Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடல்சார்ந்த நரம்பு மண்டலம் (நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளது) ஜீரண மண்டலத்தின் ஒரு பாகம்.

என்ட்ரிக் நரம்பு மண்டலம்—உங்களுடைய “இரண்டாவது மூளை”!

என்ட்ரிக் நரம்பு மண்டலம்—உங்களுடைய “இரண்டாவது மூளை”!

உங்களுக்கு எத்தனை மூளை இருக்கிறது என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? “ஒன்றுதான்” என்று சொல்வீர்கள். நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், மூளையைப் போல வேறு நரம்பு மண்டலங்களும் உடலில் இருக்கின்றன. அதில் ஒன்று பயங்கர சிக்கலாக இருப்பதால், சில விஞ்ஞானிகள் அதற்கு “இரண்டாவது மூளை” என்றே பெயர் வைத்துவிட்டார்கள். அதில் ஏகப்பட்ட நியூரான்கள் ஒன்றுசேர்ந்து வேலை செய்கின்றன. இந்த நரம்பு மண்டலம் உங்கள் தலையில் அல்ல, வயிற்றில் இருக்கிறது. இதன் பெயர் என்ட்ரிக் நரம்பு மண்டலம் (Enteric Nervous System) அதாவது, குடல்சார்ந்த நரம்பு மண்டலம்.

நாம் சாப்பிடும் உணவு சக்தியாக மாறுவதற்கு நம் உடலில் பல விஷயங்கள் ஒன்றுசேர்ந்து செயல்பட வேண்டும். அது ஒன்றும் சாதாரண விஷயம் கிடையாது. அதனால்தானோ என்னவோ நம் மூளை, இந்த ஜீரண வேலைகளை எல்லாம் குடல்சார்ந்த நரம்பு மண்டலத்துக்கே விட்டுவிடுகிறது.

நம் மூளை அளவுக்கு இந்த நரம்பு மண்டலம் சிக்கலாக இல்லை என்பது உண்மைதான். இருந்தாலும், மற்ற நரம்பு மண்டலங்களை ஒப்பிடும்போது இது பயங்கர சிக்கலாகவே இருக்கிறது. குடல்சார்ந்த நரம்பு மண்டலத்தில் சுமார் 20 முதல் 60 கோடி நியூரான்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. இது, நம் ஜீரண மண்டலத்தின் (Digestive System) ஒரு பாகம். குடல்சார்ந்த நரம்பு மண்டலம் செய்யும் வேலைகளை எல்லாம் நம் மூளையே செய்வதாக இருந்தால், மூளையில் இருக்கும் நரம்புகள் இப்போது இருப்பதைவிட ரொம்ப தடிமனாக இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள். அதனால்தான், இரண்டாவது மூளை என்ற ஆங்கில புத்தகம் இப்படிச் சொல்கிறது: “[ஜீரண மண்டலத்தில் நடக்கும் வேலைகளை எல்லாம்] அதுவே பார்த்துக்கொள்வது பாதுகாப்பானது மட்டுமல்ல, வசதியானதும்கூட.”

“ஒரு ரசாயனப் பட்டறை”

உணவு ஜீரணம் ஆவதற்கு என்ன தேவைப்படுகிறது? பல ரசாயனங்கள் சரியான நேரத்தில், சரியான அளவில் ஒன்றுசேர வேண்டும். பிறகு, அந்த ரசாயன கலவை சரியான இடத்துக்கு அனுப்பப்பட வேண்டும். அப்போதுதான், உணவு ஜீரணமாகும். அதனால்தான, பேராசிரியர் கேரி மாவே ஜீரண மண்டலத்தை “ரசாயனப் பட்டறை” என்று சரியாகவே சொல்லியிருக்கிறார்! குடலின் உட்புற சுவர்மீது ஒருவித விசேஷ செல்கள் இருக்கின்றன. அவை நாம் சாப்பிடும் உணவில் என்னென்ன ரசாயனங்கள் இருக்கின்றன... என்னென்ன வித்தியாசமான சுவைகள் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்கும். இந்தத் தகவலை வைத்துதான் குடல்சார்ந்த நரம்பு மண்டலம் உணவைச் சிறுசிறு துகள்களாக உடைப்பதற்கு தேவையான ‘என்ஸைம்களை’ (Enzymes) செயல்பட வைக்கிறது. நாம் சாப்பிடும் உணவு அப்படி உடைக்கப்பட்டால்தான், உணவில் இருக்கும் சத்துக்களை நம் உடலால் எடுத்துக்கொள்ள முடியும். அதுமட்டுமல்ல, உணவில் என்னென்ன ரசாயனங்களும் அமிலங்களும் இருக்கின்றன என்பதை இந்த நரம்பு மண்டலம் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருக்கும். அதற்கேற்ற என்ஸைம்களைச் செயல்பட வைக்கும். இதையெல்லாம் யோசித்தாலே நமக்கு தலைசுற்றுகிறது இல்லையா?

நம்முடைய ஜீரண மண்டலத்தை ஒரு தொழிற்சாலையாக நினைத்துக்கொள்ளுங்கள். அங்கு நடக்கும் எல்லா வேலைகளையும் கவனித்துக்கொள்வது இந்த குடல்சார்ந்த நரம்பு மண்டலம்தான். நாம் சாப்பிடும் உணவை, உணவுக் குழாய் வழியாக அது உள்ளே அனுப்பி வைக்கிறது. அப்படிச் செய்ய உணவுக் குழாயில் உள்ள தசைகளுக்கு கட்டளை கொடுக்கிறது. உடனே அந்தத் தசைகள் சுருங்கி உணவை உள்ளே தள்ளுகின்றன. பொருள்களைச் சுலபமாக வேறு இடத்துக்கு நகர்த்தும் கன்வேயர் பெல்ட்டுகளை (conveyor belt) போல உணவை உள்ளே அனுப்புகின்றன. இந்தத் தசைகள் எந்தளவு சுருங்க வேண்டும் என்றும் எத்தனை முறை சுருங்க வேண்டும் என்றும் இந்த நரம்பு மண்டலம்தான் முடிவு செய்கிறது.

பாதுகாப்பு அம்சங்களையும் இந்த நரம்பு மண்டலம் மேற்பார்வை செய்கிறது. அது எப்படியென்று இப்போது பார்க்கலாம். நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி செயல்பட முக்கியக் காரணமாக இருப்பது லிம்போசைட் செல்கள் (lymphocyte cells). 70 முதல் 80 சதவீத லிம்போசைட் செல்கள் வயிற்றில்தான் இருக்கின்றன. பொதுவாக, நாம் சாப்பிடும் உணவில் உடலுக்குக் கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது. அவை அதிக அளவில் நம் உடலுக்குள் போகும்போது, நம் உடலைக் காப்பாற்ற இந்த நரம்பு மண்டலம் உடனடியாக என்ன செய்கிறது தெரியுமா? வயிற்றிலுள்ள தசைகளைப் பலமுறை வேகமாக சுருங்க வைக்கிறது. அதனால், நமக்கு வாந்தி வருகிறது அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. கடைசியில், நம் வயிற்றுக்குள் சென்ற எல்லா கெட்ட பாக்டீரியாக்களும் வெளியேறுகின்றன.

அருமையான தகவல் தொடர்பு!

குடல்சார்ந்த நரம்பு மண்டலத்துக்கும் மூளைக்கும் தொடர்பே இல்லாதது போல் தோன்றலாம். ஆனால் அப்படியில்லை. இவை இரண்டுமே எப்போதும் தொடர்பில்தான் இருக்கின்றன. எப்படி? நாம் எப்போது சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற தகவலை ஹார்மோன்கள் (hormones) நம் மூளைக்கு அனுப்புகிறது. இந்த ஹார்மோன்களைக் குடல்சார்ந்த நரம்பு மண்டலம்தான் சரியான விதத்தில் செயல்பட வைக்கிறது. நம் வயிறு நிரம்பியவுடன் இந்த நரம்பு மண்டலத்தில் உள்ள செல்கள் மூளைக்குத் தகவல் அனுப்புகிறது. அதனால்தான், அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது வாந்தி வருவது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது.

இந்தக் கட்டுரையைப் படிப்பதற்கு முன்பே, மூளைக்கும் ஜீரண மண்டலத்துக்கும் ஏதோ தகவல் தொடர்பு இருப்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். ஒருசில வகையான உணவைச் சாப்பிட்ட பிறகு, உங்கள் மனநிலை சந்தோஷமாக மாறியதை உணர்ந்திருக்கிறீர்களா? அதற்கு காரணம், நம்முடைய குடல்சார்ந்த நரம்பு மண்டலம் ‘சந்தோஷ சிக்னல்களை’ மூளைக்கு அனுப்புகிறது. இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து பல செயல்கள் உள்ளுக்குள் நடக்கின்றன, இவை நம்மை சந்தோஷமாக உணர வைக்கின்றன. அதனால்தான், மன அழுத்தம் வரும்போது அல்லது சோர்வாக உணரும்போது நமக்குப் பிடித்த உணவைச் சாப்பிட விரும்புகிறோம். குடல்சார்ந்த நரம்பு மண்டலத்தைச் செயற்கையாக தூண்டிவிட்டு, மன அழுத்தத்தால் கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவ முடியுமா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

மூளைக்கும் ஜீரண மண்டலத்துக்கும் இடையே இருக்கும் தொடர்புக்கு இன்னொரு உதாரணத்தைப் பார்க்கலாம். நமக்கு ஏதாவது டென்ஷன் அல்லது மன அழுத்தம் இருந்தால், நம் வயிறு இழுத்துப் பிடிப்பதுபோல் தோன்றலாம். அதற்கு காரணம், வயிற்றுக்குப் போகும் இரத்தத்தை குடல்சார்ந்த நரம்பு மண்டலம் வேறுபக்கமாக திருப்பிவிடுகிறது. அதுமட்டுமல்ல, மன அழுத்தம் இருக்கும்போது நம் மூளை குடல்சார்ந்த நரம்பு மண்டலத்தைத் தூண்டிவிட்டு, குடல் சுருங்கும் இயல்பை மாற்றுகிறது. அதனால்தான் வாந்தி வருவது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது.

இந்த குடல்சார்ந்த நரம்பு மண்டலத்தால் அப்படிப்பட்ட உணர்ச்சிகளை ஏற்படுத்த முடியுமே தவிர, மூளையைப் போல யோசிக்கவோ தீர்மானங்கள் எடுக்கவோ முடியாது. பாடல் எழுதவோ, வங்கிக் கணக்கை சரிபார்க்கவோ, ஹோம் வொர்க் செய்யவோ இந்த குடல்சார்ந்த நரம்பு மண்டலம் உங்களுக்கு உதவாது. இருந்தாலும், இதனுடைய சிக்கலான அமைப்பைப் பார்த்து விஞ்ஞானிகள் இன்னும் வாயைப் பிளந்துதான் நிற்கிறார்கள். அதுவும், இதிலிருக்கும் இன்னும் பல விஷயங்கள் கண்டுபிடிக்கப்படவே இல்லை. அடுத்த முறை நீங்கள் சாப்பிடும்போது என்ன செய்யலாம்? உணவு உள்ளே போனவுடன், உங்கள் ஜீரண மண்டலத்தில் நடக்கப்போகும் அற்புதமான வேலைகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள். தகவல் தொடர்பு, தகவலுக்கு ஏற்ப செயல்படும் விதம், ஒருங்கிணைப்பு ஆகியவற்றை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!