கடவுளிடம் நெருங்கி வாருங்கள்
யெகோவா “பாரபட்சம் காட்டாதவர்”
உங்களை யாராவது பாரபட்சமாக நடத்தியிருக்கிறார்களா? நிறம், இனம், ஜாதி போன்ற காரணங்களுக்காக உங்கள் கோரிக்கை ஏதாவது மறுக்கப்பட்டிருக்கிறதா, உங்களுக்கு வேலை கிடைக்காமல்போயிருக்கிறதா, அல்லது உங்களை யாராவது ஏளனம் செய்திருக்கிறார்களா? ஆம் என்றால், உங்களைப் போல் இன்னும் ஏராளமானோர் இப்படிக் கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள். ஆனால், ஓர் ஆறுதலான விஷயம்: மனிதர்கள் இப்படிப் பாகுபாடு பார்த்தாலும், கடவுள் ஒருபோதும் அப்படிப் பார்ப்பதில்லை. “கடவுள் பாரபட்சம் காட்டாதவர்” என்று கிறிஸ்தவ அப்போஸ்தலனான பேதுரு மிக உறுதியாகச் சொன்னார்.—அப்போஸ்தலர் 10:34, 35-ஐ வாசியுங்கள்.
பேதுரு அந்த வார்த்தைகளை எப்போது சொன்னார்? கொர்நேலியு என்ற புறதேசத்தாரின் வீட்டில் இருந்தபோது! இது வழக்கத்திற்கு மாறான ஒன்று. ஏனென்றால், பேதுரு வாழ்ந்த காலத்தில் யூதர்கள் புறதேசத்தாரைத் தீட்டானவர்களாகவும், எவ்விதத் தோழமைக்கும் தகுதியற்றவர்களாகவும் கருதினார்கள். அப்படியிருக்க, யூதரான பேதுரு ஏன் கொர்நேலியுவின் வீட்டிற்குச் சென்றார்? ஏனென்றால், அது யெகோவா தேவனின் ஏற்பாடாக இருந்தது. எப்படிச் சொல்லலாம்? பேதுரு ஒரு தரிசனத்தைக் காணும்படி அவர் செய்தார். அதில், “கடவுள் சுத்தமாக்கிய எதையும் தீட்டென்று சொல்லாதே” என அவருக்குக் கட்டளையிடப்பட்டது. பேதுரு அந்தத் தரிசனத்தைக் காண்பதற்கு முந்தைய நாள் கொர்நேலியுவும் ஒரு தரிசனத்தைக் கண்டார். அந்தத் தரிசனத்தில் ஒரு தேவதூதர் அவரிடம் பேதுருவை வரவழைக்கும்படி சொன்னார். (அப்போஸ்தலர் 10:1-15) இந்த விஷயத்தில் யெகோவாவின் வழிநடத்துதல் இருந்ததை உணர்ந்த பேதுரு, புறதேசத்தாரான கொர்நேலியுவிடம் பேசத் தொடங்கினார்.
“கடவுள் பாரபட்சம் காட்டாதவர் . . . என்பதை நான் தெளிவாகவே காண்கிறேன்” என்று அவர் சொன்னார். (அப்போஸ்தலர் 10:34, 35) ‘பாரபட்சமுள்ளவர்’ என்பதற்கான கிரேக்க வார்த்தையின் நேர்ப்பொருள் “முகதாட்சண்யம் பார்ப்பவர்” என்பதாகும். (த கிங்டம் இண்டர்லினியர் டிரான்ஸ்லேஷன் ஆஃப் த கிரீக் ஸ்கிரிப்ச்சர்ஸ்) இந்த வார்த்தையைக் குறித்து பைபிள் அறிஞர் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “தக்க ஆதாரங்களைப் பார்த்து அல்ல, ஆனால் குற்றவாளியின் முகத்தைப் பார்த்து தீர்ப்பு வழங்குகிற... சொந்த விருப்புவெறுப்பின்படி தீர்ப்பு வழங்குகிற... ஒரு நீதிபதியைக் குறிக்கிறது.” அதற்கு நேர்மாறாக கடவுளோ இனம், தேசம், அந்தஸ்து, வெளித்தோற்றம் போன்றவற்றைப் பார்த்து ஒரு நபருக்குத் தயவு காட்டுவதில்லை.
நம் இருதயத்தையே அவர் பார்க்கிறார். (1 சாமுவேல் 16:7; நீதிமொழிகள் 21:2) அடுத்ததாக பேதுரு இவ்வாறு சொன்னார்: “அவருக்குப் பயந்து நீதியின்படி நடக்கிறவன் எவனோ அவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்.” (அப்போஸ்தலர் 10:35) கடவுளுக்குப் பயந்து நடப்பதென்பது அவருக்கு மதிப்பு மரியாதை காட்டுவதையும், அவர்மீது முழுநம்பிக்கை வைத்து அவருக்குப் பிடிக்காத காரியங்களை அறவே தவிர்ப்பதையும் அர்த்தப்படுத்துகிறது. நீதியின்படி நடப்பதென்பது கடவுளுடைய பார்வையில் சரியானவற்றைச் செய்வதை அர்த்தப்படுத்துகிறது. அப்படி உள்ளப்பூர்வமாகச் செய்யத் தூண்டுகிற இருதயமுள்ளோரை... பயபக்தி நிறைந்த இருதயமுள்ளோரை... பார்க்கும்போது யெகோவா அகமகிழ்கிறார்.—உபாகமம் 10:12, 13.
யெகோவா பரலோகத்திலிருந்து பூமியைப் பார்க்கும்போது ஒரே இனத்தைத்தான், ஆம் மனித இனத்தைத்தான், பார்க்கிறார்
ஒருவேளை நீங்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டிருந்தால், கடவுளைப் பற்றி பேதுரு சொன்ன விஷயம் நிச்சயம் உங்களுக்கு ஆறுதலாக இருக்கும். யெகோவா எல்லாத் தேசத்தாரையும் மெய் வணக்கத்தின் பக்கம் கூட்டிச்சேர்க்கிறார். (யோவான் 6:44; அப்போஸ்தலர் 17:26, 27) தம்முடைய உண்மை வணக்கத்தாரிடையே இனம், தேசம், ஜாதி, அந்தஸ்து என எந்த வேறுபாடும் பார்க்காமல் அவர்களுடைய ஜெபங்களைக் கேட்டு பதிலளிக்கிறார். (1 இராஜாக்கள் 8:41-43) யெகோவா பரலோகத்திலிருந்து பூமியைப் பார்க்கும்போது ஒரே இனத்தைத்தான், ஆம் மனித இனத்தைத்தான், பார்க்கிறார்; இதில் சந்தேகமே இல்லை. பாரபட்சமற்ற இந்தக் கடவுளைப் பற்றி இன்னுமதிகம் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? ▪ (w13-E 06/01)
பைபிள் வாசிப்பு