Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உள்ளதை வைத்து திருப்தியாக வாழ உதவும் ஆலோசனைகள்

உள்ளதை வைத்து திருப்தியாக வாழ உதவும் ஆலோசனைகள்

கல்யாணமானவர்கள், கல்யாணமாகாதவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என எல்லாருமே சந்தோஷமாக... திருப்தியாக... வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள். நம்மைப் படைத்த கடவுளும் நாம் அப்படி வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார். அதற்காக அவர் கொடுத்திருக்கும் அருமையான ஆலோசனைகளை இப்போது கவனிக்கலாம்.

கடினமாக உழையுங்கள்

“இல்லாதவர்களுக்குக் கொடுப்பதற்காக, தானே தன் கையால் பாடுபட்டு நேர்மையாக உழைக்க வேண்டும்.”​—எபேசியர் 4:28.

நாம் செய்கிற வேலையை சந்தோஷமாகச் செய்ய வேண்டும் என்று நம்மைப் படைத்த கடவுள் எதிர்பார்க்கிறார். கடினமாக உழைக்கிறவர் சந்தோஷமாக இருப்பார். ஏனென்றால், அவரால் தன்னுடைய தேவைகளையும், தன் குடும்பத்தாருடைய தேவைகளையும் கவனித்துக்கொள்ள முடியும். கஷ்டத்தில் இருக்கிறவர்களுக்குக்கூட உதவ முடியும். முதலாளியும் அவரை உயர்வாக மதிப்பார். இப்படிக் கடினமாக உழைக்கிறவர் தன்னுடைய வேலையை அவ்வளவு சீக்கிரத்தில் இழந்துவிட மாட்டார். கடின உழைப்பால் வருகிற பலன், “கடவுள் தரும் பரிசு” என்று வேதம் சொல்கிறது.—பிரசங்கி 3:13.

நேர்மையாக இருங்கள்

“நாங்கள் எல்லாவற்றிலும் நேர்மையாக நடக்க விரும்புகிறோம்; எங்களுக்குச் சுத்தமான [நேர்மையான] மனசாட்சி இருக்கிறது என்று உறுதியாக நம்புகிறோம்.”​—எபிரெயர் 13:18.

நாம் நேர்மையாக இருந்தால் சுயமரியாதையோடு இருப்போம், எதைப் பற்றியும் அதிகமாகக் கவலைப்பட மாட்டோம், நிம்மதியாகத் தூங்குவோம். மற்றவர்களும் நம்மை நம்புவார்கள், நம்மிடம் மதிப்பு மரியாதையுடன் நடந்துகொள்வார்கள். இந்த நல்ல விஷயங்களை எல்லாம் நேர்மை இல்லாதவர்களால் அனுபவிக்க முடியாது. அவர்களுடைய மனசாட்சி உறுத்திக்கொண்டே இருக்கும். என்றைக்காவது ஒருநாள் மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்திலேயே வாழ்வார்கள்.

பணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்

“பண ஆசையில்லாமல் வாழுங்கள். உள்ளதை வைத்துத் திருப்தியோடு இருங்கள்.”​—எபிரெயர் 13:5.

சாப்பாட்டுக்கும், அத்தியாவசியமான மற்ற விஷயங்களுக்கும் நமக்குப் பணம் தேவை. ஆனால், “பண ஆசை” ரொம்ப ஆபத்தானது. பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பது, ஒருவருடைய நேரத்தையும், சக்தியையும் உறிஞ்சிவிடும். இதனால், கல்யாண வாழ்க்கையில் பிரச்சினை வந்துவிடும், பிள்ளைகளோடு நேரம் செலவிட முடியாமல் போய்விடும், உடம்பும் கெட்டுவிடும். (1 தீமோத்தேயு 6:9, 10) அதுமட்டுமல்ல, நேர்மை இல்லாத ஏதாவதொரு விஷயத்தைச் செய்வதற்கான ஆசை வந்துவிடலாம். “உண்மையாக நடக்கிறவன் நிறைய ஆசீர்வாதங்களைப் பெறுவான். ஆனால், சீக்கிரத்தில் பணக்காரனாக நினைக்கிறவன் குறுக்கு வழியில் போய்விடுவான்.”—நீதிமொழிகள் 28:20.

கடவுள் தரும் கல்வியைத் தேர்ந்தெடுங்கள்

“ஞானத்தையும் யோசிக்கும் திறனையும் பாதுகாத்துக்கொள்.”​—நீதிமொழிகள் 3:21.

பொறுப்புள்ள நபராக, நல்ல பெற்றோராக இருப்பதற்கு கல்வி நமக்குத் தேவைதான். ஆனால், பெரிய படிப்பு படித்தால்தான் எந்தக் கவலையும் இல்லாமல் நிம்மதியாக, சந்தோஷமாக வாழ முடியும் என்றில்லை. வாழ்க்கையில் நாம் செய்கிற எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்க வேண்டுமென்றால், கடவுள் கொடுக்கிற கல்வி தேவை. அதாவது, அவருடைய ஆலோசனைகள் தேவை. கடவுளுடைய ஆலோசனைகளைக் கேட்டு நடக்கிற ஒருவர் “செய்வதெல்லாம் வெற்றி பெறும்” என்று வேதம் சொல்கிறது.—சங்கீதம் 1:1-3.