Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எலக்ட்ரானிக் கேம்ஸ் விளையாடலாமா?

எலக்ட்ரானிக் கேம்ஸ் விளையாடலாமா?

இளைஞர் கேட்கின்றனர்

எலக்ட்ரானிக் கேம்ஸ் விளையாடலாமா?

எலக்ட்ரானிக் கேம்ஸை அதிநவீன பொழுதுபோக்கு என்று மட்டுமே சொல்ல முடியாது. அவை உங்களுடைய திறமைக்குச் சவால்விடுகின்றன, உங்களுக்குச் சலிப்பு தட்டாமல் பார்த்துக்கொள்கின்றன. அதுமட்டுமா, நிதானித்து உடனுக்குடன் செயல்படும் திறனை அவை மேம்படுத்தலாம். அதோடு, பார்வையை ஒருமுகப்படுத்தும் திறனை கூட்டுகிறதெனவும் ஆய்வுகள் காட்டுகின்றன. அத்தகைய கேம்ஸில் சில, கணிதத்திலும் வாசிப்பதிலும் உங்களுடைய திறமைகளை இன்னும் அதிகப்படுத்தலாம். இவை தவிர, மாணவ மாணவிகளின் வட்டாரத்தில், புதுசு புதுசாக வெளிவருகிற எலக்ட்ரானிக் கேம்ஸ் பற்றிய பேச்சுதான் பெரும்பாலும் அடிபடுகிறது. அதை விளையாடினால்தான், பள்ளித் தோழர்களிடம் பேசுவதற்கு ஏதாவது விஷயம் கிடைக்குமென நீங்கள் நினைக்கலாம்.

நீங்கள் எலக்ட்ரானிக் கேம்ஸை விளையாடலாமா, விளையாடக்கூடாதா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது உங்களுடைய பெற்றோரின் பொறுப்பு. (கொலோசெயர் 3:20) ஒருவேளை அவர்கள் உங்களை அனுமதித்தால், விறுவிறுப்பாகவும் ஒழுக்கரீதியில் தரமானதாகவும் இருக்கிற ஒரு கேமை நீங்கள் விளையாடலாம். என்றாலும், நீங்கள் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், ஏன்?

அவற்றின் இருண்ட பக்கம்!

“கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவதென்றால் ஜாலியாகவும் குஷியாகவும் இருக்கும்” என்று சொல்கிறான் பதினாறு வயது ப்ரையன். ஆனால், எல்லா கேம்ஸும் தீங்கற்றவை அல்ல என்பது உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும். “நிஜ வாழ்க்கையில் ஒருபோதும் செய்திராத காரியங்களை எல்லாம் இதை விளையாடும்போது உங்களால் செய்ய முடியும்—சொல்லப்போனால், எந்தப் பிரச்சினையிலும் மாட்டிக்கொள்ளாமலேயே அவற்றைச் செய்ய முடியும்” என ப்ரையன் ஒத்துக்கொள்கிறான். இத்தகைய கேம்ஸ் எப்படிப்பட்ட சுபாவத்தை நமக்குள் ஏற்படுத்திவிடுகின்றன?

இப்படிப்பட்ட கேம்ஸ் பலவும் பைபிள் கண்டனம் செய்கிற ஒழுக்கக்கேடு, கெட்ட பேச்சு, வன்முறை ஆகியவற்றை வெளிப்படையாகவே ஆதரிக்கின்றன. (சங்கீதம் 11:5; கலாத்தியர் 5:19-21; கொலோசெயர் 3:8) சில கேம்ஸோ மாய மந்திர பழக்கங்களை ஊக்குவிக்கின்றன. பிரபலமான ஓர் எலக்ட்ரானிக் கேமில் “இரு கும்பல்களுக்கு இடையே நடக்கும் போர்கள், போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல், அப்பட்டமான செக்ஸ் காட்சிகள், அசிங்கமான பேச்சு, கொடிய வன்முறைச் செயல்கள், இரத்தம் சொட்டும் கோர காட்சிகள்” ஆகியவை சித்தரிக்கப்பட்டதாக 18 வயது ஏட்ரியன் விவரிக்கிறான். ஒவ்வொரு புதிய எலக்ட்ரானிக் கேம் வெளிவரும்போதும், பழைய கேம் எல்லாமே ‘சப்’பென்று ஆகிவிடுகின்றன. இவ்வாறு புதுசு புதுசாக வெளிவரும் கேம்ஸில் மிகவும் பிரபலமான கேமை இன்டர்நெட்டில் மற்றொருவரோடு விளையாடலாம் என 19 வயது ஜேம்ஸ் சொல்கிறான். இதை, வீடியோ கேம்ஸில் ஏற்பட்டுள்ள புதிய வளர்ச்சி என்றே சொல்லலாம். “உங்களுடைய வீட்டிலுள்ள கம்ப்யூட்டரிலிருந்தே உலகின் மறுகோடியில் இருப்பவர்களுடன் போட்டி போட்டு விளையாடலாம்” என ஜேம்ஸ் சொல்கிறான்.

கற்பனை கதாபாத்திர விளையாட்டுகள் இப்போது மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. இந்த விளையாட்டுகளில் பங்கேற்பவர்கள் கம்ப்யூட்டர் கதாபாத்திரங்களை அவர்களே உருவாக்கிக்கொள்ள முடியும். அதாவது, ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் வாழும் கற்பனை உலகிலுள்ள ஒரு மனிதனாக, மிருகமாக, அல்லது இரண்டும் கலந்த கதாபாத்திரமாக ஆக முடியும். இந்தக் கற்பனை உலகில் கடைகள், கார்கள், வீடுகள், நடன ‘க்ளப்’கள், விபச்சார விடுதிகள் என எல்லாமே இருக்கின்றன; சொல்லப்போனால், இன்றைய உலகிலுள்ள எல்லாமே அங்கு இருக்கின்றன. இத்தகைய கம்ப்யூட்டர் கதாபாத்திரங்கள் பேசிக்கொள்ளும் சமயத்தில் இந்த கேம்ஸில் பங்கேற்கிறவர்கள் ஒருவருக்கொருவர் உடனுக்குடன் செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியும்.

இந்தக் கற்பனை உலகில் என்னத்தான் நடக்கிறது? “சாதாரண ஆட்கள் தங்களுடைய நிஜ வாழ்க்கையில் ஒருபோதும் செய்திராத, அல்லது செய்ய முடியாத காரியங்களில் ஈடுபடுகிறார்கள்” என ஓர் இதழாசிரியர் கூறுகிறார். “செக்ஸும் விபச்சாரமும் அங்கே சகஜமாய் நடக்கின்றன” என அவர் சொல்கிறார். சில பட்டன்களை அழுத்தினால் போதும், அதில் விளையாடுபவர்கள் தங்களுடைய கம்ப்யூட்டர் கதாபாத்திரங்களை செக்ஸில் ஈடுபடுத்த முடியும்; அதே நேரத்தில், அந்த விளையாட்டில் நிஜமாகவே பங்கேற்கிற பலரும், உடனுக்குடன் செய்திகளை அனுப்பி செக்ஸ்பற்றி பேசவும் முடியும். அதுமட்டுமல்ல, “குற்றச்செயல்கள், மாஃபியா ஆட்கள், விபச்சார புரோக்கர்கள், கொள்ளையர்கள், மோசடிக்காரர்கள், கொலையாளிகள்” ஆகியவை நிறைந்ததே இந்தக் கற்பனை உலகம் என நியூ சயன்டிஸ்ட் இதழ் கூறுகிறது. “நிஜ வாழ்க்கையில் செய்யக்கூடாத சட்டவிரோதமான காரியங்களை, உதாரணத்திற்கு விபச்சார விடுதியில் ஒரு விபச்சாரியை கற்பழிப்பது அல்லது சிறு பிள்ளைகளைப் போலுள்ள கற்பனை கதாபாத்திரங்களுடன் செக்ஸில் ஈடுபடுவது போன்ற விளையாட்டுகளைக் குறித்து விமர்சகர்கள் கவலை தெரிவித்துள்ளதாக” மற்றொரு பத்திரிகை குறிப்பிடுகிறது.

தெரிவு செய்வது முக்கியம்—ஏன்?

வன்முறையான கேம்ஸை அல்லது செக்ஸை அப்பட்டமாகச் சித்தரிக்கும் கேம்ஸை விளையாடுபவர்கள் இவ்வாறு சொல்லலாம்: “நாம் யாருக்கும் கெடுதல் செய்வதில்லையே. இது ஒன்றும் நிஜமில்லையே. சும்மா ஒரு விளையாட்டுதானே.” ஆனால், அவர்கள் தரும் இப்படிப்பட்ட தவறான விளக்கங்களைக் கேட்டு ஏமாந்துவிடாதீர்கள்!

பைபிள் இவ்வாறு கூறுகிறது: “பிள்ளையானாலும், அதின் செய்கை சுத்தமோ செம்மையோ என்பது, அதின் நடக்கையினால் விளங்கும்.” (நீதிமொழிகள் 20:11) நீங்கள் வன்முறையான, ஒழுக்கக்கேடான எலக்ட்ரானிக் கேம்ஸை வழக்கமாக விளையாடி வந்தால், உங்களுடைய மனது சுத்தமாயும் செம்மையாயும் இருக்கிறதென சொல்ல முடியுமா? வன்முறையைச் சித்தரிக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், அவற்றைப் பார்ப்போரின் மனதில் மூர்க்கத்தனத்தை ஏற்படுத்தி விடுவதாக ஆய்வுகள் அடிக்கடி காட்டுகின்றன. “வீடியோ கேம்ஸில் மக்கள் பார்வையாளர்களாக இருப்பதோடு பங்கேற்கவும் முடிவதால், டிவி-யைவிட இவையே [மக்களை] பெரிதும் பாதிக்கின்றன” என்று சமீபத்திய நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை குறிப்பிட்டது.

வன்முறையான அல்லது ஒழுக்கக்கேடான கேம்ஸை தேர்ந்தெடுப்பது, கதிரியக்க கழிவுப்பொருட்களை (radioactive waste) வைத்து விளையாட முடிவு செய்வதைப் போன்றது; அதன் பாதிப்புகள் உடனடியாகத் தெரிவதில்லை, ஆனால் பாதிக்கப்படுவது உறுதி. எவ்விதத்தில்? கதிர்வீச்சு அதிகமதிகமாக நம் உடலில் படும்போது இரைப்பையின் படலம் சேதமடைகிறது; இதனால், குடலிலுள்ள பாக்டீரியா இரத்தத்தில் கலந்து நமக்கு நோயை ஏற்படுத்தி விடுகிறது. அவ்வாறே, செக்ஸை சித்தரிக்கிற கேம்ஸிலும் பயங்கரமான வன்முறைகள் நிறைந்த கேம்ஸிலும் ஈடுபடுவது உங்களுடைய ஒழுக்க ‘உணர்வுகளை’ சேதப்படுத்தலாம்; இதனால் பாவ இச்சைகள் உங்களுடைய சிந்தையையும் செயலையும் செல்வாக்கு செலுத்தலாம்.—எபேசியர் 4:19; கலாத்தியர் 6:7, 8.

எந்த கேமை நான் தேர்ந்தெடுப்பது?

எந்தவொரு எலக்ட்ரானிக் கேம்ஸை வேண்டுமானாலும் விளையாட உங்களுடைய பெற்றோர் அனுமதிக்கிறார்கள் என்றால், எதைத் தேர்ந்தெடுப்பது, அதற்காக எவ்வளவு நேரம் ஒதுக்குவது என நீங்கள் எப்படித் தெரிந்துகொள்ளலாம்? பின்வரும் கேள்விகளை கேட்டுக்கொள்வது உங்களுக்கு உதவலாம்:

நான் தேர்ந்தெடுக்கும் எலக்ட்ரானிக் கேம் யெகோவாவின் மனதைப் புண்படுத்துமா? நீங்கள் தேர்ந்தெடுக்கும் விளையாட்டைப் பொறுத்து கடவுள் உங்கள்மீது பிரியம் வைக்கலாம் அல்லது உங்களை வெறுக்கலாம். “கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது” என சங்கீதம் 11:5 குறிப்பிடுகிறது. மாய மந்திரம் சம்பந்தப்பட்டதில் ஈடுபடுவதைக் குறித்து கடவுளுடைய வார்த்தை இவ்வாறு கூறுகிறது: “இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்.” (உபாகமம் 18:10-12) நாம் கடவுளுடைய நண்பர்களாக இருக்க விரும்பினால், சங்கீதம் 97:10-ல் உள்ள ஆலோசனையைப் பின்பற்றுவது அவசியம்: “கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்.”

அந்த எலக்ட்ரானிக் கேம் என்னுடைய சிந்தையை எப்படிப் பாதிக்கும்? உங்களையே இவ்வாறு கேளுங்கள்: ‘இதை விளையாடுவது, “வேசித்தனத்திற்கு விலகியோடுவதை” எளிதாக்குமா, கடினமாக்குமா?’ (1 கொரிந்தியர் 6:18) பாலுணர்வைத் தூண்டும் காட்சிகளோ உரையாடல்களோ உள்ள கேம்ஸை விளையாடுவது, நீதி, கற்பு, நற்கீர்த்தி ஆகிய பண்புகளை வெளிக்காட்டும் காரியங்களில் மனதைச் செலுத்த உங்களுக்கு உதவாது. (பிலிப்பியர் 4:8) ஏமி என்ற 22 வயது பெண் இவ்வாறு கூறுகிறாள்: “பெரும்பாலான கேம்ஸ், வன்முறை, அசிங்கமான பேச்சு, ஒழுக்கக்கேடு ஆகிய விஷயங்களில் உங்களுடைய உணர்ச்சிகளை மரத்துப்போகச் செய்கின்றன; அதனால், வாழ்க்கையின் பிற அம்சங்களிலும் படிப்படியாக சபலத்திற்கு ஆளாகும்படி செய்துவிடலாம். ஆகவே, நீங்கள் எலக்ட்ரானிக் கேமைத் தேர்ந்தெடுக்கையில் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.”

விளையாடுவதற்கு எவ்வளவு நேரம் செலவிடுவேன்? டெப்ரா என்ற 18 வயது இளைஞி இவ்வாறு கூறுகிறாள்: “கம்ப்யூட்டர் கேம்ஸ் எல்லாமே மோசமானது என எனக்குத் தோன்றவில்லை. ஆனால், அவை நம்முடைய நேரத்தையெல்லாம் உறிஞ்சிவிடலாம், அதற்கு நம்மை அடிமையாக்கியும் விடலாம்.” எந்தவிதத் தீங்கும் இல்லாத சாதாரண எலக்ட்ரானிக் கேம்ஸும்கூட பெருமளவு நேரத்தை உறிஞ்சிவிடலாம். ஆகவே, இந்த விளையாட்டுக்காக எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பதையும் அதன் பிறகு மிக முக்கியமான பிற காரியங்களுக்காக எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பதையும் எழுதிவைத்து அவற்றை ஒப்பிட்டுப் பாருங்கள். அவ்வாறு செய்வது, மிக முக்கியமான காரியங்களுக்கு முதலிடம் கொடுக்க உங்களுக்கு உதவும்.—எபேசியர் 5:15, 16.

சதா படித்துக்கொண்டோ வேலை பார்த்துக்கொண்டோ இருக்கும்படி பைபிள் சொல்வதில்லை. “சிரிப்புக்கு ஒரு காலம் . . . துள்ளி மகிழ்தலுக்கு ஒரு காலம்” உண்டு என்பதை அது நம் அனைவருக்கும் நினைப்பூட்டுகிறது. (பிரசங்கி [சபை உரையாளர்] 3:4, பொது மொழிபெயர்ப்பு) ‘துள்ளி மகிழ’ என்ற சொற்றொடர் விளையாடுவதை மட்டுமல்ல உடலுக்குப் பயிற்சி தரும் செயலையும் குறிக்கிறது. ஆகவே, கம்ப்யூட்டரின் முன்னால் உட்கார்ந்திருக்கும் நேரத்தைக் குறைத்து, அதற்குப் பதிலாக உங்களுடைய ஓய்வு நேரத்தில் கொஞ்சத்தை உடலுக்கு பயிற்சிதரும் விளையாட்டுகளுக்காக பயன்படுத்தலாம், அல்லவா?

ஞானமாகத் தேர்ந்தெடுங்கள்

எலக்ட்ரானிக் கேம்ஸ் விளையாடுவது ஜாலியாகத்தான் இருக்கும்; முக்கியமாக அதில் திறமைசாலிகளாக இருப்பவர்களுக்கு சொல்லவே வேண்டாம். இந்தக் காரணத்தினால்தான், கேம்ஸைத் தேர்ந்தெடுப்பதில் ஞானமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். ‘பள்ளியில் எந்தெந்தப் பாடங்களில் நான் அதிக மதிப்பெண் வாங்குகிறேன்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். உங்களுக்கு மிகவும் பிடித்த பாடங்களில்தானே? சொல்லப்போனால், ஒரு பாடத்தை நீங்கள் எந்தளவு ரசித்துப் படிக்கிறீர்களோ அந்தளவு அது உங்கள் மனதில் ஆழமாக பதியும். இப்போது மறுபடியும் உங்களை இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘எந்த எலக்ட்ரானிக் கேமில் நான் அதிக ஆர்வம் காட்டுகிறேன்? அதிலிருந்து ஒழுக்கம் சம்பந்தமாக என்ன பாடங்களை நான் கற்றுக்கொள்கிறேன்?’

எந்த எலக்ட்ரானிக் கேமை விளையாடுவது என்பதை நீங்கள் தீர்மானிக்க விரும்பினால், உங்களுக்குப் பிடித்த ஒவ்வொரு கேமின் இலக்கையும் அதை அடைய நீங்கள் பயன்படுத்தும் முறைகளையும்பற்றி சுருக்கமாக எழுதி வைத்துக்கொள்வது சிறந்தது அல்லவா? நீங்கள் எழுதி வைத்திருப்பவற்றையும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள பைபிள்பூர்வ நியமங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள்; அதன் பிறகு, அதை விளையாடுவதா வேண்டாமா என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.

உங்களுடைய பள்ளித் தோழர்கள் விளையாடுகிறார்கள் என்பதற்காக ஒரு கேமை நீங்கள் விளையாடாமல், அதைப்பற்றி நீங்கள் ஏற்கெனவே என்ன தெரிந்து வைத்திருக்கிறீர்களோ அதன் அடிப்படையில் தைரியமாகத் தீர்மானியுங்கள். மிக முக்கியமாக, “கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்,” அதாவது நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள் என்ற பைபிளின் ஆலோசனையைப் பின்பற்றுங்கள்.—எபேசியர் 5:10. (g 1/08)

www.watchtower.org/ype என்ற வெப்சைட்டில் “இளைஞர் கேட்கின்றனர்” தொடரின் கூடுதலான கட்டுரைகளைக் காண்க

சிந்திப்பதற்கு

◼ வன்முறையான அல்லது ஒழுக்கக்கேடான எலக்ட்ரானிக் கேம் விளையாட உங்களுடைய நண்பர் அழைத்தால் என்ன சொல்வீர்கள்?

◼ எலக்ட்ரானிக் கேம்ஸ் விளையாடுவது மிக முக்கியமான காரியங்களுக்குத் தடையாக இருக்காது என்பதை நீங்கள் எப்படி நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்?

[பக்கம் 19-ன் சிறு குறிப்பு]

வன்முறையான அல்லது ஒழுக்கக்கேடான கேம்ஸை தேர்ந்தெடுப்பது, கதிரியக்க கழிவுப்பொருட்களை வைத்து விளையாட முடிவு செய்வதைப் போன்றது; அதன் பாதிப்புகள் உடனடியாகத் தெரிவதில்லை, ஆனால் பாதிக்கப்படுவது உறுதி

[பக்கம் 18-ன் பெட்டி]

நீங்கள் எத்தனை முறை எலக்ட்ரானிக் கேம்ஸ் விளையாடுகிறீர்கள்?

❑ எப்போதாவது

❑ வாரத்தில் ஒருமுறை

❑ தினமும்

ஒரு கேம் விளையாடுவதற்கு எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்?

❑ ஒருசில நிமிடங்கள்

❑ ஒரு மணிநேரம் அல்லது அதற்கும் குறைவாக

❑ இரண்டு மணிநேரத்திற்கும் அதிகமாக

எவ்வகையான கேம்ஸ் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்?

❑ கார் ரேசிங்

❑ ஸ்போர்ட்ஸ்

❑ ஷூட்டர்

❑ பிற

நீங்கள் விளையாடக்கூடாது என நினைக்கிற ஓர் எலக்ட்ரானிக் கேமின் பெயரைக் குறிப்பிடுங்கள்.

........................................

[பக்கம் 20, 21-ன் பெட்டி/படம்]

பெற்றோருக்கு ஒரு குறிப்பு

நீங்கள் டீனேஜில் விளையாடிய எலக்ட்ரானிக் கேம்ஸ் எல்லாம் மாறி, இப்போது தினுசுதினுசான எலக்ட்ரானிக் கேம்ஸ் வந்துவிட்டதை இந்தக் கட்டுரையைப் படித்த பின் அறிந்திருப்பீர்கள். இந்த கேம்ஸை விளையாடுவதால் வரும் ஆபத்துகளை அறிந்துகொண்டு, அவற்றைத் தவிர்க்க உங்கள் பிள்ளைக்கு நீங்கள் எப்படி உதவலாம்?

எலக்ட்ரானிக் கேம்ஸ் எல்லாமே மோசமானது என்று சொல்வதாலோ, அதற்காக நேரம் செலவிடுவதெல்லாம் வீண் என்று சொல்வதாலோ எந்தப் பிரயோஜனமும் இல்லை. எல்லா கேம்ஸும் மோசமானதல்ல என்பதை நினைவில்கொள்ளுங்கள். என்றாலும், அவை நம்மை அடிமையாக்கி விடலாம், நம் நேரத்தை அபகரித்துவிடலாம். ஆகவே, இந்த விளையாட்டுகளுக்காக உங்களுடைய பிள்ளை எவ்வளவு நேரம் செலவிடுகிறது என்பதைக் கவனியுங்கள். அதோடு, எத்தகைய கேம்ஸில் உங்களுடைய பிள்ளை ஆர்வமாக ஈடுபடுகிறது என்பதையும் கவனியுங்கள். ஒருவேளை, இப்படிப்பட்ட சில கேள்விகளைக்கூட பிள்ளையிடம் நீங்கள் கேட்கலாம்:

உன்னோடு படிக்கிற பிள்ளைகள் அதிகமாக விரும்புகிற கேம் எது?

◼ அந்த கேமில் என்ன நடக்கிறது?

◼ அந்த கேம் ஏன் அவ்வளவு பிரபலமாக இருக்கிறது?

அப்போது, எலக்ட்ரானிக் கேம்ஸைப்பற்றி நீங்கள் நினைத்ததைவிட உங்கள் பிள்ளை நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்திருப்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்! ஒருவேளை, படுமோசமானதாக நீங்கள் கருதுகிற கேம்ஸைகூட உங்கள் பிள்ளை விளையாடியிருக்கலாம். அப்படியானால், உணர்ச்சிவசப்படாதீர்கள். பகுத்தறியும் திறமைகளை வளர்த்துக்கொள்ள உங்கள் பிள்ளைக்கு உதவ இதுவே சரியான சமயம்.—எபிரெயர் 5:14.

படுமோசமான அந்த விளையாட்டின் மீது உங்கள் பிள்ளைக்கு ஏன் அப்படியொரு ஆர்வம் இருக்கிறது என்பதைப் பிள்ளையே கண்டுபிடிப்பதற்கு உதவும் கேள்விகளைக் கேளுங்கள். உதாரணமாக, இதுபோன்ற ஒரு கேள்வியைக் கேட்கலாம்:

குறிப்பிட்ட ஒரு கேமை விளையாடவில்லை என்றால் வகுப்பிலுள்ள மற்ற பிள்ளைகள் உன்னை ஒதுக்கிவிடுவார்கள் என நினைக்கிறாயா?

இக்கட்டுரையின் முதல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதைப்போல், தங்களுடைய நண்பர்களுடன் பேச இளைஞர்களுக்கு ஏதாவது ஒரு விஷயம் வேண்டுமென்பதற்காகவே, குறிப்பிட்ட கேம்ஸை அவர்கள் விளையாடலாம். உங்களுடைய பிள்ளையும் இதற்காகத்தான் ஒரு குறிப்பிட்ட கேம்ஸை விளையாடுகிறதென வைத்துக்கொள்ளுங்கள். அப்படியானால், மூர்க்கத்தனமான வன்முறை அல்லது செக்ஸ் சம்பந்தப்பட்ட கேம்ஸில் அதிக ஆர்வம்காட்டுகிற ஒரு பிள்ளையிடம் பேசுவதுபோல் உங்கள் பிள்ளையிடம் அதிக கண்டிப்புடன் பேச வேண்டிய அவசியமிருக்காது.—கொலோசெயர் 4:6.

ஆனால், உங்களுடைய பிள்ளை ஒரு கேமில் இருக்கும் சில தகாத விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறது என்றால் என்ன செய்வது? கம்ப்யூட்டரில் விளையாடுகிற வன்முறையான கேம்ஸ் எல்லாம் தங்களை எவ்விதத்திலும் பாதிக்காது என இளைஞர்கள் சிலர் சொல்லலாம். ‘கம்ப்யூட்டரில் அப்படி விளையாடுகிறேன் என்பதற்காக நான் நிஜமாகவே அப்படிச் செய்துவிடுவேனா என்ன’ என்று அவர்கள் நியாயம் பேசலாம். உங்கள் பிள்ளை அப்படி நினைக்கிறதென்றால், இக்கட்டுரையில் பக்கம் 20-ல் கொடுக்கப்பட்டுள்ள சங்கீதம் 11:5-ஐ பிள்ளைக்குக் காட்டுங்கள். வன்முறை செயல்களில் ஈடுபடுவதை மட்டுமல்ல, அதில் பிரியம் வைப்பதையும் கடவுள் வெறுக்கிறார் என அதிலுள்ள வார்த்தைகள் தெளிவாகக் காட்டுகின்றன. பாலியல் ஒழுக்கக்கேடு அல்லது கடவுளுடைய வார்த்தை கண்டனம் செய்கிற மற்ற தீய நடத்தைக்கும் இதே நியமம் பொருந்துகிறது.—சங்கீதம் 97:10.

வல்லுநர்கள் சிபாரிசு செய்கிற சில குறிப்புகள்:

படுக்கை அறை போன்ற ஒதுக்கமான இடத்தில் இருந்து எலக்ட்ரானிக் கேம்ஸ் விளையாட அனுமதிக்காதீர்கள்.

◼ அடிப்படை விதிமுறைகளை வையுங்கள் (உதாரணமாக, வீட்டுப்பாடம், இரவு சாப்பாடு, அல்லது முக்கியமான பிற காரியங்கள் ஆகியவற்றை முடிப்பதற்கு முன்பு கேம்ஸ் விளையாடக் கூடாது).

◼ உடலுக்குப் பயிற்சிதருகிற வேறு ஏதேனும் காரியங்களில் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துங்கள்.

◼ உங்களுடைய பிள்ளைகள் எல்க்ட்ரானிக் கேம்ஸ் விளையாடுவதைக் கவனியுங்கள், சில சமயங்களில் அவர்களுடன் சேர்ந்து விளையாடுவது அதைவிடச் சிறந்தது.

பொழுதுபோக்கு விஷயங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் மனந்திறந்து பேசுவதற்கு நீங்கள் நல்ல முன்மாதிரி வைப்பது முக்கியம். ஆகவே, உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள், ‘எப்படிப்பட்ட டிவி நிகழ்ச்சிகளையும் சினிமாக்களையும் நான் பார்க்கிறேன்?’ நீங்கள் இரட்டை வேஷம் போடுகிறீர்கள் என்றால், உங்களுடைய பிள்ளைகள் அதை நிச்சயம் கண்டுபிடித்து விடுவார்கள்!