Skip to content

யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்தால், நானும் ஒரு யெகோவாவின் சாட்சியாய் ஆக வேண்டியிருக்குமா?

யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்தால், நானும் ஒரு யெகோவாவின் சாட்சியாய் ஆக வேண்டியிருக்குமா?

 வேண்டியதில்லை! அப்படி ஆக வேண்டுமென்ற எந்தக் கட்டாயமும் உங்களுக்கு இல்லை. லட்சக்கணக்கான மக்கள் எங்களோடு சேர்ந்து சந்தோஷமாக பைபிள் படிப்பு படிக்கிறார்கள். ஆனால் அவர்கள் யெகோவாவின் சாட்சிகளாக ஆவதில்லை. a அப்படியானால், அந்த பைபிள் படிப்புத் திட்டத்தின் நோக்கம் என்ன? பைபிள் என்னென்ன விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கிறது என்பதை உங்களுக்குக் காட்டுவதே அதன் நோக்கம். அதையெல்லாம் தெரிந்துகொண்ட பிறகு என்ன செய்யத் தீர்மானிப்பீர்களோ அது உங்கள் விருப்பம். விசுவாசம் என்பது அவரவருடைய தனிப்பட்ட விஷயம் என்பதை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம்.—யோசுவா 24:15.

படிப்பு நடத்தப்படும்போது என்னுடைய சொந்த பைபிளை நான் பயன்படுத்தலாமா?

 தாராளமாக! நவீன மொழிநடையிலுள்ள புதிய உலக மொழிபெயர்ப்பு—பரிசுத்த பைபிளை நாங்கள் விரும்பிப் பயன்படுத்துகிறோம்; உங்களுக்கு வேண்டுமானால் அதனுடைய ஒரு பிரதியை இலவசமாகத் தருகிறோம்; ஆனாலும், உங்களுடைய சொந்த பைபிளைப் பயன்படுத்தினால்கூட நாங்கள் சந்தோஷப்படுவோம். எந்தவொரு பைபிள் மொழிபெயர்ப்பாக இருந்தாலும் சரி, பைபிளிலுள்ள நம்பிக்கையூட்டும் செய்தியையும், மீட்பின் செய்தியையும் நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.

உங்களுடைய சபையில் சேராத ஆட்களுக்கு ஏன் நீங்கள் பைபிள் படிப்பு நடத்துகிறீர்கள்?

  •   முக்கியமாக, யெகோவா தேவன் மீதுள்ள அன்புதான் அப்படிச் செய்ய எங்களைத் தூண்டுகிறது. கிறிஸ்தவர்கள் தாங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை மற்றவர்களுக்குச் சொல்லித்தர வேண்டுமென அவர் எதிர்பார்க்கிறார். (மத்தேயு 22:37, 38; 28:19, 20) அதனால், அவருடைய வார்த்தை என்ன சொல்லித்தருகிறது என்பதை மக்களுக்குக் கற்றுக்கொடுத்து, “கடவுளுடைய சக வேலையாட்களாக” இருக்கவே நாங்கள் விரும்புகிறோம்; அதைவிட பெரிய பாக்கியம் வேறு எதுவும் இல்லை என்று நினைக்கிறோம்.—1 கொரிந்தியர் 3:6-9.

  •   மற்றவர்கள் மீதுள்ள அன்பும்கூட அப்படிச் செய்ய எங்களைத் தூண்டுகிறது. (மத்தேயு 22:39) நாங்கள் கற்றுக்கொண்ட அருமையான விஷயங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும்போது எங்களுக்கு அதிக சந்தோஷம் கிடைக்கிறது.—அப்போஸ்தலர் 20:35.

a 2023-ல் ஒவ்வொரு மாதமும் 72,81,212 பேருக்கு நாங்கள் பைபிள் படிப்பு நடத்தினோம்; அந்தப் படிப்புகள் பலவற்றில் நிறைய பேர் கலந்துகொண்டார்கள். ஆனால், 2,69,517 பேர் மட்டும்தான் அந்த வருடம் யெகோவாவின் சாட்சிகளாக ஞானஸ்நானம் எடுத்தார்கள்.