Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யாருடைய கைவண்ணம்?

மரங்கொத்தியின் அதிர்வுகளைத் தாங்கும் தலை

மரங்கொத்தியின் அதிர்வுகளைத் தாங்கும் தலை

● புவியீர்ப்பு விசையின் 80-100 அலகு வேகத்தில் உங்கள் தலை எதிலாவது மோதினால் அவ்வளவுதான், ‘கிர்ர்ர்ர்’ என்று தலைசுற்ற ஆரம்பித்துவிடும் அல்லது நீங்கள் மயங்கி கீழே விழுந்துவிடுவீர்கள். ஆனால் ஒரு மரங்கொத்தி, புவியீர்ப்பு விசையின் 1,200 அலகு வேகத்தில் சர்வசாதாரணமாக மரத்தைக் கொத்துகிறது. அதற்குத் தலைசுற்றுவதில்லை, ஏன் ஒரு சின்ன தலைவலிகூட வருவதில்லை. அது எப்படி?

கவனியுங்கள்: மரங்கொத்தியின் தலையில் அதிர்வுகளைத் தாக்குப்பிடிக்கும் நான்கு விதமான அமைப்புகள் இருப்பதே அதற்குக் காரணம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்:

1. உறுதியான, அதே சமயத்தில் நெகிழும் தன்மையுள்ள அலகு

2. ஹையாய்டு—மண்டையோட்டைச் சுற்றியுள்ள ஒருவகை எலும்பும் நெகிழும் தன்மையுள்ள திசுவும்

3. மண்டையோட்டில் உள்ள பஞ்சு போன்ற ஓர் எலும்பு பகுதி

4. மண்டையோட்டிற்கும் மூளைக்கும் இடையே குறுகிய இடைவெளி; இங்குதான் மூளை-தண்டுவட நீர் இருக்கிறது

இவை ஒவ்வொன்றும் அதிர்வுகளை உள்வாங்கிக்கொள்வதால் மரங்கொத்தியின் மூளைக்கு எந்தச் சேதமும் ஏற்படுவதில்லை. அதனால்தான், மரங்கொத்தியால் வினாடிக்கு சுமார் 22 தடவை மரத்தைக் கொத்த முடிகிறது.

மரங்கொத்தியின் தலையைக் கண்டு வியந்துபோன ஆராய்ச்சியாளர்கள், புவியீர்ப்பு விசையின் 60,000 அலகு வேகத்தைத் தாக்குப்பிடிக்கிற ஒரு பெட்டியை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்கள் அடைந்த வெற்றி இன்னும் பல கண்டுபிடிப்புகளுக்கு வழிநடத்தலாம். முக்கியமாக விமானத்தின் கருப்புப் பெட்டிகளை உருவாக்குவதற்கு உதவலாம். தற்போது இந்தக் கருப்பு பெட்டிகள் புவியீர்ப்பு விசையின் 1,000 அலகு வேகத்தை மட்டுமே தாக்குப்பிடிக்கின்றன. பிரிட்டனில் உள்ள கிரான்ஃபீல்ட் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த கிம் ப்ளாக்பர்ன் என்ற இன்ஜினியர் சொல்கிறார்: “சாதிக்க முடியாது என்று நினைத்ததை நுணுக்கமான பல அம்சங்களைக் கொண்ட அதிநவீன அமைப்புகள் மூலம் இயற்கை சாதித்திருக்கிறது என்பதற்கு இது [மரங்கொத்தியின் தலை] ஒரு சிறந்த உதாரணம்.”

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மரங்கொத்தியின் அதிர்வுகளைத் தாங்கும் தலை தானாக வந்திருக்குமா? இல்லையென்றால், அது யாருடைய கைவண்ணமாக இருக்கும்? (g12-E 01)

[பக்கம் 30-ன் படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

1

2

3

4

[பக்கம் 30-ன் படம்]

சிவப்புத் தலை மரங்கொத்தி: © 2011 photolibrary.com