Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

A5

கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் கடவுளுடைய பெயர்

எபிரெய வேதாகமத்தின் மூலப் பதிவில் கடவுளுடைய தனிப்பட்ட பெயரைக் குறிக்கும் நான்கெழுத்துக்கள் (יהוה) கிட்டத்தட்ட 7,000 தடவை வருகின்றன என்பதை பைபிள் அறிஞர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் மூலப் பதிவில் அந்தப் பெயர் இருக்கவில்லை என்று பலர் நினைக்கிறார்கள். இதனால், புதிய ஏற்பாடு என்றழைக்கப்படுகிற பகுதியில் யெகோவா என்ற பெயரைப் பெரும்பாலான நவீன பைபிள் மொழிபெயர்ப்புகள் பயன்படுத்துவதில்லை. அந்த நான்கெழுத்துக்களைக் கொண்ட எபிரெய வேதாகம மேற்கோள்களை அவர்கள் மொழிபெயர்க்கும்போதுகூட, கடவுளுடைய தனிப்பட்ட பெயருக்குப் பதிலாக “கர்த்தர்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால், பரிசுத்த பைபிளின் புதிய உலக மொழிபெயர்ப்பில் இப்படிச் செய்யப்படவில்லை. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் மொத்தம் 237 தடவை யெகோவா என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதை மொழிபெயர்த்தவர்கள் இரண்டு முக்கியமான விஷயங்களை மனதில் வைத்தே அப்படிச் செய்திருக்கிறார்கள்: (1) இன்றைக்கு நம்மிடம் இருக்கும் கிரேக்க கையெழுத்துப் பிரதிகள் மூலப் பதிவுகள் கிடையாது. இன்றுள்ள ஆயிரக்கணக்கான நகல்களில் பெரும்பாலானவை, மூலப் பதிவுகள் எழுதப்பட்டு குறைந்தபட்சம் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்பு எழுதப்பட்டவை. (2) இதற்கிடையில், கையெழுத்துப் பிரதிகளை நகலெடுத்தவர்கள் கடவுளுடைய பெயரைக் குறிக்கும் நான்கெழுத்துக்கள் இருந்த இடங்களில் கைரியாஸ் (கர்த்தர்) என்ற கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்தினார்கள்; அல்லது, கைரியாஸ் என்று ஏற்கெனவே இருந்த நகல்களைப் பார்த்து நகலெடுத்தார்கள்.

மூல கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் அந்த நான்கெழுத்துக்கள் இருந்தன என்பதற்கு ஆணித்தரமான ஆதாரங்கள் இருப்பதாக புதிய உலக பைபிள் மொழிபெயர்ப்புக் குழுவினர் முடிவு செய்தார்கள். அந்த ஆதாரங்கள் இவைதான்:

  • இயேசுவின் காலத்திலும் அப்போஸ்தலர்களின் காலத்திலும் பயன்படுத்தப்பட்ட எபிரெய வேதாகமத்தின் பிரதிகளில் அந்த நான்கெழுத்துக்கள் எல்லா இடங்களிலும் இருந்தன. இது உண்மை இல்லை என்று முன்பு சிலர் வாதாடினார்கள். ஆனால், முதல் நூற்றாண்டைச் சேர்ந்த எபிரெய வேதாகமத்தின் பிரதிகள் கும்ரான் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு, இது உண்மைதான் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபணமானது.

  • இயேசுவின் காலத்திலும் அப்போஸ்தலர்களின் காலத்திலும் பயன்படுத்தப்பட்ட செப்டுவஜன்ட் மொழிபெயர்ப்பிலும் கடவுளுடைய பெயர் இருந்தது. செப்டுவஜன்ட்டின், அதாவது எபிரெயுவிலிருந்து கிரேக்கில் மொழிபெயர்க்கப்பட்ட எபிரெய வேதாகமத்தின், கையெழுத்துப் பிரதிகளில் அந்த நான்கெழுத்துக்கள் இல்லை என்று பல நூற்றாண்டுகளாக அறிஞர்கள் நினைத்துக்கொண்டு இருந்தார்கள். ஆனால் 20-ஆம் நூற்றாண்டின் மத்திபத்தில், இயேசுவின் காலத்தைச் சேர்ந்த கிரேக்க செப்டுவஜன்ட் மொழிபெயர்ப்பின் மிகப் பழமையான சில துண்டுகள் அறிஞர்களின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டன. அவற்றில் கடவுளுடைய தனிப்பட்ட பெயர் எபிரெய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தன. இதிலிருந்து, இயேசுவின் நாளிலிருந்த செப்டுவஜன்ட் நகல்களில் கடவுளுடைய பெயர் இருந்ததென்று நன்றாகத் தெரிகிறது. ஆனால் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்குள், கிரேக்க செப்டுவஜன்ட்டின் முக்கியமான கையெழுத்துப் பிரதிகளில் (கோடக்ஸ் வாட்டிகானஸ், கோடக்ஸ் சைனைட்டிகஸ் போன்றவற்றில்) கடவுளுடைய பெயர் ஆதியாகமத்திலிருந்து மல்கியா வரையிலான புத்தகங்களில் இல்லாமல் போய்விட்டது. (ஆனால், பழமையான கையெழுத்துப் பிரதிகளில் அந்தப் பெயர் இருந்தது.) அதனால், அந்தக் காலப்பகுதி முதற்கொண்டு பாதுகாக்கப்பட்ட “புதிய ஏற்பாடு” என்றழைக்கப்படுகிற கிரேக்க வேதாகமத்தின் பிரதிகளில் கடவுளுடைய பெயர் இல்லாதது ஆச்சரியமில்லை.

    ‘நான் என்னுடைய தகப்பனின் பெயரில் வந்திருக்கிறேன்’ என்று இயேசு நேரடியாகச் சொன்னார். அதோடு, ‘தகப்பனுடைய பெயரில்தான்’ எல்லா செயல்களையும் செய்ததாகச் சொன்னார்

  • கடவுளுடைய பெயரை இயேசு அடிக்கடி பயன்படுத்தியதாகவும், அதை மற்றவர்களுக்குச் சொன்னதாகவும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமமே குறிப்பிடுகிறது. (யோவான் 17:6, 11, 12, 26) ‘நான் என்னுடைய தகப்பனின் பெயரில் வந்திருக்கிறேன்’ என்று இயேசு நேரடியாகச் சொன்னார். அதோடு, ‘தகப்பனுடைய பெயரில்தான்’ எல்லா செயல்களையும் செய்ததாகச் சொன்னார்.—யோவான் 5:43; 10:25.

  • கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால்தான் பரிசுத்த எபிரெய வேதாகமத்தோடு சேர்க்கப்பட்டது என்பதால், இதில் மட்டும் யெகோவாவின் பெயர் இல்லாமல் போனது முரண்பாடாக இருக்கிறது. சுமார் கி.பி. முதல் நூற்றாண்டின் மத்திபத்தில், எருசலேமில் இருந்த மூப்பர்களிடம் சீஷராகிய யாக்கோபு இப்படிச் சொன்னார்: “கடவுள் முதல் தடவையாக மற்ற தேசத்து மக்கள்மேல் தன் கவனத்தைத் திருப்பி, அவர்கள் மத்தியிலிருந்து தன்னுடைய பெயருக்கென்று ஒரு ஜனத்தைப் பிரித்தெடுத்த விதத்தைப் பற்றி சிமியோன் நமக்கு நன்றாக விவரித்துச் சொன்னார்.” (அப்போஸ்தலர் 15:14) முதல் நூற்றாண்டில் வாழ்ந்த யாருமே கடவுளுடைய பெயரைத் தெரியாமலோ பயன்படுத்தாமலோ இருந்திருந்தால், யாக்கோபு இப்படிச் சொன்னதில் அர்த்தமே இருந்திருக்காது.

  • கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் கடவுளுடைய பெயரின் சுருக்கம் இருக்கிறது. வெளிப்படுத்துதல் 19:1, 3, 4, 6 ஆகிய வசனங்களிலுள்ள “அல்லேலுயா” என்ற வார்த்தையில் கடவுளுடைய பெயரின் சுருக்கம் காணப்படுகிறது. இந்த எபிரெய வார்த்தையின் நேரடி அர்த்தம் “‘யா’வைப் புகழுங்கள்” என்பதாகும். “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம். கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் வருகிற நிறைய பெயர்கள் கடவுளுடைய பெயரிலிருந்து எடுக்கப்பட்டவை. சொல்லப்போனால், இயேசு என்ற பெயருக்கு “யெகோவாவே மீட்பு” என்பதுதான் அர்த்தம் என்று சில புத்தகங்கள் விளக்குகின்றன.

  • யூத கிறிஸ்தவர்கள் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தினார்கள் என்பது அவர்கள் எழுதிய பழங்கால யூத புத்தகங்களிலிருந்து தெரிகிறது. ஓய்வுநாளில் எரிக்கப்பட்ட கிறிஸ்தவ புத்தகங்களைப் பற்றி டோஸெப்டா (சுமார் கி.பி. 300-ஆம் வருஷத்துக்குள் எழுதி முடிக்கப்பட்ட வாய்மொழி சட்டங்களின் தொகுப்பு) இப்படிச் சொல்கிறது: “நற்செய்தியாளர்களுடைய புத்தகங்களையும், மினிம் என்பவர்களுடைய [யூத கிறிஸ்தவர்கள் என்று கருதப்பட்டவர்களுடைய] புத்தகங்களையும் அவர்கள் தீயிலிருந்து காப்பாற்றுவதில்லை. அவை இருந்த இடத்திலேயே அவற்றை எரித்துவிடுகிறார்கள். கடவுளுடைய பெயர் இருந்த எல்லா பாகங்களோடும் சேர்த்து அந்தப் புத்தகங்களை எரித்துவிடுகிறார்கள்.” கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த கலிலேயரான ரபீ யோசே இப்படிச் சொன்னதாக அதே தொகுப்பு குறிப்பிடுகிறது: ஓய்வுநாள் தவிர மற்ற நாட்களில், “அந்தப் புத்தகங்களில் [அதாவது, கிறிஸ்தவ புத்தகங்களில்] கடவுளுடைய பெயர் வருகிற இடங்களை வெட்டி எடுத்து பத்திரமாக வைத்துவிடுகிறார்கள், மற்ற பாகங்களை எரித்துவிடுகிறார்கள்.”

  • கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திலுள்ள எபிரெய வேதாகம மேற்கோள்களில் கடவுளுடைய பெயர் இருந்திருக்கும் என்று சில பைபிள் அறிஞர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். “புதிய ஏற்பாட்டில் கடவுளுடைய பெயரைக் குறிக்கும் நான்கெழுத்துக்கள்” என்ற தலைப்பில் தி ஆன்க்கர் பைபிள் டிக்‍ஷ்னரி இப்படிச் சொல்கிறது: “பு[திய] ஏ[ற்பாடு] முதன்முதலில் எழுதப்பட்டபோது, அதிலுள்ள ப[ழைய] ஏ[ற்பாட்டின்] சில மேற்கோள்களிலோ எல்லா மேற்கோள்களிலுமோ கடவுளுடைய பெயரைக் குறிக்கும் நான்கெழுத்துக்கள், அதாவது யாவே என்ற பெயர், பயன்படுத்தப்பட்டதற்கு ஆதாரம் இருக்கிறது.” பேராசிரியர் ஜார்ஜ் ஹோவார்ட் இப்படி எழுதினார்: “ஆரம்பக் கால சர்ச் பயன்படுத்திய கிரேக்க பைபிளின் [செப்டுவஜன்ட்டின்] பிரதிகளில் கடவுளுடைய பெயரைக் குறிக்கும் நான்கெழுத்துக்கள் இருந்தன. அதனால், பு[திய] ஏ[ற்பாட்டை] எழுதியவர்கள் வசனங்களை மேற்கோள் காட்டியபோது அந்த நான்கெழுத்துக்களை அப்படியே பயன்படுத்தியிருப்பார்கள் என்று நம்புவது நியாயமானதே.”

  • பிரபல பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த மொழிபெயர்ப்பாளர்களில் சிலர், புதிய உலக மொழிபெயர்ப்பு வெளியிடப்படுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தினார்கள். அந்த மொழிபெயர்ப்பாளர்களும் அவர்களுடைய மொழிபெயர்ப்புகளும் இவைதான்: ஹெர்மன் ஹைன்ஃபெட்டர் என்பவரின் எ லிட்ரல் டிரான்ஸ்லேஷன் ஆஃப் த நியு டெஸ்டமென்ட் . . . ஃப்ரம் த டெக்ஸ்ட் ஆஃப் த வாடிகன் மேனுஸ்கிரிப்ட் (1863); பென்ஜமின் வில்சன் என்பவரின் த எம்ஃபடிக் டயக்லாட் (1864); ஜார்ஜ் பார்க்கர் ஸ்டீவன்ஸ் என்பவரின் எபிஸில்ஸ் ஆஃப் பால் இன் மாடர்ன் இங்லிஷ் (1898); டபிள்யூ. ஜி. ரதர்ஃபர்ட் என்பவரின் செயின்ட் பால்ஸ் எபிஸில் டு த ரோமன்ஸ் (1900); லண்டன் பிஷப் ஜெ.டபிள்யு.சி. வேன்ட் என்பவரின் த நியு டெஸ்டமென்ட் லெட்டர்ஸ் (1946). அதோடு, 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பைபிளை ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்த்த பெப்லோ பெஸ்ஸன் என்பவர், “ஜெஹோவா” என்ற பெயரை லூக்கா 2:15-ம் வசனத்திலும் யூதா 14-ம் வசனத்திலும் பயன்படுத்தியிருக்கிறார். அதோடு, கடவுளுடைய பெயர் எங்கெல்லாம் வருவது சரியாக இருக்கும் என்பதைக் கிட்டத்தட்ட 100 அடிக்குறிப்புகளில் காட்டியிருக்கிறார். இந்த மொழிபெயர்ப்புகள் வெளிவருவதற்குப் பல வருஷங்களுக்கு முன்பே, அதாவது 16-ஆம் நூற்றாண்டிலிருந்தே, கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் எபிரெய மொழிபெயர்ப்புகள், கடவுளுடைய பெயரைக் குறிக்கும் நான்கெழுத்துக்களைப் பல இடங்களில் பயன்படுத்தின. ஜெர்மன் மொழியில் மட்டும், குறைந்தபட்சம் 11 மொழிபெயர்ப்புகள் “ஜெஹோவா” என்ற பெயரை (அல்லது, “யாவே” என்ற எபிரெய வார்த்தையின் எழுத்துப்பெயர்ப்பை) கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் பயன்படுத்தியிருக்கின்றன; வேறு நான்கு மொழிபெயர்ப்பாளர்கள் “கர்த்தர்” என்ற வார்த்தைக்குப் பக்கத்தில் “ஜெஹோவா” என்று அடைப்புக்குறிக்குள் போட்டிருக்கிறார்கள். 70-க்கும் மேற்பட்ட ஜெர்மன் மொழிபெயர்ப்புகள் கடவுளுடைய பெயரை அடிக்குறிப்புகளில் அல்லது விளக்கவுரைகளில் பயன்படுத்தியிருக்கின்றன.

    அப்போஸ்தலர் 2:34-ல் கடவுளுடைய பெயர், பென்ஜமின் வில்சன் என்பவரின் த எம்ஃபடிக் டயக்லாட் (1864)

  • நூற்றுக்கும் அதிகமான மொழிகளில் வெளிவந்த கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் கடவுளுடைய பெயர் இருக்கிறது. ஆப்பிரிக்கர்கள், பழங்குடி அமெரிக்கர்கள், ஆசிய மக்கள், ஐரோப்பியர்கள், பசிபிக் தீவு மக்கள் ஆகியவர்களின் பல மொழிகளிலுள்ள பைபிளிலும் கடவுளுடைய பெயர் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலே சொல்லப்பட்டதைப் போன்ற காரணங்களுக்காகத்தான் இந்த மொழிபெயர்ப்பாளர்கள் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தினார்கள். கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் இந்த மொழிபெயர்ப்புகளில் சில, சமீபத்தில்தான் வெளிவந்தன. உதாரணமாக, ரோட்டுமன் பைபிளில் (1999) 48 வசனங்களில் 51 தடவை “ஜிஹோவா” என்ற பெயர் இருக்கிறது; இந்தோனேஷியாவைச் சேர்ந்த பாடாக் (டோபா) மொழிபெயர்ப்பில் (1989) “ஜஹோவா” என்ற பெயர் 110 தடவை வருகிறது.

    மாற்கு 12:29, 30-ல் கடவுளுடைய பெயர், ஹவாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பைபிள்

அதனால், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் யெகோவா என்ற கடவுளுடைய பெயரை அதற்குரிய இடங்களில் பயன்படுத்துவதற்குத் தகுந்த காரணங்கள் இருக்கின்றன. புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை மொழிபெயர்த்தவர்கள் அதைத்தான் செய்திருக்கிறார்கள். கடவுளுடைய பெயர்மேல் இருக்கும் ஆழ்ந்த மரியாதையினாலும், மூலப் பதிவிலுள்ள எதையும் நீக்கிவிடக் கூடாதென்ற பயத்தினாலும் அப்படிச் செய்திருக்கிறார்கள்.—வெளிப்படுத்துதல் 22:18, 19.