Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பணம்—நிஜ சந்தோஷத்தைத் தருமா?

பணம்—நிஜ சந்தோஷத்தைத் தருமா?

பணம்—நிஜ சந்தோஷத்தைத் தருமா?

சான்யா ஸ்பெயின் நாட்டில் பிறந்தவர். சிறு வயதில் அவர் தன் அம்மாவோடுகூட யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்குச் சென்றார். ஆனால், வளர்ந்த பிறகு இங்கிலாந்திலுள்ள லண்டன் நகருக்குச் சென்றார்; பிற்பாடு, அங்கே ஒரு ஃபைனான்ஸ் நிறுவனத்தில் வேலைபார்க்க ஆரம்பித்தார்.

சான்யா தன் வேலையை உயிரினும் மேலாகக் கருதினார். அவர் கைநிறைய சம்பாதித்தார், வாடிக்கையாளர்களோடு கொடுக்கல் வாங்கல் விஷயங்களைக் கவனிக்க வேண்டியிருந்ததால் எக்கச்சக்கமான பணம் அவர் கையில் புழங்கியது. அது அவருக்குப் பெருமையாக இருந்தது, அதோடு, தன் வேலையில் திறமைசாலியாகவும் ஆனார். அவர் தினமும் 18 மணிநேரம் வேலை பார்த்தார்; சில நாட்களில் இரண்டு அல்லது மூன்று மணிநேரமே அவரால் தூங்க முடிந்தது. வேலையே கதி என்று கிடந்தார். திடீரென ஒருநாள் அவருடைய வாழ்க்கையே தலைகீழாகிவிட்டது. அவர் பக்கவாதத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்; ஓய்வொழிச்சல் இல்லாமல் எப்போதும் வேலை வேலையென்று கிடந்ததால் ஏற்பட்ட பாதிப்பாக அது இருக்கலாம். 30 வயதிலேயே இந்தக் கதி!

அவரது உடலின் ஒரு பக்கம் செயலற்று போனது; அவருக்கு மீண்டும் பேச்சு வருவது சந்தேகம் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். அவரைப் பார்த்துக்கொள்வதற்காக, அவருடைய அம்மா உடனே இங்கிலாந்திற்கு விரைந்தார். சான்யா மீண்டும் நடக்க ஆரம்பித்தபோது அம்மா அவரிடம், “நான் சபைக் கூட்டங்களுக்குப் போகிறேன். உன்னை இங்கு தனியாக விட்டுவிட்டு போக முடியாது. அதனால் நீயும் என்கூட வர வேண்டும்” என்றார். சான்யா அதற்குச் சம்மதித்தார். அதன் பலன்?

“நான் கேட்ட விஷயங்கள் எல்லாம் உண்மையென மனதுக்குப் பட்டது. அது அருமையாக இருந்தது. நான் ராஜ்ய மன்றத்துக்கு முதன்முறை போனபோது என்னை வரவேற்றவர்களில் ஒருவரோடு பைபிள் படிக்க ஒத்துக்கொண்டேன். முன்பு என்னோடு பழகியவர்கள் எல்லாரும் என்னைப் பார்க்க வருவதை நிறுத்திவிட்டார்கள்; ஆனால், என்னுடைய புதிய நண்பர்கள் ரொம்ப அன்பானவர்கள், என்னை நன்கு கவனித்துக்கொண்டார்கள்” என்கிறார் சான்யா.

அவருக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பேச்சு வர ஆரம்பித்தது. அதோடு, நன்கு பைபிள் படித்து விரைவாக முன்னேறினார். ஒரு வருடத்திற்குள்ளாகவே ஞானஸ்நானம் பெற்றார். அவருடைய புதிய நண்பர்களில் பலரும் முழுநேர ஊழியம் செய்பவர்கள்; அவர்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதை அவரால் காண முடிந்தது. ‘நானும் அவர்களைப்போல் சந்தோஷமாக இருக்க வேண்டும். யெகோவா தேவனுக்கு என்னால் முடிந்ததையெல்லாம் செய்ய வேண்டும்’ என்று அவர் நினைத்தார். இப்போது அவர் முழுநேர ஊழியம் செய்து வருகிறார்.

சான்யா தன்னுடைய அனுபவத்திலிருந்து என்ன கற்றுக்கொண்டார்? “நான் கைநிறைய சம்பாதித்தது உண்மைதான். ஆனாலும், வேலையில் டென்ஷனும் வேலை பறிபோய்விடுமோ என்ற பயமும் சேர்ந்து என் நிம்மதியையும் சந்தோஷத்தையும் பறித்தன. பரலோகத் தகப்பனான யெகோவாவுடன் நல்ல பந்தம் வைத்திருப்பதே வாழ்க்கையில் மிக முக்கியமானது என்பதை உணர ஆரம்பித்தேன். இப்போது நான் நிஜமாகவே சந்தோஷமாக இருக்கிறேன்” என்று அனுபவப்பூர்வமாகச் சொல்கிறார்.

“பண ஆசை எல்லா விதமான தீமைக்கும் வேராக இருக்கிறது; சிலர் இந்த ஆசையை வளர்த்துக்கொண்டு, விசுவாசத்தைவிட்டு விலகி, பலவித வேதனைகளால் தங்களையே ஊடுருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 தீமோத்தேயு 6:10) இந்த வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மையென சான்யாவால் சொல்ல முடியும். (w09 09/01)