Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

2012-ல் உலகம் அழிந்துவிடுமா?

2012-ல் உலகம் அழிந்துவிடுமா?

வாசகரின் கேள்வி

2012-ல் உலகம் அழிந்துவிடுமா?

▪ “உலகம் அழிந்துவிடும் என்ற பயத்தில் பிரான்சிலுள்ள கிராமத்துக்குப் படையெடுக்கிறது மக்கள்கூட்டம். . . . பூர்வ மாயா காலண்டரின்படி 5,125 ஆண்டுகளுடன், அதாவது டிசம்பர் 21, 2012-உடன், இந்த உலகம் அழிந்துவிடும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.”—பிபிசி செய்திகள்.

“உலகம் அழியப்போகிறது! அழியப்போகிறது!!” என்று மதத்தலைவர்களும், போலி விஞ்ஞானிகளும், எதிர்காலத்தைக் கணிக்கும் இன்றைய வல்லுநர்களும் என்னதான் கூக்குரலிட்டாலும் பூமி அழியப்போவதில்லை. ஆம், 2012-ல் மட்டுமல்ல அதற்குப் பிறகும்கூட உலகம் அழியாது, அழியவே அழியாது.

“ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது” என பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 1:4) கடவுள் இந்தப் பூமியை உறுதியாய் நிலைப்படுத்தியதாக ஏசாயா 45:18 [திருத்திய மொழிபெயர்ப்பு] சொல்வதையும் கொஞ்சம் பாருங்கள்: “பூமியை வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்துபடைத்து அதை உருவாக்கி நிலைப்படுத்தினவருமாகிய யெகோவா சொல்வதைக் கேளுங்கள்; நானே யெகோவா, வேறொருவருமில்லை.”

உதாரணத்திற்கு, ஒரு அன்புள்ள அப்பா தன் ஆசை மகனைக் குஷிப்படுத்த மணிக்கணக்காக உட்கார்ந்து ஒரு குட்டிக் கப்பல் செய்துகொடுக்கிறார் அல்லது தன் செல்ல மகளைச் சந்தோஷப்படுத்த ஒரு பொம்மை வீட்டைப் பார்த்துப் பார்த்துச் செய்துகொடுக்கிறார். கொடுத்த கொஞ்ச நேரத்திலேயே அதை அவர் பிடுங்கி உடைத்துப் போடுவாரா? அப்படிச் செய்தால், அவர் அப்பாவே இல்லை! அப்படியானால், அன்புள்ள கடவுள் மட்டும் எப்படி அதுபோல் செய்வார்? மனிதர்கள் சந்தோஷமாக வாழத்தான் கடவுள் இந்தப் பூமியைப் படைத்தார். முதல் தம்பதி ஆதாம் ஏவாளைப் படைத்து கடவுள் அவர்களிடம், “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, . . . ஆண்டுகொள்ளுங்கள்” என்றார். பிறகு, “தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது.” (ஆதியாகமம் 1:27, 28, 31) எந்தக் காரணத்திற்காக இந்தப் பூமியைக் கடவுள் படைத்தாரோ அதை அவர் மறந்துவிடவில்லை. எனவே, இந்தப் பூமி அழிய விடமாட்டார். தம் வாக்குறுதிகளைப் பற்றி யெகோவா ஆணித்தரமாகச் சொல்வதைக் கேளுங்கள்: “அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.”—ஏசாயா 55:11.

ஆனால் கடவுள், ‘பூமியை நாசமாக்குபவர்களை நாசமாக்க’ போகிறார். (வெளிப்படுத்துதல் 11:18) “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்” என்று அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார்.—நீதிமொழிகள் 2:21, 22.

இதை எப்போது செய்வார்? அது எந்த மனிதனுக்கும் தெரியாது. “அந்த நாளோ அந்த மணிநேரமோ பரலோகத் தகப்பனைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது, பரலோகத்திலுள்ள தேவதூதர்களுக்கும் தெரியாது, மகனுக்கும் தெரியாது” என்று இயேசு சொன்னார். (மாற்கு 13:32) பொல்லாதவர்களைக் கடவுள் எப்போது அழிப்பார் என யெகோவாவின் சாட்சிகள் கணிக்க விரும்புவதில்லை. இருந்தாலும், கடைசி காலத்திற்கான “அடையாளம்” அவர்களுக்குத் தெரியும்... பைபிள் சொல்கிறபடி இன்று மனிதர்கள் அந்த “கடைசி நாட்களில்” வாழ்கிறார்கள் என்றும் அவர்களுக்குத் தெரியும்... ஆனால், அந்த நாட்கள் எப்போது ‘முடிவுக்கு’ வரும் என்று அவர்களுக்குத் தெரியாது. (மாற்கு 13:4-8, 33; 2 தீமோத்தேயு 3:1) அதைக் கடவுள் கையிலும் அவருடைய மகன் கையிலும் விட்டுவிடுகிறார்கள்.

கெட்டவர்களை யெகோவா அழிக்கும் வரை, அவருடைய அரசாங்கத்தைப் பற்றி யெகோவாவின் சாட்சிகள் மற்றவர்களுக்கு அறிவிப்பார்கள். பரலோகத்திலிருந்து ஆட்சி செய்யப்போகிற அந்த அரசாங்கம் பூமியை ஆனந்தப் பூஞ்சோலையாக மாற்றும். அப்போது, “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:29. (w11-E 12/01)

[பக்கம் 10-ன் படத்திற்கான நன்றி]

Image Science and Analysis Laboratory, NASA-Johnson Space Center