Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளை சரியாக புரிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?

பைபிளை சரியாக புரிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?

தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் புகையை, ஒரு சின்ன பிள்ளை பார்த்துக்கொண்டு இருந்தது. அந்தப் புகை, பார்ப்பதற்கு மேகம் போல் இருந்ததால் அது மேகங்களை உருவாக்கும் தொழிற்சாலை என்று தவறாக புரிந்துகொண்டது. ஒரு சின்ன பிள்ளை அப்படி நினைத்ததில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், சில விஷயங்களைச் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றால் அது நம் உயிருக்கே உலை வைத்துவிடும். உதாரணத்துக்கு, மருந்து சீட்டில் என்ன மாத்திரை எழுதப்பட்டிருக்கிறது என்று சரியாக பார்க்காமல், தவறான மாத்திரையை வாங்கி சாப்பிட்டால் அது நம் உயிருக்கு ஆபத்தாகிவிடலாம்.

பைபிளில் இருக்கும் விஷயங்களைச் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றால் அதைவிட பெரிய ஆபத்தாகிவிடும். உதாரணத்துக்கு, இயேசு சொன்ன விஷயங்களை அன்று வாழ்ந்த சிலர் சரியாக புரிந்துகொள்ளவில்லை. அவர் சொன்னதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வதற்கு பதிலாக அவரைவிட்டு போய்விட்டார்கள். (யோவான் 6:48-68) இது அவர்களுக்குத்தான் பெரிய இழப்பு!

பைபிள் உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படி நினைப்பது ரொம்ப நல்லது. ஆனால், பைபிளில் படிக்கும் விஷயங்களை நீங்கள் தவறாக புரிந்துகொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. நிறைய பேர் அப்படி தவறாக புரிந்துகொண்டும் இருக்கிறார்கள். அதில் மூன்று விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

  • ‘கடவுளுக்குப் பயப்படுங்கள்’ என்ற கட்டளையை சிலர் தவறாக புரிந்துகொள்கிறார்கள். எப்போதுமே கடவுளுக்குப் பயந்து நடுங்க வேண்டும் என்று நினைத்துக்கொள்கிறார்கள். (பிரசங்கி 12:13) ஆனால், அப்படித் தன்னை வணங்க வேண்டும் என்று கடவுள் விரும்புவதில்லை. ஏனென்றால், “பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன். கவலைப்படாதே, நான் உன் கடவுள். நான் உன்னைப் பலப்படுத்துவேன், உனக்கு உதவி செய்வேன். என்னுடைய நீதியான வலது கையால் உன்னைத் தாங்குவேன்” என்று அவரே சொல்லியிருக்கிறார். (ஏசாயா 41:10) அதனால், கடவுளுக்குப் பயப்படுவது என்பது அவர்மீது நாம் வைத்திருக்கும் ஆழ்ந்த மரியாதையைக் குறிக்கிறது.

  • நெருப்பினால் இந்தப் பூமி அழிக்கப்படுமா?

    “எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் இருக்கிறது. . . . பிறப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது, இறப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது” என்று பைபிள் சொல்லும் இந்த வார்த்தைகளையும் சிலர் தவறாக புரிந்துகொள்கிறார்கள். அதனால், ஒவ்வொரு மனிதனும் எப்போது சாக வேண்டும் என்று கடவுள்தான் தீர்மானிப்பதாக நினைக்கிறார்கள். (பிரசங்கி 3:1, 2) ஆனால், மரணம் நம் எல்லாருக்கும் வரும் பொதுவான ஒன்று என்பதை இந்த வசனம் சொல்கிறது. நாம் எடுக்கும் தீர்மானங்கள் நம் வாழ்நாளை கூட்டவோ குறைக்கவோ முடியும். உதாரணத்துக்கு, “யெகோவாவுக்குப் பயந்து நடப்பவர்களுடைய ஆயுள் கூடும்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 10:27; சங்கீதம் 90:10; ஏசாயா 55:3) எப்படி? பைபிள் சொல்கிறபடி வாழ்ந்தால் குடிவெறி, ஒழுக்கக்கேடு போன்ற உயிருக்கு ஆபத்தான பழக்கங்களைத் தவிர்ப்போம்.—1 கொரிந்தியர் 6:9, 10.

  • வானமும் பூமியும் “நெருப்புக்காக வைக்கப்பட்டிருக்கின்றன” என்ற வார்த்தைகளை சிலர் தவறாக புரிந்துகொள்கிறார்கள். கடவுள் இந்தப் பூமியை நெருப்பினால் அழித்துவிடுவார் என்று நினைக்கிறார்கள். (2 பேதுரு 3:7) ஆனால், இந்தப் பூமியை கடவுள் அழிக்கப்போவதில்லை என்று அவரே வாக்குக் கொடுத்திருக்கிறார். கடவுள் “இந்தப் பூமிக்குப் பலமான அஸ்திவாரம் போட்டிருக்கிறார். அது ஒருபோதும் அசைக்கப்படாது” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 104:5; ஏசாயா 45:18) அழியப் போவது இந்தப் பூமி இல்லை, அதில் வாழும் கெட்ட மக்கள்தான். நெருப்பில் போட்ட பொருள் நிரந்தரமாக அழிவது போல் கெட்ட மக்களும் நிரந்தரமாக அழியப்போகிறார்கள். வானம் என்று அந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தை நட்சத்திரங்கள் இருக்கும் பிரபஞ்சத்தை அல்லது கடவுளுடைய இருப்பிடத்தைக் குறிக்கலாம். இது இரண்டுமே அழிந்துபோகாது.

பைபிளில் இருக்கும் விஷயங்கள் ஏன் சிலசமயம் தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது?

இப்போது பார்த்த மூன்று விஷயங்களில் இருந்து பைபிள் சொல்வதை மக்கள் தவறாக புரிந்துகொள்கிறார்கள் என்று தெரிந்துகொண்டோம். சிலர் ஒருவேளை இப்படி கேட்கலாம்: ‘கடவுளுக்குதான் எல்லா ஞானமும் இருக்கே, அவருக்கு தெரியாதது எதுவுமே இல்ல. அப்போ எல்லாரும் சுலபமா புரிஞ்சிக்கிற மாதிரி ஒரு பைபிள கொடுத்திருக்கலாம், இல்லயா?’ பைபிளை நாம் சரியாக புரிந்துகொள்ள மூன்று விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

  1. மனத்தாழ்மையாகவும் கற்றுக்கொள்ள ஆர்வமாகவும் இருக்கிற மக்களுக்காக பைபிள் எழுதப்பட்டிருக்கிறது. “தகப்பனே, பரலோகத்திற்கும் பூமிக்கும் எஜமானே, எல்லார் முன்னாலும் நான் உங்களைப் புகழ்கிறேன்; ஏனென்றால், இந்த விஷயங்களை நீங்கள் ஞானிகளுக்கும் அறிவாளிகளுக்கும் மறைத்து சிறுபிள்ளைகளுக்கு வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்” என்று இயேசு தன் அப்பாவிடம் சொன்னார். (லூக்கா 10:21) கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையோடு பைபிளை படிப்பவர்களால் மட்டும்தான் அதைப் புரிந்துகொள்ள முடியும். பொதுவாக, ‘ஞானிகளும் அறிவாளிகளும்’ பெருமைப் பிடித்தவர்களாக இருப்பார்கள். அதனால்தான் அவர்களால் பைபிளை சரியாக புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆனால், ‘சிறுபிள்ளைகள்’ தாழ்மையாகவும் கற்றுக்கொள்ள ஆர்வமாகவும் இருப்பார்கள். குழந்தைகளுக்கு இருக்கும் அதே மனப்பான்மை நமக்கு இருந்தால்தான் பைபிளை புரிந்துகொள்ள முடியும். பைபிளை கடவுள் ஞானமாக வடிவமைத்திருக்கிறார் என்பதை இதிலிருந்து நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.

  2. கடவுளுடைய உதவி இல்லாமல் பைபிளை புரிந்துகொள்ள முடியாது. இயேசு சொல்லிக்கொடுத்த விஷயங்களைப் புரிந்துகொள்ள மக்களுக்கு உதவி தேவைப்படும் என்று அவரே சொல்லியிருந்தார். அந்த உதவி அவர்களுக்கு எப்படிக் கிடைக்கும்? ‘என் தகப்பன் என்னுடைய பெயரில் அனுப்பப்போகிற அவருடைய சக்தியாகிய சகாயர் எல்லா காரியங்களையும் உங்களுக்குக் கற்றுக்கொடுப்பார்’ என்று இயேசு சொன்னார். (யோவான் 14:26) அப்படியென்றால், கடவுளுடைய சக்தியின் உதவியோடு மட்டும்தான் ஒருவரால் பைபிளை புரிந்துகொள்ள முடியும். தன்னுடைய உதவியைக் கேட்காத ஆட்களுக்கு அவர் தன்னுடைய சக்தியைக் கொடுப்பதில்லை. அதனால்தான், அவர்களால் பைபிளை சரியாக புரிந்துகொள்ள முடிவதில்லை. இன்று நிறைய பேர் பைபிளை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ கடவுள் தன்னுடைய சக்தியைத் தந்து தன்னுடைய ஊழியர்களை வழிநடத்துகிறார்.—அப்போஸ்தலர் 8:26-35.

  3. கடவுள் வெளிப்படுத்தும் நேரத்தில்தான் சில பைபிள் விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியும். உதாரணத்துக்கு, எதிர்காலத்தில் நடக்கப்போகும் விஷயங்களை எழுதும்படி தானியேலிடம் ஒரு தேவதூதர் சொன்னார். பிறகு, “தானியேலே, முடிவு காலம்வரை நீ இந்த வார்த்தைகளை ரகசியமாக வைத்து, இந்தப் புத்தகத்துக்கு முத்திரை போடு” என்று அவர் சொன்னார். பல நூறு வருஷங்களாக தானியேல் எழுதிய புத்தகத்தை நிறையப் பேர் படித்திருக்கிறார்கள். ஆனால், படித்த விஷயங்களை யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. சொல்லப்போனால், தானியேலுக்கே அந்த விஷயம் புரியவில்லை. “நான் அதைக் கேட்டேன், ஆனால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்று தானியேலே தாழ்மையுடன் ஒத்துக்கொண்டார். கடவுள் தீர்மானித்த சரியான காலத்தில்தான் தானியேல் எழுதிய தீர்க்கதரிசனத்தை மக்களால் புரிந்துகொள்ள முடிந்தது. “தானியேலே, நீ போகலாம். ஏனென்றால், இந்த வார்த்தைகள் முடிவு காலம்வரை ரகசியமாக வைக்கப்பட்டு, முத்திரை போடப்பட்டிருக்கும்” என்று அந்த தேவதூதர் சொன்னார். அப்படியென்றால், தானியேல் எழுதிய விஷயங்களை யார் புரிந்துகொள்வார்கள்? ‘கெட்டவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். ஆனால், விவேகம் உள்ளவர்கள் புரிந்துகொள்வார்கள்.’ (தானியேல் 12:4, 8-10) இதிலிருந்து நாம் ஒன்றை தெரிந்துகொள்கிறோம்: பைபிளில் இருக்கும் சில விஷயங்களை கடவுள் எப்போது வெளிப்படுத்துகிறாரோ அப்போதுதான் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

கடவுள் வெளிப்படுத்துவதற்கு முன்பு, யெகோவாவின் சாட்சிகளும் சில விஷயங்களைத் தவறாக புரிந்துகொண்டு இருந்தார்கள். ஆனால், கடவுள் அந்த விஷயங்களை அவர் தீர்மானித்திருந்த நேரத்தில் வெளிப்படுத்தினபோது அதை அவர்கள் உடனடியாக சரிசெய்துகொண்டார்கள். தன்னுடைய சீஷர்கள் ஒரு விஷயத்தைத் தவறாக புரிந்துகொண்டபோது இயேசு அவர்களைத் திருத்தினார். அப்போது தங்களுடைய தவறை தாழ்மையோடு சரிசெய்துகொண்டார்கள். (அப்போஸ்தலர் 1:6, 7) அவர்களைப் போலவே இன்று யெகோவாவின் சாட்சிகளும் நடந்துகொள்கிறார்கள்.

தொழிற்சாலையில்தான் மேகங்கள் உருவாகிறது என்று ஒரு சின்ன பிள்ளை தவறாக நினைத்தது சாதாரண விஷயம்தான். ஆனால், பைபிளில் இருக்கும் விஷயங்களைத் தவறாக புரிந்துகொள்வது சாதாரண விஷயம் கிடையாது. அதில் சொல்லப்பட்டிருக்கும் எல்லாமே ரொம்ப முக்கியமானது. நம் சொந்த முயற்சியில் அதைச் சரியாக புரிந்துகொள்ள முடியாது. அப்படியென்றால், யாரிடம் உதவி கேட்பது? நீங்கள் யாரிடம் உதவி கேட்கிறீர்களோ அவர்கள் தாழ்மையுள்ள மக்களாக இருக்க வேண்டும், பைபிளை புரிந்துகொள்ள கடவுளுடைய சக்தியை நம்பியிருக்க வேண்டும். அதோடு, எப்போதையும்விட இப்போதுதான் நாம் பைபிளை புரிந்துகொள்ள வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் என்பதை அவர்கள் உறுதியாக நம்ப வேண்டும். அடுத்தமுறை யெகோவாவின் சாட்சிகள் உங்களை சந்திக்கும்போது பைபிளில் இருந்து அவர்கள் சொல்வதைக் கேளுங்கள் அல்லது நன்கு ஆராய்ச்சி செய்து எழுதப்பட்ட கட்டுரைகளை jw.org வெப்சைட்டில் இருந்து படியுங்கள். அப்படிச் செய்யும்போது, பைபிளை சரியாக புரிந்துகொள்ள முடியும். ஏனென்றால், ‘புத்தியை சத்தமாகக் கூப்பிட்டால் . . . கடவுளைப் பற்றிய அறிவைக் கண்டடைவாய்’ என்று பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 2:3-5.