2 ராஜாக்கள் 10:1-36

10  ஆகாபின்+ மகன்கள் 70 பேர் சமாரியாவில் இருந்தார்கள். அதனால் யெகூ கடிதங்கள் எழுதி, சமாரியாவுக்கும் யெஸ்ரயேலில் இருந்த அதிகாரிகளுக்கும் பெரியோர்களுக்கும்*+ ஆகாபின் மகன்களைக் கவனித்துக்கொண்டவர்களுக்கும்* அனுப்பி வைத்தார்.  அந்தக் கடிதத்தில், “உங்கள் எஜமானுடைய மகன்கள் உங்களுடன் இருக்கிறார்கள். உங்களிடம் போர் ரதங்களும் குதிரைகளும் ஆயுதங்களும் இருக்கின்றன; நீங்கள் மதில் சூழ்ந்த நகரத்தில் இருக்கிறீர்கள்.  அதனால் இந்தக் கடிதம் கையில் கிடைக்கும்போது, உங்கள் எஜமானுடைய மகன்களில் மிகச் சிறந்தவனை, தகுதியுள்ளவனை* தேர்ந்தெடுத்து அவனுடைய அப்பாவின் சிம்மாசனத்தில் உட்கார வையுங்கள். பின்பு, உங்கள் எஜமானுடைய வீட்டாரைக் காப்பாற்றப் போர் செய்யுங்கள்” என்று எழுதியிருந்தார்.  அதைப் படித்ததும் அவர்கள் மிரண்டு போனார்கள். “இரண்டு ராஜாக்களாலேயே அவரை எதிர்த்து நிற்க முடியவில்லை,+ நாமெல்லாம் எந்த மூலைக்கு?” என்று பேசிக்கொண்டார்கள்.  அரண்மனை அதிகாரியும் நகர ஆளுநரும் பெரியோர்களும் ஆகாபின் மகன்களைக் கவனித்துக்கொண்டவர்களும் யெகூவுக்குப் பதில் கடிதம் அனுப்பினார்கள். “நாங்கள் எல்லாரும் உங்களுடைய ஊழியர்கள். நீங்கள் என்ன சொன்னாலும் செய்யத் தயாராக இருக்கிறோம். வேறு யாரையும் ராஜாவாக்க மாட்டோம். உங்களுக்கு எது சரியென்று படுகிறதோ அதைச் செய்யுங்கள்” என்று அதில் எழுதியிருந்தார்கள்.  பின்பு, அவர்களுக்கு இரண்டாவதாக ஒரு கடிதத்தை யெகூ எழுதினார். அதில், “நீங்கள் என் பக்கம் இருந்தால், என் பேச்சைக் கேட்கத் தயாராக இருந்தால், நாளைக்கு இதே நேரம் உங்கள் எஜமானுடைய மகன்களின் தலைகளோடு யெஸ்ரயேலுக்கு வந்து என்னைப் பாருங்கள்” என்று எழுதினார். அந்த இளவரசர்கள் 70 பேரும் தங்களை வளர்த்துவந்த பிரமுகர்களுடன் இருந்தார்கள்.  அந்தக் கடிதம் கிடைத்ததும், இளவரசர்கள் 70 பேரையும் பிடித்து அவர்கள் வெட்டிக் கொன்றார்கள்.+ அவர்களுடைய தலைகளைக் கூடைகளில் போட்டு யெஸ்ரயேலில் இருந்த யெகூவிடம் அனுப்பினார்கள்.  அப்போது யெகூவிடம் ஒருவன் வந்து, “இளவரசர்களின் தலைகளைக் கொண்டுவந்திருக்கிறார்கள்” என்று சொன்னான். உடனே அவர், “நாளை காலைவரை நகரத்தின் நுழைவாசலில் அவற்றை இரண்டு குவியலாகக் குவித்து வையுங்கள்” என்று சொன்னார்.  காலையில் அவர் மக்கள் எல்லாருக்கும் முன்னால் வந்து நின்று, “நீங்கள் நல்லவர்கள்.* நான்தான் சதி செய்து என் எஜமானைக் கொன்றுபோட்டேன்.+ ஆனால், இவர்கள் எல்லாரையும் கொன்றுபோட்டது யார்? 10  ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள், ஆகாபின் வீட்டாரைப் பற்றி யெகோவா சொன்ன எல்லாமே நிறைவேறும். யெகோவா சொன்ன ஒரு வார்த்தைகூட நிறைவேறாமல் போகாது.*+ தன்னுடைய ஊழியரான எலியா மூலம் சொன்னதைத்தான் யெகோவா இப்போது செய்திருக்கிறார்”+ என்று சொன்னார். 11  பின்பு, யெஸ்ரயேலில் மீதியிருந்த ஆகாபின் வம்சத்தார் எல்லாரையும் யெகூ கொன்றுபோட்டார். ஆகாபுக்கு நெருக்கமான பிரமுகர்கள், நண்பர்கள், அவனுடைய குருமார்கள்+ ஆகிய எல்லாரையும் கொன்றுபோட்டார். ஆகாபுடைய ஆட்கள் ஒருவரைக்கூட விட்டு வைக்கவில்லை.+ 12  பின்பு யெகூ சமாரியாவுக்குப் புறப்பட்டுப் போனார்; வழியில், ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கிற இடம்* இருந்தது. 13  அங்கே யூதாவின் ராஜாவான அகசியாவின்+ சகோதரர்களை யெகூ பார்த்தார். அவர்களிடம், “நீங்கள் யார்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “நாங்கள் அகசியாவின் அண்ணன் தம்பிகள். ராஜாவின் மகன்களும் ராஜமாதாவின் மகன்களும் நன்றாக இருக்கிறார்களா என்று விசாரிக்கப் போய்க்கொண்டிருக்கிறோம்” என்று சொன்னார்கள். 14  உடனே யெகூ, “இவர்களை உயிரோடு பிடியுங்கள்!” என்று கட்டளையிட்டார். அதனால் அந்த 42 பேரையும் உயிரோடு பிடித்து, ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கிற இடத்திலிருந்த தண்ணீர்த் தொட்டிக்குப் பக்கத்தில் வெட்டிக் கொன்றார்கள். ஒருவரைக்கூட தப்பிக்க விடவில்லை.+ 15  யெகூ அங்கிருந்து போய்க்கொண்டிருந்தபோது, தன்னைச் சந்திக்க வந்த ரேகாபின்+ மகன் யோனதாபைப்+ பார்த்தார். யோனதாப் அவருக்கு வாழ்த்துச் சொன்னார். அப்போது யெகூ, “என் இதயம் உன் இதயத்துக்கு உண்மையாக இருப்பதுபோல், உன் இதயம் எனக்கு உண்மையாக இருக்கிறதா?” என்று கேட்டார். அதற்கு யோனதாப், “ஆமாம்” என்று சொன்னார். “அப்படியானால், கையைக் கொடு” என்று யெகூ சொன்னார். உடனே யோனதாப் தன்னுடைய கையைக் கொடுத்தார், யெகூ அவரைப் பிடித்து தன்னுடைய ரதத்தில் ஏற்றிக்கொண்டார். 16  அப்போது அவரிடம், “என்னோடு வா, யெகோவாவை எதிர்க்கிற யாரையும் நான் சகித்துக்கொள்ள மாட்டேன்+ என்பதை நீயே பார்”* என்று சொன்னார். யெகூ தன்னுடைய போர் ரதத்தில் யோனதாபைக் கூட்டிக்கொண்டு போனார். 17  யெகூ சமாரியாவுக்கு வந்தவுடன், அங்கே மீதியிருந்த ஆகாபின் வீட்டார் எல்லாரையும் வெட்டிக் கொன்றார்; ஒருவரைக்கூட விட்டுவைக்கவில்லை.+ எலியா மூலம் யெகோவா சொன்னபடியே அவர் செய்தார்.+ 18  பின்பு மக்கள் எல்லாரையும் யெகூ ஒன்றுகூட்டி, “பாகால் வணக்கத்துக்காக ஆகாப் கொஞ்சம்தான் செய்தான்;+ ஆனால், நான் நிறைய செய்யப்போகிறேன். 19  அதனால் பாகால் தீர்க்கதரிசிகள்,+ பக்தர்கள், பூசாரிகள் எல்லாரையும்+ வரச் சொல்லுங்கள். ஒரு ஆள்கூட வராமல் இருந்துவிடக் கூடாது. ஏனென்றால், நான் பாகாலுக்குப் பெரியளவில் பலி கொடுக்கப் போகிறேன். யாராவது வராவிட்டால் அவரை உயிரோடு விடமாட்டேன்” என்று சொன்னார். ஆனால் பாகாலின் பக்தர்களைக் கொன்றுபோடுவதற்காகத்தான் யெகூ இப்படித் திட்டம் போட்டார். 20  அதோடு, “பாகாலுக்கு விசேஷ திருவிழா நடத்தப்போகிறோம் என்று அறிவியுங்கள்” என்று சொன்னார். அவர்கள் அதை அறிவித்தார்கள். 21  அதன் பின்பு, இஸ்ரவேல் தேசம் முழுவதும் யெகூ இந்தச் செய்தியை அனுப்பினார். பாகாலின் பக்தர்கள் எல்லாரும் கூடிவந்தார்கள். ஒருவர்கூட வராமல் இருக்கவில்லை. அவர்கள் எல்லாரும் பாகால் கோயிலுக்குள்+ போனார்கள், அந்தக் கோயிலே பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. 22  அப்போது யெகூ துணிமணி அறைக்குப் பொறுப்பாளராக இருந்தவரைக் கூப்பிட்டு, “பாகாலின் பக்தர்கள் எல்லாருக்கும் உடைகளைக் கொண்டுவந்து கொடுங்கள்” என்று சொன்னார். அவரும் உடைகளைக் கொண்டுவந்து அவர்களிடம் கொடுத்தார். 23  பின்பு, யெகூவும் ரேகாபின் மகன் யோனதாபும்+ பாகால் கோயிலுக்குள் போனார்கள். அப்போது யெகூ அங்கிருந்த பாகால் பக்தர்களிடம், “நன்றாகத் தேடிப் பாருங்கள், யெகோவாவை வணங்குகிறவர்கள் யாரும் இங்கே இருக்கக் கூடாது. பாகாலின் பக்தர்கள் மட்டும்தான் இங்கே இருக்க வேண்டும்” என்று சொன்னார். 24  கடைசியில், பலிகளையும் தகன பலிகளையும் கொடுப்பதற்காக அவர்கள் உள்ளே போனார்கள். யெகூ தன்னுடைய ஆட்கள் 80 பேரை கோயிலுக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்தார். அவர்களிடம், “நான் உங்கள் கையில் ஒப்படைக்கிற இந்த ஆட்களில் எவனையாவது நீங்கள் தப்பிக்கவிட்டால், அவனுக்குப் பதிலாக உங்கள் உயிரை எடுத்துவிடுவேன்” என்று சொல்லியிருந்தார். 25  தகன பலி கொடுத்தவுடன் காவலாளிகளையும் படை அதிகாரிகளையும் யெகூ கூப்பிட்டு, “உள்ளே வந்து வெட்டிக் கொல்லுங்கள், ஒருவனைக்கூட விடாதீர்கள்!”+ என்று கட்டளையிட்டார். உடனே காவலாளிகளும் படை அதிகாரிகளும் உள்ளே போய் அவர்களை வாளால் வெட்டிக் கொன்றார்கள், உடல்களை வெளியே வீசினார்கள். பாகால் கோயிலின் கருவறைவரைக்கும்* போய் அவர்களை வெட்டிச் சாய்த்தார்கள். 26  பின்பு, அந்தக் கோயிலின் பூஜைத் தூண்களை+ வெளியே கொண்டுவந்து அவை எல்லாவற்றையும் சுட்டெரித்தார்கள்.+ 27  அதோடு, பாகாலுக்காக நிறுத்தப்பட்ட பூஜைத் தூணைத் தகர்த்துப்போட்டார்கள்.+ பாகால் கோயிலை+ இடித்துப்போட்டு, அதைப் பொதுக் கழிப்பிடமாக ஆக்கினார்கள். இன்றுவரை அது அப்படித்தான் இருக்கிறது. 28  இப்படி, பாகால் வழிபாட்டை இஸ்ரவேலிலிருந்து யெகூ ஒழித்துக்கட்டினார். 29  ஆனால், இஸ்ரவேலர்களைப் பாவம் செய்யத் தூண்டிய நேபாத்தின் மகன் யெரொபெயாமுடைய பாவ வழியைவிட்டு அவர் விலகவில்லை; பெத்தேலிலும் தாணிலும் அவர் வைத்திருந்த தங்கக் கன்றுக்குட்டிகளை+ அழிக்காமல் அப்படியே விட்டுவைத்தார். 30  பின்பு யெகோவா யெகூவிடம், “ஆகாபின் வம்சத்துக்கு+ என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று என் உள்ளத்தில் நினைத்திருந்தேனோ அதையெல்லாம் செய்து என் விருப்பத்தை நிறைவேற்றினாய், நீ எல்லாவற்றையும் நன்றாகச் செய்தாய். அதனால், உன் வாரிசுகள் நான்கு தலைமுறையாக இஸ்ரவேலின் சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஆட்சி செய்வார்கள்”+ என்று சொன்னார். 31  ஆனால், இஸ்ரவேலின் கடவுளான யெகோவா கொடுத்த திருச்சட்டத்துக்கு யெகூ முழு இதயத்தோடு கீழ்ப்படிந்து நடக்கவில்லை,+ அதற்குக் கவனம் செலுத்தவில்லை. இஸ்ரவேலர்களைப் பாவம் செய்யத் தூண்டிய யெரொபெயாமின் பாவ வழியைவிட்டு விலகவில்லை.+ 32  அந்தக் காலத்தில், மற்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்ரவேல் தேசத்தைக் கைப்பற்றுவதற்கு யெகோவா விட்டுவிட்டார். இஸ்ரவேலின் எல்லா பிரதேசங்களிலும் அசகேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தான்.+ 33  யோர்தானுக்குக் கிழக்கே இருந்த கீலேயாத் பிரதேசம் முழுவதையும், அதாவது காத், ரூபன், மனாசே கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள்+ குடியிருந்த பிரதேசம் முழுவதையும், தாக்கிவந்தான். அர்னோன் பள்ளத்தாக்கு* பக்கத்தில் இருந்த ஆரோவேர் தொடங்கி கீலேயாத், பாசான்+ பிரதேசங்களும் இதில் அடங்கியிருந்தன. 34  யெகூவின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களைப் பற்றியும், அவர் செய்த எல்லாவற்றைப் பற்றியும், அவருடைய வீரதீர செயல்கள் எல்லாவற்றைப் பற்றியும் இஸ்ரவேல் ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 35  யெகூ இறந்த* பின்பு, சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பிறகு அவருடைய மகன் யோவாகாஸ் ராஜாவானார்.+ 36  இஸ்ரவேலின் ராஜாவான யெகூ சமாரியாவில் 28 வருஷங்கள் ஆட்சி செய்தார்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “ஆகாபைக் கவனித்துக்கொண்டவர்களுக்கும்.”
வே.வா., “மூப்பர்களுக்கும்.”
வே.வா., “நேர்மையானவனை.”
வே.வா., “நீதிமான்கள்.”
நே.மொ., “தரையில் விழாது.”
அநேகமாக, மயிர் கத்தரிப்பதற்காக ஆடுகளைக் கட்டி வைக்கிற இடம்.
வே.வா., “யெகோவாவுக்காக எனக்கு இருக்கிற பக்திவைராக்கியத்தைப் பார்.”
நே.மொ., “நகரம்வரைக்கும்.” கோட்டை போன்ற அமைப்பாக இருந்திருக்கலாம்.
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கு.”
நே.மொ., “தன் முன்னோர்களோடு படுக்க வைக்கப்பட்ட.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா