Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பொய்யான செய்தியை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்

பொய்யான செய்தியை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்

 என்றைக்கும் இல்லாத அளவுக்கு இன்றைக்கு நம்மால் தகவல்களை தெரிந்துகொள்ள முடிகிறது. நம்மை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைப்பதற்கு தேவையான தகவல்களும் அவற்றில் அடங்கும். ஆனால், நாம் பார்க்கும் சில தகவல்கள் பொய்யாகவும் இருக்கலாம். அதனால், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்! உதாரணத்துக்கு, இதுபோன்ற விஷயங்களை நாம் கேள்விப்படலாம்:

 கோவிட்-19 பெருந்தொற்று சமயத்தில், ஆபத்தான, தவறான தகவல்கள் எந்தளவுக்கு அதிகமாக பரவியது என்பதை பற்றி ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் இப்படி சொல்கிறார்: ‘ஆபத்தான மருத்துவ ஆலோசனைகளும் தவறான சிகிச்சை முறைகளும் பரவிக்கொண்டிருக்கின்றன.’ அதோடு, ‘மக்கள் டிவியிலும் ரேடியோவிலும் நிறைய பொய்யான தகவல்களை கேட்கிறார்கள். சதி கோட்பாடுகளும் இன்டர்நெட்டில் எக்கச்சக்கமாக இருக்கிறது. இதனால், மக்கள் மத்தியில் வெறுப்பும் தப்பெண்ணமும் அதிகமாகிக்கொண்டே போகிறது.’

 பொய்யான தகவல்கள் ஒன்றும் புதிது கிடையாது! நம்முடைய நாட்களில் இப்படிப்பட்ட நிலைமை இருக்கும் என்று பைபிள் முன்பே சொன்னது. “பொல்லாதவர்களும் ஏமாற்றுக்காரர்களும் மேலும் மேலும் மோசமாவார்கள்; அவர்கள் ஏமாற்றிக்கொண்டும் ஏமாந்துகொண்டும் இருப்பார்கள்” என்று அது சொன்னது. (2 தீமோத்தேயு 3:1, 13) இன்டர்நெட் மூலமாக பொய்யான தகவல்கள் நமக்கு சுலபமாக கிடைத்துவிடுகிறது; நாமும் அவை உண்மை என்று நினைத்து, தெரியாமல் மற்றவர்களுக்கு பரப்பிவிடுகிறோம். இதனால் ஈ-மெயில், சோஷியல் மீடியா மற்றும் செய்திகள் மூலமாக நமக்கு கிடைக்கும் தகவல்களில், பாதி உண்மைகளும் கலப்படம் செய்யப்பட்ட விஷயங்களும் நிறைந்திருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

 பொய்யான தகவல்களையும் வதந்திகளையும் நம்பி ஏமாறாமல் இருக்க நாம் என்ன செய்யலாம்? பைபிள் சொல்கிற சில ஆலோசனைகளை கவனியுங்கள்:

  •   பார்க்கிற அல்லது கேட்கிற எல்லாவற்றையும் நம்பாதீர்கள்

     பைபிள் இப்படி சொல்கிறது: “விவரம் தெரியாதவன் யார் எதைச் சொன்னாலும் நம்பிவிடுகிறான். ஆனால், சாமர்த்தியமாக நடக்கிறவன் ஒவ்வொரு அடியையும் யோசித்துதான் எடுத்து வைக்கிறான்.”—நீதிமொழிகள் 14:15.

     ஜாக்கிரதையாக இல்லை என்றால் நாம் சுலபமாக ஏமாந்துவிடலாம். உதாரணத்துக்கு, ஆன்லைனில் பிரபலமாக இருக்கும் மீம்ஸ்களை (memes) எடுத்துக்கொள்ளுங்கள். இவை படங்களையும் வீடியோக்களையும் வைத்து தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலும், மற்றவர்களை சிரிக்க வைக்க இதை தயாரிக்கிறார்கள். ஆனால், படங்களையும் வீடியோக்களையும் சுலபமாக மாற்றிவிட முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்! ஒருவர் சொல்லியிருக்கும் நிறைய விஷயங்களிலிருந்து, ஒரேயொரு விஷயத்தை மட்டும் தனியாக பிரித்தால் அதற்கு வேறொரு அர்த்தம் வர வாய்ப்பிருக்கிறது. இப்படி, ஒருவர் சொல்லாத அல்லது செய்யாத விஷயத்தைக்கூட மீம்ஸ் மூலமாக அவர்கள் சொன்னதுபோல் அல்லது செய்ததுபோல் காட்டிவிடுகிறார்கள்.

     ”சொல்லப்பட்ட விஷயத்தில் சிலவற்றை மட்டும் பிரித்து காட்டப்படும் மீம்ஸ் மாதிரியான விஷயங்கள்தான், சோஷியல் மீடியாவில் இருக்கும் பெரும்பாலான பொய் தகவல்களுக்கு காரணம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கவனித்திருக்கிறார்கள்.“—ஆக்ஸியோஸ் மீடியா.

     உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்த தகவல் உண்மையா அல்லது வெறும் மீமா?’

  •   ஒரு தகவல் எங்கிருந்து வருகிறது என்பதையும் அதில் என்ன இருக்கிறது என்பதையும் அலசிப்பாருங்கள்

     பைபிள் இப்படி சொல்கிறது: “எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நல்லது எது என்று நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.”—1 தெசலோனிக்கேயர் 5:21.

     ஒரு தகவலை நம்புவதற்கு முன்பு அல்லது மற்றவர்களுக்கு அனுப்புவதற்கு முன்பு, அது உண்மைதானா என்று நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். அது பிரபலமானதாக இருந்தாலும் சரி, செய்திகளில் திரும்ப திரும்ப சொல்லப்பட்டாலும் சரி! இதை எப்படி செய்யலாம்?

     செய்தியை வெளியிட்ட நிறுவனம் நம்பகமானதா என்று யோசித்துப்பாருங்கள். நியூஸ் மீடியாவும் மற்ற அமைப்புகளும் அரசியல் ஆதாயத்துக்காகவும் வியாபார காரணங்களுக்காகவும் ஒரு தகவலை மாற்றிச் சொல்லலாம். அதனால், ஒரு செய்தி சேனலில் அல்லது பேப்பரில் நீங்கள் பார்ப்பதை மற்ற செய்தி சேனல்களிலும் பேப்பர்களிலும் ஒப்பிட்டு பாருங்கள். சிலசமயங்களில், நம் நண்பர்கள் தங்களுக்கே தெரியாமல் பொய்யான தகவல்களை மெசேஜிலோ ஈ-மெயிலிலோ சோஷியல் மீடியாவிலோ பரப்பலாம். அதனால், ஒரு செய்தியை நீங்கள் கேள்விப்பட்டால், அதை உண்மையிலேயே வெளியிட்டவர்கள் யார் என்று தெரியாமல் நம்பாதீர்கள்.

     செய்தியில் இருக்கிற தகவல்கள் இன்றைய நிலவரப்படி இருக்கிறதா, துல்லியமாக இருக்கிறதா என்று பாருங்கள்; அதில் வரும் தேதிகளை கவனியுங்கள். எதையெல்லாம் சரிபார்க்க முடியுமோ அதையெல்லாம் உண்மைதானா என்று பாருங்கள். அதில் சொல்லியிருக்கிற விஷயங்களை நம்புவதற்கு உறுதியான ஆதாரங்களை கண்டுபிடியுங்கள். அதேபோல், சிக்கலான ஒரு விஷயத்தை ரொம்ப எளிமையாக சொல்லியிருந்தால் அல்லது உங்களை உணர்ச்சிவசப்படுத்துவது போல் ஒரு செய்தி இருந்தால் ஜாக்கிரதையாக இருங்கள்!

     ”கைகளை கழுவுவது எந்தளவுக்கு முக்கியமோ, அந்தளவுக்கு நாம் படிக்கும் விஷயங்கள் உண்மையா என்று உறுதிப்படுத்திக்கொள்வதும் முக்கியம்.“—ஸ்ரீதர் தர்மபுரி, ஐ.நா. உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பிரிவின் உயர் அதிகாரி.

     உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்த செய்தி அறிக்கை, உண்மைகளை சொல்கிறதா அல்லது மக்களுடைய கருத்துகளை சொல்கிறதா? அல்லது, ஒரு பக்கத்தை மட்டும் ஆதரிக்கிற மாதிரி இருக்கிறதா?’

  •   உண்மைகளை நம்புங்கள், தனிப்பட்ட கருத்துக்களை ஒதுக்கித்தள்ளுங்கள்

     பைபிள் இப்படி சொல்கிறது: “தன்னுடைய இதயத்தையே நம்புகிறவன் முட்டாள்.”—நீதிமொழிகள் 28:26.

     பொதுவாக நாம் எந்த மாதிரியான விஷயங்களை நம்புகிறோமோ அதை ஆதரிக்கும் செய்திகள் வரும்போது, அதை உடனே நம்பிவிடுவோம். இன்டர்நெட் கம்பெனிகள், நம்முடைய விருப்பங்களையும் இன்டர்நெட்டில் நாம் அலசிய விஷயங்களையும் அடிப்படையாக வைத்து, செய்திகளையும் வேறுசில தகவல்களையும் நமக்கு காட்டுகின்றன. ஆனால் எதார்த்தம் என்னவென்றால், நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் எப்போதுமே நமக்கு பிடித்த மாதிரி இருக்காது.

     ”பொதுவாக மக்களால் யோசித்து ஞானமாக செயல்பட முடியும். ஆனால், ஒருவர் ஏற்கெனவே நம்புகிற விஷயங்களை ஆதரிக்கும் செய்திகள் வரும்போது, அவருக்குள் இருக்கும் ஆசை, கனவு, பயம், லட்சிய வெறி போன்றவை அந்த செய்தியை உண்மையென்று கண்மூடித்தனமாக நம்பவைத்துவிடும்.“—பீட்டர் டிட்டோ, சமூக மனோதத்துவ நிபுணர்.

     உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் ஏற்கெனவே நம்புகிற சில விஷயங்களை இந்த செய்தி ஆதரிப்பதால் மட்டுமே இதை நம்புகிறேனா?’

  •   பொய்யான தகவல்களை பரப்பாதீர்கள்

     பைபிள் இப்படி சொல்கிறது: “நீங்கள் வதந்திகளைப் பரப்பக் கூடாது.”—யாத்திராகமம் 23:1.

     நீங்கள் மற்றவர்களிடம் சொல்கிற செய்திகள், அவர்கள் யோசிக்கிற விதத்தையும் நடந்துகொள்கிற விதத்தையும் பாதிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். அதனால், ஒரு தப்பான தகவல்களை நீங்கள் தெரியாமல் பரப்பிவிட்டால்கூட மோசமான பின்விளைவுகள் வந்துவிடலாம்.

     ”முதலில் நாம் செய்ய வேண்டிய விஷயம் என்னவென்றால், நிறுத்தி நிதானமாக நம்மையே இப்படி கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு இது நம்பகமானதா?’ எல்லாருமே இப்படி யோசித்தால், இன்டர்நெட்டில் வரும் பொய்யான தகவல்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறையும்.“—பீட்டர் ஆடம்ஸ், நியூஸ் லிட்ரெசி ப்ராஜெக்ட்டின் முதன்மை துணை தலைவர்.

     உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்த செய்தி உண்மைதான் என்று நிச்சயப்படுத்திக்கொண்ட பிறகு நான் இதை அனுப்புகிறேனா?’