Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்க கேள்விக்கு பதில்...

கடவுளுடைய அரசாங்கம் எப்போ ஆட்சி செய்ய ஆரம்பிச்சுது? (பகுதி 2)

கடவுளுடைய அரசாங்கம் எப்போ ஆட்சி செய்ய ஆரம்பிச்சுது? (பகுதி 2)

ஜான் என்பவர் கேட்கிற கேள்விக்கு, வினோத் என்ற யெகோவாவின் சாட்சி, பைபிள்ல இருந்து எப்படி பதில் சொல்றார்னு பாருங்க.

நேபுகாத்நேச்சார் ராஜாவுக்கு வந்த கனவு

வினோத்: ஹலோ ஜான்! மறுபடியும் பைபிள் படிப்புக்காக உங்களை சந்திக்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். எப்படி இருக்கீங்க? *(அடிக்குறிப்பை பாருங்க.)

ஜான்: நான் நல்லா இருக்கேன் சார்.

வினோத்: ரொம்ப சந்தோஷம் ஜான். நாம போன வாரம் பார்த்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்? 1914-ல *(அடிக்குறிப்பை பாருங்க.) கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்ய ஆரம்பிச்சுதுனு யெகோவாவின் சாட்சிகள் ஏன் சொல்றாங்க, அதை பத்தி தானியேல் 4-வது அதிகாரம் என்ன சொல்லுதுனு பார்த்தோம்ல.

ஜான்: ஆமா... ஞாபகம் இருக்கு. நேபுகாத்நேச்சார் ராஜா ஒரு பெரிய மரத்தை பத்தி கனவு கண்டார்... அது தானே?

வினோத்: ஆமா, கரெக்டா சொன்னீங்க. அந்தக் கனவுல நேபுகாத்நேச்சார் ராஜா ஒரு மரத்தை பார்த்தார். அது வானம் வரைக்கும் வளர்ந்துச்சு. அப்போ, ஒரு தேவதூதர் அந்த மரத்தை வெட்ட சொன்னார். ஆனா, வேரோட வெட்டாம, அடிமரத்தை அப்படியே விட்டுட சொன்னார். ‘ஏழு காலங்களுக்கு’ அப்புறம் அந்த மரம் திரும்பவும் வளரும்னு சொன்னார். இந்த கனவு ரெண்டு தடவை நிறைவேறும்னு பார்த்தோம்ல? முதல் தடவை எப்போ நிறைவேறுச்சுனு ஞாபகம் இருக்கா? (தானியேல் 4:23-25)

ஜான்: ஞாபகம் இருக்கு... நேபுகாத்நேச்சார் ராஜா 7 வருஷம் பைத்தியமா இருந்தப்போ இது நிறைவேறுச்சு.

வினோத்: கரெக்டா சொன்னீங்க. நேபுகாத்நேச்சார் 7 வருஷம் பைத்தியமா இருந்ததால, அவருடைய ஆட்சிக்கு தடை வந்துச்சு. அதே மாதிரி கடவுளுடைய ஆட்சிக்கும் ஏழு காலங்கள் தடை வந்துச்சு. அந்த ஏழு காலங்கள் எப்போ ஆரம்பிச்சுது? கி.மு. 607-ல எருசலேம் அழிக்கப்பட்ட சமயத்தில ஆரம்பிச்சுது. அந்த சமயத்தில இருந்து யெகோவா நியமிச்ச ராஜாக்கள் ஆட்சி செய்யல. ஆனா, ஏழு காலத்தோட முடிவுல, யெகோவா ஒரு ராஜாவை நியமிப்பார். அந்த ராஜா, பரலோகத்தில இருந்து ஆட்சி செய்வார். இந்த ஏழு காலங்கள் முடியும்போது, கடவுளுடைய அரசாங்கம் பரலோகத்திலிருந்து ஆட்சி செய்ய ஆரம்பிக்கும். நான் சொன்னதெல்லாம் உங்களுக்கு புரிஞ்சுதா?

ஜான்: ம்... புரிஞ்சுதுங்க. போன வாரம் படிச்சதெல்லாம் நல்லா ஞாபகப்படுத்துனீங்க.

வினோத்: சரி, இப்போ ஏழு காலங்கள் எத்தனை வருஷத்தை குறிக்குதுனு நாம தெரிஞ்சுக்கலாம். உங்களுக்கு சொல்றதுக்காக நான் மறுபடியும் அதை பத்தி படிச்சுட்டு வந்தேன். என்னால முடிஞ்ச வரைக்கும் உங்களுக்கு சொல்றேன்.

ஜான்: சரி சார், சொல்லுங்க.

ஏழு காலம் முடியுது—கடைசி நாட்கள் ஆரம்பிக்குது

வினோத்: நேபுகாத்நேச்சாரோட ஆட்சிக்கு ஏழு வருஷம் தடை வந்துச்சு. ஆனா கடவுளுடைய அரசாங்கத்தை பொருத்தவரைக்கும் அது ஏழு வருஷத்தை குறிக்கல, அதைவிட அதிகமான காலத்தை குறிக்குது.

ஜான்: எதை வெச்சு அப்படி சொல்றீங்க?

வினோத்: முதல் காரணம், கி.மு. 607-ல இருந்து ஏழு வருஷம் கழிச்சு, கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தமா எந்தவொரு விஷயமும் நடக்கல. இன்னொரு காரணம்... பல வருஷம் கழிச்சு, இயேசு பூமியில இருந்தபோதுகூட ஏழு காலங்கள் இன்னும் முடியலனு சொன்னார்.

ஜான்: ஆமா, எனக்கு ஞாபகம் இருக்கு.

வினோத்: அப்படினா, அது வெறும் ஏழு வருஷத்தை குறிக்கல, அதைவிட அதிகமான காலத்தை குறிக்குது.

ஜான்: எவ்ளோ காலத்தை குறிக்குது?

வினோத்: இதை புரிஞ்சுக்க, வெளிப்படுத்துதல் புத்தகம் நமக்கு உதவுது. அந்த புத்தகத்தில, மூன்றரை காலம் 1,260 நாட்களை குறிக்குதுனு சொல்லியிருக்கு. அப்போ, 7 காலம் என்பது 31/2 காலத்தோட ரெண்டு மடங்கு. அதாவது, 2,520 நாட்களை குறிக்குது. இதுவரைக்கும் நான் சொன்னது உங்களுக்கு புரியுதா? (வெளிப்படுத்துதல் 12:6, 14)

ஜான்: ம்... புரியுது. ஆனா, இதை வெச்சு 1914-ல கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்ய ஆரம்பிச்சுதுனு எப்படி சொல்றீங்க?

வினோத்: பைபிள்ல ஒரு நாள் என்பது சில சமயம் ஒரு வருஷத்தை குறிக்குது. அப்படி பார்க்கும்போது, 2,520 நாட்கள் 2,520 வருஷத்தை குறிக்குது. (எண்ணாகமம் 14:34; எசேக்கியேல் 4:6) கி.மு. 607-ல இருந்து 2,520 வருஷம் கழிச்சு பார்த்தா கி.பி. 1914-வது வருஷம் வருது. * (அடிக்குறிப்பை பாருங்க.) அதனாலதான் 1914-ல ஏழு காலங்கள் முடிஞ்சுதுனும், இயேசு பரலோகத்தில ஆட்சி செய்ய ஆரம்பிச்சார்னும் நாங்க நம்புறோம். அதுமட்டுமில்ல கடைசி நாட்கள்ல, உலகத்துல நிறைய மாற்றங்கள் நடக்கும்னு பைபிள் சொன்னதுகூட 1914-ல இருந்துதான் நிறைவேறுச்சு.

ஜான்: என்ன மாதிரி மாற்றங்கள் நடக்கும்?

வினோத்: இயேசு கிறிஸ்து இதை பத்தி என்ன சொன்னார்னு பாருங்க. மத்தேயு 24:7-ல, “தேசத்திற்கு விரோதமாகத் தேசமும் அரசாங்கத்திற்கு விரோதமாக அரசாங்கமும் எழும்பும், பஞ்சங்கள் உண்டாகும், அடுத்தடுத்து பல இடங்களில் பூகம்பங்கள் ஏற்படும்”னு சொன்னார். அவர் சொன்னது கடந்த நூறு வருஷமா நடந்துட்டு இருக்கு. நிறைய இடத்துல பஞ்சங்கள், பூகம்பங்கள் நடக்கிறதை நாம கேள்விபடுறோம்ல?

ஜான்: ஆமா சார், எங்க பார்த்தாலும் இதெல்லாம் நடக்குது.

வினோத்: அதுமட்டுமில்ல, போர்கள் நடக்கும்னும் அந்த வசனத்தில இயேசு சொன்னார். கடைசி நாட்கள்ல உலகம் முழுசும் போர் நடக்கும்னு வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்லுது. (வெளிப்படுத்துதல் 6:4) முதல் உலகப் போர் எப்போ நடந்தது?

ஜான்: 1914-ல தானே! அப்பதானே இயேசு ராஜா ஆனார்னு சொன்னீங்க. இதை நான் யோசிச்சே பார்க்கலை!

வினோத்: இந்த எல்லா ஆதாரங்களையும் வெச்சுதான், 1914-ல இயேசு கிறிஸ்து ராஜாவா ஆனார்னும், அப்பதான் கடைசி நாட்கள் ஆரம்பிச்சுதுனும் யெகோவாவின் சாட்சிகள் நம்புறாங்க. * (அடிக்குறிப்பை பாருங்க.)

ஜான்: இதை புரிஞ்சுக்கிறதுக்கு கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு.

வினோத்: உங்க நிலைமை எனக்கு புரியது. இதெல்லாம் புரிஞ்சுக்கிறதுக்கு எனக்கும் கொஞ்சம் நாள் ஆச்சு. ஆனா, இதுவரைக்கும் நாம பார்த்ததுல இருந்து 1914-ஐ பத்தி பைபிள் என்ன சொல்லுதோ அதைத்தான் நாங்க நம்புறோம்னு புரிஞ்சுக்கிட்டீங்களா?

ஜான்: அதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நீங்க எதை சொன்னாலும் அதை பைபிள்ல இருந்துதான் சொல்றீங்க. உங்களோட சொந்த கருத்தை எப்பவுமே சொன்னதில்லை. ஆனா, 1914-லதான் இயேசு ராஜாவா ஆவார்னு கடவுள் நேரடியாவே சொல்லியிருக்கலாமே! ஏன் சுத்தி வளைச்சு சொல்லணும்?

வினோத்: நல்ல கேள்வி கேட்டீங்க ஜான்! பைபிள்ல நிறைய விஷயங்களை கடவுள் நேரடியா சொல்லலை. ஒருசில விஷயங்களை நாம புரிஞ்சுக்கிறதுக்கு முயற்சி எடுக்கணும்னு நினைக்கிறார். ஏன் அப்படி நினைக்கிறார்னு அடுத்த தடவை உங்களை பார்க்கும்போது சொல்லட்டுமா?

ஜான்: கண்டிப்பா... அதை தெரிஞ்சுக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு. ▪ (w14-E 11/01)

பைபிள்ல இருக்கிற ஏதாவது ஒரு விஷயத்தை பத்தி தெரிஞ்சுக்க ஆசைப்படுறீங்களா? யெகோவாவின் சாட்சிகள் நம்புற விஷயங்களை பத்தி உங்களுக்கு சந்தேகம் இருக்கா? இதை பத்தி யெகோவாவின் சாட்சிகள்கிட்ட கேளுங்க. அவங்க உங்களுக்கு கண்டிப்பா சொல்லித்தருவாங்க.

^ பாரா. 5 பைபிளை பத்தி தெரிஞ்சுக்க விரும்புறவங்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் இலவசமா சொல்லித்தர்றாங்க.

^ பாரா. 7 2015 ஜனவரி–மார்ச் காவற்கோபுரம் பத்திரிகையில இருக்கிற “உங்க கேள்விக்கு பதில்... கடவுளுடைய அரசாங்கம் எப்போ ஆட்சி செய்ய ஆரம்பிச்சிது?—பகுதி 1”-ஐ பாருங்க.

^ பாரா. 24 “நேபுகாத்நேச்சாரோட கனவு” என்ற பெட்டியை பக்கம் 13-ல பாருங்க.

^ பாரா. 30 பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில அதிகாரம் 9-ஐ பாருங்க. இது யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகம். www.isa4310.com வெப்சைட்லயும் கிடைக்கும்.