Skip to content

Blue Planet Archive/Mark Conlin

யாருடைய கைவண்ணம்?

முட்டையிட சாகச பயணம் செய்யும் க்ரூனியன் மீன்கள்

முட்டையிட சாகச பயணம் செய்யும் க்ரூனியன் மீன்கள்

 கலிபோர்னியா க்ரூனியன் என்ற சிறிய மீன்கள், அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் இருக்கிற கலிபோர்னியாவிலும் மெக்சிகோவில் இருக்கிற பாஜா கலிபோர்னியாவிலும் உள்ள பசிபிக் கடற்கரை ஓரங்களில் முட்டையிடுகின்றன. குஞ்சுகள் உயிரோடு இருக்க வேண்டுமென்றால் எந்த நாட்களில்... எந்த நேரங்களில்... முட்டையிட வேண்டும் என்பது இந்த மீன்களுக்கு ரொம்ப நன்றாகவே தெரியும்.

 யோசித்துப் பாருங்கள்: ஒவ்வொரு பிறை நிலா அல்லது பௌர்ணமி சமயத்தில் கடல்நீர் மட்டம் உயரும்; அப்படி உயர்ந்த பின்பு வருகிற மூன்று அல்லது நான்கு ராத்திரிகளில்தான் இந்த க்ரூனியன் மீன்கள் முட்டையிடுகின்றன. ஒருவேளை பிறை நிலா அல்லது பௌர்ணமிக்கு முன்பு அந்த மீன்கள் முட்டையிட்டால் உயரமான அலைகள் வந்து கடற்கரையிலிருந்து மண்ணை அடித்துக்கொண்டு போகும்போது முட்டைகளையும் சேர்த்து அடித்துக்கொண்டு போய்விடும். ஆனால் கடல்நீர் மட்டம் உயர்ந்த பின்பு சில நாட்களிலேயே அந்த மீன்கள் முட்டையிடுவதால், அங்கே உருவாகிற மணல் மெத்தைகளின் கீழே இந்த முட்டைகள் ரொம்ப பாதுகாப்பாக படுத்துக்கொள்ளும். ஏனென்றால், அந்த உயரமான அலைகள் பின்வாங்கி போகும்போது கடலில் இருந்து அள்ளிக்கொண்டு வந்த மண்ணை அங்கேயே விட்டுவிட்டுப் போய்விடும்.

Wally Skalij/Los Angeles Times via Getty Images

 அதோடு, வசந்த காலத்திலும் கோடை காலத்திலும் அந்த மீன்கள் முட்டையிடும் பருவம் வரும்போது கடல்நீர் மட்டம் பகலை விட ராத்திரியில் அதிகமாக இருக்கும். அதனால் இந்த மீன்களால் கடற்கரையில் ரொம்ப தூரம் வரை நீந்திக்கொண்டு போய் முட்டையிட முடியும். இப்படிச் செய்வதால் அடுத்து வருகிற பெரிய அலைகள் இந்த முட்டைகளின் பக்கத்தில்கூட நெருங்காது.

 முட்டையிடுவதற்காக க்ரூனியன் மீன்கள் கரை வரை தொட்டுக்கொண்டு போகிற ஒரு பெரிய அலைக்காக காத்துக்கொண்டு இருக்கும். பின்பு அந்த அலையை பிடித்துக்கொண்டு நேராக கடற்கரைக்கு வந்து சேர்ந்துவிடும். எவ்வளவு தூரத்துக்கு முடியுமோ அவ்வளவு தூரத்துக்கு நீந்திப் போய் ஒரு இடத்தில் வந்து அப்படியே தங்கிவிடும். அலை திரும்பவும் கடலுக்குள் போன பின்பு, பெண் மீன் ஈரமான மணலில் தன்னுடைய உடலால் ஒரு குழியைத் தோண்டி, முகம் மட்டும் வெளியே தெரியும்படி வாலில் இருந்து இடுப்பு வரை தன்னைப் புதைத்துக்கொள்ளும். பெண் மீன்கள் ஐந்திலிருந்து எட்டு சென்டிமீட்டர் ஆழத்துக்கு முட்டைகளை போடும். அந்த முட்டைகளை ஒன்றுக்கும் அதிகமான ஆண் மீன்கள் கருவுர செய்கின்றன. அதற்குப் பின்பு, அந்த மீன்கள் வளைந்து நெளிந்து தண்ணீர் பக்கத்தில் போய் அடுத்த அலையை பிடித்துக்கொண்டு நேராக கடலுக்குள் போய் சேர்ந்துவிடும்.

 ஈர மணலில் இந்த முட்டைகள் வளர்ந்து வந்தாலும் கடல் அலைகளுடைய அதிர்வுகள் இருந்தால்தான் அவற்றால் குஞ்சு பொரிக்க முடியும். அதனால் கிட்டத்தட்ட இரண்டு வாரம் கழித்து பெரிய அலை வந்து கடல்நீர் மட்டம் உயரும்போது, அந்த குஞ்சுகள் முட்டையில் இருந்து வெளியே வருகின்றன. இந்தப் பெரிய அலைக்காக அந்த முட்டைகளால் நான்கு வாரங்கள் வரைக்கும் கூட காத்திருக்க முடியும்.

 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்: எப்போது, எப்படி முட்டையிடுவது என்று தெரிந்துவைத்திருக்கும் திறமை க்ரூனியன் மீன்களுக்கு தானாக வந்திருக்குமா, இல்லையென்றால் யாராவது இதைப் படைத்திருப்பார்களா?