Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தூதர்கள்—நம்மீது அவர்களுடைய செல்வாக்கு

தூதர்கள்—நம்மீது அவர்களுடைய செல்வாக்கு

இயேசுவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்

தூதர்கள்—நம்மீது அவர்களுடைய செல்வாக்கு

“உலகம் உண்டாவதற்கு முன்பு” இயேசு தம்முடைய தகப்பனோடு பரலோகத்தில் வாழ்ந்தார். (யோவான் 17:5) ஆகவே, பின்வரும் கேள்விகளுக்கு அவரால்தான் சரியான பதில்களைத் தர முடியும்.

தேவதூதர்களுக்கு நம்மீது அக்கறை இருக்கிறதா?

▪ தேவதூதர்களுக்கு நம்மீது மிகுந்த அக்கறை இருக்கிறது என்பதையே இயேசு சொன்ன வார்த்தைகளிலிருந்து நாம் தெரிந்துகொள்கிறோம். “மனந்திரும்புகிற ஒரு பாவியின் பொருட்டு கடவுளுடைய தூதர்களிடையே மகிழ்ச்சி உண்டாகும்” என்று அவர் சொன்னார்.—லூக்கா 15:10.

கடவுளுடைய ஊழியர்களின் ஆன்மீக நலனைப் பாதுகாக்கும் பொறுப்பு தூதர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்பதை இயேசு சொன்னதிலிருந்து நாம் தெரிந்துகொள்கிறோம். மற்றவர்களுக்கு இடறல் ஏற்படுத்திவிடாமல் இருக்குமாறு தம் சீடர்களை எச்சரித்தபோது, “இந்தச் சிறியவர்களில் ஒருவரைக்கூட இழிவாகக் கருதாதபடி கவனமாயிருங்கள்; நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவர்களுடைய தேவதூதர்கள் பரலோகத்தில் என் தகப்பனுடைய முகத்திற்கு முன்பாக எப்போதும் இருக்கிறார்கள்” என்று இயேசு கூறினார். (மத்தேயு 18:10) இப்படிச் சொன்னபோது, தம் சீடர்கள் ஒவ்வொருவரையும் காப்பதற்கு ஒரு காவல் தூதர் இருப்பாரென்று இயேசு அர்த்தப்படுத்தவில்லை. மாறாக, அவர்கள் கிறிஸ்தவ சபையின் அங்கத்தினர்மீது மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள் என்றே அவர் அர்த்தப்படுத்தினார்.

பிசாசு நமக்கு எவ்வாறு தீங்கிழைக்கலாம்?

▪ கடவுளைப் பற்றிய உண்மைகளை மக்கள் கற்றுக்கொள்வதைத் தடுக்க சாத்தான் தன்னால் ஆன மட்டும் முயலுவான் என்று சீடர்களிடம் இயேசு சொன்னார். ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியைக் கேட்டும் [ஒருவர்] அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லையென்றால் பொல்லாதவன் வந்து அவருடைய இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொண்டு போய்விடுவான்’ என்றார்.—மத்தேயு 13:19.

மக்களைச் சாத்தான் எப்படி ஏமாற்றுகிறான் என்பதை இயேசு தெள்ளத்தெளிவாகக் குறிப்பிட்டுக் காட்டினார்; அதற்காக அவர் ஓர் உவமையைச் சொன்னார். அந்த உவமையில்... ஒருவன் தன் வயலில் கோதுமை விதைகளை விதைத்திருந்தான். அவன் இயேசுவுக்கு அடையாளமாக இருந்தான். அந்தக் கோதுமை விதைகள், பரலோகத்தில் இயேசுவோடு ஆட்சி செய்யப்போகிற உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு அடையாளமாக இருந்தன. என்றாலும், ‘எதிரி வந்து கோதுமைகளுக்கு இடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டதாக’ இயேசு சொன்னார். அந்தக் களைகள் போலிக் கிறிஸ்தவர்களைச் சுட்டிக்காட்டின. “அவற்றை விதைத்த எதிரி, பிசாசு.” (மத்தேயு 13:25, 39) களைகள் எப்படிக் கோதுமைத் தளிர்களைப் போலவே காட்சியளிக்குமோ, அவ்வாறே போலிக் கிறிஸ்தவர்கள் உண்மைக் கிறிஸ்தவர்களைப் போலவே காட்சியளிக்கலாம். பொய்க் கோட்பாடுகளைப் போதிக்கிற மதங்கள் மக்களை வஞ்சித்து, கடவுளுக்குக் கீழ்ப்படியாமற்போய்விடச் செய்கின்றன. ஆம், யெகோவாவுடன் மக்கள் நட்பை வளர்த்துக்கொள்ள முடியாதபடி செய்ய பொய் மதத்தைச் சாத்தான் பயன்படுத்துகிறான்.

சாத்தானின் தீய செல்வாக்கிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி?

▪ சாத்தானை, “இந்த உலகத்தை ஆளுகிறவன்” என்று இயேசு அழைத்தார். (யோவான் 14:30) சாத்தானின் வலையில் விழாமல் நம்மை எது பாதுகாக்கும் என்பதைக் கடவுளிடம் அவர் செய்த ஒரு ஜெபத்தில் தெரிவித்தார். தம் சீடர்களுக்காகக் கடவுளிடம் ஜெபம் செய்தபோது, “நீங்கள் இவர்களை இந்த உலகத்திலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் கேட்காமல், பொல்லாதவனிடமிருந்து இவர்களைப் பாதுகாக்க வேண்டுமென்றே கேட்டுக்கொள்கிறேன். நான் இந்த உலகத்தின் பாகமாக இல்லாதது போலவே இவர்களும் இந்த உலகத்தின் பாகமாக இல்லை. சத்தியத்தினால் இவர்களைப் பரிசுத்தமாக்குங்கள்; உங்களுடைய வார்த்தையே சத்தியம்” என்று சொன்னார். (யோவான் 17:15-17) ஆகையால், கடவுளுடைய வார்த்தையிலிருந்து அறிவைப் பெற்றுக்கொள்வதன் மூலம் சாத்தானின் பிடியிலுள்ள இந்த உலகின் செல்வாக்கிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.

தூதர்கள் இன்று நமக்கு எப்படி உதவுகிறார்கள்?

▪ ‘இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்தில் . . . தேவதூதர்கள் புறப்பட்டுப் போய் நீதிமான்கள் மத்தியிலிருந்து பொல்லாதவர்களைத் தனியே பிரிப்பார்கள்’ என்று இயேசு சொன்னார். (மத்தேயு 13:49) நாம் “இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்தில்” வாழ்ந்துவருகிறோம்; லட்சக்கணக்கானோர் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்திக்குச் செவிசாய்க்கிறார்கள்.—மத்தேயு 24:3, 14.

ஆனால்... கடவுளுடைய வார்த்தையைப் படிக்க ஆரம்பிக்கிற எல்லாருமே அவருடைய பிரியத்தைச் சம்பாதிப்பார்களென்று சொல்ல முடியாது. கடவுள்மீது உண்மையான அன்பை வைத்திருக்கிறவர்களையும், கற்றுக்கொள்வதைக் கடைப்பிடிக்க விரும்பாதவர்களையும் பிரித்தறிவதற்குத் தேவதூதர்கள் உதவுகிறார்கள். அவர்கள்தான் யெகோவாவின் ஊழியர்கள் செய்கிற வேலையை வழிநடத்துகிறார்கள். கடவுளுடைய பிரியத்தைச் சம்பாதிக்கிறவர்களைக் குறித்து இயேசு இவ்வாறு சொன்னார்: “நல்ல இருதயத்தோடு செய்தியைக் கேட்டு, அதைத் தங்களுக்குள் பதிய வைத்து, சகித்திருந்து பலன் கொடுக்கிறார்கள்.”—லூக்கா 8:15. (w10-E 11/01)

கூடுதல் தகவலுக்கு, இந்தப் புத்தகத்தில் 10-ஆம் அதிகாரத்தைப் பாருங்கள்; இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 24-ன் படம்]

நல்மனமுள்ளவர்களைக் கண்டுகொள்ள உண்மைக் கிறிஸ்தவர்களுக்குத் தேவதூதர்கள் உதவுகிறார்கள்