Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘கடவுள் காட்டுகிற அன்பிலிருந்து நம்மை ஏதாவது பிரிக்க முடியுமா?’

‘கடவுள் காட்டுகிற அன்பிலிருந்து நம்மை ஏதாவது பிரிக்க முடியுமா?’

கடவுளிடம் நெருங்கி வாருங்கள்

‘கடவுள் காட்டுகிற அன்பிலிருந்து நம்மை ஏதாவது பிரிக்க முடியுமா?’

ரோமர் 8:38, 39, NW

அன்புக்காக ஏங்காத உள்ளங்கள் இவ்வுலகில் உண்டோ? குடும்பத்தினர்களோ நண்பர்களோ நம்மிடம் அன்பு காட்டும்போது நம் வாழ்வில் வசந்தம் பிறக்கிறதல்லவா. என்றாலும், மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படலாம், நாளடைவில் அவை சிதைந்து சின்னாபின்னமாகியும் விடலாம். நம்முடைய அன்புக்குரியவர்களே நம் மனதைப் புண்படுத்திவிடலாம், நம்மைக் கைகழுவிவிடலாம், ஏன், நம்மை ஒதுக்கியும் விடலாம். ஆனால், என்றென்றும் மாறாத அன்புள்ள ஒருவர் இருக்கிறார். அவரே யெகோவா தேவன். தம்மை வழிபடுகிறவர்கள்மீது அவர் காட்டும் அன்பை ரோமர் 8:38, 39 (NW) அழகாக வர்ணிக்கிறது.

“நான் உறுதியாக நம்புகிறேன்” என்று அப்போஸ்தலன் பவுல் இதில் கூறுகிறார். எதை உறுதியாக நம்புகிறார்? கடவுள் காட்டுகிற அன்பிலிருந்து எதுவும் நம்மைப் பிரிக்க முடியாது என்பதையே அவர் உறுதியாக நம்புகிறார். பவுல் தன்னைப் பற்றி மட்டுமல்ல, ‘நம்மை’ பற்றியும் பேசுகிறார், அதாவது கடவுளுக்கு உண்மையுடன் சேவை செய்கிற அனைவரையும் பற்றி பேசுகிறார். யெகோவா தம்முடைய ஊழியர்களிடம் அன்பு காட்டுவதை எதுவுமே தடுத்து நிறுத்த முடியாது என்பதை வலியுறுத்திக் காட்டுவதற்கு பவுல் ஒரு பட்டியலையே தருகிறார்.

“சாவோ வாழ்வோ.” யெகோவா தம்முடைய மக்கள்மீது காட்டும் அன்பு அவர்கள் இறந்துபோவதோடு முடிந்துவிடுவதில்லை. தம்முடைய அன்புக்கு அத்தாட்சியாக, அப்படிப்பட்டவர்களைக் கடவுள் தமது நினைவில் வைத்திருக்கிறார்; விரைவில் வரப்போகும் புதிய உலகில், நீதி குடிகொண்டிருக்கும் புதிய உலகில், அவர்களை மீண்டும் உயிர்பெறச் செய்வார். (யோவான் 5:28, 29; வெளிப்படுத்துதல் 21:3, 4) அதற்குமுன், இந்த உலகில் அவர்களுக்கு என்ன ஆபத்துகள் வந்தாலும்சரி, உண்மையுள்ள வணக்கத்தார்மீது கடவுள் காட்டுகிற அன்பு மட்டும் ஒழியவே ஒழியாது.

“தேவதூதர்களோ அரசாங்கங்களோ.” செல்வாக்குமிக்கவர்களோ அதிகாரிகளோ மக்களைத்தான் ஆட்டிப்படைக்க முடியும், ஆனால் யெகோவாவை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. மகா சக்திபடைத்த தூதர்களாலும், அவர்களில் ஒருவனாகிய சாத்தானாலும், கடவுள் தமது மக்களிடம் அன்பு காட்டாதபடி அவருடைய மனதை மாற்ற முடியாது. (வெளிப்படுத்துதல் 12:10) உண்மை கிறிஸ்தவர்களை எதிர்க்கும் அரசாங்கங்கள் உட்பட, எந்த அரசாங்கத்தாலும் தமது ஊழியர்களைப் பற்றி கடவுளுக்கு இருக்கும் கண்ணோட்டத்தை மாற்ற முடியாது.—1 கொரிந்தியர் 4:13.

“இன்றுள்ள காரியங்களோ இனிவரும் காரியங்களோ.” காலங்கள் உருண்டோடினாலும் கடவுள் காட்டுகிற அன்பு தணியாது. தற்காலத்திலோ வருங்காலத்திலோ கடவுளுடைய ஊழியர்களுக்கு நேரிடும் அல்லது நேரிடப்போகும் எதுவுமே அவர்கள்மீது கடவுள் அன்பு கட்டாதபடி செய்ய முடியாது.

“வலிமைமிக்க சக்திகளோ.” இதற்கு முன் பரலோகத்திலுள்ள சக்திகளைத் ‘தேவதூதர்கள்’ என்றும் பூமியிலுள்ள சக்திகளை ‘அரசாங்கங்கள்’ என்றும் பவுல் குறிப்பிட்டார்; ஆனால், இப்பொழுது ‘ வலிமைமிக்க சக்திகள்’ என்று சொல்கிறார். இதற்கான கிரேக்க வார்த்தையில் நிறைய அர்த்தம் பொதிந்துள்ளது. அதற்குரிய துல்லியமான அர்த்தம் எதுவாக இருந்தாலும்சரி, ஒரு விஷயம் மட்டும் நிச்சயம்: எந்தச் சக்தியாலும் யெகோவா காட்டும் அன்பை அவருடைய மக்கள் பெறாதபடி தடுக்க முடியாது.

“உயர்வோ தாழ்வோ.” தம்முடைய மக்கள் சந்தோஷமாக இருந்தாலும் சரி துக்கமாக இருந்தாலும் சரி, யெகோவா அவர்களை நேசிக்கிறார்.

“வேறெந்த படைப்பானாலும்.” ஒட்டுமொத்த படைப்புகளையும் உள்ளடக்குகிற இந்த வார்த்தைகளில் பவுல் எதைக் குறிப்பிடுகிறார் என்றால், யெகோவாவின் அன்பிலிருந்து அவருடைய உண்மையுள்ள வணக்கத்தாரை உண்மையில் எதுவுமே பிரிக்க முடியாது.

கடவுள் காட்டுகிற அன்பு, மனிதருடைய அன்பைப் போல மாறியும் விடாது, தணிந்தும் விடாது. விசுவாசத்தோடு எப்போதும் கடவுளையே நம்பியிருப்பவர்களுக்கு அவர் காட்டும் அன்பு மாறவே மாறாது; அது காலத்தால் அழியாது. இதை நாம் தெரிந்திருப்பது யெகோவாவிடம் நெருங்கி வருவதற்கும் அவர்மீது நாம் வைத்திருக்கும் அன்பை நிரூபிக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வதற்கும் நம்மைத் தூண்டுகிறதல்லவா? (w08 8/1)