Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யாருடைய கைவண்ணம்?

திமில் முதுகுத் திமிங்கலம்—அதன் நீண்ட துடுப்புகள்

திமில் முதுகுத் திமிங்கலம்—அதன் நீண்ட துடுப்புகள்

திமில் முதுகுத் திமிங்கலம்—கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதன் எடை சுமார் 4,000 கிலோ! நீளம் சுமார் 60 அடி! ஆனாலும், தண்ணீருக்குள் அது ‘டைவ்’ அடிக்கும் லாவகம் என்ன... வளைந்து நெளிந்து வேகமாகத் திரும்பும் அழகு என்ன... படுஜோர்! இப்போது கேள்வி... இவ்வளவு பெரிய உடலை வைத்துக்கொண்டு இந்த ராட்சத பாலூட்டியால் எப்படி இந்தளவு விரைவாகத் தண்ணீருக்குள் பாய்ந்துசெல்ல முடிகிறது? ரகசியம், அதன் நீண்ட துடுப்புகளுக்குள் ஒளிந்திருக்கிறது.

சிந்தித்துப் பாருங்கள்: பெரும்பாலான திமிங்கலங்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களுடைய துடுப்புகளின் முன்புற விளிம்புகள் வழுவழுப்பாக இருக்கும். ஆனால், திமில் முதுகுத் திமிங்கலத்தின் துடுப்புகள் வித்தியாசமானவை. அவற்றின் விளிம்புகளில் ரம்பப் பற்கள் போன்ற மேடுபள்ளங்கள் (ட்யூபர்கில்ஸ்) உள்ளன. அந்தத் திமிங்கலம் நீந்தும்போது, அதன் துடுப்புகளிலுள்ள மேடுபள்ளங்கள் வழியாய் தண்ணீர் பாய்ந்தோடுவதால் ஏராளமான நீர்ச்சுழல்கள் உண்டாகின்றன. இதன் காரணமாக, சல்லென்று மேல்நோக்கி நீந்த அதற்கு உந்துதல் கிடைக்கிறது; எந்தக் கோணத்தில் வேண்டுமானாலும் துடுப்புகளைத் திருப்பி அதுவால் நீந்த முடிகிறது. மிக முக்கியமாக, அதன் துடுப்புகளிலுள்ள மேடுபள்ளங்கள் நீரின் இழுவிசையை எதிர்த்து நீந்த அதற்கு உதவுகிறது. அந்தத் துடுப்புகளின் நீளம்? திமிங்கலத்தின் நீளத்தில் மூன்றிலொரு பங்கு!

திறம்பட்ட விதத்தில் இயங்கும் படகுச் சுக்கான்கள், நீர்விசையாழிகள், காற்றாலைகள், ஹெலிகாப்டரின் சுழல்விசிறிகள் ஆகியவற்றை உருவாக்குவதற்கு இந்தத் திமிங்கலத்தின் அதிசயத் துடுப்புகள் ஆய்வாளர்களின் மூளையில் பொறிதட்டச் செய்திருக்கின்றன.

என்ன நினைக்கிறீர்கள்? திமில் முதுகுத் திமிங்கலத்தின் நீண்ட துடுப்புகள் தானாக உருவாகியிருக்குமா? அல்லது, அது யாரோ ஒருவருடைய கைவண்ணமா? ◼ (g13-E 06)