Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சந்தோஷப் பாதையில் செல்ல...

வாழ்க்கையில் ஒரு நோக்கம்

வாழ்க்கையில் ஒரு நோக்கம்

மனிதர்கள் நிறைய விஷயங்களில் தனித்தன்மை உடையவர்கள்—நாம் எழுதுகிறோம், ஓவியங்கள் வரைகிறோம், புதிது புதிதாக உருவாக்குகிறோம், வாழ்க்கையின் மிக முக்கியமான கேள்விகளைப் பற்றி யோசிக்கிறோம்: இந்தப் பிரபஞ்சம் ஏன் இருக்கிறது? நாம் எப்படி வந்தோம்? வாழ்க்கையின் நோக்கம் என்ன? எதிர்காலத்தில் என்ன நடக்கும்?

ஒரு சிலர் இதைப் பற்றியெல்லாம் யோசிப்பதே கிடையாது. இந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ளவே முடியாது என்று நினைக்கிறார்கள். இன்னும் சிலர், இதெல்லாம் தேவையில்லாத கேள்விகள் என்று நினைக்கிறார்கள். ஏனென்றால், உயிர் பரிணாமத்தின் மூலமாகத்தான் தோன்றியதென அவர்கள் நம்புகிறார்கள். சரித்திர, உயிரியில் பேராசிரியர் வில்லியம் ப்ரோவின் இப்படிச் சொல்கிறார்: “எந்தக் கடவுளும் கிடையாது, எந்த நோக்கமும் கிடையாது, எந்த நெறிமுறையும் கிடையாது, வாழ்க்கைக்கு உருப்படியான எந்த அர்த்தமும் கிடையாது.”

வாழ்க்கையைப் பற்றிய இப்படியொரு விரக்தியான கருத்தை சிலர் ஏற்றுக்கொள்வதில்லை. இந்தப் பிரபஞ்சம் துல்லியமான, அற்புதமான, கணித விதிகளின்படி இயங்குகிறது என அவர்கள் நம்புகிறார்கள். இயற்கையிலுள்ள மனம்கவரும் வடிவமைப்புகளைப் பார்த்து அசந்துபோகிறார்கள். (இவற்றில் சிலவற்றை காப்பியடித்துதான் மனிதன் தன் கைவண்ணத்தைக் காட்டியிருக்கிறான்.) தினசரி வாழ்க்கையில் பார்க்கிற சிக்கலான அதேசமயத்தில் நுணுக்கமான வடிவமைப்புகள் தானாகவே உருவாகவில்லை, புத்திக்கூர்மையுள்ள ஒருவரால்தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்கிறார்கள்.

இந்த விஷயங்களை ஆழமாக யோசித்த சில பரிணாமவாதிகள் தங்கள் கருத்தை மாற்றிக்கொண்டார்கள். அவர்களில் இருவரைப் பற்றி இப்போது கவனிக்கலாம்.

நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் ஆலிக்ஸே மார்னவ். “நான் படிச்ச பள்ளிகள்ல நாத்திகத்தையும் பரிணாமத்தையும்தான் சொல்லிக் கொடுத்தாங்க. ஒன்னுமே தெரியாதவங்கதான் கடவுள நம்புவாங்கன்னு நெனைச்சாங்க” என்கிறார் ஆலிக்ஸே. ஆனால், 1990-ல் அவருடைய எண்ணத்தில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது.

“சில விஷயங்கள யோசிக்கும்போது, ஏன், எதுக்கு, எப்படி-னு எல்லாம் புரிஞ்சுக்க முயற்சி செய்வேன்; அப்படித்தான் நம்ம மூளைய பத்தியும் யோசிச்சேன். இந்தப் பிரபஞ்சத்திலேயே ரொம்ப சிக்கலான, அதிசயமான வடிவமைப்புனா அது நம்ம மூளைதான்! ஆனா, அறிவை எடுத்துட்டு, திறமைகள வளர்த்திட்டு, அப்புறம் செத்துப்போற விதத்துலதான் அது வடிவமைக்கப்பட்டிருக்கா? கண்டிப்பா அப்படி இருக்க முடியாதுன்னு தோணுச்சு. அப்படீனா, ‘நாம ஏன் இங்க இருக்கோம்? வாழ்க்கையோட நோக்கம் என்ன?’னு யோசிக்க ஆரம்பிச்சேன். நல்லா யோசிச்ச பிறகு, படைப்பாளர் ஒருத்தர் நிச்சயம் இருக்கணும்ங்கற முடிவுக்கு வந்தேன்.”

வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் வேட்டையில் ஆலிக்ஸே இறங்கினார்; கடைசியாக பைபிளை ஆராய முடிவு செய்தார். அவருடைய மனைவியும் பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். இவர் ஒரு மருத்துவர்; நாத்திகரும்கூட! தன் கணவருடைய கருத்துகள் தவறென நிரூபிப்பதற்காக பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். ஆனால் இப்போது, இருவருமே கடவுளை நம்புகிறார்கள், மனிதர்களுக்கான நோக்கத்தைப் பற்றிய பைபிள் விளக்கத்தைப் புரிந்திருக்கிறார்கள்.

பிளாஸ்மா விஞ்ஞானி டாக்டர் ஹுவாபி இன். ஹுவாபி இயற்பியல் படித்தார். பிளாஸ்மா பற்றி பல வருஷம் ஆராய்ச்சி செய்தார். (சூரியனில் இருப்பது போன்ற) பிளாஸ்மா நிலை என்பது நான்காவது பொருள்நிலை. இதன் பெரும் பகுதி எலக்ட்ரான்களாகவும் (electrons) பாஸிடிவ் ஐயான்களாகவும் (positive ions) இருக்கிறது.

“விஞ்ஞானிகளா நாங்க இயற்கைய பத்தி எப்ப ஆராய்ச்சி செஞ்சாலும், அதுல ரொம்ப அழகான ஒழுங்குமுறை இருக்குறத பார்க்க முடியுது. துல்லியமான சட்டங்கள்தான் அதுக்குக் காரணம். ‘இந்தச் சட்டமெல்லாம் எப்படி வந்திருக்கும்? சமையலறை அடுப்புல எரியிற சாதாரண நெருப்பக்கூட கவனமா கட்டுப்படுத்த வேண்டியிருக்கும்போது, சூரியன்ல இருந்து வர்ற நெருப்ப யார் கட்டுப்படுத்துறாங்க?’னு யோசிச்சேன். ‘ஆரம்பத்தில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார்’னு பைபிள்ல இருக்குற முதல் வசனம்தான் அதுக்கு ரொம்பச் சரியான பதிலுங்கற முடிவுக்கு வந்தேன்.”—ஆதியாகமம் 1:1.

‘எப்படி’ என்ற பல கேள்விகளுக்கு, அதாவது மூளையின் உயிரணுக்கள் எப்படிச் செயல்படுகின்றன? சூரியன் எப்படி வெப்பத்தையும் வெளிச்சத்தையும் உற்பத்தி செய்கிறது? போன்ற கேள்விகளுக்கு, அறிவியல் பதில் தந்திருக்கிறது. ஆனால், அதைவிட முக்கியமான ‘ஏன்’ என்ற கேள்விகளுக்கு, அதாவது இந்தப் பிரபஞ்சம் ஏன் இருக்கிறது? அது ஏன் சட்டங்களால் இயங்குகிறது? நாம் ஏன் படைக்கப்பட்டோம்? போன்ற கேள்விகளுக்கு, பைபிள்தான் பதில் தருகிறதென்று ஆலிக்ஸேயும் ஹுவாபியும் புரிந்துகொண்டார்கள்.

பூமியைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “[கடவுள்] அதைக் காரணம் இல்லாமல் படைக்கவில்லை; ஜனங்கள் குடியிருப்பதற்காகவே படைத்தார்.” (ஏசாயா 45:18) ஆம், கடவுள் ஒரு நோக்கத்தோடுதான் பூமியைப் படைத்திருக்கிறார். அந்த நோக்கத்துக்கும் நம் எதிர்கால நம்பிக்கைக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. எப்படியென்று அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.