Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நாத்திகர்களின் மும்முர முயற்சி

நாத்திகர்களின் மும்முர முயற்சி

நாத்திகர்களின் மும்முர முயற்சி

இன்று ஒரு புது வகை நாத்திகர்கள் உதயமாகிவருகிறார்கள். இவர்கள் தங்களுடைய கொள்கைகளைத் தங்களோடு நிறுத்திக்கொள்ளாமல் அவற்றை மற்றவர்கள்மீது திணிப்பதற்கான தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். மதப்பற்றுள்ளவர்களைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொள்வதற்காக... “மும்முரமாய், ஆவேசமாய், வெறித்தனமாய் முயற்சி செய்கிறார்கள்” என எழுதியிருந்தார் பத்திரிகை எழுத்தாளர் ரிச்சர்ட் பெர்ன்ஸ்டீன். அறியொணாமைக் கொள்கையினரையும் (கடவுள் இருக்கிறார் என்பதைக் கண்டறிய முடியாது எனும் கொள்கையினர்) இவர்கள் விட்டுவைப்பதில்லை. ஏனென்றால், சந்தேகம் என்ற வார்த்தைக்கே இவர்களுடைய அகராதியில் இடமில்லை. இவர்களைப் பொறுத்தவரை, கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்லை, அவ்வளவுதான்!

நோபல் பரிசுபெற்ற ஸ்டீவன் வெய்ன்பர்க் ஒருமுறை சொன்னார்: “இந்த உலகம்... கடவுள் நம்பிக்கையெனும் கனவுலகிலேயே மிதந்துகொண்டிருக்கிறது; அந்தக் கனவைக் கலைத்துவிட்டு அது நிஜ உலகிற்கு வரவேண்டியிருக்கிறது. மதத்தின் கோரப்பிடியிலிருந்து மக்களை விடுவிக்க விஞ்ஞானிகளாகிய நாம் எதையாவது செய்தாக வேண்டும்; அதுதான் நாகரிக வளர்ச்சிக்கு நாம் ஆற்றுகிற அரும்பெரும் தொண்டாக இருக்கும்!” நாத்திகத்திடம் மக்களைச் சுண்டியிழுக்க இந்தப் புதுவகை நாத்திகர்கள் பயன்படுத்துகிற ஒரு கருவி: புத்தகங்கள். இவற்றில் சில, மக்களின் ஆர்வத்தைத் தட்டியெழுப்பும் பாணியில் எழுதப்பட்டிருக்கின்றன; அதனால் புத்தகச் சந்தையில் அவை சக்கைப்போடு போடுகின்றன.

இந்தப் புதுவகை நாத்திகர்கள் உருவானதற்கு மதமும் ஒரு விதத்தில் காரணம். இன்றைய உலகை உலுக்குகிற மதத் தீவிரவாதம், பயங்கரவாதம், சண்டைசச்சரவுகள் என எல்லாமே மதத்தின் பெயரில் செய்யப்படுபவை; இதனால், மதம் என்ற பேச்சை எடுத்தாலே மக்களுக்கு வெறுப்பாய் இருக்கிறது. “மதம் எல்லாவற்றையும் விஷமாக்கிவிடுகிறது” என்கிறார் ஒரு முன்னணி நாத்திகர். ‘விஷம்’ என்று நாத்திகர்கள் சொல்வது... மத சம்பந்தமான தீவிரவாதக் கருத்துகளை மட்டுமல்ல, அடிப்படைக் கொள்கைகளையும்தான்! ஆகவே, மதங்களின் அடிப்படைக் கொள்கைகளெல்லாம் அம்பலப்படுத்தப்பட வேண்டும், அவை அடியோடு அகற்றப்பட வேண்டும்; அவற்றுக்குப் பதிலாக பகுத்தறிவும் சிந்தனைத் திறனும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே இந்தப் புதுவகை நாத்திகர்களின் பிரச்சாரம்! புனித நூல்கள் பலவற்றில் மனித ‘உயிருக்கு உலைவைக்கிற விஷயங்கள் மூட்டை மூட்டையாய்க் குவிந்துகிடக்கின்றன’; இவற்றைப் பற்றி வெளிப்படையாகப் பேச மக்கள் பயப்படக் கூடாது என சாம் ஹாரிஸ் என்ற நாத்திகர் எழுதினார். மதப் பற்றுள்ளவர்களின் மனதை நோகடித்துவிடக் கூடாது என்பதற்காக மௌனம் சாதிப்பது சரியல்ல என்பதாகவும் அவர் எழுதினார்.

இந்தப் புதுவகை நாத்திகர்கள் ஒரு புறம் மதத்தைத் தூற்றுகிறார்கள், மறுபுறம் விஞ்ஞானத்தைப் போற்றுகிறார்கள்; கடவுளே இல்லை என்று விஞ்ஞானம் அடித்துச் சொல்வதாகவும் அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், அது உண்மைதானா? அது உண்மையாக இருக்க முடியுமா? “காலம் போகப் போக, இந்த விவாதத்தில் ஒரு பக்கம் கட்டாயம் ஜெயிக்கும்; இன்னொரு பக்கம் நிச்சயம் தோற்கும்” என்றும் ஹாரிஸ் சொல்கிறார்.

இதில் எந்தப் பக்கம் ஜெயிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இந்தக் கேள்விக்குப் பதில்சொல்வதற்கு முன் உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘படைப்பாளர் ஒருவர் இருக்கிறாரென்று நம்புவதால் உண்மையில் தீங்கு ஏதாவது ஏற்படுமா? எல்லாருமே நாத்திகராக மாறிவிட்டால் இந்த உலகத்தில் இருக்கிற பிரச்சினையெல்லாம் தீர்ந்துவிடுமா?’ நாத்திகம், மதம், விஞ்ஞானம் ஆகியவற்றைப் பற்றி மதிப்புக்குரிய விஞ்ஞானிகளும் தத்துவஞானிகளும் கருத்துச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களில் சிலருடைய கருத்துகளை நாம் சிந்திப்போம். (g10-E 11)