Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

டெங்கு பரவி வரும் கொடிய காய்ச்சல்

டெங்கு பரவி வரும் கொடிய காய்ச்சல்

டெங்கு பரவி வரும் கொடிய காய்ச்சல்

“மெக்சிகோவில் உள்ள மரேலஸில் இருக்கும் சுகாதார மையமும், . . . எமிலியனோ ஸபதா நகராட்சியைச் சேர்ந்த சுகாதார வாரியமும் இணைந்து யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்திற்கு [கிறிஸ்தவ கூட்டங்கள் நடக்கும் இடத்திற்கு] முதற்கட்ட பாராட்டுச் சான்றிதழ் வழங்கியது. . . . ஏனென்றால், [சாட்சிகள்] ஒன்றுசேர்ந்து தங்கள் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைப்பதால், டெங்கு நோயைப் பரப்பும் கொசுக்கள் அந்தப் பகுதியை அண்டுவதில்லை.”

மெக்சிகோவில் இருக்கும் அதிகாரிகள் நோய்களைப் பரப்பும் கொசுக்களை எப்படி ஒழிப்பதெனக் கவலைப்படுகிறார்கள். ஏனென்றால், இந்த அற்ப ஜீவன், உயிருக்கே உலை வைக்கும் டெங்கு வைரஸை சுமந்து வந்து மற்றவர்களுக்கு ‘தானம்’ செய்துவிடுகிறது. இந்த டெங்கு காய்ச்சலால், 2010-ல் மெக்சிகோவில் 57,000-ற்கும் மேலான ஆட்கள் பாதிக்கப்பட்டார்கள். இங்கு மட்டுமல்ல, இன்னும் 100-க்கும் அதிகமான நாடுகளில் டெங்கு காய்ச்சல் பரவலாகக் காணப்படுகிறது. அவ்வளவு ஏன், உலக சுகாதார அமைப்பு (WHO) எடுத்த கணக்கெடுப்பு இன்னும் அலற வைக்கிறது. தற்போது, ஒவ்வொரு வருடமும் உலகெங்கும் 5 கோடி பேர் டெங்கு காய்ச்சலால் அவதிப்படுகிறார்கள்; அதோடு, உலகில் ஐந்தில் இரண்டு பேரை இது தொற்றிக்கொள்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று அது சொல்கிறது. எனவே, இந்த டெங்கு வைரஸை சுமந்து திரியும் (வெள்ளை நிறப் புள்ளிகளுள்ள) ஏடிஸ் எஜிப்டி என்ற ஒருவகை கொசுக்களை பூண்டோடு அழிக்க சுகாதார அமைப்புகள் நடவடிக்கை எடுத்திருக்கின்றன. a

வெப்பமண்டல பகுதிகளிலும் அதற்கு அருகிலுள்ள பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் நிறைய பேருக்கு தொற்றிக்கொள்கிறது. அதுவும் முக்கியமாக மழை காலங்களிலும்... புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்ட பிறகும்... இவை அதிகமாகப் பரவுகின்றன. ஏனென்றால், ஏடிஸ் என்ற பெண் கொசு, தேங்கிக்கிடக்கும் நீரில்தான் முட்டையிடுகிறது. b லத்தீன் அமெரிக்காவிலும் கரீபியனிலும் வீட்டிற்குத் தேவையான தண்ணீரை மக்கள் சிமெண்ட் தொட்டிகளில் சேமித்து வைக்கிறார்கள். மருத்துவ நிபுணர்கள் அந்தத் தொட்டிகளை மூடி வைக்கும்படி மக்களை அறிவுறுத்துகிறார்கள். அப்படிச் செய்தால், அந்தத் தொட்டிகளில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதைத் தடுக்கலாம். அதோடு, மக்களும் தங்கள் வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் பழைய டயர்கள்... கேன்கள்... பூந்தொட்டிகள்... பிளாஸ்டிக் டப்பாக்கள்... என்று தண்ணீர் தேங்கும் பொருள்களைப் போட்டு வைக்காமல் சுத்தமாக வைத்துக்கொண்டால் இந்த நோய் பரவுவதைத் தடுக்கலாம்.

டெங்கு காய்ச்சலைக் கண்டுபிடிக்க... சமாளிக்க...

இதன் அறிகுறிகள் ஃப்ளூ காய்ச்சலைப் போலவே இருப்பதால் இதை எளிதில் கண்டுபிடிக்க முடிவதில்லை. இருந்தாலும், காய்ச்சலோடு சேர்ந்து பின்வரும் சில அறிகுறிகள் இருந்தால் அது டெங்குவாக இருக்கலாம் என்று WHO சொல்கிறது. தோலில் பொரிப் பொரியாகக் காணப்படுதல் அல்லது தடிப்புகள்... கண்களின் பின்புறத்தில் வலி... தசை வலி... போன்ற அறிகுறிகள் ஏற்படும். கடுமையான மூட்டு வலியும் ஏற்படுவதால் இதற்கு எலும்புடைக் காய்ச்சல் என்ற பெயரும் உண்டு. இந்தக் காய்ச்சல் ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு இருக்கும்.

டாக்டர்கள் இதுவரை டெங்குவிற்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், வீட்டில் நன்கு ஓய்வு எடுத்தால், நிறைய திரவ உணவுகளை எடுத்துக்கொண்டால் பெரும்பாலும் குணமடையலாம். அதேசமயத்தில், காய்ச்சல் குறைந்துவிட்டதென்று அலட்சியமாக இருந்துவிடக்கூடாது. ஏனென்றால் இரத்தப்போக்குடன் கூடிய டெங்கு காய்ச்சல் அல்லது டெங்கு ஷாக் சின்ட்ரோம் [dengue hemorrhagic fever or dengue shock syndrome] வந்துவிட வாய்ப்பிருக்கிறது. இவை உயிருக்கே ஆபத்தானவை. காய்ச்சல் குறைந்து குணமடைவதுபோல் தோன்றும் சமயத்தில் இவற்றிற்கான அறிகுறிகள் தென்படலாம். அடிவயிற்றில் தாங்க முடியாத வலி, தொடர்ச்சியான வாந்தி, மூக்கு மற்றும் பல் ஈறுகளில் இரத்தக்கசிவு, கருத்த நிறத்தில் மலப்போக்கு, தோலின் உட்பகுதியில் கருஞ்சிவப்பு நிற கொப்புளங்கள் போன்ற அறிகுறிகள் தென்படலாம். டெங்கு ஷாக் சின்ட்ரோமுக்கு இன்னும் சில அறிகுறிகள் தென்படலாம்: படபடப்பு, அதீத தாகம், தோல் வெளிறிப்போவதும் சில்லிட்டுப்போவதும், மிகக் குறைந்த இரத்த அழுத்தம்.

டெங்கு காய்ச்சல், பாக்டீரியாவால் ஏற்படுவதில்லை வைரஸால் ஏற்படுகிறது. எனவே, ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் எதுவும் இந்தக் காய்ச்சலை கட்டுப்படுத்தாது. ஆஸ்பிரின், ப்ரூஃபென் போன்ற வீக்கத்தை குறைக்கும் மருந்துகளைத் தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால், இரத்தக் கசிவு அதிகமாகிவிடும். டெங்கு வைரஸில் நான்கு வகைகள் உண்டு. அதோடு, இந்தக் காய்ச்சல் வந்த ஒருவருக்குத் திரும்பவும் வர வாய்ப்பிருக்கிறது.

உங்களுக்கு டெங்கு வந்தால், நிறைய திரவ உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள், நன்றாக ஓய்வெடுங்கள், கொசு கடிக்காமல் இருப்பதற்காக முடிந்தவரை கொசு வலைக்குள் படுத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், உங்களைக் கடித்த கொசு இன்னொருவரைக் கடித்து டெங்குவை அவருக்கு ‘தானம்’ செய்துவிடும்!

சரி, கொசுக்கடியிலிருந்து தப்பிக்க என்ன செய்வது? முழுக்கை சட்டை, பேண்ட் அல்லது நீளமான உடையை உடுத்துங்கள். கொசுக்களை விரட்டும் க்ரீம்கள், கொசுவத்திகள் போன்றவற்றைப் பயன்படுத்துங்கள். அதோடு, கொசு வலைகளுக்குள் படுத்துக்கொள்வதே உங்களுக்குப் பாதுகாப்பு. பகலில் எந்த நேரத்திலும் கொசு கடிக்கலாம் என்பது உண்மைதான். ஆனால் முக்கியமாக, சூரியன் உதித்த பின்பும் மறைவதற்கு முன்பும் இரண்டு மணிநேரங்களுக்குக் கொசுக்கள் சுறுசுறுப்பாகச் சுற்றிக்கொண்டிருக்கும்.

எதிர்காலத்தில் மருத்துவத்துறை இதற்குத் தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கலாம், கண்டுபிடிக்காமலும் போகலாம். ஆனால், கடவுளுடைய அரசாங்கம் எல்லா நோய்களையும், இந்த டெங்கு காய்ச்சலையும்கூட இருந்த இடம் தெரியாமல் ஒழித்துவிடும். அப்போது, நம் “கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார்; இனி மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது; முன்பிருந்தவை ஒழிந்துவிடும்.”—வெளிப்படுத்துதல் 21:3, 4. (g11-E 11)

[அடிக்குறிப்புகள்]

a சில நாடுகளில் ஏடிஸ் ஆல்போபிக்டஸ் போன்ற வேறுவகை கொசுக்களும் டெங்கு வைரஸை கடத்தலாம்.

b பொதுவாக ஏடிஸ் கொசுக்கள் முட்டையிட்ட இடத்தில் இருந்து சில நூறு மீட்டருக்கு மேல் போகாது.

[பக்கம் 27-ன் படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

கொசு முட்டையிடும் இடங்கள்

1. பழைய டயர்கள்

2. கூரையிலுள்ள நீர்வடி பள்ளங்கள்

3. பூந்தொட்டிகள்

4. பிளாஸ்டிக் டப்பாக்கள்

5. தூக்கியெறியப்பட்ட கேன்கள், பீப்பாய்கள்

கொசுக்கள் அண்டாமல் இருக்க...

அ. முழுக்கை சட்டை, பேண்ட், நீளமான உடை ஆகியவற்றை உடுத்துங்கள். கொசுக்களை விரட்டும் க்ரீம்கள், கொசுவத்திகள் போன்றவற்றைப் பயன்படுத்துங்கள்.

ஆ. கொசு வலைக்குள் தூங்குங்கள்

[பக்கம் 26-ன் படம்]

தகவல்: Courtesy Marcos Teixeira de Freitas