மாற்கு எழுதியது 15:1-47

15  பொழுது விடிந்தவுடனே, முதன்மை குருமார்களும் பெரியோர்களும்* வேத அறிஞர்களும், சொல்லப்போனால் நியாயசங்கத்தின் உறுப்பினர்கள் எல்லாரும், கூடிப்பேசினார்கள்; அவர்கள் இயேசுவின் கைகளைக் கட்டி, பிலாத்துவிடம் கொண்டுபோய் ஒப்படைத்தார்கள்.+  அப்போது பிலாத்து அவரிடம், “நீ யூதர்களுடைய ராஜாவா?”+ என்று கேட்டார்; அதற்கு அவர், “அதை நீங்களே சொல்லிவிட்டீர்கள்”+ என்றார்.  ஆனால், முதன்மை குருமார்கள் அவர்மேல் பல குற்றங்களைச் சுமத்திக்கொண்டிருந்தார்கள்.  மறுபடியும் பிலாத்து அவரிடம், “இதோ, இவர்கள் உனக்கு எதிராக எத்தனையோ குற்றங்களைச் சுமத்துகிறார்களே.+ நீ எந்தப் பதிலும் சொல்ல மாட்டாயா?”+ என்று கேட்டார்.  அப்போதுகூட இயேசு எந்தப் பதிலும் சொல்லவில்லை, அதைப் பார்த்து பிலாத்து ஆச்சரியப்பட்டார்.+  ஒவ்வொரு வருஷமும் பஸ்கா பண்டிகையின்போது, மக்கள் கேட்டுக்கொள்கிறபடி ஒரு சிறைக்கைதியை விடுதலை செய்வது பிலாத்துவின் வழக்கம்.+  ஒரு கலகத்தின்போது கொலை செய்ததற்காகச் சில தேசத் துரோகிகள் அப்போது சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் பரபாஸ் என்ற ஒருவனும் இருந்தான்.  பிலாத்துவிடம் மக்கள் கூட்டமாக வந்து, அவர் வழக்கமாகச் செய்வதுபோல் இப்போதும் தங்களுக்குச் செய்ய வேண்டுமென்று கேட்டார்கள்.  அதற்கு அவர், “யூதர்களுடைய ராஜாவை நான் உங்களுக்கு விடுதலை செய்யட்டுமா?”+ என்று கேட்டார். 10  ஏனென்றால், முதன்மை குருமார்கள் பொறாமையால்தான் அவரைத் தன்னிடம் ஒப்படைத்திருந்தார்கள் என்பது பிலாத்துவுக்குத் தெரிந்திருந்தது.+ 11  ஆனால், அவருக்குப் பதிலாக பரபாசை விடுதலை செய்யச் சொல்லி முதன்மை குருமார்கள் அந்தக் கூட்டத்தாரைத் தூண்டினார்கள்.+ 12  மறுபடியும் பிலாத்து அவர்களிடம், “அப்படியானால், யூதர்களுடைய ராஜா என்று நீங்கள் சொல்கிற இவனை நான் என்ன செய்ய வேண்டும்?”+ என்று கேட்டார். 13  “இவனை மரக் கம்பத்தில் அறைந்து கொல்லுங்கள்!”+ என்று மறுபடியும் கத்தினார்கள். 14  அப்போது பிலாத்து, “ஏன்? இவன் என்ன குற்றம் செய்தான்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இவனை மரக் கம்பத்தில் அறைந்து கொல்லுங்கள்!” என்று இன்னும் அதிகமாகக் கூச்சல் போட்டார்கள்.+ 15  பிலாத்து அந்தக் கூட்டத்தாரைத் திருப்திப்படுத்துவதற்காக பரபாசை விடுதலை செய்தார்; இயேசுவையோ சாட்டையால் அடித்து,+ மரக் கம்பத்தில்* அறைந்து கொல்லும்படி படைவீரர்களிடம் கட்டளையிட்டார்.+ 16  பின்பு, படைவீரர்கள் அவரை ஆளுநர் மாளிகையின் முற்றத்துக்குக் கொண்டுபோய், மற்ற எல்லா படைவீரர்களையும் ஒன்றுகூட்டினார்கள்.+ 17  அவருக்கு ஊதா நிற சால்வையைப் போர்த்தி, முள்கிரீடம் செய்து அவர் தலைமேல் வைத்தார்கள். 18  “யூதர்களுடைய ராஜாவே, வாழ்க!”+ என்று சொல்ல ஆரம்பித்தார்கள். 19  பின்பு, ஒரு கோலினால் அவருடைய தலையில் பல தடவை அடித்தார்கள், அவர்மேல் துப்பினார்கள்; அவர் முன்னால் மண்டிபோட்டு தலைவணங்கினார்கள். 20  அவரைக் கேலி செய்த பின்பு, கடைசியாக அந்த ஊதா நிற சால்வையை எடுத்துவிட்டு அவருடைய மேலங்கியை அவருக்குப் போட்டுவிட்டார்கள்; பின்பு, அவரை மரக் கம்பத்தில் வைத்து ஆணியடிப்பதற்காக வெளியே கொண்டுபோனார்கள்.+ 21  அப்போது, நாட்டுப்புறத்திலிருந்து வந்துகொண்டிருந்த சிரேனே ஊரைச் சேர்ந்த சீமோனைக் கட்டாயப்படுத்தி, இயேசு சுமந்து வந்த சித்திரவதைக் கம்பத்தை* சுமக்க வைத்தார்கள்; அவர் அலெக்சந்தர் மற்றும் ரூப்பு என்பவர்களின் அப்பா.+ 22  பின்பு, கொல்கொதா என்ற இடத்துக்கு இயேசுவைக் கொண்டுபோனார்கள்; அதற்கு “மண்டையோடு” என்று அர்த்தம்.+ 23  அங்கே, போதையூட்டும் வெள்ளைப்போளத்தை* திராட்சமதுவில் கலந்து இயேசுவுக்குக் கொடுக்கப் பார்த்தார்கள்,+ ஆனால் அவர் அதைக் குடிக்கவில்லை. 24  பின்பு, அவரை மரக் கம்பத்தில் வைத்து ஆணியடித்தார்கள்; அவருடைய மேலங்கிகளில் யாருக்கு எது என்று குலுக்கல் போட்டுப் பார்த்து அவற்றைப் பங்குபோட்டுக்கொண்டார்கள்.+ 25  அவரை மரக் கம்பத்தில் வைத்து ஆணியடித்தபோது மூன்றாம் மணிநேரமாக* இருந்தது. 26  அவருக்கு எதிரான குற்றச்சாட்டைத் தெரியப்படுத்தும்படி, “யூதர்களுடைய ராஜா”+ என்று எழுதி வைத்தார்கள். 27  அதோடு, அவருடைய வலது பக்கத்தில் ஒரு கொள்ளைக்காரனையும், இடது பக்கத்தில் ஒரு கொள்ளைக்காரனையும் மரக் கம்பங்களில் ஏற்றினார்கள்.+ 28  *—— 29  அந்த வழியாகப் போனவர்கள் கேலியாகத் தலையை ஆட்டி,+ “ஹா! ஆலயத்தைத் தரைமட்டமாக்கி மூன்று நாட்களில் கட்டப்போகிறவனே,+ 30  இப்போது சித்திரவதைக் கம்பத்தைவிட்டு* இறங்கி வந்து, உன்னை நீயே காப்பாற்றிக்கொள்” என்று சொல்லி அவரைப் பழித்துப் பேசினார்கள். 31  இதேபோல், வேத அறிஞர்களோடு சேர்ந்து முதன்மை குருமார்கள் அவரைக் கேலி செய்து, “மற்றவர்களைக் காப்பாற்றினான், தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை!+ 32  இஸ்ரவேலின் ராஜாவான கிறிஸ்து இப்போது சித்திரவதைக் கம்பத்தைவிட்டு* கீழே இறங்கி வருகிறானா பார்ப்போம், பிறகு அவனை நம்புவோம்”+ என்று பேசிக்கொண்டார்கள். அவர் பக்கத்திலே மரக் கம்பங்களில் ஏற்றப்பட்டவர்களும் அவரைப் பழித்துப் பேசினார்கள்.+ 33  ஆறாம் மணிநேரமானபோது* பூமி முழுவதும் இருள் சூழ்ந்தது; ஒன்பதாம் மணிநேரம்வரை* அப்படியே இருந்தது.+ 34  ஒன்பதாம் மணிநேரத்தில், “ஏலி, ஏலி, லாமா சபக்தானி?” என்று இயேசு சத்தமாகச் சொன்னார்; அதற்கு, “என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்கள்?”+ என்று அர்த்தம். 35  பக்கத்தில் நின்றுகொண்டிருந்த சிலர் அதைக் கேட்டு, “இதோ! இவன் எலியாவைக் கூப்பிடுகிறான்” என்று சொன்னார்கள். 36  அப்போது ஒருவன் ஓடிப்போய், புளிப்பான திராட்சமதுவில் ஒரு கடற்பஞ்சை நனைத்து, அதை ஒரு கோலில் மாட்டி, குடிப்பதற்காக அவருக்குக் கொடுத்து,+ “பொறுங்கள்! எலியா இவனைக் கீழே இறக்கிவிட வருகிறாரா பார்ப்போம்” என்று சொன்னான். 37  பின்பு, இயேசு உரத்த குரலில் சத்தமிட்டு, இறந்துபோனார்.*+ 38  அப்போது, ஆலயத்தின் திரைச்சீலை*+ மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது.+ 39  அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்த படை அதிகாரி அவர் இறந்தபோது நடந்த எல்லா சம்பவங்களையும் பார்த்து, “நிச்சயமாகவே இந்த மனுஷர் கடவுளுடைய மகன்தான்”+ என்று சொன்னார். 40  பெண்களும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள்; அவர்களில் மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் அம்மாவான மரியாளும், சலோமேயும் இருந்தார்கள்.+ 41  அவர் கலிலேயாவில் இருந்தபோது அவர்கூடவே போய் அவருக்குப் பணிவிடை செய்துவந்தவர்கள் இவர்கள்தான்.+ அவரோடு எருசலேமுக்கு வந்திருந்த இன்னும் நிறைய பெண்களும் அங்கே இருந்தார்கள். 42  இதற்குள் சாயங்காலம் ஆகிவிட்டது, அது ஓய்வுநாளுக்கு முந்தின நாளான ஆயத்த நாளாகவும் இருந்தது. 43  அதனால், அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவரும், நியாயசங்கத்தின் மதிப்புக்குரிய உறுப்பினரும், கடவுளுடைய அரசாங்கத்துக்காகக் காத்திருந்தவருமான யோசேப்பு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பிலாத்துவிடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார்.+ 44  இயேசு அதற்குள் இறந்துவிட்டதைக் குறித்து பிலாத்து ஆச்சரியப்பட்டு, படை அதிகாரியைக் கூப்பிட்டு, ‘அவர் அதற்குள் இறந்துவிட்டாரா?’ என்று கேட்டார். 45  படை அதிகாரியிடம் அதை நிச்சயப்படுத்திக்கொண்ட பிறகு, அவருடைய உடலை எடுத்துக்கொள்ள யோசேப்புக்கு அனுமதி கொடுத்தார். 46  யோசேப்பு உயர்தரமான நாரிழை* துணியை வாங்கிவந்து, அவருடைய உடலைக் கீழே இறக்கி அந்தத் துணியால் சுற்றி, பாறையில் வெட்டப்பட்ட ஒரு கல்லறையில்* வைத்தார்;+ பின்பு, அந்தக் கல்லறை வாசலில் ஒரு கல்லை உருட்டி வைத்தார்.+ 47  மகதலேனா மரியாளும் யோசேயின் அம்மாவான மரியாளும் அவர் வைக்கப்பட்டிருந்த இடத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “மூப்பர்களும்.”
அதாவது, “காலை சுமார் 9 மணியாக.”
இணைப்பு A3-ஐப் பாருங்கள்.
அதாவது, “மதியம் சுமார் 12 மணியானபோது.”
அதாவது, “பிற்பகல் சுமார் 3 மணிவரை.”
வே.வா., ‘இறுதி மூச்சை விட்டார்.”
இது பரிசுத்த அறைக்கும் மகா பரிசுத்த அறைக்கும் இடையில் இருந்தது.
அதாவது, “லினன்.”
வே.வா., “நினைவுக் கல்லறையில்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா

ஆணி துளைக்கப்பட்ட குதிங்கால் எலும்பு
ஆணி துளைக்கப்பட்ட குதிங்கால் எலும்பு

4.5 அங். (11.5 செ.மீ.) நீளமுள்ள இரும்பு ஆணியால் துளைக்கப்பட்ட ஒரு மனித குதிங்கால் எலும்பு, 1968-ல் வட எருசலேமில் நடந்த புதைபொருள் ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டது. பிற்பாடு, அதேபோல் செய்யப்பட்ட ஒரு செயற்கை குதிங்கால் எலும்பைத்தான் இந்தப் படத்தில் பார்க்கிறோம். 1968-ல் கண்டெடுக்கப்பட்ட குதிங்கால் எலும்பு ரோமர்களின் காலத்தைச் சேர்ந்தது. ஆட்களை மரக் கம்பத்தில் அறைந்து கொல்ல ஆணிகள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதற்கு அந்தப் புதைபொருள் கண்டுபிடிப்பு ஒரு அத்தாட்சி. ஒருவேளை, இயேசு கிறிஸ்துவை மரக் கம்பத்தில் அறைவதற்காக ரோம வீரர்கள் அதுபோன்ற ஆணிகளைப் பயன்படுத்தியிருக்கலாம். அந்தக் குதிங்கால் எலும்பு, ஆஸ்யூரி என்ற ஒரு கல் பெட்டியில் கண்டெடுக்கப்பட்டது; அழுகிப்போன சடலத்தில் இருந்த உலர்ந்த எலும்புகள் இந்தப் பெட்டியில் வைக்கப்பட்டன. மரக் கம்பத்தில் கொல்லப்பட்டவர்கள் அடக்கமும் செய்யப்பட்டிருக்கலாம் என்பது இதிலிருந்து தெரிகிறது.

கல்லறை
கல்லறை

யூதர்கள் பொதுவாக இறந்தவர்களைக் குகைகளிலோ, பாறைகளில் வெட்டப்பட்ட அறைகளிலோ அடக்கம் செய்தார்கள். ராஜாக்களின் கல்லறைகளைத் தவிர மற்றவை நகரங்களுக்கு வெளியில் இருந்தன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள யூதர்களின் கல்லறைகளை வைத்துப் பார்க்கும்போது, அவை மிக எளிமையாக இருந்தன என்று தெரிகிறது. யூதர்கள் இறந்தவர்களை வழிபடாததாலும், மரணத்துக்குப் பிறகு ஒருவர் எங்கோ வாழ்கிறார் என்று நம்பாததாலும் அவர்களுடைய கல்லறைகள் அப்படி எளிமையாக இருந்திருக்கலாம்.