Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

துணையே துரோகம் செய்யும்போது

துணையே துரோகம் செய்யும்போது

“ஒருநாள், என்னோட கணவர் இன்னொருத்தியோட போகப்போறதா சொன்னாரு. அத கேட்டப்போ, உயிரயே விட்டுடலாம்னு தோணுச்சு. ‘இவ்ளோ பெரிய அநியாயத்த செய்ய அவருக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ? அவருக்காக நான் என்னவெல்லாம் செஞ்சிருக்கேன்!’னு யோசிச்சேன்.”—மரீயா, ஸ்பெயின்.

“என் மனைவி திடீர்னு இன்னொருத்தனோட போனப்போ, என்னோட உயிரயே உருவி எடுத்த மாதிரி இருந்துச்சு. எங்களோட கனவு, நம்பிக்கை, திட்டம்-னு எல்லாமே சுக்குநூறாயிடுச்சு. சிலசமயம், எல்லாத்தயும் மறந்து நான் திரும்பவும் சகஜமா வாழ ஆரம்பிச்சிட்ட மாதிரி தோணும். ஆனா, மறுபடியும் கவல என்னை உருக்க ஆரம்பிச்சிடும்.”—பில், ஸ்பெயின்.

மணத்துணை துரோகம் செய்யும்போது ஒருவருடைய மனம் வெடித்துச் சிதறிவிடலாம். சிலர் தங்களுடைய மணத்துணை திருந்தும்போது மன்னித்து ஏற்றுக்கொள்கிறார்கள். * ஆனால், மற்றவர்கள் பிரிந்துபோகிறார்கள். எப்படியிருந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் இரத்தக் கண்ணீர் வடிப்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த ரணவேதனையைச் சமாளிக்க அவர்களுக்கு வழி இருக்கிறதா?

மனக்காயத்துக்கு மருந்து

பைபிளிலுள்ள வார்த்தைகள், பாதிக்கப்பட்ட துணைகளின் மனக்காயத்துக்கு மருந்தாக இருக்கின்றன. கடவுள் அவர்களுடைய கண்ணீரைப் பார்க்கிறார்... அவர்களுடைய வேதனையைப் பார்த்து உருகுகிறார்... என்றெல்லாம் தெரிந்துகொள்ளும்போது அவர்கள் ஆறுதல் அடைகிறார்கள்.—மல்கியா 2:13-16.

“கவலைகள் என்னைத் திணறடித்தபோது, நீங்கள் எனக்கு ஆறுதல் தந்து, என் இதயத்துக்கு இதமளித்தீர்கள்.”​சங்கீதம் 94:19.

“அந்த வசனத்த படிச்சப்போ, பாசமான ஒரு அப்பாவ போல யெகோவா என் மனச வருடிக் கொடுக்கற மாதிரி இருந்துச்சு” என்று பில் சொல்கிறார்.

“உண்மையுள்ளவரிடம் நீங்கள் உண்மையுள்ளவராக நடந்துகொள்கிறீர்கள்.”​சங்கீதம் 18:25.

“என்னோட கணவர் எனக்கு உண்மையா இல்லாம போயிட்டாரு. ஆனா, யெகோவாவ நான் முழுசா நம்பலாம். அவரு எப்பவும் எனக்கு உண்மையா இருப்பாரு, என்னை கைவிடவே மாட்டாரு” என்று சொல்கிறார் கார்மன். இவருடைய கணவர் மாதக்கணக்காக இவருக்குத் துரோகம் செய்திருந்தார்.

“நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்; உங்களுடைய எல்லா விண்ணப்பங்களையும் . . . ஜெபத்தின் மூலமும் மன்றாட்டின் மூலமும் கடவுளிடம் சொல்லுங்கள். அப்போது, எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இதயத்தை . . . பாதுகாக்கும்.”​பிலிப்பியர் 4:6, 7.

“இந்த வசனங்கள நான் திரும்பத் திரும்ப படிச்சேன். கடவுள்கிட்ட அடிக்கடி ஜெபம் செஞ்சேன். அவரு எனக்கு நிம்மதி கொடுத்தாரு” என்று சொல்கிறார் சாஷா.

இவர்கள் எல்லாருமே சிலசமயம் விரக்தி அடைந்திருக்கிறார்கள். ஆனால், யெகோவா தேவன்மேல் நம்பிக்கை வைத்தார்கள். அவருடைய புத்தகமாகிய பைபிளையும் படித்தார்கள். அதனால் இவர்களுக்குப் புதுத்தெம்பு கிடைத்தது. அதைத்தான் பில் சொல்கிறார்... “எல்லாத்தயுமே தொலைச்சதுக்கு அப்புறம்கூட, வாழணுங்கற எண்ணம் எனக்கு வந்துச்சுன்னா, அதுக்கு காரணம் கடவுள்மேல நான் வெச்சிருந்த நம்பிக்கைதான். கொஞ்ச காலத்துக்கு நான் ‘பயங்கர இருட்டான பள்ளத்தாக்குல’ நடந்த மாதிரி இருந்துச்சு, ஆனா கடவுள் எனக்கு துணையா இருந்தாரு.”—சங்கீதம் 23:4.

^ துரோகம் செய்தவரை மன்னிப்பதா வேண்டாமா என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள, “துணையே துரோகியானால்” என்ற தொடர்கட்டுரைகளை ஏப்ரல் 22, 1999 விழித்தெழு! பத்திரிகையில் பாருங்கள்.