Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 38

12 வேவுகாரர்கள்

12 வேவுகாரர்கள்

இந்த ஆட்கள் சுமந்து கொண்டிருக்கிற பழங்களைப் பார். அட, அந்தத் திராட்சக்குலை எவ்வளவு பெரியதாக இருக்கிறது! இரண்டு ஆட்கள் அதை ஒரு நீளமான கம்பில் வைத்து தூக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது! அந்த அத்திப் பழங்களையும் மாதுளம் பழங்களையும் பார். இந்த அழகிய பழங்களை எங்கிருந்து கொண்டு வந்திருக்கிறார்கள்? கானான் தேசத்திலிருந்தே கொண்டு வந்திருக்கிறார்கள். ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் ஒரு காலத்தில் வாழ்ந்த இடம்தான் கானான் என்பது உனக்கு நினைவிருக்கிறதா? அங்கே பஞ்சம் ஏற்பட்டதால் யாக்கோபு தன் குடும்பத்துடன் எகிப்துக்குக் குடிமாறி போனார். இப்பொழுது, ஏறக்குறைய 216 ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரவேலரைத் திரும்ப கானானுக்கு மோசே வழிநடத்திக் கொண்டு போகிறார். வனாந்தரத்தில் காதேஸ் என்ற இடத்திற்கு அவர்கள் இப்போது வந்து சேர்ந்திருக்கிறார்கள்.

கானான் தேசத்தில் கெட்ட ஜனங்கள் வாழ்கிறார்கள். அதனால் மோசே 12 வேவுகாரர்களை அனுப்புகிறார். அவர்களிடம் இவ்வாறு சொல்கிறார்: ‘அங்கே எவ்வளவு ஜனங்கள் வாழ்கிறார்கள், அவர்கள் எந்தளவு பலமுள்ளவர்கள் என்பதைக் கண்டுபிடியுங்கள். பயிர் செய்ய நிலம் நல்லதாக இருக்கிறதா என்றும் பாருங்கள். அந்தத் தேசத்தின் பழங்களில் சிலவற்றைக் கட்டாயம் எடுத்துக்கொண்டு வாருங்கள்.’

இந்த வேவுகாரர்கள் காதேசுக்குத் திரும்பி வந்ததுமே மோசேயிடம்: ‘நிஜமாகவே அது அருமையான ஒரு தேசம்’ என்கிறார்கள். இதை நிரூபிக்க அதன் பழங்களில் சிலவற்றை மோசேயிடம் காட்டுகிறார்கள். ஆனால் அந்த வேவுகாரர்களில் 10 பேர்: ‘அங்கே வாழும் ஜனங்கள் தடித்தவர்களாகவும் பலவான்களாகவும் இருக்கிறார்கள். அந்தத் தேசத்தைப் பிடிக்க முயன்றால் நாம் கொல்லப்படுவோம்’ என்கிறார்கள்.

இதைக் கேட்டதும் இஸ்ரவேலர் பயப்படுகிறார்கள். ‘அவர்கள் கையால் சாகிறதைவிட எகிப்திலேயே செத்திருந்தால் எவ்வளவோ மேலாக இருந்திருக்கும், இல்லையென்றால் இங்கே இந்த வனாந்தரத்தில் சாவது எவ்வளவோ மேல்’ என்கிறார்கள். ‘போரில் நாங்கள் செத்துவிடுவோம், எங்கள் மனைவிகளையும் பிள்ளைகளையும் சிறைபிடித்துக் கொண்டுபோய் விடுவார்கள். அதனால் மோசேக்குப் பதிலாக ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு எகிப்துக்கே போய்விடலாம் வாருங்கள்!’ என்கிறார்கள்.

ஆனால் அந்த வேவுகாரர்களில் இருவர் மட்டும் யெகோவாவில் நம்பிக்கை வைத்து, ஜனங்களை அமைதிப்படுத்த முயலுகிறார்கள். அவர்களில் ஒருவர் யோசுவா, மற்றொருவர் காலேப். அவர்கள் ஜனங்களைப் பார்த்து: ‘பயப்படாதேயுங்கள், யெகோவா நம்முடன் இருக்கிறார். அந்தத் தேசத்தை எளிதாக கைப்பற்றி விடலாம்’ என்கிறார்கள். ஆனால் அந்த ஜனங்கள் கேட்கவே இல்லை. அதுமட்டுமா, யோசுவாவையும் காலேபையும் கொல்லவும்கூட நினைக்கிறார்கள்.

இதனால் யெகோவா மிகுந்த கோபமடைந்து: ‘இந்த ஜனங்களில் 20 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுள்ள யாருமே கானான் தேசத்துக்குள் போகப் போவதில்லை. எகிப்திலும் வனாந்தரத்திலும் நான் செய்த அற்புதங்களை பார்த்தும்கூட அவர்கள் என்னை நம்பவில்லை. அதனால் இவர்களில் கடைசி ஆள் சாகும் வரை, 40 ஆண்டுகளுக்கு வனாந்தரத்தில் அலைந்து திரிவார்கள். யோசுவாவும் காலேபும் மாத்திரமே கானான் தேசத்துக்குள் செல்வார்கள்’ என்று மோசேயிடம் சொல்கிறார்.