Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் உங்களோடு தினமும் பேச நேரம் ஒதுக்குகிறீர்களா?

கடவுள் உங்களோடு தினமும் பேச நேரம் ஒதுக்குகிறீர்களா?

நீங்கள் எத்தனை முறை கண்ணாடியில் உங்களையே பார்க்கிறீர்கள்? நம்மில் பெரும்பாலோருக்கு இது அன்றாட பழக்கம்; ஒரு நாளில் பல முறைகூட பார்ப்போம். ஏன்? ஏனென்றால், நம்முடைய தோற்றத்தின் மீது நமக்கு அப்படியொரு அக்கறை!

பைபிள் வாசிப்பதை ஒரு கண்ணாடியில் பார்ப்பதற்கு ஒப்பிடலாம். (யாக்கோபு 1:23-25) பைபிளிலுள்ள கடவுளுடைய செய்தி, நாம் உண்மையில் எப்படிப்பட்டவர்களாய் இருக்கிறோம் என்பதைக் கண்டறிய நமக்கு உதவுகிறது. இது ‘அகத்தையும் புறத்தையும் . . . பிரிக்குமளவுக்கு ஊடுருவிச் செல்கிறது.’ (எபிரெயர் 4:12) வேறு வார்த்தைகளில் சொன்னால், நாம் வெளித் தோற்றத்திற்கு எப்படிப்பட்டவர்களாய் இருக்கிறோம் என்பதையும் உள்ளுக்குள் உண்மையில் எப்படிப்பட்டவர்களாய் இருக்கிறோம் என்பதையும் பிரித்துக் காட்டுகிறது. எதையெல்லாம் சரிசெய்ய வேண்டுமென்பதை ஒரு கண்ணாடி காட்டுவது போலவே நாம் என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்பதை பைபிளும் காட்டுகிறது.

பைபிள், நாம் செய்ய வேண்டிய மாற்றங்களைக் காட்டுவதோடு, அவற்றைச் செய்வதற்கும் உதவுகிறது. “வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியினால் அருளப்பட்டிருக்கின்றன. அவை கற்பிப்பதற்கும், கடிந்துகொள்வதற்கும், காரியங்களைச் சரிசெய்வதற்கும், கடவுளுடைய நீதிநெறியின்படி கண்டித்துத் திருத்துவதற்கும் பிரயோஜனமுள்ளவையாக இருக்கின்றன” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (2 தீமோத்தேயு 3:16, 17) இங்கு விளக்கப்பட்டிருக்கும் நான்கு பயன்களைக் கவனியுங்கள்; அவற்றுள், கடிந்துகொள்வது, காரியங்களைச் சரிசெய்வது, கண்டித்துத் திருத்துவது ஆகிய மூன்றும் நம்முடைய மனப்பான்மையிலும் செயல்களிலும் செய்ய வேண்டிய மாற்றங்களோடு சம்பந்தப்பட்டவை. நம்முடைய தோற்றம் நன்றாக இருக்கிறதா என்பதை அறிய தவறாமல் கண்ணாடியைப் பார்க்கிறோமென்றால், பைபிளிலுள்ள கடவுளுடைய வார்த்தையை தவறாமல் படிப்பது அதைவிட எவ்வளவு முக்கியம்!

கடவுளாகிய யெகோவா இஸ்ரவேல் மக்களை வழிநடத்துவதற்கு யோசுவாவை நியமித்தபோது அவரிடம் இவ்வாறு சொன்னார்: “இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.” (யோசுவா 1:8) ஆம், யோசுவா தன்னுடைய பொறுப்பைச் சரிவர செய்வதற்கு, கடவுளுடைய வார்த்தையைத் தவறாமல் “இரவும் பகலும்” வாசிக்க வேண்டியிருந்தது.

முதலாம் சங்கீதமும், பைபிளைத் தவறாமல் வாசிப்பதன் நன்மைகளைச் சிறப்பித்துக் காட்டுகிறது. அது இவ்வாறு குறிப்பிடுகிறது: “துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.” (சங்கீதம் 1:1-3) அப்படிப்பட்ட நபராக இருக்கவே நாம் விரும்புவோம், அல்லவா?

அநேகர் பைபிளைத் தினமும் வாசிப்பதைப் பழக்கமாக்கியிருக்கிறார்கள். தினமும் பைபிள் வாசிப்பதற்கான காரணத்தை ஒரு கிறிஸ்தவரிடம் கேட்டபோது அவர் அளித்த பதில் இதுதான்: “ஒரு நாளில் நான் அடிக்கடி செய்கிற ஜெபங்களை கடவுள் கேட்டு பதிலளிக்க வேண்டுமென நான் எதிர்ப்பார்க்கிறேன்; அப்படியிருக்கையில், அவருடைய வார்த்தையைத் தினமும் வாசிப்பதன் மூலம் அவர் சொல்வதை நான் கேட்க வேண்டாமா? நாம் ஒரு நல்ல நண்பராக இருக்க விரும்பினால், நாமே பேசிக்கொண்டிருக்க மாட்டோம், அல்லவா?” அவருடைய குறிப்பு இதுதான்: பைபிளை வாசிப்பது, கடவுள் சொல்வதைச் செவிகொடுத்து கேட்பதைப் போன்றது; அப்படிச் செய்கையில், கடவுளுடைய கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.

சவாலைச் சமாளித்தல்

ஒருவேளை, பைபிளை வாசிக்க ஆரம்பிப்பதற்கு நீங்கள் ஏற்கெனவே முயன்றிருக்கலாம். முழு பைபிளையும் வாசித்து முடித்துவிட்டீர்களா? பைபிள் விஷயங்களை நன்கு தெரிந்துவைத்திருப்பதற்கு அது மிகச் சிறந்த வழியாகும். என்றாலும் சிலர், பைபிளை முழுமையாக வாசிப்பதற்குப் பல முறை முயன்றிருக்கிறார்கள், ஆனால் இடையில் நிறுத்திவிட்டிருக்கிறார்கள். இதுபோன்ற சவாலை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா? முழு பைபிளையும் வாசித்து முடிக்க வேண்டுமென்ற இலக்கை அடைய நீங்கள் என்ன செய்யலாம்? பின்வரும் இரண்டு ஆலோசனைகளைப் பின்பற்றிப் பாருங்கள்.

உங்களுடைய அன்றாட வேலைகளோடு பைபிள் வாசிப்புக்கும் அட்டவணை போடுங்கள். ஒவ்வொரு நாளும் பைபிளை வாசிப்பதற்கு மிகவும் வசதியான ஒரு நேரத்தைத் தேர்ந்தெடுங்கள். தேவைப்பட்டால், மற்றொரு சமயத்தையும் திட்டமிடுங்கள். ஏதோவொரு காரணத்தினால் நீங்கள் திட்டமிட்ட நேரத்தில் பைபிளை வாசிக்க முடியாமல் போகுமானால் நீங்கள் தேர்ந்தெடுத்த மற்றொரு சமயத்தைப் பயன்படுத்துங்கள்; அப்போதுதான் ஒரு நாள்கூட விடாமல் தினமும் வாசிக்க முடியும். இப்படிச் செய்தால், முற்கால பெரோயா நகரத்து மக்களின் முன்மாதிரியைப் பின்பற்றுவீர்கள். “கடவுளுடைய வார்த்தைகளை அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டு, அவையெல்லாம் சரிதானா என்று தினந்தோறும் வேதவசனங்களைக் கவனமாக ஆராய்ந்து பார்த்தார்கள்” என்று அவர்களைப் பற்றி பைபிள் சொல்கிறது.—அப்போஸ்தலர் 17:11.

திட்டவட்டமான இலக்கை மனதில் வைத்து வாசியுங்கள். உதாரணமாக, மூன்று முதல் ஐந்து அதிகாரங்களைத் தினமும் வாசித்தால் ஒரு வருடத்தில் முழு பைபிளையும் வாசித்துவிடலாம். இதை எப்படிச் செய்யலாம் என்பதற்கு பின்வரும் பக்கங்களில் ஒரு பட்டியல் போடப்பட்டுள்ளது. ஒரு தீர்மானம் எடுத்து இந்தப் பட்டியலின்படி பைபிள் வாசிக்க முயன்று பார்க்கலாம், அல்லவா? “தேதி” என்ற தலைப்பின் கீழ் பைபிள் அதிகாரங்களின் ஒவ்வொரு தொகுப்பையும் எப்போது வாசிக்கப் போகிறீர்கள் என்பதைக் குறிப்பிடுங்கள். அவற்றை வாசித்த பிறகு, அங்கு கொடுக்கப்பட்டுள்ள பெட்டியில் ‘டிக்’ செய்யுங்கள். அப்படிச் செய்வது, நீங்கள் எந்தளவு வாசித்து முடித்திருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்ள உதவும்.

நீங்கள் முழு பைபிளையும் வாசித்து முடித்த பிறகு, நிறுத்திவிட வேண்டுமா? ஒவ்வொரு வருடமும் அவ்வாறு வாசிப்பதற்கு இதே போல் அட்டவணை போடலாம்; ஒருவேளை, ஒவ்வொரு முறையும் வெவ்வேறு புத்தகங்களிலிருந்து துவங்கலாம். அல்லது, மெதுவாக வாசித்து முடிக்க விரும்பினால், பட்டியலில் குறிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை வாசிப்பதற்கு இரண்டு மூன்று நாட்கள் எடுத்துக்கொள்ளலாம்.

ஒவ்வொரு முறையும் நீங்கள் பைபிளை வாசிக்கும்போது, நீங்கள் இதுவரை கவனித்திராத, உங்களுடைய வாழ்க்கைக்குப் பொருந்துகிற புதுப்புது விஷயங்களைக் கவனிப்பீர்கள். ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஏனெனில், “இந்த உலகத்தின் காட்சி மாறிக்கொண்டே இருக்கிறது”; வாழ்க்கையில் நம்முடைய சூழ்நிலைகளும்கூட மாறிக்கொண்டே இருக்கின்றன. (1 கொரிந்தியர் 7:31) அப்படியானால், கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் எனும் கண்ணாடியைத் தினமும் பார்ப்பதை உங்களுடைய திடத் தீர்மானமாக்கிக் கொள்ளுங்கள். இப்படிச் செய்யும்போது, கடவுள் தினமும் உங்களோடு பேசுகிறார் என்பதில் நிச்சயமாய் இருக்கலாம்.சங்கீதம் 16:8. (w09 08/01)