யோசுவா 3:1-17

3  பின்பு யோசுவாவும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் விடியற்காலையில் எழுந்து, சித்தீமிலிருந்து+ புறப்பட்டு யோர்தான் ஆற்றங்கரைக்கு வந்தார்கள். அதைக் கடப்பதற்குமுன் ராத்திரி அங்கே தங்கினார்கள்.  மூன்று நாட்களுக்குப்பின் ஜனங்களின் அதிகாரிகள்+ முகாம் முழுவதும் போய்,  எல்லா ஜனங்களிடமும், “உங்கள் கடவுளாகிய யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியை லேவியர்களாகிய குருமார்கள் சுமந்துகொண்டு போவதை+ நீங்கள் பார்க்கும்போது, உடனே உங்களுடைய இடத்தைவிட்டுப் புறப்பட்டு அதன் பின்னால் போக வேண்டும்.  அப்போதுதான் நீங்கள் போக வேண்டிய வழி உங்களுக்குத் தெரியும். ஏனென்றால், அந்த வழியில் இதற்கு முன்னால் நீங்கள் போனதில்லை. உங்களுக்கும் அந்தப் பெட்டிக்கும் இடையே சுமார் 2,920 அடி* தூரம் இருக்க வேண்டும். அதைத் தாண்டி நீங்கள் போகக் கூடாது” என்று சொன்னார்கள்.  அப்போது யோசுவா ஜனங்களிடம், “நாளைக்கு யெகோவா உங்கள் நடுவே அற்புதங்கள் செய்யப்போகிறார்.+ அதனால் உங்களைப் புனிதப்படுத்திக்கொள்ளுங்கள்”+ என்று சொன்னார்.  பின்பு யோசுவா குருமார்களிடம், “நீங்கள் ஒப்பந்தப் பெட்டியை+ எடுத்துக்கொண்டு ஜனங்களுக்கு முன்னால் போங்கள்” என்று சொன்னார். அதனால், அவர்கள் ஒப்பந்தப் பெட்டியை எடுத்துக்கொண்டு ஜனங்களுக்கு முன்னால் போனார்கள்.  பின்பு யெகோவா யோசுவாவிடம், “இந்த நாளிலிருந்து இஸ்ரவேலர்கள் எல்லாருடைய கண் முன்னாலும் நான் உன்னைக் கௌரவப்படுத்துவேன்.+ நான் மோசேயுடன் இருந்ததுபோல்+ உன்னோடும் இருப்பேன்+ என்பதை அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.  ஒப்பந்தப் பெட்டியைச் சுமக்கிற குருமார்கள் யோர்தான் ஆற்றில் கால்வைத்தவுடன், அங்கேயே அசையாமல் நிற்க வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளை கொடு”+ என்றார்.  பின்பு யோசுவா இஸ்ரவேலர்களிடம், “இங்கே வந்து உங்கள் கடவுளாகிய யெகோவாவின் வார்த்தைகளைக் கேளுங்கள்” என்று சொன்னார். 10  அதன்பின், “உயிருள்ள கடவுள் உங்கள் நடுவில் இருக்கிறார்+ என்பதையும், கானானியர்கள், ஏத்தியர்கள், ஏவியர்கள், பெரிசியர்கள், கிர்காசியர்கள், எமோரியர்கள், எபூசியர்கள் ஆகியவர்களை உங்கள் முன்னாலிருந்து நிச்சயம் துரத்திவிடுவார்+ என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்வதற்கு அடையாளமாக, 11  முழு பூமிக்கும் எஜமானாகிய கடவுளின் ஒப்பந்தப் பெட்டி உங்களுக்கு முன்னால் யோர்தானுக்குள் கொண்டுபோகப்படும். 12  இப்போது இஸ்ரவேலின் ஒவ்வொரு கோத்திரத்துக்கும் ஒருவர் என்று 12 ஆண்களைத் தேர்ந்தெடுங்கள்.+ 13  முழு பூமிக்கும் எஜமானாகிய யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைச் சுமக்கிற குருமார்களின் பாதங்கள் யோர்தான் ஆற்றில் பட்டவுடன், மேலிருந்து ஓடிவரும் தண்ணீர் அப்படியே அணைபோல்* நிற்கும்”+ என்று சொன்னார். 14  யோர்தானைக் கடப்பதற்காக ஜனங்கள் தங்களுடைய கூடாரங்களிலிருந்து புறப்பட்டபோது, ஒப்பந்தப் பெட்டியைச்+ சுமக்கிற குருமார்கள் அவர்களுக்கு முன்னால் போனார்கள். 15  அறுவடைக் காலம் முழுவதும் யோர்தானில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும்.+ பெட்டியைச் சுமக்கிற குருமார்கள் யோர்தானுக்குப் போய்ச் சேர்ந்து, ஆற்றில் கால்வைத்த உடனேயே, 16  மேலிருந்து ஓடிவந்த தண்ணீர் அப்படியே நின்றது. ரொம்பத் தூரத்தில், அதாவது சார்தானின் பக்கத்தில் உள்ள ஆதாம் நகரத்தில், அணைபோல்* நின்றது. கீழே ஓடிய தண்ணீர் வடிந்துகொண்டே போய் உப்புக் கடல்* என்ற அரபா கடலில் கலந்தது. அதனால், ஜனங்கள் எல்லாரும் எரிகோவுக்கு நேரெதிராகக் கடந்துபோனார்கள். 17  இஸ்ரவேல் தேசத்தார் எல்லாருமே கடந்துபோகும்வரை,+ யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைச் சுமந்த குருமார்கள் யோர்தானின் நடுவே உலர்ந்த தரையில் நின்றுகொண்டிருந்தார்கள்.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “2,000 முழ.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “சுவர்போல்.”
வே.வா., “சுவர்போல்.”
அதாவது, “சவக் கடல்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா