Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆறுதல் பெறுங்கள்—ஆறுதல் அளியுங்கள்

ஆறுதல் பெறுங்கள்—ஆறுதல் அளியுங்கள்

அபூரண மனிதர்களாக இருப்பதால் நாம் எல்லோரும் வியாதியால் அவதிப்படுகிறோம், சிலர் தீரா வியாதியால்கூட அவதிப்படுகிறார்கள். சவாலை சமாளிப்பது எப்படி?

குடும்ப உறவுகள், நண்பர்கள், சகோதர சகோதரிகள் என இவர்கள் தரும் ஆறுதலே பெரிதும் கைகொடுக்கும்.

ஒரு நண்பரின் கனிவான, அன்பான வார்த்தைகள் மயிலிறகால் வருடுவதைப் போல் இருக்கும், புதுத்தெம்பு அளிக்கும். (நீதி. 16:24; 18:24; 25:11) உண்மை கிறிஸ்தவர்கள் ஆறுதலை பெறுவதில் மட்டும் குறியாக இருப்பதில்லை. கடவுளிடமிருந்து ‘தாங்கள் பெற்று வருகிற ஆறுதலினால் எப்பேர்ப்பட்ட உபத்திரவத்தில் இருப்பவர்களுக்கும் அவர்கள் ஆறுதல் அளிக்க’ மனமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். (2 கொ. 1:4; லூக். 6:31) மெக்சிகோவில் மாவட்டக் கண்காணியாக சேவை செய்த அன்டோனியோ இதற்கு கண்கண்ட சாட்சி.

லிம்ஃபோமா எனும் இரத்தப் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தபோது அவர் அப்படியே உடைந்துபோய் விட்டார். இருந்தாலும், மனவேதனையை போக்க பெரும் முயற்சி செய்தார். என்ன செய்தார்? ஞாபகத்திலிருந்த ராஜ்ய பாடல்களைச் சத்தமாகப் பாடுவார். அதிலுள்ள வார்த்தைகளைத் தியானிப்பார். சத்தமாக ஜெபம் செய்வார். வாய்விட்டு பைபிளை வாசிப்பார். இதெல்லாம் அவருக்கு ஆறுதலை அள்ளித் தந்தன.

இதற்கும் ஒரு படி மேலாக சகோதர சகோதரிகள் அவருக்கு ஆறுதலின் ஊற்றாகத் திகழ்ந்தார்கள். “நானும் என் மனைவியும் அப்படியே சோர்ந்துபோய் உட்காரும்போது, சபைல மூப்பரா இருந்த எங்க சொந்தக்காரர் ஒருத்தர வரச்சொல்லி ஜெபம் செய்யச் சொல்லுவோம். அது ரொம்ப ஆறுதலா இருக்கும், மனசுக்கு இதமாவும் இருக்கும். குடுமபத்துல இருக்குறவங்களும் சகோதர சகோதரிகளும் நிறைய விதத்துல உதவுனாங்க. அதனாலதான், எங்களால இவ்வளோ சீக்கிரமா கவலைய மறக்க முடிஞ்சது” என்கிறார் அன்டோனியோ. நண்பர்கள் காட்டிய அன்புக்கும் அக்கறைக்கும் அவர் எவ்வளவு நன்றியுள்ளவராக இருந்திருப்பார்!

கடவுள் தம்முடைய சக்தியைத் தருவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். இது மற்றொரு உதவி. கடவுளுடைய சக்தியை ‘அன்பளிப்பு’ என்று பேதுரு சொன்னார். (அப். 2:38) கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளன்று இது உண்மையானது; அன்று அநேகர் கடவுளுடைய சக்தியால் நிரப்பப்பட்டார்கள். இந்த அன்பளிப்பு பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்கு மட்டும் அல்ல, எல்லோருக்கும் கிடைக்கும். இந்த அன்பளிப்பைக் கடவுள் வாரி வாரி இறைக்கிறார். அப்படியென்றால், அதை நாம் ஏன் தாராளமாகக் கேட்கக்கூடாது?—ஏசா. 40:​28-31.

அவதிப்படுவோர்மீது ஆழ்ந்த அக்கறை காட்டுங்கள்

அப்போஸ்தலன் பவுல் பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல, ஒரு கட்டத்தில் சாவின் எல்லைக்கே சென்றுவிட்டார். (2 கொ. 1:​8-10) இருந்தாலும், அவர் சாவைக் கண்டு பயப்படவில்லை. கடவுள் தனக்குப் பக்கபலமாக இருப்பதை அறிந்து ஆறுதல் அடைந்தார். “நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தகப்பனுமானவர் போற்றப்படுவாராக. அவரே கனிவும் இரக்கமும் உள்ள தகப்பன்; எல்லா விதமான ஆறுதலின் கடவுள். எங்களுடைய எல்லா உபத்திரவங்களிலும் அவர் எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறார்” என்று எழுதினார். ­(2 கொ. 1:3, 4) அவர் ஒரேயடியாக கவலையில் மூழ்கிவிடவில்லை. மாறாக, அவர் சகித்த கஷ்டங்கள் அவர் மனதில் ஒரு அருமையான குணத்தை விதைத்தன; மற்றவர்களை தன் நிலையில் வைத்துப் பார்க்கக் கற்றுக்கொண்டார். அதனால் மற்றவர்கள் கஷ்டப்படும்போது அவரால் அவர்களுக்கு ஆறதலளிக்க முடிந்தது.

அன்டோனியோ குணமான பிறகு பயணக் கண்காணியாக தன் சேவையைத் தொடர்ந்தார். எப்போதும் போல சகோதர சகோதரிகளிடம் அன்பைப் பொழிந்தார். ஆனால் பிறகு, அவரும் அவர் மனைவியும் வியாதியால் அவதிப்படுகிறவர்களைச் சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்த கடும் முயற்சி எடுத்தார்கள். ஒருமுறை, தீராத வியாதியால் அவதிப்பட்ட சகோதரர் ஒருவரைச் சந்தித்தார். அவருக்குக் கூட்டங்களுக்கு வரவே பிடிக்கவில்லை. அவரைப் பற்றி அன்டோனியோ சொல்லும்போது: “யெகோவாமேலயோ சகோதரர்கள் மேலயோ அவருக்கு அன்பு இல்லன்னு இல்ல. பாவம் அவரு, வியாதியால மனசொடஞ்சு போயிட்டாரு. அதனால, தான் எதுக்குமே லாயக்கில்லன்ற எண்ணம் அவருக்கு வந்துடுச்சு.”

அந்தச் சகோதரருக்கு எப்படியாவது உதவ அன்டோனியோ தீர்மானித்தார். ஒரு பார்ட்டியின்போது அவரை ஜெபம் செய்ய சொன்னார். முதலில் அந்தச் சகோதரர் தயங்கினாலும், பிறகு ஜெபம் செய்தார். “அவரு எவ்வளவு அழகா ஜெபம் செஞ்சாரு தெரியுமா? அதுக்கு அப்புறம் அவரு அப்படியே மாறிட்டாரு. லாய்க்கில்லன்ற எண்ணம் அவரவிட்டு பறந்து போச்சு.”

உண்மைதான், நாம் எல்லோருமே சிறிய அளவிலோ பெரிய அளவிலோ ஏதாவது ஒரு கஷ்டத்தை அனுபவித்திருப்போம். பவுல் சொன்னதுபோல் இது நம்மை தயார்படுத்தும். எதற்கு? மற்றவர்கள் வியாதிப்படும்போது அவர்களுக்கு ஆறுதல் அளிக்க. எனவே, நம் சகோதர சகோதரிகள் படும் வேதனையை கண்டும்காணாமல் இருந்துவிடக் கூடாது. நம் கடவுளாகிய யெகோவாவைப் பின்பற்றி மற்றவர்களுக்கு ஆறுதலின் புகலிடமாக இருப்போமாக!