Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“கடவுளை அறிந்திருக்கிறீர்கள்”—இப்போது என்ன செய்ய வேண்டும்?

“கடவுளை அறிந்திருக்கிறீர்கள்”—இப்போது என்ன செய்ய வேண்டும்?

“நீங்கள் கடவுளை அறிந்திருக்கிறீர்கள்.”—கலா. 4:9.

1. விமானம் கிளம்புவதற்கு முன் அதன் விமானி ஏன் பட்டியலைச் சரிபார்க்க வேண்டும்?

 ஒரு விமானம் கிளம்புவதற்கு முன் அதன் விமானி ஒரு பட்டியலைப் பார்வையிட வேண்டும். அதிலுள்ள 30-க்கும் மேலான விஷயங்களைச் சரிபார்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் அவற்றைக் கவனமாகச் சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் விபத்து ஏற்பட வாய்ப்புண்டு. முக்கியமாக யார் இந்த விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், தெரியுமா? அனுபவமிக்க விமானிகள்தான். ஏனென்றால், அவர்கள் தங்களுக்கு எல்லாம் தெரியும் என நினைத்துக்கொண்டு பட்டியலிலுள்ள ஒவ்வொன்றையும் நுணுக்கமாகச் சரிபார்க்காமல் இருந்துவிடலாம்.

2. கிறிஸ்தவர்கள் என்ன பட்டியலைச் சரிபார்க்க வேண்டும்?

2 ஜாக்கிரதையாக இருக்கும் ஒரு விமானி பட்டியலிலுள்ள விஷயங்களைச் சரிபார்ப்பது போல நீங்களும் ஒரு பட்டியலைச் சரிபார்க்க வேண்டும். உங்கள் விசுவாசம் ஆட்டங்காணாமல் இருக்க அது கைகொடுக்கும். நீங்கள் சமீபத்தில் ஞானஸ்நானம் எடுத்திருந்தாலும் சரி பல வருடங்களுக்கு முன் ஞானஸ்நானம் எடுத்திருந்தாலும் சரி, யெகோவாமீது உங்களுக்கு எந்தளவு விசுவாசமும் பக்தியும் இருக்கிறது என்பதை அடிக்கடி பரிசோதித்து பார்ப்பது முக்கியம். இதைத் தவறாமல், கவனமாகச் சரிபார்க்கவில்லை என்றால் ஆன்மீக விபத்து ஏற்பட்டுவிடும். “நிற்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறவன் விழுந்துவிடாதபடி ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்” என்று பைபிள் நம்மை எச்சரிக்கிறது.—1 கொ. 10:12.

3. கலாத்திய கிறிஸ்தவர்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது?

3 கலாத்திய கிறிஸ்தவர்கள் தங்களுக்கு எந்தளவு விசுவாசம் இருக்கிறது என்பதைச் சரிபார்க்க வேண்டியிருந்தது. அதோடு, ஆன்மீக ரீதியில் பெற்ற விடுதலைக்காகவும் போற்றுதல் காட்ட வேண்டியிருந்தது. ஆம், அவர்கள் இயேசுவின் பலியில் விசுவாசம் வைப்பதன் மூலம் கடவுளைப் புதிய கோணத்தில் அறிந்துகொள்ள முடியும்; அதன் மூலம் கடவுளுடைய மகன்களாக முடியும்! (கலா. 4:9) மிகவும் விசேஷமான இந்தப் பந்தத்தில் நிலைத்திருக்க, அவர்கள் யூத மதத்தினரின் போதனைகளை விட்டுவிட வேண்டும். ஏனென்றால் யூத மதத்தினர் திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் விடாப்பிடியாய் இருந்தனர். ஆனால், கலாத்திய கிறிஸ்தவர்கள் மத்தியில் விருத்தசேதனம் செய்யப்படாத புறதேசத்தாரும் இருந்தார்கள். அவர்கள் திருச்சட்டத்தைக் கடைபிடித்ததே கிடையாது. யூதர்கள், புறதேசத்தார் ஆகிய இருவருமே ஆன்மீக ரீதியில் முன்னேற வேண்டியிருந்தது. அப்படியானால், திருச்சட்டத்தின் மூலம் தங்களை நீதிமான்களாக்க முடியாது என்பதை யூத கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.

கடவுளை அறிந்துகொள்ள முதற்கட்ட படிகள்

4, 5. கலாத்திய கிறிஸ்தவர்களுக்கு பவுல் என்ன ஆலோசனை கொடுத்தார், இது நமக்கு ஏன் முக்கியம்?

4 கலாத்திய கிறிஸ்தவர்கள், அருமையான பைபிள் சத்தியங்களை விட்டுவிட்டு தாங்கள் உதறித் தள்ளிய விஷயங்களுக்குத் திரும்பிச் செல்லாமல் இருப்பதற்காகவே அப்போஸ்தலன் பவுல் அந்த ஆலோசனையைக் கொடுத்தார். யெகோவாவின் சக்தியால் தூண்டப்பட்டு கலாத்திய கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் கொடுத்த அந்த ஆலோசனை, யெகோவாவை வணங்கும் எல்லோருக்கும் பொருந்தும். எல்லோரும் விசுவாசத்தில் உறுதியாய் இருக்க இது உதவும்.

5 நாம் எல்லோருமே ஆன்மீக அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று, ஒரு யெகோவாவின் சாட்சியானது எப்படியென யோசித்துப் பார்ப்பது நல்லது. அதற்கு உதவும் இரண்டு கேள்விகளைச் சிந்தித்துப் பாருங்கள்: ஞானஸ்நானம் பெறுவதற்கு எடுத்த படிகள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? கடவுளை எப்படி அறிந்துகொண்டீர்கள், அவரால் அறியப்படும்போது எப்படி உணர்ந்தீர்கள் என்று நினைவிருக்கிறதா?

6. எந்தப் பட்டியலைப் பற்றி நாம் சிந்திக்கப் போகிறோம்?

6 நாம் எல்லோருமே ஒன்பது படிகளை எடுத்திருக்கிறோம். என்னென்ன படிகள்?  “ஞானஸ்நானம் பெறுவதற்கு எடுத்த படிகள் தொடர்ந்து முன்னேற உதவும்” என்ற பெட்டியைப் பாருங்கள். ஆன்மீகப் பட்டியலில் இருக்கும் இந்த ஒன்பது படிகளையும் தவறாமல் நினைத்துப் பார்ப்பது உலக காரியங்களிடம் திரும்பிவிடாதபடி நம் விசுவாசத்தைப் பலப்படுத்தும். அனுபவமுள்ள, அதே சமயத்தில் ஜாக்கிரதையாக இருக்கும் ஒரு விமானி முதலில் பட்டியலைச் சரிபார்த்து, பிறகு விமானத்தை ஓட்டுவது பாதுகாப்பாக இருக்கும். அதுபோல ஆன்மீகப் பட்டியலைச் சரிபார்ப்பது, தொடர்ந்து யெகோவாவை உண்மையோடு சேவிக்க உங்களுக்கு உதவும்.

கடவுளால் அறியப்படுகிறவர்கள் சத்தியத்தில் முன்னேறுவார்கள்

7. நாம் எந்த மாதிரியைப் பின்பற்ற வேண்டும், ஏன்?

7 விமானம் கிளம்புவதற்கு முன் ஒவ்வொரு முறையும் பட்டியலைக் கவனமாகச் சரிபார்ப்பது ஒரு விமானிக்கு பழக்கமாகிவிட வேண்டும். அதேபோல், நாமும் ஞானஸ்நானம் எடுத்தது முதற்கொண்டு செய்துவரும் காரியங்களைத் தொடர்ந்து செய்கிறோமா என தவறாமல் சரிபார்க்க வேண்டும். தீமோத்தேயுவுக்கு பவுல் இப்படி எழுதினார்: “என்னிடமிருந்து நீ கேட்டறிந்த பயனளிக்கும் வார்த்தைகளை மாதிரியாக வைத்து பின்பற்றிக்கொண்டே இரு; கிறிஸ்து இயேசு மீதுள்ள விசுவாசத்தினாலும் அன்பினாலும் அப்படிச் செய்.” (2 தீ. 1:13) இந்த “பயனளிக்கும் வார்த்தைகளை” பைபிளில் பார்க்கலாம். (1 தீ. 6:3) ஒரு ஓவியர் படத்தின் உருவக் கோடுகளை வரைய ஆரம்பித்தவுடனே அது என்ன படம் என்று நமக்குப் புரிந்துவிடும். அதேபோல், ‘சத்தியத்தின் மாதிரியை’ வைத்து பொதுவாக யெகோவா நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும், அதைக் கடைப்பிடிக்கவும் முடியும். ஆகவே, ஞானஸ்நானத்திற்காக நாம் எடுத்த படிகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்; அதோடு, சத்தியத்தின் மாதிரியை எந்தளவுக்கு நெருங்கப் பின்பற்றுகிறோம் என்றும் ஆராய்ந்து பார்க்கலாம்.

8, 9. (அ) விசுவாசத்திலும் அறிவிலும் நாம் ஏன் தொடர்ந்து வளர வேண்டும்? (ஆ) ஆன்மீக வளர்ச்சியின் முக்கியத்துவத்தையும் தொடர்ந்து வளருவதன் அவசியத்தையும் உதாரணத்துடன் விளக்குங்கள்.

8 நம் பட்டியலில் இருக்கிற முதல் விஷயம் அறிவைப் பெறுவது. அப்போதுதான் நம் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள முடியும். இந்த இரண்டு விஷயங்களிலும் நாம் தொடர்ந்து வளர வேண்டும். (2 தெ. 1:3) இதற்குப் படிப்படியாக பல மாற்றங்கள் செய்ய வேண்டும். ஆகவே, ஆன்மீக ரீதியில் வளர்ச்சி குன்றிவிடாமல் இருக்க, ஞானஸ்நானத்திற்குப் பிறகும் நாம் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும்.

ஒரு மரம் வளர்ந்துகொண்டே இருப்பது போல கிறிஸ்தவர்களும் சத்தியத்தில் வளர்ந்துகொண்டே இருக்க வேண்டும்

9 நம் ஆன்மீக வளர்ச்சியை ஒரு மரத்தின் வளர்ச்சியோடு ஒப்பிடலாம். ஒரு மரத்தின் வேர்கள் ஆழமாகவும், நாலா பக்கம் பரவியும் இருந்தால் அந்த மரம் நெடுநெடுவென வளரும். உதாரணமாக, லெபனானிலுள்ள சில கேதுரு மரங்கள் 12 மாடி கட்டிடம் அளவுக்கு உயரமாக வளரும். அதன் வேர்கள் உறுதியாகவும் மிக ஆழமாகவும் இருக்கும்; அடிமரத்தின் சுற்றளவு 40 அடி (12 மீ.) இருக்கும். (உன். 5:15) இந்த மரம் ஆரம்பத்தில் படுவேகமாக வளருவதைப் பார்க்க முடியும்; அதன் பிறகும் வளர்ந்துகொண்டுதான் இருக்கும், ஆனால், வெளிப்படையாகத் தெரிவதில்லை. வருடங்கள் செல்லச் செல்ல அடிமரம் பெரிதாகிறது, வேர்கள் ஆழமாகவும் விரிவாகவும் ஊடுருவிச் செல்கின்றன. இதனால் மரம் மிகவும் உறுதியாகிறது. கிறிஸ்தவர்களின் ஆன்மீக வளர்ச்சியும் அப்படித்தான். நாம் பைபிளைப் படிக்க ஆரம்பித்தபோது வேகமாக முன்னேற்றம் செய்து ஞானஸ்நானம் பெற்றிருப்போம். சபையாரும் நம்முடைய முன்னேற்றத்தை பார்த்து சந்தோஷப்பட்டிருப்பார்கள். ஒரு பயனியராகக்கூட ஆகியிருப்போம், அல்லது வேறு பொறுப்புகளைப் பெற்றிருப்போம். வருடங்கள் செல்லச் செல்ல நாம் முன்னேறிக்கொண்டுதான் இருப்போம்; ஆனால், மற்றவர்களுக்கு அது வெளிப்படையாகத் தெரியாது. இருந்தாலும், “கிறிஸ்து எந்தளவுக்கு முதிர்ச்சி நிறைந்தவராக இருக்கிறாரோ அந்தளவுக்கு நாம் முழு வளர்ச்சி அடைவதற்காக” விசுவாசத்திலும் அறிவிலும் தொடர்ந்து முன்னேற வேண்டும். (எபே. 4:13) அப்போது, சிறியதாக முளைத்து உயரமாக, உறுதியாக வளரும் ஒரு மரத்தைப் போல் முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவராவோம்.

10. முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களும் ஏன் முன்னேற்றம் செய்ய வேண்டும்?

10 ஆனால் நம் வளர்ச்சி அதோடு நின்றுவிடக் கூடாது. நம் அறிவு விரிவடைய வேண்டும், நம் விசுவாசம் ஆழமாக வேண்டும். அப்போது, கடவுளுடைய வார்த்தையாகிய நிலத்தில் நங்கூரம்போல் அசையாமல் உறுதியாய் நிலைத்திருப்போம். (நீதி. 12:3) இப்படி உறுதியாய் நிலைத்திருக்கும் சகோதர சகோதரிகள் கிறிஸ்தவ சபையில் நிறைய பேர் இருக்கிறார்கள். உதாரணமாக, 30 வருடங்களுக்கும் மேலாக மூப்பராகச் சேவைசெய்யும் ஒரு சகோதரர் இன்னும் முன்னேற்றம் செய்துகொண்டிருப்பதாகச் சொல்கிறார். “பைபிள் மேல இருக்கிற மதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கிட்டே இருக்கு. இன்னும் என்னென்ன சூழ்நிலைகள்ல பைபிள் நியமங்களையும் கட்டளைகளையும் பின்பற்றலாம்னு கத்துக்கிட்டே இருக்கேன். இன்னும் ஆர்வமா ஊழியம் செய்றேன்” என்று சொல்கிறார்.

கடவுளோடுள்ள நட்பில் வளருங்கள்

11. யெகோவாவை நாம் எப்படி அறிந்துகொண்டே இருக்கலாம்?

11 ஆன்மீக ரீதியில் வளருவதற்கு நம் நண்பரும் தகப்பனுமாகிய யெகோவாவிடம் அதிகமாக நெருங்கி வர வேண்டும். அவருடைய அன்பும் அரவணைப்பும் நமக்கு இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டுமென அவர் விரும்புகிறார். அப்பாவின் அரவணைப்பில் இருக்கும் ஒரு பிள்ளையைப் போல் அல்லது உயிர் நண்பரின் தோழமைவை அனுபவிக்கும் ஒரு நபரைப் போல் நாமும் உணர வேண்டுமென விரும்புகிறார். யெகோவாவோடுள்ள இந்தப் பிணைப்பு ஒரே நாளில் வந்துவிடாது. அவரை அறியவும் நேசிக்கவும் காலம் எடுக்கும். ஆகவே, அவரை நன்கு அறிந்துகொள்ள, அவருடைய வார்த்தையை தினமும் படியுங்கள். அதற்காக நேரம் ஒதுக்குங்கள். காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளையும் மற்ற பைபிள் பிரசுரங்களையும் ஒன்றுவிடாமல் வாசியுங்கள்.

12. யெகோவாவால் அறியப்பட நாம் என்ன செய்ய வேண்டும்?

12 கடவுளுடைய நண்பர்கள் உள்ளப்பூர்வமாக ஜெபம் செய்வதன் மூலமும் நல்ல ஆட்களோடு சகவாசம் வைப்பதன் மூலமும் ஆன்மீக ரீதியில் முன்னேறலாம். (மல்கியா 3:16-ஐ வாசியுங்கள்.) யெகோவாவுடைய “காதுகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன.” (1 பே. 3:12) அன்பான ஓர் அப்பாவைப் போல யெகோவா நம் கூக்குரலைக் காதுகொடுத்துக் கேட்கிறார். ஆகவே, நாம் ‘ஜெபத்தில் உறுதியாயிருக்க’ வேண்டும். (ரோ. 12:12) கடவுளுடைய உதவியில்லாமல் நாம் ‘முழு வளர்ச்சியடைந்த’ கிறிஸ்தவர் ஆக முடியாது. சூறாவளியாய் தாக்கும் பிரச்சினைகளை நம் சொந்த பலத்தால் சமாளிக்க முடியாது. அதை எதிர்க்கும் பலத்தை தர கடவுளால் மட்டும்தான் முடியும். அதைத் தர அவருக்கு விருப்பமும் இருக்கிறது. நாம் ஜெபம் செய்வதை நிறுத்திவிட்டால், அவர் தரும் பலத்தைப் பெற முடியாது. அப்படியானால், ஒரு நெருங்கிய நண்பரிடம் பேசுவதுபோல் யெகோவாவிடம் ஜெபம் செய்கிறீர்களா, இல்லை, உங்களுடைய ஜெபத்தில் முன்னேற்றம் செய்ய வேண்டியிருக்கிறதா?—எரே. 16:19.

13. ஆன்மீக வளர்ச்சிக்கு சக கிறிஸ்தவர்களுடன் நேரம் செலவிடுவது ஏன் முக்கியம்?

13 ‘தம்மீது நம்பிக்கை வைப்பவர்களிடம்’ யெகோவா பிரியமாய் இருக்கிறார். ஆகவே, அவரை ஏற்கெனவே அறிந்திருக்கிற நாம், அவரை அறிந்திருக்கிற மற்றவர்களுடன் தொடர்ந்து கூட்டுறவுகொள்ள வேண்டும். (நாகூ. 1:7) இந்த உலகில் நமக்கு அடிக்கடி மனச்சோர்வு ஏற்படுவதால், நம்மை உற்சாகப்படுத்தும் சகோதர சகோதரிகளுடன் கூட்டுறவுகொள்வது எவ்வளவு நல்லது! இந்தக் கூட்டுறவால் என்ன நன்மைகள்? “அன்பு காட்டவும் நற்செயல்கள் செய்யவும்” தூண்டுகிற சகோதர சகோதரிகளை சபையில் காணலாம். (எபி. 10:24, 25) பவுல் குறிப்பிட்டதுபோல் ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவதற்கு சகோதர கூட்டமாக, ஒருமனமுள்ள வணக்கத்தாராக, ஒரு சபையாக கூடிவருவது முக்கியம். அங்கே சகோதர சகோதரிகளோடு நேரம் செலவிட்டு அன்பைப் பரிமாற வேண்டும். ஆக, தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்கிறேனா, அதில் பங்குகொள்கிறேனா என்று உங்களுடைய ஆன்மீகப் பட்டியலில் சரிபார்க்க வேண்டும்.

14. தொடர்ந்து மனந்திரும்புவதும் மாற்றங்கள் செய்வதும் ஏன் முக்கியம்?

14 ஒரு கிறிஸ்தவராவதற்கு நாம் மனந்திரும்பி, பாவங்களை விட்டு விலக வேண்டியிருந்தது. என்றாலும், நாம் தொடர்ந்து மனந்திரும்ப வேண்டியிருக்கிறது. ஏனென்றால், நாம் அபூரணர்; பாவம் நம்மோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது. பாவம் ஒரு பாம்பைப் போன்றது. எந்த நேரத்திலும் தாக்கலாம். (ரோ. 3:9, 10; 6:12-14) ஆகவே, கவனமாக இருக்க வேண்டும்; நம் குறைகளைக் கண்டும்காணாமல் விட்டுவிடக் கூடாது. குறைகளை நீக்கி, தேவையான மாற்றங்களைச் செய்யப் பாடுபடும்போது யெகோவா நம்மிடம் பொறுமையோடிருக்கிறார். (பிலி. 2:12; 2 பே. 3:9) நம்முடைய நேரம், சக்தி எல்லாவற்றையும் சொந்த விஷயங்களுக்காக செலவிடாமல் யெகோவாவுக்காக செலவிட வேண்டும். ஒரு சகோதரி எழுதுகிறார்: “நான் சத்தியத்திலதான் வளர்ந்தேன். ஆனாலும், யெகோவாவ சரியா புரிஞ்சிக்கல. அவர் ரொம்ப பயங்கரமானவரு, என்னால நிச்சயமா அவர பிரியப்படுத்த முடியாதுன்னு நெனச்சேன்.” பிறகு, சில பிரச்சினைகளால் ஆன்மீக ரீதியில் தடுமாறினார். “யெகோவாவ நேசிக்காததுனால இல்ல, அவர சரியா புரிஞ்சிக்காததுனால அப்படித் தடுமாறுனேன். உதவிக்காக ஊக்கமா ஜெபம் செஞ்சேன், அப்புறம் என்னையே மாத்திக்கிட்டேன் . . . ஒரு சின்ன பிள்ளைய கைபிடிச்சு கூட்டிட்டு போற மாதிரி யெகோவா என்ன வழிநடத்துனாரு. பிரச்சினைகள ஒன்னொன்னா சமாளிக்க உதவுனாரு. நான் என்ன செய்யணுங்கிறத ரொம்ப பொறுமையா சொல்லி கொடுத்தாரு.”

15. யெகோவாவும் இயேசுவும் எதைக் கவனிக்கிறார்கள்?

15 நற்செய்தியை “மக்களிடம் பேசிக்கொண்டிருங்கள்.” பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் சிறையிலிருந்து அற்புதமாக விடுவிக்கப்பட்ட பிறகு கடவுளுடைய தூதன் அவர்களிடம் பேசிய வார்த்தைகள் அவை. (அப். 5:19-21) வாரந்தோறும் வெளி ஊழியத்தில் ஈடுபடுகிறோமா என்றும் பட்டியலில் சரிபார்க்க வேண்டும். யெகோவாவும் இயேசுவும் நம்முடைய விசுவாசத்தையும் ஊழியத்தையும் கவனிக்கிறார்கள். (வெளி. 2:19) மேலே பார்த்த அதே மூப்பர் சொல்வதுபோல், “நாம் செய்ய வேண்டிய மிக முக்கிய வேலை வெளி ஊழியம்தான்.”

16. யெகோவாவுக்கு அர்ப்பணித்ததைப் பற்றி நினைத்துப் பார்ப்பது ஏன் நல்லது?

16 யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்ததை நினைத்துப் பாருங்கள். யெகோவாவோடு நாம் வைத்திருக்கும் நல்லுறவுதான் நம்மிடமுள்ள மிகப் பெரிய சொத்து. அவருக்குச் சொந்தமானவர்களை அவர் அறிந்திருக்கிறார். (ஏசாயா 44:5-ஐ வாசியுங்கள்.) யெகோவாவுடன் எந்தளவுக்கு நல்லுறவு வைத்திருக்கிறோம் என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்; அதைப் பலப்படுத்த ஜெபம் செய்ய வேண்டும். நீங்கள் ஞானஸ்நானம் எடுத்தத் தேதியையும் நினைத்துப் பாருங்கள். அது, நீங்கள் எடுத்தத் தீர்மானங்களிலேயே மிக முக்கியமான தீர்மானம் என்பதை உங்களுக்கு நினைப்பூட்டும்.

யெகோவாவுடன் நெருங்கியிருக்க சகிப்புத்தன்மை தேவை

17. யெகோவாவுடன் நெருங்கியிருக்க சகிப்புத்தன்மை ஏன் அவசியம்?

17 கலாத்திய கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதத்தில் சகிப்புத்தன்மையின் அவசியத்தை பவுல் வலியுறுத்தினார். (கலா. 6:9) இன்றுள்ள கிறிஸ்தவர்களுக்கும் இது முக்கியம். கஷ்டங்கள் கண்டிப்பாக வரும், ஆனால் யெகோவா உங்களுக்கு உதவுவார். அவருடைய சக்திக்காக எப்போதும் ஜெபம் செய்யுங்கள். சஞ்சலத்தைச் சந்தோஷமாகவும் மன வேதனையை மன சமாதானமாகவும் அவர் மாற்றும்போது நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். (மத். 7:7-11) பறவைகள்மீதே யெகோவாவுக்கு அக்கறை இருக்கிறது என்றால் அவர்மீது அன்பு வைத்திருக்கிற, அவருக்காக அர்ப்பணித்திருக்கிற நம்மீது அக்கறை இருக்காதா? (மத். 10:29-31) என்ன பிரச்சினை வந்தாலும் மறுபடியும் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிப் போகாதீர்கள், நம்பிக்கையையும் இழந்துவிடாதீர்கள். யெகோவாவால் அறியப்பட்டிருக்கிறவர்களுக்குக் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் எத்தனை, எத்தனை!

18. ‘கடவுளை அறிந்திருக்கிற’ நீங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?

18 சமீபத்தில் யெகோவாவை அறிந்துகொண்டு ஞானஸ்நானம் எடுத்தவரா நீங்கள்? இப்போது என்ன செய்ய வேண்டும்? யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொண்டே இருங்கள், சத்தியத்தில் முதிர்ச்சி அடையுங்கள். நீங்கள் பல வருடங்களுக்கு முன் ஞானஸ்நானம் எடுத்தவரா? இப்போது என்ன செய்ய வேண்டும்? யெகோவாவைப் பற்றி இன்னும் ஆழமாக அறிந்துகொள்ள வேண்டும். அவரைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியுமென நினைத்துக்கொண்டு மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. நமது அன்பான அப்பாவும், நண்பரும், கடவுளுமான யெகோவாவிடம் தொடர்ந்து நல்லுறவை வளர்த்துக்கொள்வதற்காக ஆன்மீகப் பட்டியலை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும்.2 கொரிந்தியர் 13:5, 6-ஐ வாசியுங்கள்.