Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் எந்த மாதிரியான அடிச்சுவடுகளை விட்டுச்செல்கிறீர்கள்?

பெற்றோர்களுக்கு

8: முன்மாதிரி

8: முன்மாதிரி

இதன் அர்த்தம் என்ன?

முன்மாதிரியான பெற்றோர்கள், தாங்கள் என்ன சொல்லிக்கொடுக்கிறார்களோ அதற்கேற்றபடி வாழ்வார்கள். உதாரணமாக, உங்களைப் பார்க்க வருகிற ஒருவரோடு உங்களுக்குப் பேசப் பிடிக்காதபோது, “நான் வீட்டுல இல்லன்னு சொல்லு” என்று நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் சொல்வதை உங்கள் பிள்ளைகள் பார்க்கிறார்கள் என்றால், அவர்கள் நேர்மையானவர்களாக வளருவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது.

“‘நான் சொல்றத செய், நான் செய்றத செய்யாத’னு சில பேர் சொல்றத நாம கேட்டிருப்போம். ஆனா, பிள்ளைங்க விஷயத்துல இது சரிபட்டு வராது. பிள்ளைங்க ஸ்பாஞ்சு மாதிரி; நாம செய்றது... சொல்றது... எல்லாத்தையும் டக்குனு பிடிச்சுக்குவாங்க. நாம சொன்னத செய்யலன்னா, என்னைக்காவது ஒருநாள் அதை அவங்க குத்திக் காட்டுவாங்க.”—டேவிட்.

பைபிள் நியமம்: “‘திருடாதே’ என்று பிரசங்கிக்கிற நீங்களே திருடலாமா?”—ரோமர் 2:21.

இது ஏன் முக்கியம்?

பிள்ளைகள், முக்கியமாக டீனேஜர்கள், நண்பர்களையும் மற்றவர்களையும் முன்மாதிரிகளாகப் பார்ப்பதைவிட பெற்றோர்களைத்தான் முன்மாதிரிகளாகப் பார்க்கிறார்கள். அப்படியென்றால், உங்கள் பிள்ளைகளுக்குச் சரியான வழியைக் காட்டுகிற பெரிய பொறுப்பு உங்களுக்குத்தான் இருக்கிறது; ஆனால் அதற்கு, நீங்கள் சொன்னதைச் செய்கிறவர்களாக இருக்க வேண்டும்.

“ஒரு விஷயத்த நூறு தடவை சொல்லியும் உங்க பிள்ளை அத காதுல வாங்காத மாதிரி தெரியலாம்; ஆனா, அந்த விஷயத்த நாம ஒரு தடவை செய்யாம போயிட்டாகூட அத அவங்க குத்திக் காட்டுவாங்க. நாம செய்ற எல்லா விஷயங்களையும் பிள்ளைங்க கவனிக்குறது இல்லன்னு நாம நினைக்கலாம்; ஆனா, அவங்க எல்லாத்தையும் கவனிக்குறாங்க.”—நிக்கோல்.

பைபிள் நியமம்: “பரலோகத்திலிருந்து வருகிற ஞானமோ . . . வெளிவேஷம் போடாததாக இருக்கிறது.”—யாக்கோபு 3:17.

நீங்கள் என்ன செய்யலாம்?

உங்கள் தராதரங்களைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். எப்படிப்பட்ட டிவி நிகழ்ச்சிகளையும் சினிமா படங்களையும் நீங்கள் பார்க்கிறீர்கள்? உங்கள் துணையையும் உங்கள் பிள்ளைகளையும் எப்படி நடத்துகிறீர்கள்? எப்படிப்பட்டவர்களோடு நீங்கள் நட்பு வைத்திருக்கிறீர்கள்? மற்றவர்களை மனதில்வைத்து செயல்படுகிறீர்களா? சுருக்கமாகச் சொன்னால், உங்கள் பிள்ளைகள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படிப்பட்டவர்களாக நீங்கள் இருக்கிறீர்களா?

“நாங்க கடைப்பிடிக்காத ஒண்ண கடைப்பிடிக்கச் சொல்லி நானும் என் கணவரும் எங்க பிள்ளைங்கள வற்புறுத்த மாட்டோம்.”—க்ரிஸ்டீன்.

தவறு செய்தால் மன்னிப்பு கேளுங்கள். நீங்களும் தவறு செய்கிற இயல்புள்ளவர்கள்தான் என்பது உங்கள் பிள்ளைகளுக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் ஏதாவது தவறு செய்யும்போது, ‘ஸாரி, என்னை மன்னிச்சிடு’ என்று உங்கள் மணத்துணையிடமும் உங்கள் பிள்ளைகளிடமும் சொன்னீர்கள் என்றால், நேர்மையாகவும் மனத்தாழ்மையாகவும் நடப்பதில் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரிகளாக இருப்பீர்கள்.

“நாம ஏதாவது தப்பு செய்யும்போது, பிள்ளைங்ககிட்ட அதை ஒத்துக்கணும், அவங்ககிட்ட மன்னிப்பு கேக்கணும். இல்லன்னா, அவங்க செய்ற தப்ப நம்மகிட்ட சொல்லாம மறச்சிடுவாங்க.”—ராபின்.

“எல்லா விஷயத்துலயும் நம்ம பிள்ளைங்க நம்மளத்தான் முன்மாதிரியா பார்ப்பாங்க, நம்மள பார்த்துத்தான் அவங்க கத்துக்குவாங்க. நாம செய்யறது... பேசறது... நடந்துக்குறது... எல்லாத்தையுமே அவங்க பார்க்குறதுனால, நாம வாழ்ற விதம் அவங்களுக்கு நிறைய பாடங்கள சொல்லித்தரும்.”—வென்டெல்.