Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நான் கடவுளுடைய நண்பராக ஆவது எப்படி?

நான் கடவுளுடைய நண்பராக ஆவது எப்படி?

அதிகாரம் 35

நான் கடவுளுடைய நண்பராக ஆவது எப்படி?

வாழ்க்கையில் ஒரு சோக சம்பவம் நடந்த பிறகுதான், கடவுளுடைய நண்பராக ஆவது எவ்வளவு முக்கியம் என்பதை ஜெரெமி புரிந்துகொண்டான். “எனக்கு 12 வயசு இருக்குறப்போ என் அப்பா வீட்டவிட்டு போயிட்டாரு. ஒருநாள் ராத்திரி படுக்கைல உக்கார்ந்து, என் அப்பாவ எப்படியாவது திரும்பி வர வையுங்கனு சொல்லி யெகோவாகிட்ட கெஞ்சி கேட்டேன்” என்று ஜெரெமி சொல்கிறான்.

இப்படி வேதனையில் தவித்தபோது, ஜெரெமி பைபிளை வாசிக்க ஆரம்பித்தான். சங்கீதம் 10:14-ல் இருக்கிற வார்த்தைகள் அவனுடைய மனதுக்கு ரொம்ப ஆறுதலாக இருந்தன. “கொடுமைக்கு ஆளானவன் உங்களைத்தான் தேடி வருகிறான். அப்பா இல்லாத பிள்ளைக்கு நீங்கள்தான் துணை” என்று யெகோவாவைப் பற்றி அந்த வசனம் சொல்கிறது. “‘நான் உனக்கு துணையா இருக்கேன், நான் உனக்கு அப்பாவா இருக்கேன்’னு யெகோவாவே என்கிட்ட சொன்ன மாதிரி இருந்துச்சு. யெகோவாவவிட ஒரு நல்ல அப்பா வேற யாராவது எனக்கு இருக்க முடியுமா?” என்கிறான் ஜெரெமி.

நீங்கள் ஜெரெமியின் சூழ்நிலையில் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, உங்களுடைய நண்பராக ஆவதற்கு யெகோவா ஆசைப்படுவதாக பைபிள் சொல்கிறது. “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என்று அது சொல்கிறது. (யாக்கோபு 4:8) யெகோவாவை உங்களால் பார்க்க முடியாது. அவர் உங்களைவிட ரொம்ப ரொம்ப உயர்ந்தவர். இருந்தாலும், தன்னுடைய நண்பராக ஆவதற்கு யெகோவாவே உங்களைக் கூப்பிடுகிறார்!

ஆனால், கடவுளுடைய நண்பராக ஆவதற்கு உங்களுடைய பங்கில் நீங்களும் முயற்சி செய்ய வேண்டும். இதைப் புரிந்துகொள்ள ஒரு உதாரணத்தை யோசித்துப் பாருங்கள். வீட்டில் ஒரு செடியை நீங்கள் வளர்க்கிறீர்கள் என்றால், அது தானாகவே வளராது என்று உங்களுக்குத் தெரியும். அது நன்றாக வளருவதற்குத் தினமும் தண்ணீர் ஊற்றுவீர்கள். அதோடு, அது வளருவதற்கு ஏற்ற ஒரு நல்ல இடத்தில் வைப்பீர்கள். கடவுளுடைய நண்பராகும் விஷயத்திலும் இதுதான் உண்மை. அவரோடு உங்கள் நட்பு நன்றாக வளர நீங்கள் என்ன செய்யலாம்?

பைபிளைப் படிப்பது முக்கியம்

நண்பர்கள் ஒருவருக்கொருவர் பேசுவார்கள்; அதோடு, ஒருவர் பேசுவதை இன்னொருவர் கவனித்துக் கேட்பார். கடவுளுடைய நண்பராக இருப்பதற்கும் இதைத்தான் செய்ய வேண்டும். பைபிளை ஆழமாகப் படிக்கும்போது, கடவுள் நம்மிடம் என்ன சொல்கிறார் என்பதை நாம் கேட்கிறோம்.—சங்கீதம் 1:2, 3.

உண்மைதான், படிப்பது உங்களுக்குப் பிடித்த விஷயமாக இருக்காது. இளைஞர்கள் நிறைய பேர், டிவி பார்ப்பதற்கு... விளையாடுவதற்கு... நண்பர்களோடு நேரம் செலவிடுவதற்கு... ஆசைப்படுவார்கள். ஆனால், கடவுளுடைய நண்பராக ஆவதற்கு எந்தக் குறுக்கு வழியும் கிடையாது. அவருடைய வார்த்தையை ஆழமாகப் படிப்பதன் மூலம் அவர் சொல்வதை நீங்கள் கவனித்துக் கேட்க வேண்டும்.

கவலைப்படாதீர்கள்! பைபிளைப் படிப்பது ஒன்றும் அவ்வளவு கஷ்டமான விஷயம் கிடையாது. படிப்பதில் அந்தளவு ஆர்வம் காட்டாத ஒரு ஆளாக நீங்கள் இருந்தாலும் உங்களால் ரசித்துப் படிக்க முடியும். அதற்காக நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், பைபிளைப் படிப்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். “நான் ஒரு அட்டவண போட்டிருக்கேன். காலைல எழுந்திருச்சதும் மொத வேலையா பைபிள்ல ஒரு அதிகாரத்தை படிக்குறேன்” என்று லையஸ் சொல்கிறாள். “ராத்திரி கொஞ்ச நேரம் பைபிள வாசிச்சிட்டுதான் தூங்க போவேன்” என்று 15 வயது மரியா சொல்கிறாள்.

பைபிளைப் படிக்க நீங்கள் இப்போதுதான் திட்டம் போட்டிருக்கிறீர்கள் என்றால் “ பைபிளை ஆராய்ந்து படியுங்கள்” என்ற பெட்டியைப் பாருங்கள். அதன் பிறகு, 30 நிமிடத்துக்கோ அதற்கும் அதிகமாகவோ பைபிளைப் படிப்பதற்கு எப்போது நேரத்தை ஒதுக்கலாம் என்று இங்கே எழுதுங்கள்.

․․․․․

அட்டவணை போடுவது ஒரு ஆரம்பம்தான். அப்படி அட்டவணை போட்டு படிக்க ஆரம்பித்ததும், பைபிளைப் படிப்பது சாதாரண விஷயம் இல்லை என்பது உங்களுக்குத் தெரியவரலாம். “மூளைய கசக்கிப் பிழிஞ்சாலும் பைபிள்ல சில விஷயங்கள் புரியறதே இல்ல. ரசிச்சு படிக்கிற மாதிரியே இல்ல” என்று 11 வயது ஜெஸ்‍ரீல் வெளிப்படையாகச் சொல்கிறான். ஒருவேளை நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீர்கள் என்றால், உங்களுடைய முயற்சியை விட்டுவிடாதீர்கள். படிப்பதற்காக பைபிளைக் கையில் எடுக்கும்போதெல்லாம், உங்களுடைய நண்பரான யெகோவா பேசுவதைக் கேட்க நேரத்தை ஒதுக்கியிருக்கிறீர்கள் என்பதை மனதில் வையுங்கள். அப்படிச் செய்யும்போது பைபிள் படிப்பது ரொம்ப சுவாரஸ்யமாகவும் பிரயோஜனமாகவும் இருக்கும்.

ஜெபம் செய்வது முக்கியம்

நாம் கடவுளிடம் பேசுவதற்கான ஒரே வழி ஜெபம்தான். இது எவ்வளவு அருமையான பரிசு என்பதை யோசித்துப் பாருங்கள். பகலிலும் சரி, ராத்திரியிலும் சரி, எந்த நேரத்திலும் யெகோவா அப்பாவிடம் நீங்கள் பேசலாம். நீங்கள் பேசுவதைக் கேட்க அவர் எப்போதும் தயாராக இருக்கிறார். அதைவிட முக்கியமாக, நீங்கள் என்ன பேசப்போகிறீர்கள் என்பதைக் கேட்க அவர் ஆர்வமாக இருக்கிறார். அதனால்தான் இப்படிச் செய்யும்படி பைபிள் உங்களை உற்சாகப்படுத்துகிறது: “உங்களுடைய எல்லா விண்ணப்பங்களையும் நன்றியோடுகூடிய ஜெபத்தின் மூலமும் மன்றாட்டின் மூலமும் கடவுளிடம் சொல்லுங்கள்.”—பிலிப்பியர் 4:6.

இந்த வசனம் சொல்கிறபடி யெகோவாவிடம் நிறைய விஷயங்களைப் பேச முடியும். உங்களுடைய பிரச்சினைகளையும், கவலைகளையும் பற்றி அவரிடம் பேசலாம். அவர் உங்களுக்குச் செய்திருக்கிற விஷயங்களுக்காக நன்றியும் சொல்லலாம். உங்களுடைய நண்பர்கள் செய்த நல்ல விஷயங்களுக்காக நீங்கள் நன்றி சொல்வீர்கள்தானே? அதேபோல், யெகோவாவுக்கும் நீங்கள் நன்றி சொல்லலாம். எந்தவொரு நண்பரையும்விட அவர் உங்களுக்காக நிறைய விஷயங்களைச் செய்திருக்கிறார்.—சங்கீதம் 106:1.

யெகோவாவுக்கு நீங்கள் நன்றி சொல்ல விரும்பும் சில விஷயங்களைக் கீழே எழுதுங்கள்.

․․․․․

சிலசமயங்களில் பயமும் கவலையும் பாறாங்கல் போல் உங்கள் மனதை அழுத்தலாம். அப்போது என்ன செய்யலாம்? “யெகோவாமேல் உன் பாரத்தைப் போட்டுவிடு. அவர் உன்னை ஆதரிப்பார். நீதிமானை ஒருபோதும் தள்ளாட விடமாட்டார்” என்று சங்கீதம் 55:22 சொல்கிறது.

என்னென்ன கவலைகளைப் பற்றி ஜெபத்தில் சொல்ல விரும்புகிறீர்கள் என்பதைக் கீழே எழுதுங்கள்.

․․․․․

சொந்த அனுபவம்

கடவுளுடைய நண்பராக இருப்பதற்கு நீங்கள் இன்னொரு விஷயத்தையும் செய்ய வேண்டும். “யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்” என்று சங்கீதக்காரனான தாவீது எழுதினார். (சங்கீதம் 34:8) ஆபத்தான ஒரு சூழ்நிலையில் இருந்தபோதுதான் தாவீது இந்த 34-வது சங்கீதத்தை எழுதினார். கொலைவெறி பிடித்த சவுல் ராஜாவிடமிருந்து அவர் தப்பியோடிய சமயம் அது. இக்கட்டான சூழ்நிலையில் அவர் தவித்துக்கொண்டிருந்தார். அதனால், தஞ்சம் தேடி எதிரிகளான பெலிஸ்தியர்களிடம் போக வேண்டிய நிலைமை அவருக்கு வந்தது. அங்கே, பெலிஸ்தியர்களால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து வந்துவிடும் என்று தெரிந்ததும், ஒரு பைத்தியக்காரன் போல நடித்து சாமர்த்தியமாக அங்கிருந்து தப்பினார்.—1 சாமுவேல் 21:10-15.

தன்னுடைய புத்திசாலித்தனத்தால்தான் மயிரிழையில் உயிர்தப்பியதாக தாவீது சொல்லவில்லை. யெகோவாவின் உதவியால்தான் தப்பித்ததாக அவர் சொன்னார். முன்பு குறிப்பிடப்பட்ட அதே சங்கீதத்தில், “நான் யெகோவாவிடம் விசாரித்தேன், அவர் எனக்குப் பதில் சொன்னார். எல்லா பயத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்தார்” என்று தாவீது எழுதினார். (சங்கீதம் 34:4) அதனால்தான் “யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்” என்று தன்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து அவரால் மற்றவர்களுக்குச் சொல்ல முடிந்தது. *

․․․․․

யெகோவா உங்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்ட ஏதாவது அனுபவம் உங்கள் ஞாபகத்துக்கு வருகிறதா? அப்படியென்றால், அதைக் கீழே எழுதுங்கள். ஒரு பெரிய அனுபவத்தைத்தான் எழுத வேண்டும் என்றில்லை. தினம் தினம் யெகோவாவிடமிருந்து கிடைக்கிற சின்ன சின்ன ஆசீர்வாதங்களைப் பற்றிக்கூட யோசித்துப் பார்த்து எழுதலாம்.

․․․․․

ஒருவேளை உங்கள் அப்பா, அம்மா பைபிள் விஷயங்களை உங்களுக்குச் சொல்லித்தந்திருக்கலாம். அப்படியென்றால் அது உங்களுக்குக் கிடைத்த ஒரு ஆசீர்வாதம்தான். ஆனாலும், நீங்கள் தனிப்பட்ட விதமாக கடவுளுடைய நண்பராக ஆவதற்கு முயற்சி செய்யவேண்டும். இதுவரை அப்படி முயற்சி செய்யவில்லை என்றால், இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவும். நீங்கள் எடுக்கிற முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிப்பார். “கேட்டுக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடிக்கொண்டே இருங்கள், அப்போது கண்டுபிடிப்பீர்கள்” என்று பைபிள் சொல்கிறது.—மத்தேயு 7:7.

[அடிக்குறிப்பு]

^ பாரா. 24 “ருசித்துப் பாருங்கள்” என்ற வார்த்தையை “ருசித்து அறியுங்கள்,” “நீங்களே கண்டுபிடியுங்கள்,” “அனுபவத்தில் தெரிந்துகொள்வீர்கள்” என்றெல்லாம் சில பைபிள்கள் மொழிபெயர்த்திருக்கின்றன.—ஈஸி டு ரீட் வர்ஷன், டுடேஸ் இங்லீஷ் வர்ஷன் மற்றும் த பைபிள் இன் பேஸிக் இங்கிலீஷ்.

முக்கிய வசனம்

ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.மத்தேயு 5:3.

டிப்ஸ்

ஒவ்வொரு நாளும் மூன்றிலிருந்து ஐந்து அதிகாரங்களை வாசித்தால் ஒரு வருஷத்தில் முழு பைபிளையும் வாசித்து முடித்துவிடலாம்.

உங்களுக்குத் தெரியுமா. . . .?

யெகோவா உங்கள்மேல் தனிப்பட்ட அக்கறை காட்டியிருப்பதால்தான், நீங்கள் பைபிளைப் படித்து அதிலிருக்கிற ஆலோசனைகளைக் கடைப்பிடித்து வருகிறீர்கள்.—யோவான் 6:44.

திட்டமிடுங்கள்.. செயல்படுங்கள்!

தனிப்பட்ட படிப்பு ரொம்ப பிரயோஜனமாக இருப்பதற்கு நான் செய்ய வேண்டியவை ․․․․․

அடிக்கடி ஜெபம் செய்வதைப் பழக்கமாக்கிக்கொள்ள நான் செய்ய வேண்டியவை ․․․․․

இந்த விஷயம் சம்பந்தமாக அப்பா, அம்மாவிடம் என்ன கேட்க விரும்புகிறேன் என்றால் ․․․․․

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

● சுவாரஸ்யமாக பைபிளைப் படிக்க நீங்கள் என்ன செய்யவேண்டும்?

● பாவ இயல்புள்ள மனிதர்கள் செய்கிற ஜெபத்தைக் கேட்க யெகோவா ஏன் ஆசைப்படுகிறார்?

● நீங்கள் எப்படி மனதிலிருந்து யெகோவாவிடம் ஜெபம் செய்யலாம்?

[சிறு குறிப்பு]

“நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ சொன்னதையே திரும்ப திரும்ப ஜெபத்துல சொல்வேன். இப்பல்லாம் ஒவ்வொரு நாளும் நடக்குற நல்ல விஷயங்களயும், கெட்ட விஷயங்களயும் ஜெபத்துல சொல்ல முயற்சி பண்றேன். ஒருநாள் மாதிரியே இன்னொரு நாள் இருக்காதுதானே? அதனால, சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி, ஜெபம் பண்ணுறத விட்டுட்டேன்.”—ஈவ்

[பெட்டி/படம்]

 பைபிளை ஆராய்ந்து படியுங்கள்

1. நீங்கள் படிக்க விரும்பும் ஒரு பைபிள் பதிவைத் தேர்ந்தெடுங்கள். அதைப் புரிந்துகொள்வதற்கு ஞானத்தைத் தரும்படி கடவுளிடம் ஜெபம் செய்யுங்கள்.

2. கவனமாகப் படியுங்கள். நேரம் எடுத்து பொறுமையாகப் படியுங்கள். படிக்கும் விஷயத்தைக் கற்பனை செய்துபாருங்கள். அந்த இடத்தில் நீங்களும் இருப்பதுபோல் யோசித்துப் பாருங்கள். உதாரணத்துக்கு, அங்கு இருக்கிற காட்சிகளைப் பார்ப்பதற்கு... அங்கு இருக்கிறவர்களுடைய குரலைக் கேட்பதற்கு... வாசனையை முகர்வதற்கு... உணவை ருசிப்பதற்கு... முயற்சி செய்யுங்கள். அந்தப் பதிவை உங்கள் மனத்திரையில் ஓட விடுங்கள்!

3. வாசித்த பதிவைப் பற்றி யோசித்துப் பாருங்கள். உங்களையே இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்:

● யெகோவா ஏன் இந்தப் பதிவை பைபிளில் சேர்த்திருக்கிறார்?

● யாருடைய உதாரணத்தைப் பின்பற்றலாம்? யாருடைய உதாரணம் எனக்கு எச்சரிக்கையாக இருக்கிறது?

● என்ன நல்ல பாடங்களை இந்தப் பதிவிலிருந்து நான் கற்றுக்கொண்டேன்?

● யெகோவாவைப் பற்றியும், அவர் சில விஷயங்களைச் செய்கிற விதத்தைப் பற்றியும் இந்தப் பதிவிலிருந்து நான் என்ன கற்றுக்கொண்டேன்?

4. சுருக்கமாக யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். பைபிளிலிருந்து நீங்கள் படித்த விஷயத்தைப் பற்றியும், அதை எப்படி உங்களுடைய வாழ்க்கையில் கடைப்பிடிக்கப் போகிறீர்கள் என்பதைப் பற்றியும் அவரிடம் சொல்லுங்கள். யெகோவா தன்னுடைய வார்த்தையாகிய பரிசுத்த பைபிளை உங்களுக்குப் பரிசாக கொடுத்ததற்காக அவருக்கு எப்போதுமே நன்றி சொல்லுங்கள்.

[படம்]

“உங்களுடைய வார்த்தை என் கால்களுக்கு விளக்காகவும், என் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறது.”—சங்கீதம் 119:105.

[பெட்டி/படம்]

முக்கியமான விஷயங்களுக்கு முதலிடம் கொடுங்கள்

ஜெபம் செய்ய முடியாத அளவுக்கு ரொம்ப பிஸியாக இருக்கிறீர்களா? பைபிள் படிக்க உங்களுக்கு நேரமே இல்லையா? பெரும்பாலும், நாம் எந்த வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் இது இருக்கிறது.

இப்படிச் செய்துபாருங்கள்: ஒரு பக்கெட் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பெரிய பெரிய கற்களை முதலில் போடுங்கள். பிறகு அந்த பக்கெட் முழுவதும் மண்ணைப் போட்டு நிரப்புங்கள். இப்போது அந்த பக்கெட்டில் கற்களும் மண்ணும் இருக்கும்.

இப்போது அந்த பக்கெட்டில் இருப்பதையெல்லாம் கீழே கொட்டிவிடுங்கள். அதில் திரும்பவும் அதே மண்ணையும் கற்களையும் போடுங்கள். இந்தத் தடவை மண்ணை முதலில் போட்டுவிட்டு, அதற்குப் பிறகு கற்களைப் போட முயற்சி செய்யுங்கள். கண்டிப்பாக இடமிருக்காது. ஏனென்றால், பக்கெட்டில் மண்ணை முதலில் போட்டுவிட்டீர்கள்.

இதிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்? “மிக முக்கியமான காரியங்கள் எவை என்று நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று பைபிள் சொல்கிறது. (பிலிப்பியர் 1:10) பொழுதுபோக்கு போன்ற சின்ன விஷயங்களுக்கு நீங்கள் முதலிடம் கொடுத்துவிட்டால், கடவுளுக்காகச் செய்யவேண்டிய பெரிய விஷயங்களுக்கு வாழ்க்கையில் இடம் இல்லாமல் போய்விடும். ஆனால், பைபிள் ஆலோசனைக்கு நீங்கள் கீழ்ப்படிந்தீர்கள் என்றால், யெகோவாவுக்காகவும் உங்களால் நேரம் ஒதுக்க முடியும். அதேசமயத்தில் கொஞ்சம் பொழுதுபோக்குக்காகவும் நேரம் ஒதுக்க முடியும். இது எல்லாமே, ‘பக்கெட்டில்’ நீங்கள் எதை முதலில் போடுகிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது!

[படம்]

ஒரு செடியை வளர்ப்பது போல யெகோவாவோடு நட்பை வளர்த்துக்கொள்ள முயற்சி அவசியம்