Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆரோக்கியமான தாய்மார்களுக்கு ஆரோக்கியமான குழந்தைகள்

ஆரோக்கியமான தாய்மார்களுக்கு ஆரோக்கியமான குழந்தைகள்

ஆரோக்கியமான தாய்மார்களுக்கு ஆரோக்கியமான குழந்தைகள்

அழகான, ஆரோக்கியமான சிசு ஒன்று அன்புத் தாயின் கதகதப்பான கரங்களில் கண்ணுறங்குகிறது. தந்தை தன் செல்லத்தைக் கண்டு பெருமைகொள்கிறார். ஒரு வருடத்தில் லட்சக்கணக்கான தாய்மாரும் தந்தைமாரும் இப்படிச் சந்தோஷப்படுவதால் பிள்ளைப்பேற்றை அநேகர் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். அது இயற்கையாக நடக்கும் விஷயம்தானே, அதைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும் என்று நீங்களும் நினைக்கலாம்.

பெரும்பாலான பிரசவங்கள் நல்லபடியாக நடந்தாலும் சில சமயங்களில் பிரச்சினைகள் எழுகின்றன. அதனால், பெற்றோர் ஆகப்போகும் தம்பதிகள் தேவையில்லாத பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக முன்னெச்சரிக்கையுடன் தகுந்த சில நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். உதாரணத்திற்கு, பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கு என்ன காரணம் என்பதைத் தெரிந்துவைத்துக்கொள்கிறார்கள், கர்ப்பகாலத்தில் தாய்க்கும் சேய்க்கும் சிறந்த கவனிப்பு கிடைக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள், பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்களைக் குறைக்க சில அடிப்படை காரியங்களையும் செய்கிறார்கள். இந்த விஷயங்களைக் குறித்து இன்னும் விளக்கமாகச் சிந்திப்போம்.

பிரசவ சிக்கல்களுக்குக் காரணங்கள்

பிரசவத்தின்போது தாய்க்கும் சேய்க்கும் கோளாறுகள் ஏற்படுவதற்கு ஒரு காரணம், கர்ப்பகாலத்தில் சரியான கவனிப்பு இல்லாமல் போவதே. “கர்ப்பகாலத்தில் தாய்மார்கள் நல்ல கவனிப்பு எடுத்துக்கொள்ளாவிட்டால் பிரசவகாலத்தில் எக்கச்சக்கமான சிக்கல்கள் ஏற்படும்” என்கிறார் குழந்தை மருத்துவ நிபுணரான டாக்டர் சுங் காம்லவ். இவர் ஹாங்காங்கில் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் மருத்துவமனையில் பிள்ளை மருத்துவ சிகிச்சை பிரிவில் பணிபுரிகிறார். “இந்தத் தாய்மார்களில் பெரும்பாலோர் தங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், புஷ்டியாகவும் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள், ஆனால், அவர்கள் நினைப்பதுபோல் எப்போதும் நடப்பதில்லை” என்றும் அவர் சொல்கிறார்.

மிகுந்த இரத்தப்போக்கு, பிரசவத்தில் சிக்கல், நோய்த் தொற்று, அளவுகடந்த ரத்த அழுத்தம் போன்றவையே “பிரசவத்தின்போது தாய் இறந்துபோவதற்கு நேரடியான, முக்கிய காரணங்கள்” என்கிறது தாய்மாருக்கு வரக்கூடிய பிரச்சினைகளைக் குறித்து அலசும் அமெரிக்க மகளிர் மருத்துவ சங்கத்தின் பத்திரிகை (ஆங்கிலம்). இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தரமான சிகிச்சைகள் உள்ளன. ஆனால், பெரும்பாலான சமயங்களில், இப்படிப்பட்ட சிகிச்சைகளுக்கு “சிக்கலான கருவிகளோ மருத்துவ முறைகளோ அவசியமே இல்லை” என்றும் அந்தப் பத்திரிகை சொல்கிறது.

சுலபமாகக் கிடைக்கக்கூடிய சிகிச்சைகளை தாய்மார்கள் எடுத்துக்கொண்டால் எத்தனையோ குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றலாம். “பிரபலமான, எளிதில் கிடைக்கிற, நவீன தொழில்நுட்பங்கள் தேவையில்லாத” மருத்துவ சிகிச்சையை “தாய்மார்களும், பிறந்த குழந்தைகளும் பெற்றுக்கொண்டாலே மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் இறந்துபோவதைத் தவிர்க்கலாம்” என்கிறது யுஎன் கிரானிக்கள் என்ற புத்தகம். கர்ப்பகால கவனிப்பு முறைகளைப் பற்றிய தாய்மார்களின் அறியாமையும் அலட்சியப்போக்கும் எங்கும் நிலவுவது நெஞ்சைப் பிழிகிறது என்று அறிக்கையிடுகிறது பிலிப்பைன்ஸ் நியூஸ் ஏஜென்ஸி.

கர்ப்பகாலத்தில் தாய்க்கும் சேய்க்கும் சிறந்த கவனிப்பு

“ஆரோக்கியமான தாய்மார்களுக்கு ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கின்றன” என்கிறது யுஎன் கிரானிக்கள். அதேசமயம், ஒரு தாய் கர்ப்பகாலத்திலும் பிரசவ காலத்திலும் அதற்குப் பிறகும் தேவையான சிகிச்சை அல்லது எந்தச் சிகிச்சையும் எடுத்துக்கொள்ளாமல் போகும்போது அவளுடைய குழந்தைக்கும் எந்தச் சிகிச்சையும் கிடைக்காமல் போய்விடுவதாக அந்தப் புத்தகம் சொல்கிறது.

சில நாடுகளில், ஒரு கர்ப்பிணி பெண்ணால் தேவையான சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியாமல் போகலாம். ஒருவேளை, அவள் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கலாம் அல்லது மருத்துவ செலவுகளுக்கு அவளிடம் போதிய பணம் இல்லாதிருக்கலாம். இருந்தாலும், தாயாகப் போகும் பெண் கர்ப்பகாலத்தில் ஒரு நல்ல மருத்துவரைச் சில முறைகளாவது சந்திக்க முயற்சி செய்ய வேண்டும். முக்கியமாக, பைபிளின் போதனைகளுக்கு இசைவாக வாழும் எந்தப் பெண்ணும் இதை அவசியம் செய்ய வேண்டும். ஏனென்றால், பிறவாத குழந்தையின் உயிர் உட்பட மனித உயிர் மதிப்புள்ளது என்று பைபிள் கற்பிக்கிறது.—யாத்திராகமம் 21:22, 23; * உபாகமம் 22:8.

தேவையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால் வாராவாரம் மருத்துவரைச் சந்திக்க வேண்டுமென்று அர்த்தமா? இல்லை. கர்ப்பகாலத்திலும் பேறுகாலத்திலும் பொதுவாக ஏற்படும் சில கோளாறுகளைப் பற்றி சொல்கையில் உலக சுகாதார நிறுவனம் (WHO) இவ்வாறு குறிப்பிட்டது: “கர்ப்பகாலத்தில் வெறுமனே நான்கு முறைகள் மருத்துவரை சந்தித்தப் பெண்கள்” பெற்ற பலன்களும் “12 அல்லது அதற்கும் அதிகமான முறைகள் சந்தித்த பெண்கள் பெற்ற பலன்களும் ஒரேவிதமாக இருந்தன.”

மருத்துவர்கள் என்ன செய்யலாம்

தாய்க்கும் சேய்க்கும் சிக்கல் ஏற்படுவதை முடிந்தளவு தவிர்க்க மருத்துவ நிபுணர்கள், முக்கியமாக மகப்பேறு மருத்துவர்கள் பின்வரும் படிகளை எடுக்கிறார்கள்:

தாயின் மருத்துவ பதிவுகளை எடுத்துப் பார்த்து, தாய்க்கு அல்லது வயிற்றில் வளரும் அவள் குழந்தைக்கு என்ன ஆபத்துகள் ஏற்படலாம் என்று பரிசோதித்து, அவற்றைத் தடுக்க பார்க்கிறார்கள்.

இரத்தசோகை, நோய்த்தொற்று, Rh ஒவ்வாமை, பிற வியாதிகள் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க ஒருவேளை ரத்த பரிசோதனையையும் சிறுநீர்ப் பரிசோதனையையும் செய்யலாம். சர்க்கரை வியாதி, ஜெர்மன் தட்டம்மை, பால்வினை நோய்கள், இரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடிய சிறுநீரக நோய் போன்றவை இருக்கின்றனவா என்றும் பரிசோதித்தப் பார்க்கலாம்.

தாயின் தேவைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப சளிக்காய்ச்சல், தசைவிறைப்பு ஜன்னி, Rh ஒவ்வாமை போன்றவற்றிற்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி சொல்லலாம்.

கூடுதலான வைட்டமின் சத்துக்களை, முக்கியமாக ஃபோலிக் ஆசிட்டை எடுத்துக்கொள்ளும்படியும் சொல்லலாம்.

தனிப்பட்ட ஒவ்வொரு கர்ப்பிணிக்கும் வரக்கூடிய ஆபத்துகளைக் கண்டறிந்து அதைத் தவிர்ப்பதற்குத் தேவையான படிகளை மருத்துவர் எடுக்கும்போது அல்லது எடுக்கும்படி தாய்க்குச் சொல்லும்போது தாய்க்கும் சேய்க்கும் சிக்கல்கள் ஏற்படாமலிருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

பிரசவத்தின்போது வரும் சிக்கல்களைக் குறைத்தல்

“பிரசவகாலம்தான் ஒரு கர்ப்பிணிக்கு மிக மிக ஆபத்தான காலம்” என்கிறார் ஜாய் பூமாபி. இவர், உலக சுகாதார நிறுவனத்தில் குடும்ப மற்றும் சமூகநலத் துறையின் முன்னாள் துணை தலைமை இயக்குநர். இக்கட்டான இந்தக் கட்டத்தில் தோன்றும் பயங்கர சிக்கல்களை, சில சமயங்களில் உயிரையும் பறித்துவிடும் சிக்கல்களைத் தவிர்க்க என்ன செய்யலாம்? செய்ய வேண்டிய காரியங்கள் என்னவோ எளிமையானவைதான்; ஆனால் அவற்றை முன்னமே செய்ய வேண்டும். * குறிப்பாக, பைபிள் நியமங்களைக் கடைப்பிடிப்பதன் காரணமாக இரத்தமேற்றிக்கொள்ள மறுப்பவர்களும், மருத்துவ ரீதியில் வரும் ஆபத்துகளைத் தவிர்ப்பதற்காக இரத்தமேற்றிக்கொள்ள மறுப்பவர்களும் இவற்றைச் செய்ய வேண்டும்.—அப்போஸ்தலர் 15:20, 28, 29.

இப்படிப்பட்ட கர்ப்பிணிகள், இரத்தமில்லா மாற்று சிகிச்சை அளிப்பதில் திறமை பெற்ற, அனுபவம் வாய்ந்த மருத்துவர் அல்லது மருத்துவச்சியை சந்திக்க முடிந்தளவு முயற்சி செய்ய வேண்டும். பெற்றோராகப்போகும் தம்பதிகள், சிகிச்சை பெறப் போகும் மருத்துவமனை அல்லது மகப்பேறு மருத்துவமனை ஊழியர்கள் தங்களுடன் ஒத்துழைக்க தயாராய் இருக்கிறார்களா என்பதையும் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். * பின்வரும் இரண்டு கேள்விகளையும் மருத்துவரிடம் கேட்பது நல்லது: 1. தாய் அல்லது குழந்தை கனிசமானளவு இரத்தத்தை இழந்துவிட்டால் அல்லது வேறு ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? 2. குழந்தை பிறக்கும் சமயத்தில் நீங்கள் பக்கத்தில் இல்லாவிட்டால் வேறு யார் எங்களுக்கு உதவி செய்வார்கள்?

முன்யோசனையுள்ள தாய், ஒரு கர்ப்பிணிக்கு சராசரியாக இருக்க வேண்டியளவு இரத்தம் தனக்கு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள பிரசவத்திற்கு முன்பே தன் மருத்துவரிடம் கேட்பாள். தேவைப்பட்டால், தாயின் இரத்த அளவை அதிகரிக்க ஃபோலிக் ஆசிட், பிற பி-குரூப் வைட்டமின்கள், இரும்புச் சத்துக்கள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளும்படி மருத்துவர் சிபாரிசு செய்யலாம்.

இவை தவிர, இன்னும் பல விஷயங்களைப் பற்றியும் மருத்துவர் யோசித்துப் பார்ப்பார். உதாரணத்திற்கு, அதுவரை தாய்க்கு செய்த பரிசோதனைகளில் அவருக்கு வேறு ஏதாவது உடல்நலப் பிரச்சினை இருப்பது தெரிய வந்ததா? கர்ப்பமாக இருக்கும் தாய் நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டுமா? அவர் நிறைய ஓய்வெடுக்க வேண்டுமா? அவர் எடை கூட அல்லது குறைய வேண்டுமா அல்லது இன்னும் உடற்பயிற்சி செய்ய வேண்டுமா? வாய் உட்பட உடலைச் சுத்தமாக வைத்துக்கொள்வதில் அவர் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டுமா?

கர்ப்பிணிகளுக்கு ஈறு நோய் இருந்தால், பிரசவ கால ஜன்னி (Preeclampsia) வர அதிக வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. பிரசவ கால ஜன்னி வந்தால், இரத்த அழுத்தம் அதிகமாகும், திசுக்களில் எக்கச்சக்கமாக நீர் கோர்த்துக்கொள்ளும், தாங்கமுடியாத தலைவலி வரும், இவைபோக வேறு கோளாறுகளும் ஏற்படும். * அதுமட்டுமல்ல, குறைப்பிரசவமும் ஏற்படலாம்; வளர்ந்து வரும் நாடுகளில் இதன் விளைவாக எத்தனையோ தாயும் சேயும் இறந்துபோகிறார்கள்.

ஒரு நல்ல மருத்துவர், கர்ப்பிணியிடம் தொற்று இருப்பதற்கு ஏதாவது சிறிய அறிகுறி தெரிந்தாலும் அதை அலட்சியப்படுத்த மாட்டார். பிரசவ காலத்திற்கு முன்பே அவளுக்கு வலி வந்தால், உடனே மருத்துவமனையில் சேரும்படியும் சொல்வார்; ஏனென்றால், அதுதான் அவளுக்கும் அவள் குழந்தைக்கும் பாதுகாப்பு.

“பிரசவத்தின்போது ஒரு பெண் செத்துப் பிழைக்கிறாள்” என்கிறார் டாக்டர் குவாசி மோனிருல் ஈஸ்லாம். இவர், உலக சுகாதார நிறுவனத்தின் பிரசவத்தை எளிதாக்கும் துறையின் இயக்குநராக பணிபுரிகிறார். ஆனால், கர்ப்பகாலத்திலும், பிரசவகாலத்திலும், பிரசவத்திற்கு பின்பும் நல்ல மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டால் பல சிக்கல்களை, ஏன், மரணத்தையும் தவிர்க்கலாம். எனவே, எப்போதும் ஆரோக்கியமாய் இருக்க முயற்சி செய்யுங்கள். சுருக்கமாகச் சொன்னால், உங்களுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறக்க வேண்டுமென்றால், நீங்கள் ஆரோக்கியமான தாயாக இருக்க வேண்டும். (g09-E 11)

[அடிக்குறிப்புகள்]

^ மூல எபிரெய மொழியில் சேதம் என்பது தாயின் அல்லது பிறவாத குழந்தையின் மரணத்தைக் குறிக்கிறது.

^  “கர்ப்பகாலத்தில் செய்ய வேண்டியவை” என்ற பெட்டியைப் பாருங்கள்.

^ யெகோவாவின் சாட்சிகளாய் இருக்கும் தம்பதிகள் குழுந்தை பிறப்பதற்கு முன்பே சாட்சிகளின் மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுவுடன் (HLC) கலந்து பேசலாம். இந்த ஆலோசனைக் குழுவினர், சாட்சிகளாய் இருக்கும் தாய்மார்களுக்கு இரத்தமின்றி சிகிச்சை அளிப்பது சம்பந்தமான மருத்துவ தகவல்களைக் குறித்து மருத்துவமனை ஊழியர்களிடமும் மருத்துவர்களிடமும் பேசுவார்கள். அதுமட்டுமல்ல, சாட்சியின் நம்பிக்கைகளை மதிக்கிற, இரத்தமில்லா சிகிச்சை அளிப்பதில் அனுபவம் பெற்ற மருத்துவரைக் கண்டுபிடிக்கவும் இந்த ஆலோசனைக் குழுவினர் உதவி செய்வார்கள்.

^ ஈறு நோயினால் பிரசவ கால ஜன்னி வர அதிக வாய்ப்பிருப்பதை நிரூபிக்க இன்னும் நிறைய ஆய்வுகள் நடத்த வேண்டும் என்றாலும், உங்கள் ஈறுகளையும் பற்களையும் எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது.

[பக்கம் 27-ன் சிறுகுறிப்பு]

அக்டோபர் 2007-ல் வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி, பிரசவ காலத்தில் ஏற்படும் சிக்கல்களால் கிட்டத்தட்ட ஒவ்வொரு நிமிடமும் ஒரு தாய் இறக்கிறாள்; அதாவது, வருடத்திற்கு 5,36,000 தாய்மார்கள் இறக்கிறார்கள். —ஐநா மக்கள்தொகை செயற்பாட்டு நிதி அமைப்பு

[பக்கம் 28-ன் சிறுகுறிப்பு]

“ஒவ்வொரு வருடமும் 33 லட்சம் குழந்தைகள் இறந்து பிறக்கின்றன. 40 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பிறந்து 28 நாட்களுக்குள் இறந்துவிடுகின்றன.”—யுஎன் கிரானிக்கள்

[பக்கம் 29-ன் பெட்டி]

 கர்ப்பகாலத்தில் செய்ய வேண்டியவை

1. முன்கூட்டியே நன்கு விசாரித்து நீங்கள் சிகிச்சை பெறப்போகும் மருத்துவமனையையும் மருத்துவரையும் அல்லது மருத்துவச்சியையும் தேர்ந்தெடுங்கள்.

2. உங்கள் மருத்துவரை அல்லது மருத்துவச்சியை தவறாமல் சந்தியுங்கள்; அப்போதுதான் அவர்களோடு நம்பிக்கையான, நட்பான உறவை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

3. உங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக்கொள்ளுங்கள். முடிந்தால், கர்ப்பிணிகளுக்குத் தேவையான வைட்டமின் சத்துக்களை எடுத்துக்கொள்ளுங்கள்; உங்கள் மருத்துவர் சிபாரிசு செய்யாத மருந்துகளை (மருந்துக்கடையில் கேட்டு வாங்கும் மருந்துகளும் இதில் அடங்கும்) ஒருபோதும் சாப்பிடாதீர்கள். மது குடிக்காதிருப்பது நல்லது. “கருவுற்றிருக்கும் தாய் அளவுக்கதிகமாக மதுபானம் குடிப்பதால் குழந்தைக்கு அதிக சேதம் என்றாலும் கர்ப்பகாலத்தில் எந்தளவு மதுபானம் குடித்தால் பிரச்சினை இல்லை என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை” என்கிறது மதுபான துஷ்பிரயோகம் மற்றும் மதுபானத்திற்கு அடிமையாதல் என்பதற்கான தேசிய கழகம்.

4. பிரசவ தேதிக்கு முன்பே (37-வது வாரத்திற்கு முன்பே) உங்களுக்கு வலி வந்தால் உடனடியாக உங்கள் மருத்துவரை அல்லது மகப்பேறு மருத்துவமனையை அணுகுங்கள். உடனடியாக நடவடிக்கை எடுத்தால் குறைப்பிரசவம் ஏற்படுவதையும் அதனால் வரும் சிக்கல்களையும் தவிர்க்கலாம். *

5. உங்களுக்கு எப்படிப்பட்ட சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை எழுதி வையுங்கள். உதாரணத்திற்கு, உடல்நல பராமரிப்பு முன்கோரிக்கை அட்டையை (DPA) முன்கூட்டியே பூர்த்திசெய்து வைத்துக்கொள்வது அநேகருக்குப் பயனுள்ளதாய் இருந்திருக்கிறது. உங்கள் நாட்டில் எது பயன்படுத்தப்படுகிறது, சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

6. பிரசவத்திற்குப் பின் உங்கள் ஆரோக்கியத்தையும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் நன்றாகக் கவனித்துக்கொள்ளுங்கள், முக்கியமாக உங்களுக்கு குறைப்பிரசவம் ஏற்பட்டிருந்தால். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக குழந்தை மருத்துவரை அணுகுங்கள்.

[அடிக்குறிப்பு]

^ குறைப்பிரசவத்தில் இரத்தசோகையுடன் பிறக்கும் குழந்தைகளின் உடல் உறுப்புகளில் சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் திறன் குறைவுபடுவதால் பொதுவாக இரத்தமேற்றப்படுகிறது.