Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நம்பிக்கைக்குப் பாத்திரமான மக்கள்

நம்பிக்கைக்குப் பாத்திரமான மக்கள்

நம்பிக்கைக்குப் பாத்திரமான மக்கள்

அர்ஜென்டினாவில் டாக்ஸி டிரைவராக இருப்பவர் சந்தியாகு; ஒருநாள் அவருடைய டாக்ஸியில் ஏறிய ஒருவர் தன் பையை எடுக்க மறந்துவிட்டு இறங்கிவிட்டார். அதைப் பார்த்த சந்தியாகு மறுயோசனையின்றி அதைப் பத்திரமாக அவரிடம் சேர்த்தார். ‘ஹும், இது என்ன பெரிய விஷயமா?’ என்று நீங்கள் நினைக்கலாம்; ஆமாம், அது பெரிய விஷயம்தான்! ஏனென்றால், அந்தப் பையில் இருந்தது, 32,000 டாலருக்கும் அதிகமான பணம்!!

நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் நிரம்பி வழியும் ஓர் உலகை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அப்போது வாழ்க்கை எவ்வளவு வித்தியாசமாக இருக்கும்! உங்கள் பிள்ளையை ‘பேபிசிட்டரிடம்’ ஒப்படைத்துவிட்டு தைரியமாக வெளியே சென்று வரலாம்... உங்கள் வீட்டிற்குப் பூட்டு-சாவியே தேவைப்படாது! சரி... இதெல்லாம் வெறும் கனவுதானா?

உயர்ந்த நெறிகளால் வரும் பலன்

கிறிஸ்தவராய் இருந்த அப்போஸ்தலன் பவுல் தன்னைப் பற்றியும் சக கிறிஸ்தவர்களைப் பற்றியும் பின்வருமாறு சொன்னார்: “எல்லாவற்றிலும் நேர்மையாக நடக்கவே நாங்கள் விரும்புகிறோம்.” (எபிரெயர் 13:18) அப்படி நடந்துகொள்ளவே யெகோவாவின் சாட்சிகளும் கடினமாய் முயற்சி செய்கிறார்கள். ஏசாயா 33:15-ல் சொல்லப்பட்ட குணங்களை வளர்த்துக்கொள்வதே அவர்களுடைய குறிக்கோள். ‘நீதியாய் நடந்து, செம்மையானவைகளை [உண்மையானவற்றை] பேசி, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானங்களை [லஞ்ச லாவண்யம்] வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறுபவனை’ குறித்து அந்த வசனம் மெச்சிப் பேசுகிறது. இப்படிப்பட்ட அருமையான குணங்களைச் சிலர் எப்படி வளர்த்திருக்கிறார்கள்?

‘உண்மை பேசுங்கள்.’ பிலிப்பைன்ஸ் நாட்டில், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இருப்பவர் டோமிங்கோ. தென்னந்தோப்பு ஒன்றில் அவர் வேலை பார்க்கிறார். “முக்கால்வாசி பேர் தங்கள் முதலாளிகளிடம் நேர்மையாய் நடந்துகொள்ள மாட்டார்கள். உதாரணமாக, எத்தனை மூட்டை கொப்பரைத் தேங்காய்களைக் கட்டினார்கள் என்று முதலாளிக்கு உண்மையான கணக்கைக் காட்ட மாட்டார்கள்; கணக்கில் காட்டாத தேங்காய் மூட்டைகளைக் கடத்திவிடுவார்கள்” என்று சொல்கிறார்.

முதலாளிக்காகப் பொய்க் கணக்குக் காட்ட மறுத்ததால் டோமிங்கோவும் அவருடைய குடும்பத்தாரும் கிட்டத்தட்ட அந்தத் தோப்பைவிட்டே வெளியேற்றப்படும் நிலைக்கு வந்துவிட்டார்கள். ஆனாலும், டோமிங்கோ மசியவில்லை. “‘எங்களை வெளியே அனுப்பிவிட்டாலும் பரவாயில்லை, நாங்கள் பொய் சொல்லப் போவதில்லை’ என எங்கள் முதலாளியிடம் சொல்லிவிட்டோம்” என்கிறார் டோமிங்கோ. “கடைசியில் எங்கள் முதலாளியே, ‘யெகோவாவின் சாட்சிகள் ரொம்ப நல்ல மக்கள், நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள்’ என்று ஒப்புக்கொண்டார்; அதோடு, விவசாயம் செய்யக் கூடுதலான நிலத்தையும் எங்களுக்குக் கொடுத்தார்” என்றும் டோமிங்கோ சொல்கிறார்.

‘இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்திடுங்கள்.’ பியர் என்பவர் கேமரூனின் ஒரு பகுதியில் தலைமை வரித்துறை அதிகாரியாய் இருக்கிறார். கிம்பளம் வாங்குவதற்கு அநேக வாய்ப்புகள் அவரைத் தேடிவந்தன. ஆரம்பத்தில், தற்காலிகப் பணியாளர்களுக்குச் சம்பளப் பட்டுவாடா செய்யும் பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்பட்டது; அதில் ஏதோ குளறுபடி இருப்பதாக அவர் கவனித்தார். “கால வரையறை முடிந்த ஒப்பந்தப் பணியாளர்களுக்கு, அல்லது அவர்களில் இறந்துபோயிருந்தவர்களுக்கும்கூட சம்பளப் பணம் வந்துகொண்டிருந்தது” என்று பியர் சொல்கிறார். “நான் நினைத்திருந்தால், இந்த அதிகப்படியான பணத்தை என் ‘பாக்கெட்டில்’ போட்டிருக்கலாம்; ஆனால், நான் அப்படிச் செய்யாமல் சம்பளப் பட்டுவாடா செய்த கணக்கை ஒன்று விடாமல் எழுதி வைத்திருந்ததோடு, கணக்கில் வராத மீதிப் பணத்தைப் பத்திரமாகக் கையிருப்பில் வைத்திருந்தேன்” என்கிறார்.

அதனால் கிடைத்த பலன்? பியர் சொல்கிறார்: “இரண்டு வருடம் கழித்து, கணக்கைச் சரிபார்ப்பதற்காகத் தணிக்கை நடந்தது. நான் எழுதி வைத்திருந்த கணக்கைக் காட்டினேன், மீதிப் பணத்தையும் ஒப்படைத்தேன்; அதற்குள் நிறையப் பணம் சேர்ந்திருந்தது. நான் செய்ததை நினைத்து எனக்கே பெருமையாக இருந்தது. தணிக்கை அதிகாரிகள் என் கைசுத்தத்திற்காக என்னைப் பாராட்டினார்கள்.”

‘லஞ்சம் வாங்குவதை’ தவிருங்கள். பிரேசில் நாட்டைச் சேர்ந்த ரியோ டி ஜெனிரோவில், அரசு அங்கீகாரம் பெற்ற ரிக்கார்டோ என்ற ஒரு வழக்கறிஞருக்கு, அவருடைய பணிநாட்கள் முழுவதிலும் லஞ்சம் வாங்க நிறைய வாய்ப்புகள் இருந்தன. அவரே அதைப் பற்றிச் சொல்கிறார்: “ஒரு சமயம், ஒரு வழக்கறிஞர் எனக்கு லஞ்சம் கொடுக்கப் பார்த்தார். என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் அவராகவே ஒரு ‘சிடி பிளேயரை’ என் வீட்டிற்கு அனுப்பிவைத்தார். அந்தக் காலத்திலெல்லாம் சிடி பிளேயர் இருந்தால் ரொம்ப மதிப்பு; அதுமட்டுமல்ல, அது ஒரு சொகுசுப் பொருளும்கூட!”

ரிக்கார்டோ என்ன செய்தார்? அவர் சொல்கிறார்: “அந்த பார்சலைப் பிரிக்கக்கூட வேண்டாமென்று நானும் என் மனைவியும் தீர்மானித்தோம். நேரே அந்த வழக்கறிஞர் அலுவலகத்துக்குப் போய் அவருடைய மேசைமீது அந்த பார்சலை வைத்துவிட்டோம்; இதைப் பார்த்ததும் அவர் வாயடைத்துப் போனார்! அதை ஏன் திருப்பிக் கொடுத்துவிட்டேன் என்பதை அவருக்கு விளக்கிச் சொன்னேன். நான் செய்த காரியத்தைப் பார்த்து முக்கியமாக அவருடைய செயலர் அசந்துபோய்விட்டார்.”

நேர்மையாக நடந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே முயற்சி செய்கிறார்கள் எனச் சொல்ல முடியாது என்றாலும், பொதுவாக அவர்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான மக்கள் எனப் பெயர்பெற்றிருக்கிறார்கள். சமீபத்தில் போலந்து நாட்டில் பல கிளைகளைக் கொண்ட ஜவுளிக் கடையில் யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். காரணம், அவர்கள் சம்பாதித்திருக்கும் நற்பெயரே! அந்தக் கடையின் விற்பனை மேலாளர் சொன்னதாவது: “எல்லா இடங்களிலும் நேர்மையானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்; ஆனால், யெகோவாவின் சாட்சிகள் வித்தியாசமானவர்கள்; உயர்ந்த நெறிகளைக் கொண்டிருப்பதோடு அதைத் தவறாமல் கடைப்பிடித்தும் வருகிறார்கள்.”

வறுமையிலும் வாய்மை

‘வறுமையில் வாடும்போது வாய்மைக்கு இடமேது?’ என நிறையப் பேர் நினைக்கிறார்கள். உதாரணமாக, CNN அறிக்கை ஒன்றின்படி, நைஜீரியாவைச் சேர்ந்த 14 வயது பையன் இன்டர்நெட்டில் மக்களை மோசடி செய்தே வாழ்க்கையை ஓட்டுகிறான். “நான் என்ன செய்றதுன்னு நீங்களே சொல்லுங்க... என் தங்கச்சி, அம்மா, அப்பா என்று என் குடும்பத்துக்கே நான்தான் கஞ்சி ஊத்தணும். இப்படியெல்லாம் செய்யாவிட்டால் பிழைக்க முடியாது!” என்று நியாயம்பேசுகிறான்.

ஒருவர் உண்மையாக நடந்துகொண்டால் அவருக்குக் காசு மழை கொட்டுமென்று பைபிள் வாக்குக் கொடுப்பதில்லை. மாறாக, வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் அவருக்குக் கிடைக்கும் என்றே அது உறுதியளிக்கிறது. “அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்” என்று ஏசாயா 33:16 கூறுகிறது.

என்றாலும், சிலர் இப்படிக் கேட்கலாம்: ‘நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாய் இருந்தால், வறுமைக்கோட்டிற்கும் கீழ் இருப்பவர்கள் எப்படி வாழ்வது? வயிற்றுப்பாட்டுக்கே திண்டாடுபவர்கள் எப்படிப் பிழைப்பது?’

கேமரூனிலுள்ள பெர்ட் என்ற விதவையை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். அவர் ஒரு பெட்டிக் கடை வைத்திருக்கிறார். அதில் மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கப்பட்ட மியாண்டோ என்ற தின்பண்டத்தை [குச்சி வடிவில் இருப்பது] விற்பனை செய்கிறார். அவர் சொல்கிறார்: “ஒவ்வொரு கட்டிலும் 20 மியாண்டோ குச்சிகள் இருக்க வேண்டும். ஆனால், கடைக்காரர்கள் பெரும்பாலும் 17 அல்லது 18 குச்சிகளை வைத்துக் கட்டிவிடுவார்கள். என்னைப் பொறுத்தவரை, மற்றவர்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்க எனக்குப் பிடிக்காது.”

பெர்ட் செய்கிற வியாபாரம் ‘ஓஹோ’ என நடக்கிறதா? எப்போதும் அப்படி நடப்பதாகச் சொல்ல முடியாது. “சில சமயம் நாளெல்லாம் காத்துக்கிடந்தாலும் வியாபாரமே நடக்காது” என்கிறார் பெர்ட். “ஆனாலும், சாப்பாட்டுக் கடை வைத்திருப்பவர்களிடம் என் நிலைமையை எடுத்துச் சொல்லி ஒரு வேளைச் சாப்பாடு தரும்படி கேட்பேன். அடுத்தவர்கள் கேட்டால் ‘முடியாது’ என்று சொல்கிற அவர்கள், எனக்கு மட்டும் மறுக்காமல் தந்துவிடுவார்கள். ஏனென்றால், எனக்குப் பணம் கிடைத்தவுடன் கடன் பாக்கியை அவர்களுக்குக் கொடுத்துவிடுவேன் என்பது அவர்களுக்கே தெரியும். காலம்காலமாய் நாணயமாக நடந்துகொண்டதால் சம்பாதித்த நம்பிக்கை இது!” என்று சொல்கிறார் பெர்ட்.

கடவுளை நாம் முழுமையாக நம்பலாம்

ஒருவரது சொல்லும் செயலும் ஒன்றாய் இருந்தால், அவர்மீது நமக்கு நம்பிக்கை வளரும். பண்டைய இஸ்ரவேல் தலைவர் யோசுவா, கடவுளைக் குறித்து இவ்வாறு நம்பிக்கை தெரிவித்தார்: “கர்த்தர் [யெகோவா] . . . சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று.” (யோசுவா 21:45) கடவுள்மீது நாமும் அவ்வாறே நம்பிக்கை வைக்கலாமா?

கடவுளுடைய வாக்குறுதிகள் நிச்சயமாக நிறைவேறும் என்பதால்தான் அவர் தமது வார்த்தையை மழைக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார். (ஏசாயா 55:10, 11) வான்மழை பெய்து, பூமியை நனைத்து, தாவரங்களை வளரச் செய்வதை ஏதாவது தடுக்க முடியுமா? முடியவே முடியாது! அதைப் போலவே, கடவுளுடைய வாக்குறுதிகள் நிறைவேறுவதை எதுவும் தடுக்க முடியாது.

அந்த வாக்குறுதிகளில் ஒன்றுதான் 2 பேதுரு 3:13-ல் காணப்படுகிறது. அது சொல்வதாவது: “அவருடைய வாக்குறுதியின்படியே நீதி குடிகொண்டுள்ள புதிய வானமும் புதிய பூமியும் உண்டாகுமென்று ஆவலோடு காத்திருக்கிறோம்.” சக மனிதரைச் சுரண்டிப் பிழைக்கிறவர்களை இந்தப் பூமியிலிருந்து அகற்றிவிட கடவுள் நோக்கம் கொண்டிருக்கிறார். தமது நோக்கத்தைக் கடவுள் எப்படி நிறைவேற்றுவார் என்ற விவரத்தைத் தெரிந்துகொள்ள உங்களுக்கு விருப்பமா? உங்கள் பகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளைத் தொடர்புகொள்ளுங்கள்; அல்லது, இந்தப் பத்திரிகையின் 5-ஆம் பக்கத்தில் உள்ள விலாசம் ஒன்றுக்கு எழுதுங்கள். (g10-E 10)

[பக்கம் 8-ன் பெட்டி/படம்]

நேர்மைக்குக் கிடைத்த பலன்

லூஸ்யோ என்பவர் பிலிப்பைன்ஸிலுள்ள யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர். அவருடைய நேர்மைக்கு ஒரு சோதனை வந்தது. அலுவலக அறை ஒன்றைச் சுத்தம் செய்யும்படி அவருக்குச் சொல்லப்பட்டது... அதிலிருந்த பழைய ‘ஃபைலிங் கேபினட்’ ஒன்றில் 27,500 டாலர் பணத்தைக் கண்டெடுத்தார். அந்த அலுவலகத்திற்கும் அந்தப் பணத்திற்கும் சொந்தக்காரரான அவருடைய முதலாளி வியாபார விஷயமாக வெளியூர் சென்றிருந்தார். “ஒரு டாலர் என்றால் எப்படி இருக்குமென்று அப்போதுதான் முதல்முறையாக நான் பார்த்தேன்!” என்கிறார் லூஸ்யோ.

முதலாளி வந்ததும் அந்தப் பணத்தை லூஸ்யோ அவரிடம் ஒப்படைத்தார். அதற்குக் கிடைத்த பலன்? “என் முதலாளி இன்னும் அதிகமான பொறுப்புகளை எனக்குக் கொடுத்தார்; அதுமட்டுமா, எங்கள் குடும்பமே தங்கிக்கொள்வதற்காக ஓர் அறையையும் கொடுத்தார். பிலிப்பைன்ஸ் நாட்டில் வாழ்க்கையை ஓட்டுவது ரொம்ப கஷ்டம்; அப்படியிருந்தும் யெகோவாவின் சட்டங்களை நாங்கள் கடைப்பிடித்தோம்; அதனாலேயே அவர் எங்கள்மீது கருணை காட்டியதாகத் தெரிகிறது” என்கிறார் லூஸ்யோ.

[பக்கம் 9-ன் பெட்டி/படம்]

நாணயமான எடை

கேமரூன் நாட்டைச் சேர்ந்த டூவாலா நகரிலுள்ள ஒரு சந்தையில் மொயிஸ் என்பவர் மீன் கடை வைத்திருக்கிறார். அவருடைய கடையை அறியாதவர் யாரும் இல்லை. “என்னுடைய கடைக்கு ‘நாணயமான எடை’ என்று பெயர் வைத்திருக்கிறேன்” என்று சொல்லும் மொயிஸ், அதற்கான விளக்கத்தையும் அளிக்கிறார்: “அந்தச் சந்தையிலேயே சிலருடைய எடைக் கருவி மட்டும்தான் நாணயமானது; அதில் என்னுடையதும் ஒன்று. என் எடைக் கருவியை மக்கள் அடிக்கடி சோதித்துப் பார்ப்பார்கள். ஒரு கிலோ மீன் கேட்பார்கள்... நானும் எடைபோட்டுக் கொடுப்பேன்... அதை வேறு எங்காவது போய் மீண்டும் எடைபார்ப்பார்கள்... அப்படிப் பார்க்கும்போதெல்லாம் ஒரு கிலோவுக்கும் மேலேயே இருக்கும்! நான் அவர்களை ஏமாற்றுவதில்லை என்று அவர்களுக்குத் தெரிந்துவிடும். ‘உன் நாணயத்தைப் பார்த்துத்தான் உன்னிடம் வருகிறோம்’ என்று நிறையப் பேர் சொல்வார்கள்.”

[பக்கம் 7-ன் படம்]

“‘எங்களை வெளியே அனுப்பிவிட்டாலும் பரவாயில்லை, நாங்கள் பொய் சொல்லப் போவதில்லை’ என எங்கள் முதலாளியிடம் சொல்லிவிட்டோம்.” —டோமிங்கோ, பிலிப்பைன்ஸ்.

[பக்கம் 7-ன் படம்]

“தணிக்கை அதிகாரிகள் என் கைசுத்தத்திற்காக என்னைப் பாராட்டினார்கள்.” —பியர், கேமரூன்.

[பக்கம் 7-ன் படம்]

“ஒரு வழக்கறிஞர் எனக்கு லஞ்சம் கொடுக்கப் பார்த்தார். . . . நானும் என் மனைவியும் அந்த பார்சலைப் பிரிக்கக்கூட வேண்டாமெனத் தீர்மானித்தோம்.” —ரிக்கார்டோ, பிரேசில்.

[பக்கம் 7-ன் படம்]

சில சமயம் பெர்ட் நாளெல்லாம் காத்துக்கிடந்தாலும் வியாபாரமே நடக்காது. ஆனாலும், சாப்பாட்டுக் கடை வைத்திருப்பவர்கள் அவருக்கு உணவு கொடுப்பார்கள். ஏனென்றால், அவருக்குப் பணம் கிடைத்தவுடன் கொடுத்துவிடுவார் என்பது அவர்களுடைய நம்பிக்கை.