிய தொழிற்சாலையில் வேலை செய்வதாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்களும் அக்கம்பக்கத்தாரும் வேலைக்கு தக்க நல்ல சம்பளம் வாங்கி சௌகரியமாக வாழ்ந்து வருகிறீர்கள். ஆனால் திடீரென ஒருநாள் தொழிற்சாலை இழுத்து மூடப்படுகிறது. காரணம்? மானேஜர் செய்த ஊழலால் கம்பெனி திவாலாகிறது. நீங்களும் அக்கம்பக்கத்தாரும் திடீரென வேலை இழந்து, கைச்செலவுக்கே காசில்லாமல் ‘நடுத்தெருவில்’ நிற்க வேண்டிய நிலை. ஒரேவொருவன் செய்த ஊழலால், தொழிலாளிகளின் மனைவி(கணவன்)மார்கள், பிள்ளைகள், கடன்கொடுத்தவர்கள் என இத்தனை பேரும் அவதிப்படுகிறார்கள். ஏதாவது பரிகாரம் உண்டா? உண்டு! வசதிபடைத்த தர்மப்பிரபு ஒருவர் உதவியளிக்க முன்வருகிறார். அந்த கம்பெனியின் மதிப்பை அவர் அறிந்திருக்கிறார். அதுமட்டுமல்ல, தொழிலாளிகளுக்காகவும் அவர்களது குடும்பங்களுக்காகவும் பரிதாபப்படுகிறார். ஆகவே, கம்பெனியின் கடனைத் தீர்த்து, தொழிற்சாலையை மறுபடியும் திறக்க ஏற்பாடு செய்கிறார். அந்த ஒரு கடனைத் தீர்த்ததால், அவ்வளவு அநேக தொழிலாளிகளும் அவர்களது குடும்பத்தாரும் கடன்கொடுத்தவர்களும் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். அதேவிதமாய், ஆதாம் ஏற்படுத்திய ஒரு கடனைத் தீர்த்தது கோடிக்கணக்கான அவன் பிள்ளைகளுக்கு பயனளிக்கிறது.

மீட்புவிலையை அளிப்பது யார்?

13, 14. (அ) யெகோவா எவ்வாறு மனிதவர்க்கத்திற்கு மீட்புவிலையை அளித்தார்? (ஆ) மீட்புவிலை யாருக்கு செலுத்தப்பட்டது, அது ஏன் அவசியமாக இருந்தது?

13 ‘உலகத்தின் பாவத்தைச் போக்கப்போகிற ஆட்டுக்குட்டியை’ யெகோவாவால் மட்டுமே அளிக்க முடிந்தது. (யோவான் 1:29) ஆனால் மனிதவர்க்கத்தை மீட்க அவர் ஏதாவதொரு தேவதூதனை தேர்ந்தெடுத்து அனுப்பவில்லை. மாறாக, யெகோவாவின் ஊழியர்களுக்கு எதிரான சாத்தானின் குற்றச்சாட்டுக்கு முடிவான, உறுதியான பதிலளிக்க முடிந்த ஒருவரையே அனுப்பினார். ஆம், யெகோவா “அவருக்குச் செல்லப்பிள்ளையாக” இருந்த ஒரே மகனை அனுப்பி ஈடிணையற்ற தியாகத்தை செய்தார். (நீதிமொழிகள் 8:30) கடவுளுடைய மகன் மனமுவந்து, தம் பரலோக வாழ்க்கையைத் துறந்து, “தன்னிடமிருந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு” வந்தார். (பிலிப்பியர் 2:7) யெகோவா பரலோகத்திலிருந்த தமது ஒரே மகனின் உயிரை யூத கன்னியாகிய மரியாளின் கருவறைக்கு அற்புதமாக மாற்றினார். (லூக்கா 1:27, 35) மனிதராக அவர் இயேசு என்று அழைக்கப்பட்டார். ஆனால் சட்டப்படி பார்த்தால் அவர் இரண்டாம் ஆதாம் என அழைக்கப்படலாம், ஏனெனில் ஆதாமை பரிபூரணமாக ஒத்திருந்தார். (1 கொரிந்தியர் 15:45, 47) ஆகவே பாவமுள்ள மனிதவர்க்கத்திற்கு மீட்புவிலையாக இயேசு தம்மையே பலிசெலுத்த முடிந்தது.

14 அந்த மீட்புவிலை யாருக்கு செலுத்தப்பட்டது? “கடவுளுக்கு” என்று குறிப்பாக சொல்கிறது சங்கீதம் 49:7. ஆனால் மீட்புவிலையை ஏற்பாடு செய்ததே யெகோவா தானே? ஆம், என்றாலும் இது மீட்புவிலையின் மதிப்பைக் குறைப்பதில்லை; அது, ஒரு பாக்கெட்டிலிருக்கும் பணத்தை எடுத்து இன்னொரு பாக்கெட்டிற்குள் போட்டுக் கொள்வதைப் போன்ற அர்த்தமற்ற, இயந்திரத்தனமான பரிமாற்றம் அல்ல. மீட்புவிலை என்பது பொருள் பரிமாற்றமல்ல, ஆனால் சட்டப்பூர்வ நடவடிக்கை என்பதை ஞாபகம் வைக்க வேண்டும். யெகோவா தமக்கு ஏற்பட்ட பேரிழப்பையும் பொருட்படுத்தாமல் மீட்புவிலையை செலுத்தியதன் மூலம் தம் பரிபூரண நீதியை தாமே உறுதியாக கடைப்பிடிப்பதை மெய்ப்பித்துக் காட்டினார்.—ஆதியாகமம் 22:7, 8, 11-13; எபிரெயர் 11:17; யாக்கோபு 1:17.

15. இயேசு துன்பப்பட்டு சாக வேண்டியது ஏன் அவசியமாக இருந்தது?

15 கி.பி. 33, இளவேனிற்காலத்தில், இயேசு கிறிஸ்து கடும் சோதனையை மனமுவந்து ஏற்று மீட்புவிலையின் விலையை செலுத்தினார். பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, குற்றவாளியாக தீர்க்கப்பட்டு, கழுமரத்தில் அறையப்படும்படி தம்மை அனுமதித்தார். இயேசு இந்தளவுக்கு வேதனையை அனுபவிப்பது உண்மையிலேயே அவசியமாக இருந்ததா? ஆம், ஏனெனில் கடவுளுடைய ஊழியர்களின் உத்தமத்தன்மை குறித்த விவாதம் தீர்க்கப்பட வேண்டியிருந்தது. குழந்தை இயேசுவைக் கொல்ல ஏரோதை கடவுள் அனுமதிக்காதது குறிப்பிடத்தக்கது. (மத்தேயு 2:13-18) ஆனால் இயேசு வளர்ந்தபோது, விவாதங்களை முழுமையாக புரிந்துகொண்டவராக, சாத்தானுடைய முழு வீச்சு தாக்குதல்களையும் எதிர்த்தார். b மிக மோசமாக நடத்தப்பட்டபோதும் இயேசு தொடர்ந்து ‘உண்மையுள்ளவராக, சூதுவாதில்லாதவராக, களங்கமில்லாதவராக, பாவிகளைப் போல இல்லாதவராக’ இருந்தார்; இதன் மூலம், சோதனையின் மத்தியிலும் உண்மையாக நிலைத்திருக்கும் ஊழியர்கள் யெகோவாவிற்கு உண்டு என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார். (எபிரெயர் 7:26) ஆக, இறக்கும் தறுவாயில், “முடித்துவிட்டேன்!” என இயேசு வெற்றித் தொனியில் சத்தமிட்டதன் காரணத்தை புரிந்துகொள்ள முடிகிறது.—யோவான் 19:30.

மீட்கும் பணியை முடிக்கிறார்

16, 17. (அ) இயேசு எவ்வாறு தமது மீட்கும் பணியை தொடர்ந்தார்? (ஆ) இயேசு “கடவுளுக்கு முன்னால் . . . நமக்காக” தோன்றுவது ஏன் அவசியமாக இருந்தது?

16 இயேசு தமது மீட்கும் பணியை முடிக்க வேண்டியிருந்தது. அவர் இறந்த மூன்றாம் நாளில் யெகோவா அவரை உயிர்த்தெழுப்பினார். (அப்போஸ்தலர் 3:15; 10:40) இந்தப் பெருஞ்சிறப்பு வாய்ந்த செயலின் மூலம் யெகோவா தமது மகனின் உண்மையுள்ள சேவைக்காக அவருக்கு வெகுமதி அளித்தது மட்டுமல்லாமல், தமது தலைமைக் குருவாக மீட்கும் பணியை நிறைவேற்றி முடிக்கும் வாய்ப்பையும் அருளினார். (ரோமர் 1:5; 1 கொரிந்தியர் 15:3-8) அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு விளக்குகிறார்: “தலைமைக் குருவான கிறிஸ்து, . . . வெள்ளாடுகள், இளம் காளைகள் ஆகியவற்றின் இரத்தத்தை எடுத்துக்கொண்டு போகவில்லை. அதற்குப் பதிலாக, தன்னுடைய சொந்த இரத்தத்தை எடுத்துக்கொண்டு எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாக மகா பரிசுத்த அறைக்குள் போய், நமக்காக நிரந்தர விடுதலை வாங்கித் தந்திருக்கிறார். அதனால்தான் கிறிஸ்து, நிஜத்தின் சாயலாகவும் கையால் செய்யப்பட்டதாகவும் இருக்கிற மகா பரிசுத்த அறைக்குள் போகாமல், கடவுளுக்கு முன்னால் இப்போது நமக்காகத் தோன்றும்படி பரலோகத்துக்குள் போயிருக்கிறார்.”—எபிரெயர் 9:11, 12, 24.

17 கிறிஸ்து தமது சொல்லர்த்தமான இரத்தத்தை பரலோகத்திற்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. (1 கொரிந்தியர் 15:50) மாறாக, அந்த இரத்தம் அடையாளப்படுத்தியதை—அவர் பலிசெலுத்திய பரிபூரண மனித உயிரின் சட்டப்பூர்வ மதிப்பை—எடுத்துச் சென்றார். பின்பு கடவுளுடைய சமுகத்தில், அந்த உயிரின் மதிப்பை பாவமுள்ள மனிதவர்க்கத்திற்குரிய மீட்புவிலையாக முறைப்படி செலுத்தினார். யெகோவா அந்தப் பலியை ஏற்றுக்கொண்டாரா? ஆம் ஏற்றுக்கொண்டார், கி.பி. 33, பெந்தெகொஸ்தே தினத்தன்று அது தெளிவானது; அப்போது எருசலேமில் கூடியிருந்த 120 சீஷர்கள்மீது பரிசுத்த சக்தி ஊற்றப்பட்டது. (அப்போஸ்தலர் 2:1-4) அச்சம்பவம் புல்லரிப்பை ஏற்படுத்தியபோதும், மீட்புவிலை அப்போதுதான் அருமையான பயன்களை அளிக்க ஆரம்பித்திருந்தது.

மீட்புவிலையின் நன்மைகள்

18, 19. (அ) கிறிஸ்துவுடைய இரத்தத்தின் அடிப்படையில் கிடைக்கும் சமரசத்தின் நன்மைகளை எந்த இரு தொகுதியினர் அனுபவிக்கிறார்கள்? (ஆ) மீட்புவிலையால் ‘திரள் கூட்டமான மக்களுக்கு’ கிடைக்கும் தற்கால, எதிர்கால நன்மைகள் சில யாவை?

18 கிறிஸ்துவின் மூலம் எல்லாவற்றையும் தன்னோடு சமரசமாக்க வேண்டுமென்று கடவுள் விரும்பினார் என்றும் கழுமரத்தில் இயேசு சிந்திய இரத்தத்தின் மூலம் சமாதானத்தை ஏற்படுத்திக் கொண்டார் என்றும் கொலோசெயர்களுக்கு பவுல் எழுதினார். இந்த சமரசம், “பரலோகத்தில் இருக்கிற” தொகுதி மற்றும் “பூமியில் இருக்கிற” தொகுதி என இரு வேறுபட்ட தொகுதியினரை உட்படுத்துவதாகவும் பவுல் விளக்கினார். (கொலோசெயர் 1:19, 20; எபேசியர் 1:10) அந்த முதல் தொகுதியினர், பரலோகத்தில் கிறிஸ்து இயேசுவோடு குருமார்களாகவும் ராஜாக்களாகவும் பூமியை ஆளப்போகும் நம்பிக்கையுள்ள 1,44,000 கிறிஸ்தவர்கள் ஆவர். (வெளிப்படுத்துதல் 5:9, 10; 7:4; 14:1-3) அவர்கள் மூலம் மீட்புவிலையின் நன்மைகள் ஆயிர வருட காலத்தில் படிப்படியாக கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்திற்கு அளிக்கப்படும்.—1 கொரிந்தியர் 15:24-26; வெளிப்படுத்துதல் 20:6; 21:3, 4.

19 ‘பூமியில் இருக்கிறவைகள்,’ பூமிக்குரிய பரதீஸில் பரிபூரண வாழ்க்கையை அனுபவித்து மகிழப்போகும் நபர்கள் ஆவர். இவர்கள் வரவிருக்கும் ‘மிகுந்த உபத்திரவத்திலிருந்து’ தப்பிப்பிழைக்கப்போகும் “திரள் கூட்டமான மக்கள்” என வெளிப்படுத்துதல் 7:9-17 விவரிக்கிறது. ஆனால் மீட்புவிலையின் நன்மைகளைப் பெற அவர்கள் அதுவரை காத்திருக்க வேண்டியதில்லை. அவர்கள் ஏற்கெனவே “தங்களுடைய உடைகளை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கியவர்கள்.” அவர்கள் மீட்புவிலையில் விசுவாசம் வைப்பதால் அந்த அன்பான ஏற்பாட்டிலிருந்து இப்போதே ஆன்மீக நன்மைகளை பெறுகிறார்கள். கடவுளுடைய நண்பர்களாக அவர்கள் நீதிமான்களாய் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்! (யாக்கோபு 2:23) இயேசுவினுடைய பலியின் விளைவாக அவர்கள் ‘அளவற்ற கருணை காட்டுகிற கடவுளுடைய சிம்மாசனத்தை தயக்கமில்லாமல் அணுக’ முடிகிறது. (எபிரெயர் 4:14-16) அவர்கள் தவறு செய்கையில் உண்மையான மன்னிப்பைப் பெறுகிறார்கள். (எபேசியர் 1:7) அபூரணத்தின் மத்தியிலும் சுத்தமான மனசாட்சியை காத்துக்கொள்கிறார்கள். (எபிரெயர் 9:9; 10:22; 1 பேதுரு 3:21) இவ்வாறு, கடவுளோடு சமரசமாவது ஏதோ நாளைய எதிர்பார்ப்பல்ல, ஆனால் இன்றைய நிஜம்! (2 கொரிந்தியர் 5:19, 20) ஆயிரவருட ஆட்சியின்போது அவர்கள் படிப்படியாக “அழிவுக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டு,” இறுதியில் “கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான விடுதலையை” பெறுவார்கள்.—ரோமர் 8:21.

20. மீட்புவிலையைக் குறித்து சிந்திப்பது உங்களை எவ்வாறு பாதிக்கிறது?

20 மீட்புவிலைக்காக “நம்முடைய எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுளுக்கு நன்றி!” (ரோமர் 7:25) அது நியமத்தில் எளிமையானது, ஆனால் பயபக்தியும் பிரமிப்பும் ஏற்படுத்தும் அளவுக்கு ஆழ்ந்த ஒன்று. (ரோமர் 11:33) அப்படிப்பட்ட மீட்புவிலையைக் குறித்து நன்றியுணர்வோடு தியானிக்கையில் அது நம் இதயங்களைத் தொட்டு, நீதியின் கடவுளிடம் இன்னுமதிகமாக நெருங்கிவர தூண்டுகிறது. சங்கீதக்காரரைப் போல், ‘நீதியையும் நியாயத்தையும் நேசிக்கிற’ யெகோவாவைத் துதிப்பதற்கு நமக்கு தகுந்த காரணம் உண்டு.—சங்கீதம் 33:5.

a ஆதாமும் ஏவாளும் மீட்புவிலை நன்மையைப் பெற்றிருக்க முடியாது. வேண்டுமென்றே கொலை செய்தவனைக் குறித்து மோசேயின் திருச்சட்டம் இந்த நியமத்தைக் குறிப்பிட்டது: “மரண தண்டனை கொடுக்கப்பட்ட ஒரு கொலைகாரனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் மீட்புவிலை வாங்கக் கூடாது.” (எண்ணாகமம் 35:31) ஆதாமும் ஏவாளும் தெரிந்தே, வேண்டுமென்றே கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனதால் சாவதற்கே தகுந்தவர்களாக இருந்ததில் சந்தேகமில்லை. முடிவில்லாத வாழ்வைப் பெறும் வாய்ப்பை அவர்கள் இவ்வாறு இழந்தார்கள்.

b ஆதாமுடைய பாவத்தை சரிசமமாக ஈடுசெய்ய, இயேசு பரிபூரண பிள்ளையாக அல்ல, ஆனால் பரிபூரண மனிதராக இறக்க வேண்டியிருந்தது. ஆதாம், தான் செய்யவிருந்த செயல் எவ்வளவு தவறானது என்பதையும் அதன் விளைவுகளையும் நன்கு அறிந்தும் வேண்டுமென்றே அப்பாவத்தை செய்தான் என்பதை ஞாபகம் வையுங்கள். ஆகவே இயேசு ‘கடைசி ஆதாமாகி,’ அந்தப் பாவத்தைப் போக்குவதற்கு யெகோவாவிற்கு உத்தமமாக நிலைத்திருக்கும் அறிவுப்பூர்வ, முதிர்ச்சிவாய்ந்த தீர்மானத்தை எடுக்க வேண்டியிருந்தது. (1 கொரிந்தியர் 15:45, 47) இவ்வாறு இயேசுவின் உத்தம வாழ்க்கை முழுவதும்—அவரது பலிக்குரிய மரணமும்கூட—‘ஒரே நீதியான செயலாக’ சேவித்தது.—ரோமர் 5:18, 19.