Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘கிங்ஸ்லியால் முடியும் என்றால், என்னாலும் முடியும்!’

‘கிங்ஸ்லியால் முடியும் என்றால், என்னாலும் முடியும்!’

இலங்கையை சேர்ந்த கிங்ஸ்லி முதல் தடவையா, தேவராஜ்ய ஊழியப் பள்ளியில பைபிள் வாசிப்பு செய்ய தயாரா இருக்கார். அவரோட தோளை மெதுவா தட்டுனதும் வாசிக்க ஆரம்பிக்கிறார். ஒரு வார்த்தையகூட விடாம, அதுவும் ஒரு எழுத்தக்கூட விடாம கவனமா வாசிக்கிறார். ஆச்சரியம் என்னன்னா அவர் பைபிளை பார்க்காம வாசிக்கிறதுதான்! ஏன்னு யோசிக்கிறீங்களா?

ஏன்னா கிங்ஸ்லிக்கு கண்ணும் தெரியாது, அவ்வளவா காதும் கேட்காது. அதோட, அவரால சுத்தமா நடக்கவும் முடியாது. ‘வீல்சேர்’ இல்லன்னா அவரால எங்கேயுமே போக முடியாது. இருந்தாலும் யெகோவாவை பத்தி அவரால எப்படி கத்துக்க முடிஞ்சது, அதுவும் பேச்சு கொடுக்குற அளவுக்கு எப்படி முன்னேற முடிஞ்சது? இதை பத்திதான் நான் சொல்ல போறேன்.

முதல் தடவை கிங்ஸ்லிய பார்த்தப்போ எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. ஏன்னா பைபிளை பத்தி தெரிஞ்சிக்க அவர் அவ்ளோ ஆர்வமா இருந்தார்! அவர் ஏற்கெனவே நிறைய யெகோவாவின் சாட்சிகளோட பைபிள் படிப்பு படிச்சிருந்தார். அவர்கிட்ட பிரெய்ல் மொழியில நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகம் இருந்தது. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அது ரொம்ப பழசா, கிழிஞ்சுபோய் இருந்தது. “திரும்பவும் பைபிள் படிக்கிறீங்களா”னு கேட்டப்போ அவர் உடனே ஒத்துக்கிட்டார். ஆனா அதுல ரெண்டு சவால்கள் இருந்துச்சு.

ஒண்ணு என்னனா, வயசானவங்களும் மாற்றுத் திறனாளிகளும் இருந்த ஒரு ‘ஹோம்ல’தான் கிங்ஸ்லியும் இருந்தார். அங்க ரொம்ப சத்தமா இருக்கும். கிங்ஸ்லிக்கும் அவ்வளவா காது கேட்காததுனால நான் சத்தமா பேச வேண்டியிருக்கும். சொல்லப்போனா, நாங்க பேசுனது அங்க இருந்த எல்லாருக்குமே கேட்கும்.

ரெண்டாவது பிரச்சினை என்னனா, கிங்ஸ்லியால கொஞ்ச விஷயங்களைதான் படிச்சு புரிஞ்சுக்க முடியும். அதனால ஒருசில பாராக்களைத்தான் எங்களால படிக்க முடியும். படிக்க போற விஷயங்களை கிங்ஸ்லி நல்லா தயாரிப்பார். அந்த பாராக்களை திரும்பத் திரும்ப வாசிச்சு பார்ப்பார். அதுல இருக்குற பைபிள் வசனங்களை அவரோட பிரெய்ல் மொழி பைபிள்ல பார்த்து வைப்பார். கேள்விக்கான பதிலையும் மனசுலயே சொல்லி பார்ப்பார். இந்த மாதிரி படிச்சது ரொம்ப பிரயோஜனமா இருந்தது. நாங்க படிக்கும்போது, கிங்ஸ்லி எப்போவும் தரையில ஒரு பாய் மேல சம்மணம் போட்டு உட்காந்துக்குவார். தரையில ‘டப், டப்’னு உற்சாகமா அடிச்சுக்கிட்டே அவர் கத்துக்கிட்ட விஷயங்களை சத்தமா சொல்வார். வாரத்துல ரெண்டு தடவை நாங்க பைபிள் படிச்சோம். ஒவ்வொரு தடவையும் 2 மணிநேரத்துக்கு படிப்போம்.

கூட்டங்களுக்கு வந்தார்

கிங்ஸ்லியும் பாலும்

கிங்ஸ்லி கூட்டங்களுக்கு வரணும்னு ரொம்ப ஆசைப்பட்டார். ஆனா அவரை கூட்டிட்டு வர்றது ரொம்ப கஷ்டம். யாராவது அவரை வீல் சேர்ல இருந்து கார்ல உட்கார வைக்கணும். அப்புறம் அதுல இருந்து இறக்கணும். திரும்ப ராஜ்ய மன்றத்துக்குள்ள தூக்கிட்டு வரணும். சபையில இருந்த நிறைய பேர் இந்த வேலைய மாத்தி மாத்தி செஞ்சாங்க. இதை ஒரு பாக்கியமா நினைச்சாங்க. கூட்டம் நடக்கும்போது கிங்ஸ்லி ஒரு ‘ஸ்பீக்கரை’ (speaker) காதுகிட்ட வைச்சு கவனமா கேட்பார், பதிலும் சொல்வார்.

கொஞ்ச நாளுக்கு அப்புறம், ஊழியப் பள்ளியில சேரணும்னு கிங்ஸ்லி ஆசைப்பட்டார். அவருக்கு முதல் தடவையா பைபிள் வாசிப்பு கிடைச்சது. அந்த நியமிப்பை செய்றதுக்கு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி அவர்கிட்ட, “நல்லா வாசிச்சு பழகிட்டீங்களா”னு கேட்டேன். அதுக்கு அவர், “ஆமா பிரதர், 30 தடவை படிச்சு பார்த்துட்டேன்”னு சொன்னார். அவரோட முயற்சிக்காக அவரை பாராட்டிட்டு, “எனக்கு வாசிச்சு காட்டுறீங்களா”னு கேட்டேன். அப்போ கிங்ஸ்லி அவரோட பிரெய்ல் பைபிளை திறந்து, வசனத்துமேல விரலை வைச்சு படிக்க ஆரம்பிச்சார். (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) ஆனா அவரோட விரலை வைச்ச இடத்துல இருந்து நகர்த்தவே இல்லை. அவர் மனப்பாடமா வாசிக்கிறார்னு எனக்கு அப்போதான் புரிஞ்சுது!

அதை என்னால நம்பவே முடியலை. எனக்கு அழுகையே வந்துடுச்சு. “வெறும் 30 தடவை படிச்சு பார்த்தே உங்களால எப்படி மனப்பாடமா சொல்ல முடியுது”னு கேட்டேன். அதுக்கு அவர், “ஒரு நாளைக்கு 30 தடவை படிச்சு பார்த்தேன் பிரதர்”னு சொன்னார். கிங்ஸ்லி, இப்படி ஒரு மாசத்துக்கு மேல படிச்சு படிச்சு மனப்பாடம் செஞ்சிருந்தார்!

கிங்ஸ்லி அவரோட நியமிப்பை செய்ய வேண்டிய நாள் வந்தது. அவர் வாசிச்சு முடிச்ச உடனேயே மொத்த சபையும் உற்சாகம் பொங்க கைதட்டுனாங்க. கிங்ஸ்லியோட விடாமுயற்சியை பார்த்து, சிலருக்கு கண் எல்லாம் கலங்கிடுச்சு. பயத்துனால ஊழியப் பள்ளியில பேச்சுக் கொடுக்கிறதையே நிறுத்தியிருந்த ஒரு சகோதரி திரும்பவும் பள்ளியில சேரணும்னு சொன்னாங்க. ஏன்னு கேட்டப்போ, “கிங்ஸ்லியால முடியும்னா, என்னாலயும் முடியும்”னு சொன்னாங்க.

கிங்ஸ்லி மூணு வருஷம் பைபிள் படிப்பு படிச்சார். அப்புறம் 2008 செப்டம்பர் 6-ஆம் தேதி ஞானஸ்நானம் எடுத்தார். 2014 மே 13-ஆம் தேதி இறந்து போனார். முடிவுவரைக்கும் கிங்ஸ்லி யெகோவாவுக்கு உண்மையா இருந்தார். பூஞ்சோலை பூமியில முழு ஆரோக்கியத்தோடு யெகோவாவுக்கு திரும்பவும் சேவை செய்ய முடியுங்கிற நம்பிக்கை கிங்ஸ்லிக்கு இருந்தது. (ஏசா. 35:5, 6)—இந்த அனுபவத்தை சொன்னவர் பால் மெக்மேனஸ்.

^ பாரா. 4 இந்தப் புத்தகம் 1995-ல் பிரசுரிக்கப்பட்டது. இப்போது அச்சிடப்படுவது இல்லை.