Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

 பைபிளின் கருத்து

ஜெபம்

ஜெபம்

நம் ஜெபத்தை யாராவது கேட்கிறார்களா?

“ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்.”—சங்கீதம் 65:2.

மக்களின் பதில்:

நம் ஜெபத்தை யாருமே கேட்பதில்லை என்று சிலர் சொல்கிறார்கள். முக்கியமாக, கஷ்டத்தில் தவிக்கும் மக்கள், தங்கள் ஜெபத்தை யாரும் கேட்பதில்லை என்று நினைக்கிறார்கள்.

பைபிளின் பதில்:

“யெகோவாவுடைய [கடவுளுடைய] கண்கள் நீதிமான்களைப் பார்க்கின்றன, அவருடைய காதுகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன; ஆனால், யெகோவாவுடைய முகம் தீமை செய்கிறவர்களுக்கு விரோதமாக இருக்கிறது.” (1 பேதுரு 3:12) கடவுள் நம் ஜெபங்களைக் கேட்கிறார் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. ஆனால், தாம் சொன்னபடி கேட்டு நடக்கிற மக்களின் ஜெபங்களையே அவர் முக்கியமாகக் கேட்கிறார்! அவர் நம் ஜெபங்களைக் கேட்க ஆர்வமாக இருக்கிறார் என்று மற்றொரு வசனம் சொல்கிறது: “கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார் என்பதே நாம் அவர்மீது கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை.” (1 யோவான் 5:14) எனவே, கடவுளுடைய விருப்பம் என்னவென்று தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்ற விதத்தில் ஜெபம் செய்யவேண்டும்.

 எப்படி ஜெபம் செய்ய வேண்டும்?

“ஜெபம் செய்யும்போது . . . சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.”—மத்தேயு 6:7.

மக்களின் பதில்:

அநேக மதங்களைச் சேர்ந்தவர்கள், உதாரணத்திற்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், புத்த மதத்தவர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் ஆகியோர் ஜெபமாலைகளைப் பயன்படுத்தி மனப்பாடம் செய்த ஜெபங்களைத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.

பைபிளின் பதில்:

நாம் மனதிலிருந்து ஜெபிக்க வேண்டும். மனப்பாடம் செய்த ஜெபங்களை ஒப்பிக்கக் கூடாது, அதோடு சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்லக் கூடாது. “ஜெபம் செய்யும்போது உலகத்தாரைப் போல் சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்; அநேக வார்த்தைகளைச் சொல்வதால் தங்களுடைய ஜெபம் கேட்கப்படும் என்று அவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். அவர்களைப் போல் இருக்காதீர்கள்; நீங்கள் கேட்பதற்கு முன்னரே உங்களுக்கு என்னென்ன தேவை என்பதை உங்கள் தகப்பனாகிய கடவுள் அறிந்திருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது.—மத்தேயு 6:7, 8.

ஏன் முக்கியம்?

கடவுள் ஏற்றுக்கொள்கிற விதத்தில் ஒருவர் ஜெபம் செய்யவில்லை என்றால், அவருடைய ஜெபத்திற்கு எந்தப் பலனும் இருக்காது. அது கடவுளுக்கும் பிடிக்காது. கடவுளுக்குப் பிடிக்காத காரியங்களை வேண்டுமென்றே செய்பவர்களுடைய ஜெபங்கள், அவருக்கு ‘அருவருப்பாக’ இருக்கிறது என பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 28:9.

யாரிடம் ஜெபம் செய்ய வேண்டும்?

“கர்த்தரைக் [யெகோவாவை, NW] கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.”—ஏசாயா 55:6.

மக்களின் பதில்:

சிலர் இயேசுவின் தாயாகிய மரியாளிடம், தேவதூதர்களிடம் அல்லது ‘புனிதர்களிடம்’ ஜெபம் செய்கிறார்கள். அந்தப் ‘புனிதர்களில்’ சிலர்: ‘புனித’ அந்தோனியார் (இவர் பதுவை [Padua] நகரைச் சேர்ந்தவர். இவர் மக்களுக்குக் கடவுளைப் பற்றி சொல்லிக்கொடுப்பதோடு, மற்ற தேவைகளையும் கவனித்துக்கொள்வார்), ‘புனித’ யூதா (இவர் “இக்கட்டான காலங்களில்” ஆதரவு கொடுப்பவர்). இப்படிப்பட்ட ‘புனிதர்களும்’ தேவதூதர்களும் தங்களுக்காக கடவுளிடம் பரிந்து பேசுவார்கள் என்று நம்பி அநேகர் இவர்களிடம் ஜெபம் செய்கிறார்கள்.

பைபிளின் பதில்:

‘பரலோகத்தில் இருக்கிற நம் தகப்பனிடம்தான்’ ஜெபம் செய்ய வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (மத்தேயு 6:9) “நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்; எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை நன்றியுடன்கூடிய ஜெபத்தினாலும் மன்றாட்டினாலும் கடவுளுக்குத் தெரியப்படுத்துங்கள்.”—பிலிப்பியர் 4:6. ▪ (g14-E 09)